Thursday, September 28, 2017

ஸ்பைடர் – சிறப்பு!!!


Share/Bookmark

வெளிநாட்டுப் படங்கள்லருந்து மொத்த  படத்தையும் காப்பி அடிச்சி தமிழ்ல எடுக்குறது தப்பு. ஆனா வெளிநாட்டுப் படங்களோட கருவ மட்டும் எடுத்து அத வச்சி இங்க குஞ்சு பொறிச்சா தப்பில்ல. அப்டின்னு யாரு சொன்னது? முருகதாஸே சொல்லிருக்காருப்பா.. அப்ப சரியாத்தான் இருக்கும். நல்ல ஸ்க்ரிப்ட் எழுதுற எல்லாராலயும் அத நல்ல படமா எடுத்துட முடியாது. அந்த ஸ்க்ரிப்ட்ட படமாக்குற இயக்குனருக்கு திறமை இருந்தாதான் நல்ல படமா அமையும். முருகதாஸ் ஒரு நல்ல கதாசிரியரா இல்ல நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஏன்னா தீர்வாகாத கேஸுங்க பல இருக்கு அவர் மேல. ஆனா அவர் இப்ப இருக்குற நல்ல திறமை மிக்க இயக்குனர்கள்ல முருகதாஸூம் ஒருவர்ங்குறதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத இந்த ஸ்பைடரும் உறுதிப்படுத்திருக்கு.

”பர்சன் ஆஃப் இண்ட்ரஸ்ட்” அப்டிங்குற ஒரு ஆங்கில சீரியல்லருந்து மேல சொன்ன மாதிரி கருவ மட்டும் எடுத்துக்கிட்டு, அத நம்மூருக்கு தேவையான மாதிரி உப்பு புளி மசாலாவெல்லாம் போட்டு தயார் படுத்துனதுதான் இந்த ஸ்பைடர். மக்களை தொடர்ந்து கவனித்து வரும் சிசிடிவி வீடியோக்கள் வழியா, என்னென்ன தப்பு நடக்கப் போகுதுங்குறத முன்கூட்டியே கண்டுபிடிச்சி அத நடக்க விடாம செய்றதுதான் பர்சன் ஆஃப் இண்ட்ரெஸ்ட் சீரிஸ்ல வர்ற கான்ஸெப்ட். அந்த ஐடியாவுக்கு ஒரு மருவ வச்சி இங்க கொஞ்சம் வேற மாதிரி சொல்லிருக்காங்க.

முதல் பாதில படத்தோட கதைக்களமும், காட்சிகளையும் ரொம்பவே புதுசா ஃபீல் பன்ன முடிஞ்சிது. சாதாரணமா போயிட்டு இருக்க படம் ஒரு கட்ட்த்துல சூடு பிடிச்சி இண்டர்வல்ல வேற லெவலுக்குப் போய் ரெண்டாவது பாதிலயும் சுவாரஸ்யமா பயணிச்சி சற்று டொம்மையான க்ளைமாக்ஸோட முடியிது.

படத்தோட ப்ளஸ்ஸூன்னு பாத்தா நிறைய விஷயங்களச் சொல்லலாம். முதல்ல மேல சொன்ன மாதிரி கதைக்களம் ரொம்ப புதுசா இருக்கு. ஒரே மாதிரிப் படங்களப் பாத்துப் பாத்து போரடிச்ச நமக்கு ரொம்பவே ஒரு புது உணர்வத் தருது.

அடுத்து எஸ்.ஜே.சூர்யாவும் அவரோட பாத்திரப் படைப்பும். தமிழ்சினிமாவோட ரொம்பக் கொடூரமான, மறக்க முடியாத வில்லன்களோட லிஸ்டுல இந்த ஸ்பைடர் படத்தோட ”சுடலை”ங்குற வில்லன் கதாப்பாத்திரமும் இடம் புடிக்கும். அந்த அளவுக்கு அழுத்தமான ஒரு பாத்திரப் படைப்பு.. அந்த பாத்திரத்துக்கு தகுந்த மாதிரியே எஸ்.ஜே.சூர்யா செம்மையா நடிச்சிருக்காரு. அவர்மட்டும் இல்லை அவரோட சின்ன வயசு கேரக்டரா வர்ற பையனும் சூப்பரா நடிச்சிருக்கான்.

அடுத்து ஹாரிஸோட பிண்ணனி இசை. இது ஹாரிஸோட பெஸ்ட் இல்லைன்னாலும், இந்தப் படத்துக்கு முழுசும் சப்போர்ட் பன்ற மாதிரியான தரமான பின்ணணி இசை. ஹாரிஸோட வழக்கமான டெம்ளேட் 5 பாடல்கள அப்படியே இந்தப் படத்துக்கும் குடுக்காம கொஞ்சம் வித்யாசமா போட்டுருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.  

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸோட திரைக்கதை மற்றும் இயக்கம். சாதாரண ஒரு காட்சியில கூட சின்னச் சின்ன வசனங்கள் மூலமா ஆடியன்ஸூக்கு நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துறது முருகதாஸ் ஸ்பெஷல். இந்தப் பட்த்துலயும் ஒருசில காட்சிகள்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.

அடுத்து மகேஷ் பாபுதான் படத்துக்கு மெயின் அட்ராக்‌ஷன். ஆளு செம்மையா இருக்காரு. முதல் நேரடித் தமிழ்ப்படம் அதுலயும் சொந்தக் குரல்லயே தமிழ்ப் பேசி நடிச்சிருந்தது ரொம்பவே ரசிக்கும்படியா இருந்துச்சி. என்ன ஒண்ணு அவங்க அப்பாதான் தமிழ் சொல்லிக் குடுத்துருப்பாரு போல. மகேஷ் தமிழ் பேசுறத கேக்கும்போதெல்லாம் கந்தசாமி படத்துல அவங்க அப்பா பேசுறது கண்ணு முன்னால வந்தூட்டுப்  போச்சு.  

இதே மாதிரி படத்தோட மைனஸூன்னு சில விஷயங்களச் சொல்லலாம். முதல்ல ஹீரோ மகேஷ்பாவுவோட கதாப்பாத்திர அமைப்பு. இந்தக் கதையைப் பொறுத்த அளவு அவர போலீஸாவே போட்டுருக்கலாம். மகேஷ் பாபுவ ஒரு சிஸ்டம் ஒர்க்கரா போட்டுருக்காங்க. ஆனா பாருங்க அவரே தனியா டீம் வச்சி க்ரைம தடுக்குறாரு. மொத்த கேஸையும் அவரே டீல் பன்றாரு. செகண்ட் ஹாஃப்ல கூட போலீஸெல்லாம் பாவமா வந்து ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கானுங்க. நம்மாளு “சார் இந்த கேஸ நானே டீல் பன்னிக்கிறேன்” ன்னு ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்காரு. அந்தப் போலீஸ்காரனுங்க  “டேய் நீ ஓனரா இல்ல நா ஓனராடா?”ன்னு நினைச்சி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கானுங்க.

