Wednesday, September 27, 2023

அரசியலில் ரஜினியும் விஜய்யும்!!


Share/Bookmark

 


அரசியலில் ரஜினியும் விஜய்யும்!!

----------------------------------------------------------------


ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு இருந்தது. இருந்தாலும் அவரின் வளர்ச்சிக்கு அந்த அரசியல் கட்சியும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மீடியாக்களும் தொடர்ந்து துணை நின்றன.


இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று ரஜினி வரமாட்டார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை. 


அடுத்து ஒரு வேளை வந்தாலும் நமக்கு துணையாக நின்றால் அது நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்கிற எண்ணம்


 மூண்றாவது 96 தேர்தலில் உதவிய ரஜினிக்கான கைமாறு.


அதேபோல ரஜினியும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்களுக்கு எதிரான எந்த பெரிய செயலிலும் ஈடுபடவில்லை.


யோசித்தார். யோசித்தார். பல வருடமாக யோசித்தார். இறுதியில் அரசியலுக்கு வர முடிவெடுத்தார். அதைவிட முக்கியமாக அவர்களுக்கு எதிரான அரசியலில் ஈடுபட முடிவெடுத்தார். 


அவர்கள் வேலையைக் காட்டத் தொடங்கினார்கள். ரஜினி வராமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள்.  ஒருவேளை வந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையும் தயாராக வைத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் ஆண்டவரின் அரசியல் பிரவேசம். ஆண்டவரை வைத்து பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்பது அவர்களும் அறிந்ததே.


ஆண்டவர் வெறும் சோதனை முயற்சி.  ஒரு வேளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டார் என்றால் அவருக்கு எதிராக விஜய்யை களமிறக்கி முடிந்த வரை ரஜினி எஃபெக்டை சமன் செய்ய முயற்சித்ததாகக் கேள்வி. விஜய் கட்சி தொடங்குவதற்கான அத்தனை வேலைகளையும் அப்போதே தொடங்கி முக்கால்வாசி முடித்துவிட்டகாகவும் பேச்சு இருந்தது. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. 


அவர்களுக்கு எதிராக ரஜினி அதிகபட்சம் மூன்று வருடம் தாக்குப் பிடித்தார் எனலாம்.  "வர்ட்டா மாமே.. டுர்ர்ர்" என அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். மீண்டும் அரசியல் பக்கம்  வரப் போவதே இல்லை என தெளிவாகவும் கூறி, சினிமாவில் முழு நேரக் கவனம் செலுத்தினார். ரஜினியின் கிராஃப் மீண்டும் உயர்ந்து இன்னும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. சோஷியல் மீடியா தவிறப் இப்போதெல்லாம் ரஜினி பற்றிய எதிர்மறைச் செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடுவதில்லை.


இப்போது விஜிணாவின் கதைக்கு வருவோம். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று தன் வாயால் உறுதிப்படுத்திய பின்னரே ரஜினிக்கு character assassination தொடங்கியது.


ஆனால் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று அரசல் புரசலாக செய்தி பரவும் போதே ஏன் அவர் மீது தாக்குதல் தொடங்கியது?


காரணம் ரஜினி அதிகம் யோசிப்பவர். சுற்றி எத்தனை பேர் ஏற்றிவிட்டாலும் அசைந்து கொடுக்காதவர். ஆனால் விஜய் அப்படியல்ல. அப்படியே எதிர்மறை.


பத்துவருடம் முன்னரே விஜய் தரப்பு அம்மாவிடம் கூட்டணிக்குச் சென்று பேரம் படியாததால் வெளிவந்தது அனைவருக்கும் தெரியும். ஒரு வேளை ஒரு ஆர்வக் கோளாறில் விஜய் தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்துவிட்டால்? அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்று  யூகிக்க முடியாது. அதனால் முளைப்பதற்கு முன்னாலேயே கிள்ளி விட முயற்சிக்கிறார்கள்.


ஏற்கனவே சொன்னதுபோல ரஜினி தெளிவானவர். சுயமாக யோசிப்பவர். பேசுபவர். அவரையே மூன்று வருடத்தில் கடையைக் காலி செய்ய வைத்தவர்கள். விஜிமா ஒரு குழந்தை. என்னென்ன செய்யப்போகிறார்களோ?


