Saturday, February 20, 2016

சேதுபதி - இன்னும் பயிற்சி வேண்டும்!!!


Share/Bookmark
சில சமயம் நம்ம மைண்டு சில வார்த்தைகள ஒழுங்கா படிக்கிறதுக்கு முன்னால அதுவா ஒரு அர்த்தத்துல படிச்சிரும். காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு டீ கடையில டீ குடிச்சிட்டு இருந்தோம். அப்ப அங்க பேப்பர் படிச்சிட்டு இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் “என்னய்யா ”காக்கா காக்கா” ன்னு ஒரு படத்துக்கு பேரு வைக்கிறாய்ங்க...இவனுங்களுக்கு வைக்க பேரே கெடைக்கலையா.. விட்டா  கழுதை, நாயின்னு கூட வைப்பாய்ங்க போலருக்குன்னு ரொம்ப சலிச்சிகிட்டு பேப்பர வச்சிட்டு போனாரு. எங்களுக்கு ஒரே டவுட்டு.. ”காக்கா காக்கா” ன்னு ஒரு படமா.. நமக்கு தெரியவே இல்லையே.. ஒருவேளை ஆயா வடை சுட்ட  கதைய லேட்டஸ்ட்டா எடுக்குறாய்ங்களோன்னு டவுட்டுல பேப்பர பட்டுன்னு எடுத்து பாத்தா.... அடங்ங்.... நம்ம கடல் கன்னன் சூர்யா நடிச்ச “காக்க காக்க” படத்து பேரத்தான் அது காக்கா காக்கான்னு படிச்சிருக்கு. இது அவருக்கு மட்டும் இல்லை. எனக்கும் நிறைய டைம் இது மாதிரி நடந்துருக்கு. நம்ம சூப்பர் ஹீரோ சரத்குமாரோட “சண்ட மாருதம்” ங்குற டைட்டில பாக்கும்போது டக்குன்னு “காண்டாமிருகம்” ன்னே படிக்க தோணும். அதே மாதிரி ஆரோகணம் டைட்டில நா ரொம்பநாளா அரக்கோணம்னு தான் படிச்சேன். இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா நம்ம சேதுபதி டைட்டிலயும் ரெண்டு மூணு தடவ “சீதபேதி” ன்னு படிச்சி தொலைச்சிட்டேன்.
 
கமர்ஷியல் மசாலா படங்கள்தான் நம்ம சாய்ஸூன்னு சிவகார்த்திகேயன் நேரடியா குதிச்சிட்டாரு. ஆனா வழக்கமான மசாலா படங்கள் நம்ம பானியா இருக்கக்கூடாது. கொஞ்சம் வித்யாசமான கதைகள்ல மட்டும் நடிக்கனும்னு நடிச்சிட்டு இருக்க விஜய் சேதுபதி அப்டிக்கா ஆக்‌ஷன் மசாலாக்குள்ள குதிச்சிருக்க படம் தான் நம்ம சேதுபதி. ரொம்ப நாளுக்கு முன்னாலயே எடுத்துருக்க வேண்டிய முடிவு. ஆனா வத வதன்னு பல தோல்விப்படங்கள குடுத்தப்புறம் கண்டிப்பா மாறியாகவேண்டிய கட்டாயமோ என்னவோ.  சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் ஹீரோவா அவதாரம் எடுக்க முயற்சி செஞ்சி  காக்கி சட்டையில நம்மள கொண்ணு எடுத்தது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். நம்மாளுக்கு எப்புடி வாங்க பாப்போம்.
 
ஆரம்பத்துல ஒரு போலீஸ்காரர ஒரு குரூப்பு மட்டை பன்னுது. யார் பன்னதுன்னு தெரியல. ஏன் பன்னாங்கன்னு தெரியல. கேஸ் நம்மாளு ஸ்டேஷனுக்கு வருது. “யோவ் அவன் ஒரு மாதிரிய்யா...
கிருக்கன்.. யார் சொல்றதையும் கேக்க மாட்டன்....ரொம்ப ஸ்ட்ரிக்டு “ன்னு விஜய் சேதுபதியைப் பத்தி பில்டப் அள்ளி விட்டு ஆரம்பிக்கிறாய்ங்க. சேதுபதி பாக்குறதுக்கும் நல்லாத்தான் இருக்காரு. ஆனா அடுத்தடுத்து வர்ற காட்சிகள் சுமார் ரகமா இருக்கே தவற அந்த பில்ட் அப்ப மெய்ண்டெய்ன் பன்ற மாதிரி இல்லை.
 