அடுத்து ரெண்டாவது பாதில வர்ற சில தேவையற்ற நீளமான காட்சிகள். எஸ்.ஜே சூர்யாவப் புடிக்கப் போறதுக்கு ப்ளான் பன்றதா சொல்லி லேடீஸ வச்சி ஒரு நீ..ளமான சீன் ஒண்ணு எடுத்து வச்சிருக்காங்க. கொஞ்சம் சுருக்கிருக்கலாம்.

அடுத்து பண்ணாறி அம்மன், ராஜகாளி அம்மன், பொட்டு அம்மன் படங்கள் ரேஞ்சுக்கு காட்டு மொக்கையான கிராஃபிக்ஸ்தான் படத்தோட மிகப்பெரிய மைனஸூன்னு சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த கிராஃபிக்ஸ் விஷயத்துல மட்டும் எப்பவுமே கோட்ட விடுறாரு. மொக்கையான கிராஃபிக்ஸ் மட்டும் இல்லாம நம்ப முடியாத காட்சிகளாவும் இருக்கு. பாராங்கல் ரோட்டுல ஃபுல் ஸ்பீடுல உருண்டு வர்ற காட்சி, ரோலர் ஹோஸ்டர் சண்டைக்காட்சி, ஹாஸ்பிட்டல் விபத்துன்னு நிறைய இடங்கள் நாகினி சீரியல் லெவலுக்கு இருக்கு. முதல்பாதி ரொம்பவே டீசண்ட்டா இருந்துச்சி . அதே மாதிரி ரெண்டாவது பாதிலயும் ரொம்ப கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸெல்லாம் முயற்சி செய்யாம நார்மலாவே எதாவது செஞ்சிருக்கலாம்

நம்ப முடியாத காட்சிகள், கான்செப்டுகள் நிறைய இருக்கு. ஹை ஸ்பீடு இண்டர்நெட்டுன்னு ஒண்ண வச்சிக்கிட்டு யார் வீட்டுல என்ன நடக்குதுங்குறது மொதக்கொண்டு உக்காந்த இடத்துலருந்தே பாக்குறதெல்லாம் ஹாலிவுட் புருடாவுக்கும் மேல.

படம் ரொம்ப சீரியஸாவே பயணிக்கிது. மகேஷ் மாதிரி பெரிய ஆளுங்க படம் பன்னும்போது அதுல எல்லாமே கலந்த மாதிரி பன்றது நல்லது. இந்தக் கதைய ஆரம்பத்துலருந்தே இவ்வளவு சீரியஸா எடுத்துட்டுப் போகனும்னு  அவசியம் இல்ல. காமெடிக்கு ஸ்கோப் இருந்தும், போராளி RJ பாலாஜி இருந்தும் நகைச்சுவைக் காட்சிகள் எதுவுமே இல்ல. RJ பாலாஜிக்கு செண்டர் ஃப்ரஷ் வாங்கிக் குடுத்துட்டாங்க போல. அதாங்க இந்த “வாய்க்குப் போடும் பூட்டு”. மனுசன் காற்று வெளியிடையில கூட சீரியஸா ரெண்டு வசனம் பேசுனாரு. இதுல அதுகூட இல்லை.

ரகுல் ப்ரீட் சிங்க ரொம்ப ஆர்டின்ரியா காமிச்சிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு ஒழுங்கா தலையக் கூட சீவி விடாம படத்துல சுத்த விட்டுருக்காங்க. பாடல்கள்ல செம அழகு.

மகேஷ்பாபுவுக்கு  ஏ.ஆர்.முருகதாஸோட இயக்கத்துல முதல் தமிழ் எண்ட்ரி. ஒட்டுமொத்தமா ரொம்பவே நல்ல ரெஸ்பான்ஸ்தான் இருக்கு தமிழ்நாட்டுல. அடுத்தடுத்த படங்களும் நேரடித் தமிழ்ப் படங்களா நடிப்பார்னு எதிர்பார்ப்போம்.


மொத்தத்துல ஒரு சில சின்ன மைனஸ் இருந்தாலும் மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்,


Monday, September 25, 2017

ஜூனியர் என் டி ஆரின் ஜெய் லவகுசா!!!


Share/Bookmark
ஜனதா காரேஜ் திரைப்பத்தோட பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, தனது சொந்த அண்ணன் நந்தமுரி கல்யான்ராம் தயாரிப்புல (மொட்டை சிவா கெட்ட சிவா ஒரிஜினர் வெர்ஷனில் நடித்தவர்) ஜூனியர் என் டி ஆர் மூன்று வேடங்கள்ல நடிச்சி வெளியாகியிருக்க படம் ஜெய் லவ குசா. ஏற்கனவே இந்தப் படத்தோட டீசர், ட்ரெயிலர், பாடல்கள்னு எல்லாமே ஹிட் ஆயிருக்க சமயத்துல படம் எப்படி இருக்குன்னு பாப்போம்.

அச்சு அசலா ஒரே மாதிரி இருக்க மூணு அண்ணன் தம்பிங்க.  சின்ன வயசுல அப்பா இறந்துட்டதால மாமாவின் துணையோட ராமாயணம் நாடகம் போட்டு பிழைப்ப ஓட்டிக்கிட்டு இருக்காங்க. மூத்தவனுக்கு நடிக்க ரொம்ப ஆசை. ஆனா அவனுக்கு திக்குவாய் இருக்கதால, அவனுக்கு நாடகத்துல முக்கியமான பாத்திரம் எதுவும் குடுக்காம ஓரம்கட்டுறாங்க. அதேசமயம் அவனோட தம்பிங்க ரெண்டு பேரும் ராம, லக்‌ஷ்மண வேஷம் போட்டு ஊரு ஃபுல்லா நல்லா ஃபேமஸ் ஆகுறாங்க. தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டெல்லாம் தன்னை ஓரம்கட்டி விட்ட தம்பிகளுக்கு கிடைக்கிதேன்னு உள்ளுக்குள்ள கோபம் பொங்குது மூத்தவனுக்கு.

அந்த சமயம் சூர்ப்பனகை மூக்கை ராமன் அறுத்ததாலதான் ராமனுக்கும் ராவணனுக்கும் சண்டை வந்துச்சிங்குற விஷயம் அவனுக்கு தெரியவர, ராவணன் செஞ்சது சரிதான்ங்குற எண்ணம் மனசுல தோணுது. அப்பலருந்து ராவணனோட பக்தனாகுறான். பக்தனாகுறது மட்டும் இல்லாம, தம்பிங்க நாடகம் நடிச்சிட்டு இருக்குறப்போ சிலிண்டர கொளுத்தி விட்டு மொத்த ஸ்டேஜயும் தீக்கிரையாக்குறான். மூணு பேரும் பிரியிறாங்க. அப்டியே பெடல சுத்துனா எல்லாரும் பெரியாளாயிடுறாங்க. ஒவ்வொருத்தன் உயிரோட இருக்கது இன்னொருத்தனுக்கு தெரியல.  அப்புறம் ஒவ்வொருத்தரும் எப்படி, என்ன சந்தர்ப்பத்துல மீட் பன்னிக்குறாங்க, அதனால என்ன நடக்குதுங்குறது தான் கதை.