இதையெல்லாம் தாண்டி, விஜய் கட்சி ஆரம்பித்து, ஆண்டவர் போல் அவர்களுக்கு சொம்படித்துக்கொண்டு கூடவே திரியாமல், அவர்களுடன் கூட்டணிக் குட்டையில் குழம்பாமல் தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் 👏👏👏👏

-அதிரடிக்காரன்

#Athiradikkaran #LeoAudioLaunch  #Leo #Vijay


Wednesday, August 2, 2023

பொள்ளாச்சியிலிருந்து புளியம்பட்டியும் கபாலி அதிகாலைக் காட்சியும்!!


Share/Bookmark


ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் துவங்கும் எனத் தகவல்கள் வருகின்றன. அது உண்மையெனில் மிகவும் நல்ல முடிவு.


சில வருடங்களுக்கு முன் அதிகாலைக் காட்சி என்பது ஒரு சில நகரங்களில் அதிலும் ஒரு சில திரையரங்கத்தில் மட்டுமே நடக்கும். ஆனால் இன்று திரையிடப்படும் அத்தனை திரையரங்களிலும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிகாலைக் காட்சிகள் பார்ப்பது ஒரு பெருமையாகவும்,   எந்தத் திரையரங்கம் முதலில் திரையிடுகிறது என்பது ஒரு மானப் பிரச்சனையாகவும் இன்று பார்க்கப்படுகிறது.


இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு முதலில் தவறான விமர்சனங்கள் வெளியாவது இந்த அதிகாலைக் காட்சிகளால்தான். 


ஒருபுறம் முதல் நாள் முதல் காட்சி பெருமைக்கு என்று வைத்துக்கொண்டாலும், டைட்டில் கார்டு, அறிமுகக் காட்சி, இடைவேளை, க்ளைமாக்ஸ் என அனைத்தையும் பிட்டு பிட்டாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விடும் 2k கிட்ஸ்களிடமிருந்து தப்பித்து ஒரு திரைப்படத்தின் சுவார்ஸ்யத்தை முழுமையாக உணர முதல் காட்சி பார்த்துவிட முடிவு செய்பவர்களும் பலர். 


மற்றொன்று அதிகாலைக் காட்சி என்றால் படத்தையும் பார்த்துவிட்டு, அலுவலகத்திற்கும் நேரத்திற்கு சென்றுவிடலாம்.


ஒரு திரைப்படத்தை நாம் ரசிப்பதற்கு தெளிவான, அழுத்தமற்ற மனநிலை வேண்டும். அதிகாலைக் காட்சிகளில் இது அத்தனையுமே பெரும்பாலானோருக்கு இல்லாமல் போகிறது.


உதாரணத்திற்கு  கபாலியின் அதிகாலைக் காட்சியைப் பார்க்க முயற்சித்தேன். டிக்கெட் எங்கும் கிடைக்கவில்லை. ரோஹினியில் மதியம் 3 மணிக் காட்சிக்கு மட்டும் இரண்டு டிக்கெட் கிடைத்தது. 


மறுநாள் காலை படம் ரிலீஸ். இரவு 9 மணிக்கு நண்பர் ஒருவர், அவர் நண்பரிடம் அதிகாலைக் காட்சிக்கு டிக்கெட் இருப்பதாகவும் விருப்பப்பட்டால் செல்லலாம் எனவும் கூறி அவர் நண்பரின் நம்பரைக் கொடுத்தார். "இந்தாப் போறேன் சுசேட்டிக்கு" என உடனே அவருக்கு கால் செய்தேன்.


அவர் டிக்கெட் இருப்பை உறுதி செய்தார். ஆனால் இரு சின்ன சிக்கல். அவர் இருப்பது வில்லிவாக்கம் அருகே. அவரின் வண்டியில் ஏதோ பிரச்சனை. அதனால் தன்னை பிக்கப் செய்து கொள்ள இயலுமா என்றார். நான் இருந்தது திருவொற்றியூர். தியேட்டர் ரெட்டில்ஸ். அவர் இருந்தது வில்லிவாக்கம. இது பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டி வர்ற ரூட்டாச்சே..  முடியாதென்று கூறினால் சிரியான நேரத்திற்கு அவர்  வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து சரி என்றேன். 


4 மணிக் காட்சி மற்றும் என்பதால் அதிகபட்சம் 8 மணிக்குள் வெளியே வந்துவிடலாம் என நினைத்து அலுவலகத்தில் விடுப்போ, தாமதமாக வருவேன் என்றோ கூறவில்லை. மதியம் 3 மணிக் காட்சிக்கு எடுத்த இரண்டு டிக்கெட்டுகளை நண்பருடன் வேறு ஒருவரை லிங்க் செய்து அனுப்பி விட்டு விடலாம் என நினைத்தேன்.


