Wednesday, July 31, 2013

நீங்க ஏன் ஹீரோவா ட்ரை பண்ணக்கூடாது?


Share/Bookmark


நம்மூர் சினிமாக்கள் எவ்வளவுதான் முன்னேறி போனாலும் ஒரு சில காட்சிகள மட்டும் மாத்தவே முடியாது. ஹீரோன்னு ஒருத்தர் ஃபார்ம் ஆயிட்டாலே இதெல்லாம் கண்டிப்பா இருந்தே ஆகனும். அப்படிப்பட்ட ஒரு சில காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக. ரெம்ப நாளாக எழுதி கிடப்புல கிடந்த பதிவு.  கொஞ்சம் பழைய வாடை அடிக்கும். கொஞ்சம் அட்சஸ்ட் பண்ணிக்குங்க.

1. வில்லன ஒரு மொன்னை கத்தி லைட்டா வயித்துல குத்துனாலே போதும் அவரு செத்துருவாரு.. ஆனா ஹீரோவ பீரங்கியால சுட்டாக் கூட அதுக்கப்புறமும் ஸ்டெடியா நின்னு ஒரு  அஞ்சி நிமிஷம் பஞ்ச் டயலாக் பேசுவாரு...எவ்வளவு பெரிய காயமானாலும் ஒரு சின்ன துணீய கிழிச்சி சுத்தி கட்டிக்குவாய்ங்க... அவ்வளவுதான்...  எல்லாம் சரியாயிரும்  ஒரு படத்துல நம்ம கேப்டன் கத்தி குத்து காயத்துல மண்ணை அள்ளி அப்பிக்கிட்டு “இது மண்ணு இல்லைடா மருந்து” ன்னு சொல்லிட்டு சண்டை போடுவாறு. டேய் மொன்னை.. மண்ணை அள்ளி அப்புனா சீழ் புடிச்சி செத்து போயிருவடா.. ஹீரோ மட்டும் இல்லை ஹீரோவோட சொந்தக்காரங்க யாரா இருந்தாலும் சாகுற நிலைமையில 10 நிமிஷம் பேசிட்ட்டு தான் சாவுவாங்க..  "அவங்கள... விட்டு...டா... ...இந்த நாட்ட... கா... கா... காப்பா.த்து" ன்னு சொன்னோன "டொய்ய்ங்..."ன்னு தல தொங்கிரும்...

2. ஹீரோ ஒரு சவால் போட்டாருன்னா அதுல தோக்கவே மாட்டாரு... எண்ணி ஏழுநாள்ல உண்ண தூக்குறேண்டான்னு சொன்னா... ஏழாவது நாள் முடியிறதுக்கு ஏழு நிமிஷத்துக்கு முன்னாடியாவது வில்லன போட்டுருவாரு.. ஆனா வில்லன்னா ரெம்ப பாவம்.. எத்தனை சவால் போட்டாலும்  வேலைக்கே ஆவாது. வில்லன் ஜெயிச்சாலும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. இதுவரைக்கும் ஹீரோ சவால் போட்டு சவால்ல ஜெயிக்காம இருந்தது ஒரே படம் தான்.. அதான் வசூல்ராஜா... இண்டர்வல்ல ப்ரகாஷ்ராஜ்கிட்ட "உனக்கு ஸ்டெர்ச்சர்  கட்டுறேன் மாமு"ன்னு சவால் விடுற கமல் க்ளைமாக்ஸ்ல "நா  தோத்துட்டேன் மாமு"ன்னு அழுவாறு.

3. அப்புறம் ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ணுவாங்க... கடைசிலதான் தெரியவரும் ரெண்டுபேரும் சொந்தக்காரங்கன்னு. ஆனா எப்புடிப்பாத்தாலும் அந்த ஹீரோயின் ஹீரோவுக்கு மாமன் பொண்ணாகவோ இல்ல அக்கா மகளாகவோ தான் வரும். எந்தப்படத்துலயும்  அது ஹீரோவோட பெரியப்பா பொண்னாகவோ இல்ல சித்தி பொண்ணாகவோ இருக்கவே இருக்காது.. அப்புடி எடுத்தாலும் யாரும் ஒத்துக்க மாட்டாங்கங்கறது  வேற விஷயம். எனக்கு தெரிஞ்சி அது மாதிரி இருக்க ஒரே படம் தலைவர் நடிச்ச நாட்டாமை  தான். தலைவருக்கு பாக்க போற பொண்ணு கடைசில அவருக்கு தங்கச்சியா ஆயிடும்.