இரட்டையர்கள் கதைன்னா ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது ஒருத்தன் பயங்கர பயந்தாங்கோளியா இருப்பான். எல்லாரும் ஏமாத்துவாங்க. இன்னொருத்தன் அப்படியே நேர்மாறா இருப்பான். எல்லாரையும் அடிச்சி தொம்சம் பன்னுவான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் இடம் மாறி, முன்னால ஏமாத்துனவங்களையெல்லாம் அடிச்சி பறக்க விடுவாங்க. இதான் தொண்றுதொட்டு இருக்க வழக்கம். அத இந்தப் படத்துலயும் விடாம புடிச்சிருக்காங்க.

ரெண்டு பேருன்னா ஓக்கே.. அப்ப மூணு பேருன்னா என்ன பன்னுவாங்க? ஒரு பாதி பழைய ஃபார்முலா.. பயந்தாங்கோளிக்கு பதிலா பலசாலி மாறுறது. ரெண்டவது பாதில இதே கான்செப்ட்ட அப்படியே ரிவர்ஸூல யூஸ் பன்னிருக்காங்க. . 

ரெண்டாவது பாதில பெரும்பாலான காட்சிகள்ல மூணு என் டி ஆரும் ஒரே ஃப்ரேம்ல இருக்க மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கு. ஆனா எந்த வித்யாசமும் தெரியாம ரொம்பவே சூப்பரா படம் புடிச்சிருக்காங்க. மூணு பேரும் ஒரே சீன்ல இருக்க மாதிரி அதிக காட்சிகள் இடம்பெற்றது இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல முன்னால அண்ணனுக்காக தம்பிங்க போடுற நாடகத்துல நம்மள கண்ணு கலங்க விட்டுடுறாங்க.

தேவி ஸ்ரீ ப்ரசாத் பட்டையக் கிளப்பிருக்காரு. ராவணனா வர்ற மூணாவது NTR க்கு வர்ற பின்னணி இசை தாறுமாறு. அந்த ராவணா.. ராவணா பாடலும் சூப்பர். தெலுங்கு படங்களை பொறுத்த அளவு பாடல்களை நல்லா எடுத்துருக்காங்கன்னு சொல்லவே தேவையில்லை. எத நல்லா எடுத்தாலும் எடுக்காட்டியும் பாட்டுகள மட்டும் நல்லா பளிச்சின்னு எடுத்து வச்சிருவாங்க.

சண்டைக்காட்சிகளும் வழக்கம்போல சூப்பர்.. ஒரு என் டி ஆர் இருந்தாலே வில்லன ஒண்ணுக்கு போற அளவு அடிப்பாரு.. இதுல மூணு என் டி ஆருங்கயில மோஷன் போற அளவுள்ள அடிச்சாகனுமே... வில்லன்கள் படத்துல சும்மா ஊருகா மாதிரிதான். படத்த முடிக்கிறதுக்காக மட்டும் வந்துட்டுப் போறாங்க. 

ராஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸுன்னு ரெண்டு சூப்பர் ஹீரோயின்கள். அதிக வேலை எதுவும் இல்லை. ஒவ்வொரு பாட்டுதான். நிவேதா தாமஸ சைடு ஆங்கிள்ள பாக்கும்போது அதோட ஹைட்டுக்கும் அதுக்கும் மீரா ஜாஸ்மின பாக்குற மாதிரியே இருக்கு. ஒரு ஐட்டம் சாங்குக்கு தமன்னாவ கூட்டிக்கிட்டு வந்து அருவருப்பா டான்ஸ் ஆட விட்டுருக்காங்க.

இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இதுக்கு முன்னால பவர் , சர்தார் கப்பர் சிங்குனு ஒரு சுமார் மற்றும் ஒரு காட்டு மொக்கை படத்தை மட்டும் எடுத்திருந்தாரு. ஆனா இந்தப் படத்துல முழு  வீச்சுல செயல்பட்டு சூப்பரான ஒரு அவுட்புட்ட குடுத்துருக்காரு. 

படத்தோட முதுகெழும்பே என்.டி.ஆர் தான். பட்டைய கெளப்பிருக்காரு. மூணு ரோல்லயும் கெட்டப்புல பெரிய வேரியேஷன் காமிக்கலன்னாலும், உடல்மொழிலயும், வசன உச்சரிப்புலயும் தனித்தனியே தெரியிறாரு. கண்ண மூடிக்கிட்டு கேட்டா கூட இப்ப எந்த கேரக்டர் பேசிக்கிட்டு இருக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். காமெடிக்கு தனி ஆள் தேவைப்படல. என் டி ஆரே காமெடிலயும் கலக்குறாரு.

ரெண்டு வகையான முன்னேற்றம் இருக்கு. ஒண்ணு Continues Improvement இன்னொன்னு continual improvement. முதல்ல சொன்னது தொடர் முன்னேற்றம். சும்மா ஜொய்ங்கின்னு முன்னேறி போயிட்டே இருப்பாங்க. ஆனா விழுந்தா ஆரம்பிச்ச இடத்துல வந்து விழுந்துருவாங்க. ரெண்டவது சொன்ன continual improvement ங்குறது சீரான மற்றும் நிலையன, படிப்படியான முன்னேற்றம். இவங்க ஒரு நிலைய அடைஞ்சப்புறம் அந்த இடத்துல தங்கள நல்லா நிலை நிறுத்திக்கிட்டு அடுத்த லெவலுக்கு போவாங்க. அதனால இவங்க சறுக்குனா கூடா அதுக்கு மொதல்ல இருந்த படிநிலைக்குப் போவாங்களே தவற ஆரம்பிச்ச இடத்துக்கு போகமாட்டாங்க.

தென்னிந்திய சினிமாவப் பொறுத்த அளவுல இந்த தொடர்ந்து, சீரான, படிப்படியான முன்னேற்றம் அடையிற நடிகர் என் டி ஆரத் தவற வேற யாரும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் நடிப்புலயும், உடல் மொழியிலயும், கதைத் தெரிவுலயும் அவ்வளவு முன்னேற்றத்த காட்டிக்கிட்டு வர்றாரு.  இந்த ஜெய் லவ குசாவும் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கண்டிப்பா பாக்கலாம். வசூல் ரீதியாவும் பெரிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம்.