பொள்ளாச்சி புளியம்பட்டி தொலைவையும் 4 மணிக் காட்சியையும் கணித்து நான் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் 2:30. அதற்கு முன் குளித்துக் கிளம்ப ஒரு அரை மணி நேரம். ஆக 2 மணியிலிருந்து தூங்கவில்லை. நானே இப்படியென்றால் ஒரு மணி நேரம் முன்னதாகத் திரையரங்கிற்குச் சென்று டான்ஸ் ஆடி Behindwoods ற்கு கண்டெண்ட் கொடுப்பவர்கள் எத்தனை மணிக்கு எழுவார்கள் என்பதை யூகித்துக் கொள்ளவும்.


ஒரு வழியாக திரையரங்கையடைந்து காட்சியும் ஆரம்பித்தது. பத்து நிமிடம் தாண்டி திரையரங்கில் மயான அமைதி. எமோஸன் எமோஸன் என்று ரஞ்சித் பேட்டிகளில் இழுக்கும்போதே சுதாரித்திருக்க வேண்டும். எமோஸனைப் பிழிந்ததில் அழுதே விட்டேன். ஆமா.. விட்டுருங்க விட்டுருங்க என அழுதேன்.


படம் முடிந்து வெளியே வருவதற்கும் தலைவலி உச்சத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது. குவாட்டர்ல பெப்பரக் கலந்து ஒரு பெக்கு போடுவோமா என நினைத்தேன். "பார்ட்டில சைடிஷ் திங்கிற மூதேவி" என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கவும் அந்தப் ப்ளானைக் கைவிட்டேன். 


அந்தத் தலைவலியுடன் வீட்டிற்கு வர மணி 8:45 ஆகியிருந்தது. சரி மதியம் ரெண்டு டிக்கெட் இருக்கே அத மொதல்ல பத்தி விடுவோம் என நினைத்து நண்பன் Anantha Narayanan ற்கு கால் செய்தேன்.


"டேய்.. நா கொஞ்சம் அர்ஜெண்ட்டா ஆஃபீஸ் போகனும்டா.. ரெண்டு டிக்கெட் இருக்கு. உன் ஃப்ரண்டு யாரயாச்சும் அழச்சிட்டு பொய்ட்டு வா"


"நீ வந்தா நா வர்றேன். இல்லன்னா நா போகல" 


"டேய் நா என்ன உன் லவ்வராடா.. நா இல்லாம போமாட்டியா.. உசுற வாங்காம போய்த் தொலடா"


"இல்ல நீ வந்தாப் போறேன்.. இல்லனா விடு"


" எது இல்லன்னா உடா.. 600 ரூவா டிக்கெட்ரா அது" 


"சரி டிக்கெட் கிடைச்சும் நீ ரெண்டாவது தடவ வரமாட்றன்னா படம் மொக்கதான.." 


"ஆத்தாடி கரெக்டா கண்டு புடிச்சிட்டானே.. மொக்கைன்னு சொன்னா இவனும் வராம தனியா போகவிட்டுருவானே" என நினைத்து அதெல்லாம் இல்லடா "தலைவர் ஸ்டைல் சூப்பர்" "மியூசிக் செம" "எமோசன் அதுக்கும் மேல" என அஜித் படத்திற்கு கூறுவது போல் பிரித்து பிரித்து சொன்னேன். சரி என்றான்.


சரி தலையும் வலிக்குது. ஆஃபீஸுக்கு லீவப் போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுக்கா ரோஹினிக்கு போய் பாத்துட்டு வருவோம் என பாஸூக்கு கால் செய்தேன்.


"சார் தலை பயங்கரமா வலிக்குது"


"ஏன் படம் பாத்ததாலயா?"


" ஏ..எது..படம் பாத்ததாலயா.. ஆமா அதுக்கென்ன இப்ப"


"சரி வருவியா வரமாட்டியா"


"இல்ல சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு முடிஞ்சா மதியம் வர்றேன்"


"அவள அவசரமா வந்து இங்க ஒண்ணும் நீ பன்னப் போறதில்ல.. இருந்துட்டு நாளைக்கே வா"


"நன்றி அய்யா"


கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடி பொள்ளாச்சியைத் தாண்டியுள்ள ரோஹினிக்குச் சென்று மீண்டும் ஒருமுறை துங்கியெழுந்து வந்தேன்.


இதெல்லாம் எதுக்காகச் சொல்றேன்னா.. அதுக்காகச் சொல்றேன்.