4. இது சினிமா தோன்றிய காலத்துலருந்து மாறாம இருக்குற மாத்தமுடியாது ஒரு காட்சி. எவ்வளவு பெரிய வில்லனா இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல எவ்வளவு பெரிய துப்பாக்கி வச்சிருந்தாலும் ஹீரோவ சுட்டு கொல்ல மாட்டாரு. "ஹா ஹா... உன்ன கொல்ல எனக்கு துப்பாக்கியா...உன்ன என் கையாலயே அடிச்சே கொல்லனும்" அப்புடின்னோ இல்லை "துப்பாக்கியால சுட்டு அவ்வளவு சீக்கிரமா நீ செத்துடக் கூடாது... அவன துடிக்க துடிக்க அடிச்சே கொல்லுங்கடா" ன்னு சொல்லிட்டு கடைசில ஹீரோ கையால அடிவாங்கியே வில்லன் செத்துருவாரு. அப்புடி ஒருவேளை ஹீரோவ சுடனும்னு முடிவு பண்ணிட்டார்னா கருமம் அந்த சமயம்னு பாத்து குண்டு தீங்கு போயிரும் இல்லை அவருக்கு நேர் பின்னால யாராவது நின்னு அவரு சுடுறதுக்கு முன்னால அவர சுட்டுருவாங்க... வெரி டேஞ்சரஸ் ப்ளோஸ்...

5. எப்பவுமே டைம்பாம் வெடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடியோ இல்லை 30 செகண்ட் முன்னாடியோ தான் ஹீரோ அத கண்டுபுடிப்பாரு... கருமம் ஒரு அரைமணீ நேரத்துக்கு முன்னால கண்டு புடிச்சாலாவது ஆர அமர உக்காந்து யோசிக்கலாம்... ஒரு நிமிஷத்துக்கு முன்னால தான் கண்டுபுடிப்பாரு. அதவிட கொடுமை வில்லன்கள் அந்த timer ah  பெரிய 7 செக்மெண்ட் டிஸ்ப்ளேல ஊருக்கே தெரியிற மாதிரி ஓடவிட்டுருப்பாய்ங்க... ஏண்டா அது என்ன சென்ட்ரல் ஸ்டேஷன் வால் க்ளாக்காடா... எல்லாருக்கும் தெரியிர மாதிரி ஓடவிடுறதுக்கு... கருமத்த யாருக்கும் தெரியாத மாதிரி வச்சா பாம் எப்ப வெடிக்கும்னு தெரியாம எல்லாரும் கன்பீஸ் ஆயிருவாய்ங்கல்ல... ஐடியா இல்லாத பாய்ஸ்... அதுவும் மொத்த டைம் பாமுக்கும் ரெண்டே ரெண்டு ஒயர் தான் இருக்கும் அதும் சிகப்பு மற்றும் நீலம்... கசமுசன்னு ஒரு பத்து பதினைஞ்சி ஒயர ஓடவிட்டாதானே ஒரு  திரில்லிங்கா இருக்கும்..



6.  ஹீரோன்னு ஒருத்தர் இருந்துட்டாலே அவரு ஓடுறது பறக்குறதுன்னு தாவுறதுன்னு எல்லாத்தையும்  ஓட்டத் தெரிஞ்சவர்தான். திடீர்னு ஒரு ஃபைட்டுல ஒரு ட்ரைவர் செத்துட்டாலோ இல்ல  இறங்கி ஓடிட்டாலோ நம்மாளு போய் ஓட்ட ஆரம்பிச்சிருவாரு. எதோ கார ஓட்டுறீங்கண்ணா ஓக்கே..பஸ்ஸ் ஓட்டுனா கூட எதோ பரவால்ல... ட்ரெயினல்லாம் ஓட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா... மாணிக்கம் படத்துல சொல்ற மாதிரி "இங்கிட்டு இங்கிட்டு எங்களூக்கு சுத்தத் தெரியாதா... " ங்குற மாறி ஸ்டேரிங்க புடிச்சி சுத்த ஆரம்பிச்சிட வேண்டியது... அட இதெல்லாம் என்ன நம்ம  கேப்டன் நிறைய படத்துல ஃப்ளைட்டே ஒட்டிருக்காரு.

7. பெரும்பாலான படங்கள்ல ஹீரோ வேலையில்லாதவராதான் இருப்பாரு. வில்லன் பெரிய பணக்காரனா இருப்பான். ஆனா ஹீரோயின் வில்லன திரும்பி கூட பாக்காது. ஹீரோயினோட தாய் மாமன் அதாவது வில்லன பாத்தீங்கன்னா 6 பேக்ஸ் எல்லாம் வச்சி, சூப்பரா இருப்பாய்ங்க. ஆனா வில்லனுங்க எவ்வளவு அழகா இருந்தாலும் சத்தியமா ஹீரோயினுங்க மதிக்கவே மதிக்காதுங்க.. "ச்சீ... பொறுக்கி நாயே" ன்னுட்டு போயிரும்... ஆனா ஹீரோ கரிமேடு கருவாயன் மாதிரி இருந்தா கூட அவன் பின்னாடியே தான் சுத்துவாங்க... இது அவளுங்க விதி.