Monday, September 18, 2017

துப்பறிவாளன் – A மிஷ்கின் இறக்குமதி!!!


Share/Bookmark
பூவே உனக்காக படத்துல விஜய்க்கும் சார்லிக்கும் ரூம் மேட்டா மதன் பாப் இருப்பாரு.. சார்லி அவர் கிட்ட ”நீங்கஎன்ன பன்றீங்க?”ன்னு கேட்டதும் மதன்பாப் “கதை எழுதுறேன்”ம்பாறு. உடனே சார்லி “வந்த படத்துக்கா வராதபடத்துக்கா?”ன்னு நக்கலா கேப்பாறு. அதுமாதிரி வந்தபடங்களுக்குகதை எழுதுற இயக்குனர்கள் நிறைய பேருஇருக்காங்க. அதுல ஒருத்தர் மிஷ்கின். மக்கள் பாக்க நல்ல படங்கள் எடுக்குறது இயக்குனர்கள் ஒரு வகை.அவங்க பாத்த நல்ல படங்களையே திரும்ப எடுக்குற இயக்குனர்கள் ஒருவகை.இயக்குனர் மிஷ்கின் ரெண்டாவதுவகை. அவர் பார்க்குற பிற மொழிப்படங்கள்ல அவருக்கு பிடிச்சதையெல்லாம் இறக்குமதிசெஞ்சி நம்மூர்ல படமாஎடுத்து நமக்கு போட்டுக்காட்டுவாரு.

மிஷ்கின் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வேற எதாவது ஒரு பட்த்துல இன்ஸ்பையர் ஆகி எடுத்ததுதான்.கிஹூஜூரோ, பேட் மேன், போன்ற படங்கள்ல இன்ஸ்பையர் ஆகி நந்தலாலா, முகமூடி போன்ற படங்கள நமக்குஎடுத்துக் காமிச்ச மாதிரி இந்த தடவ ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சீரிஸ்ல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் தான்துப்பறிவாளன். டிடெக்டிவ் ஷெர்லாக்கும் அவருடைய நண்பர் டாக்டர் வாட்சனும் துப்பறியும் கதைகள் மிகசுவாரஸ்யமானவை. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படங்கள் பல வந்திருந்தாலும் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்த“ஷெர்லாக்” என்ற ஆங்கில சீரிஸ் மிகவும் பிரபலம். அதுலதான் நம்மாளு இப்ப இன்ஸ்பையர் ஆகிருக்காரு.என்னது காப்பின்னு சொல்லனுமா? அய்யய்யோ அப்டியெல்லாம் சொல்லக்கூடாது. காப்பின்னு நம்ம சொன்னாஅப்புறம் காப்பின்னா என்ன இன்ஸ்பிரேசன்னா என்ன, காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள வித்யாசம்என்னன்னு நமக்கு அரை மணி நேரம் விளக்கம்லாம் குடுப்பாங்க. ஏன் வம்பு.

எடுக்குற படம் ஒழுங்கா இருந்தா இன்ஸ்பையர் ஆனாலும் காப்பி அடிச்சாலும் நமக்கு எந்தப் பிரச்சனையும்இல்லை. சித்திரம் பேசுதடி நல்லாருந்துச்சி. நந்தலாலா நல்லாருந்துச்சி. ஆனா முகமூடிய கிரிஸ்டோஃபர்நொலனுக்கு போட்டுக்காமிச்சோம்னா அவன் நெஞ்சு வெடிச்சி செத்துருவான். அந்த அளவுக்கு இருந்துச்சி. இப்பஇந்த துப்பறிவாளன் எப்புடி இருந்துச்சின்னு பாப்போம்.

ஒண்றுக்கொண்று தொடர்பில்லாத மூணு சம்பவங்கள் ஆரம்பத்தில் நடக்க, தனியார் துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனும் அவரது நண்பனும் துப்பறியிறதுதான் படத்தோட கதை. துப்பறியும் கதைங்குறதால கதைக்குள்ள ரொம்ப டீப்பா உள்ள போகத் தேவையில்லை. துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுறதுக்கு பதிலா சொத சொதவென இழுக்குது. ஒரு க்ளூவிலிருந்து இன்னொரு க்ளூ.. அதை தொடர்ந்து போறப்போ தொடரும் கொலைகள்னு வழக்கமான அதே டெம்ப்ளேட் தான். சமீபத்துல வந்த குற்றம்  23 படத்துல வர்ற இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் ஏற்படுத்துன அளவு தாக்கத்துல பாதியை கூட இந்த துப்பறிவாளன் ஏற்படுத்தலன்னு சொல்லலாம்.

விஷால் பெரிய ப்ரில்லியண்டுங்க.. அவரு பயங்கரமா கேஸெல்லாம் சால்வ் பன்னிருவாருங்கன்னு படத்துல இருக்கவங்கதான் சொல்லிட்டு இருக்காங்களே தவற பாக்குற நமக்கு அப்டி ஒண்ணும் தெரியல. கடைசி வரைக்குமே அவரும் பெருசா எதுவும் பன்னல.

போக்கிரி தெலுங்கு ஒரிஜினல் வெர்ஷன்ல மகேஷ்பாபு ஒரு மாதிரி ரொம்ப கேஷூவலா இருக்க மாதிரி வசனம்பேசுவாரு. அதே மாதிரியே பன்றதா நினைச்சிக்கிட்டு விஜய் தமிழ்ல சளி புடிச்சவன் மாதிரி மூக்க உறிஞ்சி உறிஞ்சிபேசிக்கிட்டு இருந்தாரு. அந்தக்  கொடுமைதான் இந்த துப்பறிவாளன்லயும். ஷெர்லாக் சீரிஸ்ல ஷெர்லாக்காவர்றவன் ஒரு வித்யாசமான மாடுலேஷன்ல கடகடன்னு பேசிக்கிட்டே இருப்பான். அதயே விஷால பன்ன வைக்கமுயற்சி பன்னிருக்காரு மிஷ்கின். விளைவு… மேல கிரிஸ்டோஃபர் நொலனுக்கு முகமூடிய போட்டுக்காட்டுனாஎன்ன நடக்கும்னு சொன்னோமோ அதேதான் இப்ப ஷெர்லாக்குக்கும். விஷால் ஷெர்லாக் மாதிரி பேசுறேன்னு கொண்ணு எடுத்துருக்காப்ள.