ஆனாலும் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. ஓரளவு நல்லா நகருது. கொஞ்ச நேரத்துல நாம “இது ஒரு ஆக்‌ஷன் கலந்த க்ரைம் த்ரில்லரோ” ன்னு நினைக்கிற அளவுக்கு இன்வெஸ்டிகேஷன்லாம் பலமா பன்றாய்ங்க. ஆனா பெறவுதான் தெரியிது சேதுபதி ஆறுச்சாமியோட ஒண்ணு விட்ட அக்கா பையன்னு. கொஞ்ச நேரத்துல இன்வெஸ்டிகேஷன முடிச்சிக்கிட்டு வில்லன் கூட “நாட்டாமை டூ பங்காளி, பங்காளி டூ நாட்டாமை” ன்னு நேரடியா மோத ஆரம்பிச்சிடுறாரு. அப்புறம் ஹீரோ வில்லன அசிங்கப்படுத்த, அப்புறம் வில்லன் அதுக்கு ஹீரோவ பழிவாங்க... அதுலருந்து ஹீரோ எப்டி மீண்டு  வர்றாருங்குறது தான் மிச்ச சொச்சம்.
 
கதை ரொம்ப குறுகிய வட்டத்துக்குள்ளயே நகருது. விஜய் சேதுபதி குடும்பம், போலீஸ் ஸ்டேஷன், வில்லன் குரூப்... அவ்ளோதான். திரைக்கதைய இன்னும் கொஞ்சம் நல்லா மாஸா பன்னிருக்கலாம்.
திரைக்கதை ஒரு மாதிரி சொதசொதன்னு நகருது. ஆக்‌ஷன்னு இறங்கிட்ட ஃபுல்லா அடிச்சி தூள் பன்ன வேண்டியதுதான். இப்டி  கொஞ்சம் அப்டிக் கொஞ்சம் டைப் ஸ்க்ரீன்ப்ளேதான் கொஞ்சம்
உதைக்கிது. கதை எந்த ஏரியாவுல நடக்குதுன்னே தெரில. இல்ல சொன்னதா நாந்தான் கவனிக்கலயான்னு தெரியல. ஆளுங்க பேசுற ஸ்லாங்க வச்சி மதுரையாதான் இருக்கும்னு நானே
நினைச்சிக்கிட்டேன்.
 
முதல் தடவ வில்லனாக வேல.ராமமூர்த்தி. ஆளு செம கெத்தா இருக்காரு. பேசுற ஸ்லாங்கும் சூப்பர். முதல்தடவ வில்லனோட பில்ட் அப்புக்கு பாட்டெல்லாம் போட்டுருக்காங்க. அந்த ஒரு பாட்டுதான் கொஞ்சம் கேக்குற மாதிரியும் இருக்கு. ரம்யா நம்பீசன் செம அழகு. விஜய் சேதுபதி மனைவியா சூப்பரா நடிச்சிருக்காங்க. அடிக்கடி “அப்பாவ பாக்கனும்... அப்பா வர சொன்னாரு.. அப்பா கோவமா இருக்காரு” ன்னு சொல்லிக்கிட்டே இருக்கு. நானும் அதவச்சி எதாது டுஸ்டு வைப்பாய்ங்கன்னு எதிர்பாத்தேன். கடைசிவரைக்கும் டாடி வரவே இல்லை.
 
ஒரு போலீஸ்காரர விஜய் சேதுபதி அடிக்கிற காட்சி, க்ளைமாக்ஸ்ல விஜய் சேதுபதி பையன வச்சி வர்ற காட்சின்னு அங்கங்க ஒண்ணு ரெண்டு செம சீன்ஸ் இருக்கு. முதல் பாதில கூட இருக்க போலீஸ்காரங்கள வச்சி வர்ற ஒண்ணு ரெண்டு காமெடி நல்லாருக்கு. அப்புறம் ரெண்டு ரவுடிங்களப் பாத்து சேதுபதி “டேய் அவனுங்கள மொறைக்க வேணாம்னு சொல்லு.. சிரிப்பு சிரிப்பா வருது” நன்னு சொல்றது அக்மார்க் விஜய்சேதுபதி பஞ்ச். ரெண்டாவது பாதில  வில்லன்கள முஞ்சில துணிய கட்டிக்கிட்டு அடிக்கிறது, வில்லனுங்க குடும்பத்த கொன்னுருவேன்னு மெரட்டுறது.. அங்க இங்கன்னு விஜய் சேதுபதிய அழைக்கழிக்கிறது எல்லாமே ஆதாம் ஏவாள் காலத்து அருத பழய சீன். எல்லா போலீஸ் படங்கள்லயும் தவறாம வர்ற காட்சிகள் இதெல்லாம். அதுவும் மாஸ் BGM போடுறேன்னு காது ஜவ்வ கிழிச்சிடுறாய்ங்க.
 