என்னைப் போல் படம் பார்த்துவிட்டு அலவலகம் செல்லலாம் என சில பேர். பள்ளிக்குச் செல்லலாம் எனப் பல பேர் (இது அவர்களைக் குறிக்கவில்லை) 


தர்பார் முதல் காட்சிக்கு ஒரு அம்மா பையனை அதிகாலைக் காட்சிக்கு அழைத்து வந்து படம் முடிந்த பிறகு அங்கேயே பையனுக்கு தலை சீவி ஸ்கூல் பேக்குடன் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியிருந்தது. அதையெல்லாம் தாண்டி தூக்கமின்மை.


அந்த சமயத்தில்  படம் சில நிமிடம் நீடித்தாலே எரிச்சல் வரும். சாதாரண மொக்கைகள் முரட்டு மொக்கைகளாகத் தெரியும். முதல் காட்சியில் நமக்கு மரண மொக்கையாகத் தெரிந்த திரைப்படம் மறுநாள் மாலை பார்ப்பவருக்கு "அவ்வளவு மோசமில்லையே" எனத்தோன்றும். ஒரு சில நாட்கள் கழித்துப் பார்த்தல் நமக்கே அப்படித்தான் தோன்றும்.


எனவே அதிகாலைக் காட்சிகளை நிறுத்துவது தமிழ்சினிமாவிற்கு நல்லது. 


குறிப்பு: ஒரு வேளை ஜெயிலர் அதிகாலைக் காட்சிகள் இருந்தால் தவறாமல் எனக்கும் ஒரு டிக்கெட் உசார் செய்யவும். ஏனென்றால் மேலே எழுதியிருப்பது சரியா இல்லையா என இன்னொரு முறை சரிபார்க்க வேண்டும்.


-அதிரடிக்காரன் 


#Jailer #Rajnikanth #Athiradikkaran

Monday, January 9, 2023

HIT – The second Case - அபத்தம்!!


Share/Bookmark


Strictly படம் பார்த்தவர்களுக்கு மட்டும்


ஹிட் முதல் பாகம் “Hit- The first case” eh சுமார் ரகம்தான். ஆனால் படம் வெற்றி பெற்று ஹிந்தியில் ரீமேக்கும் ஆகியுள்ளது.  (முதல் பாகத்தின் விமர்சனம் கீழே )


http://www.muthusiva.in/2020/05/forensic-hit-v1-murder-case.html?m=1

 இரண்டாம் பாகம் ஆத்வி ஷேஷ் நாயகனாக நடிக்கிறார் என்றதும் முதல் பாகத்தை விட நிச்சயம் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. சமீபகாலமாக ஆத்வி சேஷின் கதைத் தெரிவுகள் அப்படி இருந்தது.


வழக்கமான டெம்ப்ளேட் சீரியல் கில்லர் கதை.  ஆரம்பத்திலேயே மூலக்கதையுடன் ஆரம்பித்து, ஹீரோவின் கதாப்பாத்திரத்தை விளக்க ஒரு சிறிய கொலையை துரிதமாகாக் கண்டுபிடிப்பது போலக் காட்டுவது, அடுத்து அவரையே மிரள வைக்கும் கொலை என முறையான ஒரு சீரியல் கில்லர் இன்வெஸ்டிகேஷனாகச் செல்கிறது. பெரிதாக எங்கும் போரடிக்கவில்லை. அதே சமயம் மிகவும் எக்ஸைட்டிங்காகவும் இல்லை. ஏனென்றால் எதுவுமே புதிதாக இல்லை. 


புதிதாக இல்லையென்றாலும் இந்த மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதைகள் எப்பொழுதுமே யார் கொலையாளி என்கிற யூகத்தை நமக்குள் ஓடவிட்டு ஒரு சுவாரஸ்யத்தைக் உண்டாக்கும். அதை நிச்சயம் உண்டாக்குகிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் நிறைய கதாப்பத்திரங்களைக் கொண்டு வந்து, பார்வையாளர்களைக் குழப்புவார்கள். ஆனால் இங்கு அதுவும் இல்லை. எப்படி யூகித்தாலும் இருவர்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. வேறு ஆப்ஷன்கள் இல்லை. அதே போல அந்த இருவரில் ஒருவர்தான் கொலையாளியாகவும் காட்டுகிறார்கள். 


இதுபோன்ற சஸ்பென்ஸ் படங்களில் முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த முடிச்சிற்கான மதிப்பு. லாஜிக் ரொம்பவே முக்கியம். ஆனால் இந்த ஹிட் இரண்டாம் பாகத்தில் லாஜிக் பல்லைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் அபத்தமாகவும் இருக்கிறது. 