அதுவும் விஷாலோட கெட்டப் இருக்கே… அபாரம். கவுண்டர் ஒரு படத்துல ”பிக்பாக்கெட் பெரியசாமி”ங்குற பேர்லகழுத்துல கர்சீஃப் கட்டிக்கிட்டு ஒரு மாதிரி சுத்துவாரு. அதே பிக்பாக்கெட் பெரியசாமி கெட்டப்ப விஷாலுக்குபோட்டுவிட்டு, ஷெர்லாக் சீரிஸ்ல நடிச்ச பெனடிக்ட் கும்பர்பேட்ச் போட்டுருக்க தொப்பிய மாட்டிவிட்டு, மிஷ்கின்நைட்டுல நடக்குற ப்ரஸ் மீட்டுலயெல்லாம் போட்டுருப்பாரே ஒரு கருப்பு கண்ணாடி.. அதயும் எடுத்து விஷாலுக்குபோட்டுவிட்டா டிடெக்டிவ் கணியன் பூங்குன்றனுக்கான கெட்டப் ரெடி. இந்த கெட்டப்பயெல்லாம் சேத்து மொத்தமாவிஷால பாக்குறப்போ ”ராஜா அண்ணாமலைபுரம் போறதுக்கு இது மூஞ்சி அல்ல.. கண்ணம்மா பேட்டை போறமூஞ்சிதான் இது”ன்னு கவுண்டர் ஒருத்தனப் பாத்து சொல்ற வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.


மொத்த படத்திற்கும் விஷாலின் இந்த கெட்டப்பும், அவரின் வசன உச்சரிப்புகளும் ஒரு மிகப்பெரிய மைனஸ்.அதுவும் ஹீரோயினிடம் விஷால் பேசுற விதம் ”என்ன இவன் வெறிநாய் கடிச்சமாதிரி பேசுறான்?” ன்னு நம்மகடுப்பாகுற அளவுக்கு எரிச்சல். எதோ வித்யாசமாக கூவ முயற்சி செஞ்சிருக்காங்க.

கேமராவ நேராப் பாத்து பேசுனா அவன் சாதா பூபதி… கேமராவுக்கு சைடுல பாத்து பேசுறவந்தான் ஆல்தோட்டபூபதி… படத்துல யாருமே கேமராவப் பாத்து பேசமாட்டேங்குறாங்க.  கலகலப்புபடத்துல இளவரசுவஓங்கிக் குத்திஅவரோட கழுத்த ஒருபக்கமா திருப்பிருவானுங்க. அதுக்கப்புறம் ஒரு சைடாவே பாத்துக்கிட்டு இருப்பாரு. விஷால்கழுத்தயும் எவனோ ஒருத்தன் அந்த மாதிரி திருப்பி விட்டுருக்கான்னு நினைக்கிறேன். பாடி நேரா இருக்கு கழுத்துமட்டும் எல்லா சீன்லயுமே சைடு வாங்கியிருக்கு. எந்த வசனம் பேசுறதா இருந்தாலும் “இரும்மா ஒரு பொசிசன்லபோய் நின்னுக்குறேன்”ன்னு ஒரு சுவத்து ஓரமாவோ இல்லை ஜன்னல் ஓரமாவோ போய் நின்னுட்டுதான்பேசுறாரு. மத்தவங்கள விடுங்க. ஒரு சின்னப்பையன் விஷாலப் பாக்க வருவான். அவன் கூட அப்டித்தான் எங்கயோ பாத்துபேசிக்கிட்டு இருக்காரு.

உன்னருகே நானிருந்தால் படத்து காமெடில விவேக் ரம்பாகிட்ட கோழி புடிக்கிற சீன விளக்கிட்டு இருக்கும்போதுரம்பா கடுப்பாகி “போன படத்துலயும் இதே சீன் தானே சார் இருந்துச்சி”ன்னுசொல்லும். உடனே விவேக் “அதுகோழி.. இது அதோட குஞ்சு… எனக்கு கோழி செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம்”ன்னுவாரு. அதே மாதிரிநம்ம மிஷ்கினுக்கு “மொட்டை” செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம் போல. ஒவ்வொரு படத்துலயும் வில்லன்குரூப்புல ஒரு மொட்டை வெட்டியா இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திகினு இருக்கான்.

ஒரு பதினைஞ்சி இருவது வருஷத்துக்கு முன்னால ஹீரோ கேஷூவலா சண்டை போடுற மாதிரி காட்ட ஃபைட்டுக்கு இடையில அவரு வேற எதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி காமிப்பாங்க. உதாரணமா ஜெமினி படத்துல காலேஜ் க்ளாஸ் ரூம்ல நடக்குற ஃபைட்டு ஒண்ணுல ரெண்டு பேர அடிச்சி வீசிட்டு மூணாவது ஆள் வர்ற கேப்புல விக்ரம் கைல வச்சிருக்க புத்தகத்த திறந்து படிப்பாரு. பழைய ரஜினி, ப்ரபு படங்கள்லயெல்லாம் இது மாதிரி காட்சிகள் நிறைய இருக்கும்.

அந்த மாதிரி வழக்கொழிஞ்சி போன சண்டைக்காட்சி ஒண்ணு இதுலயும். மவுத்தார்கண் வாசிச்சிக்கிட்டே விஷால் சண்டை போடுறாப்ள.. ஒவ்வொருத்தனையும் அடிச்சிட்டு கிடைக்கிற கேப்புல மவுத்தார்கன் வாசிக்கிறாரு. மவுத்தார்கன் வாசிச்சிக்கிட்டே ஒருத்தன் மவுத் ஆவப் போறான்னு நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன். அதுக்கும் மேல க்ளைமாக்ஸ பெரிய துப்பாக்கி வச்சிருந்த வில்லன்கிட்ட ஒரு சின்ன செடியப் புடுங்கி சண்டை போடுவாரு பாருங்க… உலக அரங்கிலேயே இப்படி ஒரு சண்டையை ஒருவன் கூட வைத்ததில்லைன்னு மார்தட்டிச் சொல்லலாம். வாழப்பழத்த வச்சி வெட்டுன பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷயெல்லாம் தூக்கி கடாசிட்டாப்ள.

இப்பல்லாம் கிரீன் டீ குடிக்கிறத ரொம்பப் பெருமையா பல பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அத கிண்டல் பன்றதுக்காகவா என்னனு தெரியல படத்துல ரெண்டு சீன்ல ஹீரோயின் குடுக்குற கிரீன் டீய குடிச்சிட்டு “இது கழுதை மூத்தரம் மாதிரி இருக்கு” “இது காண்டாமிருக மூத்தரம் மாதிரி இருக்கு”ன்னு விஷால் கமெண்ட் அடிக்கிறாரு.  ஒரு வேள ஹீரோயின் பதிலுக்கு “அது மாதிரி இல்ல சார்… அதேதான்”ன்னு சொல்லிருந்துச்சின்னா நிலமை என்னாயிருக்கும்?