விஜய் சேதுபதியப் பத்தி சொல்லனும்னா ஆளு ஆக்‌ஷன் படத்துக்கு செமையா செட் ஆவாரு.  இதுலயும் கெட்டப் சூப்பர். மூஞ்சி வெரப்பா இருக்கு. ஆனா பாடி லாங்குவேஜ் ரொம்ப மொக்கை. ஃபேஸ் இருக்க கெத்துக்கு நடை உடை பாவனையெல்லாம் எப்டி இருக்கனும். எதோ காலையில காய்கறிப்பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட்டு போற மாதிரி பப்பரப்பான்னு நடக்குறாப்ள. வசன உச்சரிப்புகள்லயும் தெளிவு இல்லை. முதல் அரைமணி நேரத்துல சில வசனங்கள் என்ன சொல்றாருன்னே புரியல.  ஆனா சிவகார்த்திகேயனோட ஆக்‌ஷன் அவதாரத்தையும் இதயும் கம்பேர் பன்னா இவர் எவ்வளவோ பெட்டர். நிச்சயம் படம் முழுசும் போரடிக்காக உக்கார முடியிதே இவருக்காகத்தான்.
 
டைட்டில் சாங்குலயே போலீஸ்காரங்க படுற கஷ்டங்கள் எல்லாத்தையும் படம் புடிச்சிருக்காங்க. வெயில் மழையில நின்னு பந்தோபஸ்து பாக்குறது.. கலவரத்துல  அடிபட்டு சாகுறது.  ஊரெல்லாம் தீபாவளி கொண்டாடும்போது போலீஸ் டியூட்டி பாக்குறதுன்னு என்னென்னவோ. எல்லாம் சரிதான். திடீர்னு ஒண்ணு போட்டாய்ங்க பாருங்க. டபீர்னு நெஞ்சு வெடிச்சிருச்சி. ஹெல்மெட் இல்லாததால ஒரு பையன் பைக்க மடக்குறாங்க. அந்த பையன் பைக்க ஸ்டாண்டு போட்டுட்டு ஒரு நூறு ரூவாய தெரியாம போலீஸ் கைக்குள்ள திணிக்கிறான். உடனே அவரு அத திரும்ப அந்தப் பையன் பாக்கெட்டுலயே சொருகி விட்டுட்டு அந்தப் பையனுக்கு ஒரு ஹெல்மெட்ட மாட்டி ச்சின் ஸ்ட்ராப்பெல்லாம் போட்டு விட்டு அனுப்புறாரு.  எனக்கு உடனே வழக்கமா ஷங்கர் படத்தோட கடைசில “2020 இல் இந்தியா வல்லரசாகியது” ன்னு போட்டு அள்ளி விடுவாய்ங்க. அந்த மாதிரி தான் இருந்துச்சி அந்த சீன். மக்கழே.. இந்த மாதிரி சம்பவம்லாம் எங்கயாவது நடந்ததுண்டா...
 
சம்பவம்னதும் நண்பர்கள் ரெண்டு பேரு இது மாதிரி ட்ராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டுனது ஞாபகம் வருது. ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டாய்ங்க. ஹெல்மெட் இல்லை. போலீஸ்காரரு நூறு ரூவா கேக்குறாரு. இவய்ங்ககிட்ட இல்லை. கொஞ்சம் கொஞ்சமா அமவுண்டு கம்மியாகுது.. 80... 70... 50... ன்னு. உள்ளத்தை அள்ளித்தா செந்தில் மாதிரி   ஒரு ஸைபர கட் பன்னிக்கிட்டு பத்து ரூவா இருந்தா குடுன்னு  போலீஸ்காரரு தரை ரேட்டுக்கு இறங்கிருக்காரு. ஆனா இவனுங்க கவுண்டமணி மாதிரி அதுலயும் ஒரு சைபர கட் பன்னிகிட்டு 1 ரூவா தான் சார் இருக்குன்னு சொல்லிருக்காய்ங்க. இங்கதான் த்ரில்லிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க.. பயந்துடாதீங்க... அந்த போலீஸ்காரரு அதயும் விடாம “சரி அந்த ஒரு ரூவாய்க்கு ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு வண்டிய எடுத்துட்டு போ” ன்னு சொல்லிருக்காப்டி. இதயெல்லாம் பாத்துட்டு ஹெல்மெட் மாட்டி விடுற சீன பாத்தா சிரிப்பு வருமா வராதா?
 
 
ஆறுச்சாமி, அன்புச்செல்வன் துரை சிங்கம்னு பல ஃபோர்சான ஆபீசர்கள பாத்து வளர்ந்த நமக்கு சேதுபதி ஒரு பெரிய இம்பேக்ட தரல. இருந்தாலும் போரடிக்காம முழுப்படத்தையும் நகர்த்திருக்காங்க. கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்.
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...