படத்தில் எனக்கிருந்த சில கேள்விகள், லாஜிக் மீறல்கள் எனத் தோன்றியவற்றை பதிவிட்டிருகிறேன்.. ஒருவேளை நான் சரியாகக் கவனிக்காமலோ, தவறாகவோ குறிப்பிட்டிருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும்.


1. முதன் முதலில்  கொலையாகிக் கிடக்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பற்களின் அச்சு இருக்கிறது. அதன் மூலம் கொலையாளிக்கு சிங்கப்பல் இருக்கும் எனக் கணித்து அதை மூலதனமாக வைத்தே விசாரணையைத் தொடங்குகிறார்கள். கடைசியில் கொலையாளி அவனாகக் கடிக்காமல் ஒரு பல் செட்டை வைத்துக் கடிப்பது போன்ற ஒரு மார்க்கை உருவாக்குகிறார். அவர் ஏன் அப்படி ஒரு தழும்பை உருவாக்குகிறார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை? ஒருவேளை அது அவருடைய Signature ah என்றால் அப்படியும் எதுவும் காண்பிக்கவில்லை.


2. ஒருவேளை காவல்துறையைக் குழப்புவதற்காக என்று வைத்துக்கொண்டாலும், அவர் ஏன் காவல்துறையைக் குழப்ப வேண்டும் என்பதற்கும் எந்தக் காரணமும் காட்டப்படவில்லை. இல்லை அவர் காவல்துறையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அவர் கொலை செய்த பெண்களின் உடல்களை அவரே முழுவதும் மறைத்தே வைத்திருக்கலாம். ஏன் அதைக் காவல்துறையின் கண்களில் படுமாறு வைக்கிறார் என்பதற்கும் எந்தக் காரணமும் இல்லை.  கொலையாளியின் டார்கெட் குறிப்பிட்ட சில நபர்கள் என்றால் கூட சரி எனலாம். ஆனால் அவர் பழி வாங்குவது குற்றத்துடன் நேரடித் தொடர்பில்லாத ஒரு சமூகத்தை. அப்படியிருக்கும் போது அவருடைய டார்கெட் என்பது முடிவில்லாத ஒன்று. பிறகு ஏன் காவல்துறக்கு “இங்க பாருங்கண்ணே நா எத்தனை கொலை பண்ணிருக்கேன்னு” எனக் காண்பிக்க வேண்டும்?


3. முதல் பாதியில் கிடைக்கும் ஒரு தடயத்தைக் கொண்டு ஒருவனைத் தவறுதலாக காவல்துறை கைது செய்கிறது. அவன் வீட்டில் கிடைத்த தடயத்தை உருவாக்கியதே கொலையாளிதான். அதே கொலையாளி காவல்துறை அவனைக் கைது செய்தபின்னர், அவன் உண்மையான கொலையாளி இல்லை என காவல்துறைக்கு அனானிமஸ் ஐடியிலிருந்து தகவல் கொடுக்கிறான்? எலே செத்தப் பயலே என்னலே வேணும் உனக்கு?  “ நீ என் மேல காட்டுன இண்ட்ரெஸ்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சி. அதனாலதான் உனக்கு தகவல் சொன்னேன்” என ஒரு வரியில் காரணம் சொல்கிறார்கள். ஆனால் அது எதையுமே விளக்கவில்லை என்பது தான் உண்மை. 


4. உதாரணமாக டெக்ஸ்டரில் கொலையாளி கதாநாயகனின் கவனத்தைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக கதாநாயகனுக்க்குத் தெரியவேண்டும் என்றே சில தடயங்களை விட்டுச் செல்வார். இங்கு கொலையாளியின் நோக்கம் என்ன? தான் பாதிக்கப்பட்டதற்காகப் பெண்களைப் பழி வாங்குவது மட்டுமா? காவல்துறையில் சிக்கிக் கொள்ளாமல் பழி வாங்குவதா? காவல்துறையின் கவனத்தைப் பெறுவதா அல்லது காவல்துறையின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டே பழிவாங்குவதா? அப்படி காவல்துறையிடம் சவால் விட்டுச் செய்வதென்றால் அதற்கான காரணம் என்ன என எந்தத் தகவலும் இல்லை. 


மேக்கிங்கெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. படம் போரடிக்கவும் இல்லை. ஆனால் அந்தக் கிளைமாக்ஸ் அதுவரை படத்தின் மீதிருந்த மதிப்பை முற்றிலுமாகக் குறைத்துவிட்டது. 


-அதிரடிக்காரன். 


#hitthesecondcase #hitseries #hit

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...