”அஞ்சாதே” படத்து வில்லன் குரூப் டெம்ப்ளேட்ல ஆள மட்டும் மாத்தி துப்பறிவாளன்ல நடிக்கவச்சிருக்காரு.அதாவது பாண்டியராஜனுக்கு பதிலா பாக்கியராஜ்.. ப்ரசன்னாவுக்கு பதிலா வினய்.. மொட்டைக்கு பதிலா இன்னொருபுது மொட்டை. பாக்யராஜ் ஆளும் கெட்டப்பும் சிறப்பு. ஆனா ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா அவரு பழக்கதோஷத்துல “அய்யய்யோ”…. ”முருங்கக்கா” “கசமுசா” போன்ற வார்த்தைகள எதுவும் சொல்லிடப்போறாருன்னுபயந்து மணிரத்னம் பட ஹீரோக்கள் மாதிரி ஒரே ஒருவார்த்தை வசங்களத்தான் வச்சிருக்காங்க. அதே மாதிரிவினய்யும் ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா சவுக்கார்பேட்டை சேட்டு பசங்க வாடை அடிக்கும்னு அவருக்கும்அதே ஓரிரு வார்த்தை வசனங்கள்தான். எனக்குத் தெரிஞ்சி படத்துல அவரு பேசுன லென்த்தியான வசனம் “ஒருகாஃபி”

ஷெர்லாக் அருகிலிருக்கும் டாக்டர் வாட்சன் கேரக்டரில் ப்ரசன்னா. அனைத்து காட்சிகள்லயும் இருக்குறாருங்குறத் தவற வேற எதுவும் சொல்றதுக்கில்ல. என்னப் பொறுத்த அளவு விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படம் நல்லா இருந்துருக்கும். விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படத்த யாரு புரடியூஸ் பன்றதுன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது

மிஷ்கினோட அனைத்து படங்கள்லயும் ஒரே மாதிரியான காட்சிப்பதிவுகள் அலுக்குது. கதைக்களத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு பாணி சண்டைக்காட்சிகள வைக்கிறது இந்தப் படத்துலயும் தொடருது.   முட்டிக்கு கீழ காலமட்டுமே காட்டிக்கிட்டு இருக்க காட்சிகள் இந்தப் படத்துல கொஞ்சம் கம்மி. பாடல்கள் இல்லாதது நிம்மதி. படத்துக்கு ப்ளஸ்ஸூன்னு பாத்த வெகு சில காட்சிகள சொல்லலாம்.

கதை அளவுல பெரிய குறை இல்லன்னாலும் ஒரு துப்பறியும் படத்துக்கு உண்டான விறுவிறுப்பை இந்தப் படம் நமக்குத் தர மறுக்குது. விஷாலோட பாத்திரப்படைப்பும் அவரோட வசன உச்சரிப்பும்தான் இதுக்கு முக்கியக் காரணம். மொத்தத்துல நம்ம மனசு ஆறுதலுக்கு ஒரு தடவ பாக்கலாம்னு வேணா சொல்லிக்கலாம்.

மிஷ்கின் சார் கிட்ட ஏன் இந்த மாதிரி வெளிநாட்டுப்படங்கள பாத்து அதயே இங்க எடுக்குறீங்கன்னு கேட்டா “நான் பார்த்த நல்ல படங்கள் நம் மக்களையும் போய் சேர வேண்டும்”னு கதை விடுவாரு. மிஷ்கின் சார்.. இனிமே உங்களுக்கு எதாவது வெளிநாட்டுப்படங்கள் புடிச்சிதுன்னு வைங்க… அந்தப் படத்துப் பேர மட்டும் சொல்லுங்க.. நேரடியா நாங்களே பாத்துக்குறோம்… கழுதைய ஏன் நீங்க வேற அதயே திரும்ப எடுத்துக்கிட்டு… உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும் நேரம் மிச்சம்… !!!


Tuesday, September 12, 2017

நெருப்புடா - ஆமாடா!!!


Share/Bookmark
தற்போது இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்களில் ஓரளவிற்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விக்ரம் பிரபு என்பதில் சந்தேகமே இல்லை. கும்கிக்கு  பிறகு மிகப்பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் இவருக்கு இல்லை என்றாலும், இவர் படங்கள் கழுத்தில் கத்தி வைத்து கரகரவென அறுக்காமல் ஓரளவிற்கு பார்க்கும் வகையிலேயே இருக்கிறது. கபாலியின் ”நெருப்புடா” பாடல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த பொழுது சூட்டோடு சூடாக இந்தப் படத்திற்கு ”நெருப்புடா” என பெயர் சூட்டினர். விக்ரம் பிரபுவின் சொந்தத் தயாரிப்பில் உருவான இந்த நெருப்புடா எப்படி இருக்கிறது என பார்ப்போம்.

தீயணைப்புப் படை வீரனாக வேண்டும் என்கிற வித்யாசமான கனவுடன் சுற்றும் ஐந்து இளைஞர்கள், சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் எங்கு தீப்பிடித்தாலும் முதல் ஆளாகச் சென்று தீயை அணைத்து உயிரைக் காப்பவர்கள்.  இன்னும் ஒரு தேர்வு மட்டும் எழுதிவிட்டால் தீயணைப்புப் படை வீரனாகவேண்டும் என்கிற அவர்களது கனவு நிறைவேறிவிடும் என்கிற தருணத்தில் சென்னையையே ஆட்டிப்படைக்கும் அந்த மிகப்பெரிய ரவுடியுடன் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட அதனால் ஏற்படும்  விளைவுகளே மீதிப் படம். கிட்டத்தட்ட விக்ரம் நடித்த “தில்” திரைப்படத்தின் ஒன் லைன் தான் இந்தப் படத்தின் ஒன்லைனும் கூட.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு திரைப்படம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நமக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதில்லை .முதல் ஓரிரு காட்சிகளே உணர்த்திவிடும். இந்தப் படத்திலும் முதல் காட்சியிலேயே ஓரிடத்தில் தீப்பிடிக்கும்போது ஏற்படும் பரபரப்பை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறார். முதல் காட்சிக்குப் பிறகு அவர்கள் ஏன் தீயணைப்பு வீரனாக ஆக ஆசைப்படுகிறார்கள் என்பதை விளக்கும்போது இன்னும் கதையில் ஆர்வம் அதிகமாகிறது.

ஆனால் போகப் போக சென்னையிலேயே பெத்த ரவுடியுடன் சண்டை என ஆரம்பிக்கும்போது நெருப்புடாவும் தமிழ்சினிமாவின் வழக்கமான கமர்சியல் மசாலாப் படங்களின் வரிசையில் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் எந்த இடத்திலுமே போர் அடிக்காமல், ஆங்காங்கு சிறு சிறு நகைச்சுவை, ஓரிரு எதிர்பாராதா திருப்பங்கள் என நம்மை முகம் சுழிக்க வைக்காமல் இடைவேளை வரை கொண்டு செல்கிறார்கள். இரண்டவது பாதியில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராம மாற்றி கடைசியில் சற்று டொம்மையாக முடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவும் , சீன் ரோல்டனின் பிண்ணனி இசையும். வியாசர்பாடி பகுதிகளில் ’ஐ’ திரைப்படத்தின் மெரசலாயிட்டேன் பாடல் படமாக்கப்பட்ட பின் பல படங்களில் அதே லொக்கேஷனைக் காண முடிகிறது. படத்தில் விக்ரம் பிரபு வசிக்கும் ,லேட்டர்புரம் எனும் பகுதியை ரொம்பவே அழகாகக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தீ விபத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல காண்டாமிருகக் குரலில் கத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிப்பு வருகிறது. அவர் வைத்திருக்கும் பைக் பார்த்தவுடன் சிரிப்பு வரவைக்கும் ரகம்.   