8. சாதாரணமா நமக்கு தெரியாத ஒரு எடத்துக்கு போகனும்னா கொறைஞ்து 5 பேர்ட்டயாது வழி கேட்டு, நாலு ரோடு மாறி மாறி சுத்தி கடைசியாதான் போய் சேருவோம். வில்லன் ஹீரோயின கடத்திகிட்டு எங்கயோ இருக்க அவரோட ஹெஸ்ட் ஹவுசுக்கோ இல்லை பண்னை வீட்டுக்கோ இல்ல காட்டு பங்களாவுக்கோ போவாரு. என்ன கடத்திட்டு போயி என்ன ப்ரயோசனம்? ஹீரோயின் ரூமுல தொரத்தி அவள தொடலாம்னு போறப்போ… டமார்னு கதவு ஒடையிற சத்தம் கேக்கும்… ஏண்டா கதவ தாழ்ப்பா போடாம தானடா வச்சிருந்தேன்… தொறந்துகிட்டே வந்துருக்கலாம்ல… வில்லன் கஷ்டப்பட்டு டெம்போல்லாம் வச்சி கடத்திட்டு வந்துருப்பான். ஆனா இவிங்க அந்த புள்ளைய தொடக்கூட விட மாட்டாய்ங்க. பத்தாததுக்கு ரெண்டு கதவ வேற ஒடைச்சிபுடுவாய்ங்க.


9. வழக்கமா வில்லன் ஒரு கொலை பண்ணாலே க்ளைமாக்ஸ்ல .பி.கோ 302 வது செக் ஷன் படி  அவருக்கு மரண தண்டனை வாங்கிகுடுத்துருவாய்ங்க... ஆனா ஹீரோ 50 கொலை பண்ணாலும் கண்டிப்பா அவர ரிலீஸ் ப்ண்ணிருவாய்ங்க... இது வழக்கமா  எல்லா சங்கர் படங்கள்லயும் வர்றது தான்... அதுமட்டும் இல்லாம ஹீரோவ ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்காகவோ இல்லை கொள்ளையடிச்சதுக்காகவோ கைது பண்ணப்பட்டா, உடனே ப்ரஸ்ல உள்ளவங்க ஒரு மைக்க தூக்கிட்டு உடனே ஆட்டோக்காரங்க, கடலை விக்கிற ஆயா, பொறி விக்கிற தாத்தான்னு எல்லார்கிட்டயும் போய் கேப்பாங்க.

"சிட்டிசன் வச்சான் பாரு ஆப்பு" அப்புடிம்பாரு  ஆட்டோகாரரு...

"தென்னவன்  சொல்ற சட்டத்த அமுல் படுத்துனாதான் நாடு உருப்படும்"  சொல்லும் அந்த கடலை விக்கிற ஆயா  

"அந்த தம்பி நாட்டுக்கு நல்லது தான் பண்ணிருக்கு... அந்த தம்பிய விடுதலை பண்ணூங்க " ம்பாறு அந்த பொறிவிக்கிற தாத்தா.

அதுக்கும் மேல இன்னொரு செம காமெடி என்னனா ஹீரோ கோர்ட்ல சாட்சி கூண்டுல நின்னு பேசுறத டிவில லைவ்ல ஓட்டுவாய்ங்க. நம்ம பொதுமக்கள் அத வசந்த் அன் & கோ 42” டிவில பாத்து “அப்புடிப்போடு.. சரியான கேள்வி” ன்னு கை தட்டுவாய்ங்க. இதுவரைக்கும் நம்ம மக்கள் கிரிக்கெட் மேட்ச தவற வேற எதையாது கூட்டம் கூட்டமா நின்னு பாத்துருக்காய்ங்களா?

இதயெல்லாம் கேட்டுட்டு கடைசில நீதிபதி ஹீரோவ கருணை அடிப்படையில ரிலீஸ் பண்ணுவாரு தீர்ப்பு சொல்லி முடிஞ்சதும் கண்டிப்பா கோர்ட்டுல இருக்க காந்தி தாத்தா படத்த ஒரு தடவ காமிப்பாய்ங்க... "தர்மம் ஜெயிச்சிருச்சி" ன்னு சிம்பாலிக்கா காமிக்கிறாங்களாமா... 


10. க்ளைமாக்ஸ்ல ஒரு பெரிய பில்டிங்ல சண்டை நடந்துகிட்டு இருக்கும். வில்லன் குரூப்ல ஒரு 50 பேரு கையில AK 47, PK 57 ன்னு வச்சிக்கிட்டு சுத்தி நின்னு நம்மாள டம்மு டம்முன்னு சுட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா லைட்டா நம்மாலு தலைய மட்டும் குனியிவாறு. எந்த குண்டுமே படாது. இவரு கிட்ட 1950 ல SP Chowdry use பண்ண 6 புல்லட் போடுற ஒரே ஒரு ஓட்ட துப்பாக்கி தான் இருக்கும். அத வச்சே ஒவ்வொரு தடவையும் ஒருத்தனை எழுந்து குறி தவறாம சுட்டுட்டு குனிஞ்சிக்குவாரு. அந்த ஆறு புல்லட்ட வச்சே 50 பேரயும் கொன்னுட்டு மேற்கொண்டு மெயின் வில்லன் தலையிலயும் துப்பாக்கிய வப்பாரு. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?

­

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...