நிக்கி கல்ராணி வழக்கத்தை விட இந்த படத்தில் சற்று குண்டாகியிருக்கிறார். இரண்டு பாடலுக்கு மட்டும் வரும்  டிபிகல் மசாலா பட ஹீரோயின் ரோல். வில்லன்களால் கத்திகுத்து பட்டு சாவதற்கென்றே அளவெடுத்து தைத்த கதாப்பாத்திரமான ஹீரோவின் அப்பாவாக பொன்வண்ணன். 

இப்பொழுதெல்லாம் அனிரூத்திற்கு நன்றி என்று ஸ்லைடு போடப்படாத படங்களே இல்லை எனலாம். எல்லா படத்திலும் எதேனும் ஒண்று செய்துவைக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

போலீஸ் ஆஃபீசராக ஆடுகளம் நரேன். நரேனும் விக்ரம் பிரபுவும் சந்திக்கும் காட்சிகளில் “உன் மூக்குக்கும் ஏன் மூக்குக்கும் சோடி போட்டுக்குருவோமா சோடி” என்பது போல ஒரே மூக்கு மயமாக இருந்தது. 

வித்யாசமான வேடம் எனக் கருதி இரண்டாவது  பாதியில் பாடகரின் மனைவியான தமிழ் சினிமாவின் ரிட்டயர்டு நடிகை ஒருவரை இறக்கி விட்டிருக்கிறார்கள். படத்தைக் கெடுத்ததே அந்த ஒரு பகுதிதான். வேறு எதாவது செய்திருக்கலாம். 

இடையிடையே இடைச் சொருகலாக வரும் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பாடல்களைக் குறைத்திருந்தால் இன்னும் சூப்பராக வந்திருக்கும்.

மொத்தத்தில் நெருப்புடாவின் முதல் பாதி சிறப்புடா… இரண்டாவது பாதி சுமார்டா.. க்ளைமாக்ஸ் மட்டும் கடுப்புடா…  ஆனால் கண்டிப்பாக பார்க்கலாம்டா.


Monday, September 4, 2017

பாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு? யாருக்கோ!!!


Share/Bookmark
த்தனையோ இளம் இயக்குனர்கள் எவ்வளவோ நல்ல நல்ல கதைகளையெல்லாம் கையில் வைத்து வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை அணுகும்போது, அது சரியில்லை இது சரியில்லை என ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சில காட்டு மொக்கை படங்களப் பார்க்கும்போது இந்தக் கதையையெல்லாம் எப்படி தயாரிப்பாளரிடம் கூறி ஒப்புதல் வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து வியப்படையாமல் இருக்க முடிவதில்லை.

ஒருவேளை பெரிய ஹீரோவும், ஒரு பெரிய இயக்குனரும் சேரும்போது கதைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையோ என்னவோ? அவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இவ்வாறு அலட்சியப்போக்கில் எடுக்கப்படும் சினிமாக்களுக்கு மக்கள் அவ்வப்போது தக்க பாடம் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  பாலகிருஷ்ணா, பூரி ஜகன்நாத் கூட்டணியில் உருவான பைசா வசூல் திரைப்படமும் அப்படித்தான்.

பாலகிருணாவைப் பற்றி நமக்கு அவ்வளவு அறிமுகம் தேவையில்லை. அவருடைய நடன அசைவுகளும், அதீத சக்திகளும் ரொம்பவே பிரபலம். “போக்கிரி” புகழ் பூரி ஜெகன்னாத் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பொழுதெல்லாம் ஒரு இயக்குனர் ரெண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்து முடிக்கவே போராடிக் கொண்டிருக்கும் போது 2017 களில் கூட வருடத்திற்கு இரண்டு முதல் மூண்று படங்கள் வரை இயக்கும் ஒரே இயக்குனர் பூரி ஜகந்நாத் மட்டுமே. 2000 த்தில் முதல் படத்தை இயக்கிய பூரி, இந்தப் பதினேழு வருடத்தில் இதுவரை 32 படங்களை இயக்கியுள்ளார். அனைத்து முண்ணனி நடிகர்களையும் இயக்கியிருக்கிறார். இவரின் ஒரு படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும் அதே சமயத்தில் அடுத்த படம் தரை லெவலில் அட்டர் ஃப்ளாப் ஆகும். கணிக்க முடியாத ஒரு முன்ணனி இயக்குனர் இயக்குனர்.

இப்பொழுது பாலைய்யாவின் 101வது படமான பைசா வசூலை பூரி ஜகன்னாத் இயக்க, எதிர்பார்ப்பு எகிரியிருந்தது. ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக. இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் சொல்கிறேன். இதை இதுவரை எத்தனை படத்தில் இதற்கு முன்பாக  பார்த்திருக்கிறீர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

பாப் மார்லி எனும் மிகப்பெரிய கேங்ஸ்டரை அழிக்க முடியாமல் தவிக்கிறது உளவுத்துறை. எனவே அவனைப் போலவே இன்னொரு ரவுடியை வைத்து பாப் மார்லியின் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள். அதற்கு சரியான ஆள் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 25 கொலை, 35 வெட்டு என்ற ரெக்கார்டுகளுடன் திகார் ஜெயிலிலிருந்து வெளிவந்திருப்பவர் தேடா சிங் (பாலகிருஷ்ணா). அவரையே இந்த ஸ்பெஷல் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்கிறார்கள். அவரது வேலை பாப் மார்லேயின் ரவுடி கும்பலில் இணைந்து அங்கிருந்தே அவனை தீர்த்துக்கட்டுவது.

தேடா சிங் தங்கியிருக்கும் அதே ஏரியாவில் வசிக்கும் ஹாரிகா தனது அக்காவைக் இரண்டு மாதங்களாகக் காணவில்லை என பெரிய பெரிய அதிகாரிகளைப் பார்த்து விசாரித்து வருகிறார். அதே சமயம் பாலைய்யா தலைநகரம் வடிவேலு போல முகத்தை அருகில் காட்டிக் காட்டி ஹாரிகாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாப் மார்லியின் ரவுடி கும்பலால் ஹாரிகாவின் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் தடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஹாரிகாவின் அக்கா இறந்துவிட்டதும் அதற்கு காரணமான கொலையாளி தேடா சிங் எனவும் தெரியவர, தேடா சிங்கை இதயத்திற்கு சற்று அருகில் சுடுகிறார் ஹாரிகா. (இதயத்துல சுட்டாதான் செத்துருவாரே) அத்துடன் இடைவேளை.

இதன்பிறகு இரண்டாவது பாதியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது இரண்டு வயது குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். கொசுவர்த்தியைச் சுற்றி ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்.  போர்ச்சுக்கல் நாட்டில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பர் தேடா சிங். (அத நம்ம ஊர்ல ஓட்டுனா ஆகாதான்னு நீங்க கேக்குறது புரியிது) டூரிஸ்ட் போல வரும் ஃஹாரிகாவின் அக்கா சாரிகாவை (ஷ்ரேயா) தேடா சிங் லவ்வுகிறார். (என்னய்யா பேரு அங்கவை சங்கவை மாதிரி இருக்கு) சாரிகா ஒரு நியூஸ் சேனலில் வேலை செய்பவர். பாப் மார்லேயைப் பற்றி ரகசியமாக ஒரு டாக்குமெண்டரி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட பாப் மார்லே குழு சாரிகாவைத் தாக்க, டாக்சி ட்ரைவர் தேடா சிங் குறுக்கால புகுந்து காப்பாற்றுகிறார். அதன்பிறகு தான் தேடா சிங் உண்மையில் டாக்ஸி ட்ரைவர் அல்ல. பாப் மார்லேவைப் பிடிக்க மாறு வேடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ”ரா ஏஜெண்ட்” எனும் ரத்ததத்தை உரைய வைக்கும் அந்த ரகசியத்தை வெளியிடுகிறார்கள்.

இப்படி ஒரு கேவலாமான ட்விஸ்டால் கடுப்பாகும் பாப் மார்லே சாரிகாவை போட்டுத்தள்ளுகிறார். ஒருவேளை சாரிகா எடுத்த வீடியோ அவள் தங்கை ஹாரிகாவிடம் இருந்தாலும் இருக்கும் என்ற நோக்கில் அவளையும் டார்ச்சர் செய்ய அவர்களைக் காப்பாற்றவே தேடா சிங் ரவுடி அவதாரம் எடுக்கிறார். பிறகு க்ளைமாக்ஸில் அனைவரயும் போட்டுத்தள்ளுகிறார். இப்படி ஒரு கண்றாவியான கதையைக் கண்டதுண்ணா யுவர்ஹானர்?

இப்போது நான் சொன்ன கதையில் உங்களுக்கு என்னென்ன படங்கள் ஞாபகம் வருகின்றன? விஜய்யின் போக்கிரி மற்றும் மதுர, அர்ஜூன் நடித்த கிரி, சரத்குமாரின் ஏய்… மற்றும் பல.  அதுமட்டுமல்லாமல் இதே கதையை இதே இயக்குனர் “இத்தர் அம்மாயில்தோ” (ரெண்டு பொண்ணுங்களோட) என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் அல்லு அர்ஜூனை வைத்து எடுத்திருக்கிறார்.

மொத்தப் படமுமே எதோ ஏனோதானோ என்று எடுத்தது போல இருக்கிறது. பாலைய்யாவை எனர்ஜிடிக்காக காட்டுவதாக நினைத்துக் கொண்டு அனைத்து வசனங்களையுமே ஹை பிட்சில் பேச வைத்து காது ஜவ்வுகளைக் கிழிக்கிறார்கள். விவேகத்தில் விவேக் ஓபராய் அஜித்துக்கு கொடுப்பதைப் போல பல மடங்கு பில்ட் அப் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார். மற்ற படங்களை விட டான்ஸ் மூவ்மெண்ட் இந்த படத்தில் கொஞ்சம் குறைவுதான்.

முன்பெல்லாம் ஹீரோ சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக நடிப்பார்கள். அடுத்து போகப் போக ACP, DCP என்று ப்ரோமோஷன் ஆகி இப்பொழுதெல்லாம் நடித்தால் “ரா ஏஜெண்டு சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” என்கிறார்கள்.

பாலைய்யா ரா ஏஜெண்ட் என்பது ஒரே ஒருவரைத் தவிற யாருக்குமே தெரியாது. (யாருக்குமே தெரியாம வேலை பாக்குறதுக்கு எதுக்குடா வேலை பாக்குறீங்க). அந்த உண்மை தெரிந்த ஒருவரையும் எதிரிகள் சுட்டுவிட, இவர் ரா ஏஜெண்ட் என எப்படி உறுதிப்படுத்துவது என அனைவரும் குழம்புகிறார்கள். உடனே ஒரு வழி.. அவரை முதலில் நேர்காணல் செய்த போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகளை மீண்டும் கேட்டு அதே பதிலை அவர் சொல்லும் பட்சத்தில் இவர் தான் அந்த ஏஜெண்டு என உறுப்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். மறுக்கா இண்டர்வியூ. கேள்விகள் கேட்க கேட்க பாலைய்யா பிரித்து மேய்கிறார். இண்டர்வியூ முடியும் போது மொத்த போலீஸ் படையும் எழுந்து அவருக்கு சல்யூட் அடிக்க, இதுக்கு எங்கள நாலு அடி செருப்பாலயே அடிச்சிருக்கலாம் என்று தோன்றியது நமக்கு. 

இடைவேளையில் நெஞ்சுக்கு அருகில் குண்டு பாய்ந்ததும், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்து பஞ்ச் டயலாக் பேசிய காட்சியில் திரையரங்கில் இருந்த அனைவரும் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டனர்.

படத்தில் உருப்படியாக இருந்த ஒரே விஷயம் பாடல்கள். அனூப் ரூபன்ஸ் அனைத்து பாடல்களையுமே சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதுவும் முதல் பாடலில் க்ரியா தத் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிற்கிறது. கொடுத்த காசு அது ஒண்றுக்கு மட்டும்தான் தகும். 

மொத்தத்தில் பைசா வசூல் யாருக்கு என்றால் யாருக்கோ என்றுதான் சொல்ல வேண்டும்… நிச்சயம் தயாரிப்பாளருக்கு இல்லை.

படம் முடிந்து வெளியில் வரும்போது அருகில் வந்தவரிடம் “என்னங்க படம் இவ்வளவு கேவலமா இருக்கு?” என்றேன். ”54 வயசுலயும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறாரு. அந்த ஹார்டு ஒர்க்குக்காக படத்த பாருங்க.. பாலைய்யாடா… ஹார்டு ஒர்க்குடா” என அவர் கூறியதும் ”ஆத்தாடி அந்த குரூப்பு இங்கயும் வந்துட்டானுகடோவ்” என பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்தேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...