Monday, July 8, 2019

மர்மதேசம் - கருப்பு Is Back!!!


Share/Bookmark
வாரம் ஒரு முறை மட்டும் தோண்றி நேயர்களுடன் பெப்சி உமா பேசிய காலத்தில், ஒரு முறை லைன் கிடைத்து பேசிவிட்டால் நேயர்களின் குரலில் எதோ லாட்டரியில் பத்து லட்சம் விழுந்துவிட்டதைப் போல ஒரு மகிழ்வை காணலாம்.  "லைன் கிடைக்காதவங்க கவலப்படாதீங்க.. கீப் டரையிங்.. அன்ட் கீப் ஆன் ட்ரையிங்.. ச்சேரியா" என்று நிகழ்ச்சியின் முடிவில் பெப்சி உமா சிரித்துக்கொண்டே சொல்லும் போது லைன் கிடைக்காதவர்களுக்கு கூட எதோ ஆறுதல் பரிசு கிடைத்ததைப் போல ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். வாரம் ஒருமுறை வரும் பெப்சி உமாவிற்காக மக்கள் காத்திருந்த காலம் போய்,  இன்று இருபத்து நான்கு மணி நேரமும் லைவ் நிகழ்ச்சிகளில் எத்தனையோ பெப்சி உமாக்கள் நேயர்களுக்காக காத்திருக்கிறார்கள். பேசுவதற்கு நேயர்கள்தான் இல்லை. காரணம் இன்று இவையெல்லாம் அளவுக்கு மிஞ்சிய அமுதங்கள். 

இதே போல்தான் இன்றைய தமிழ் சீரியல்கள்.. பெரும்பாலும் ஆண்கள் வெறுக்கும் விஷயங்களில் தொலைக்காட்சி சீரியல்களும் ஒண்று.  இந்த சீரியல்களால் மனைவிகளிடமிருந்து நேரத்திற்கு சோறுகிடைப்பதில்லை, சரியான கவனிப்பில்லை போன்ற காரணங்கள் ஒருபுறமிருந்தாலும் முக்கியக் காரணம் என்பது வேறு.

அனைவரும் ஒரு காலத்தில் சீரியல்கள் பார்த்தவர்கள் தான். வாரம் ஒருமுறை அரைமணி நேரம் மட்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகிக் கொணிருந்த பொழுது சீரியல்களின் மேல் இருந்த ஈர்ப்பு இன்று இல்லை.  பெண்கள் வேறு வழியின்றிதான் பார்க்கிறார்களே தவிற இன்றைய சீரியல்களில் பெரிய அளவிலான ஈர்ப்பு எதுவும் இல்லை.

முதல் காரணம் இன்றைய சீரியல்கள் வெறுமனே நேரத்தைக் கடத்தும் வஸ்துவாக மட்டுமே எடுக்கப்படுகிறது. இப்போதைத தமிழ் சீரியல்களில் ஒரு காட்சியில் ஐந்து பேர் இருந்தால், ஒருவர் வசனம் பேசும் போது அந்த வசனத்திற்கான ஐந்து பேரின் ரியாக்‌ஷனும் அத்தனை ஆங்கிள்களிலும் காண்பிக்கப்படுகிறது. இது ஒரு முறை காண்பிக்கப்பட்டால் பரவாயில்லை. கீழிலிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, இடப்பக்கமிருது வலப்பக்கம், வலப்பக்கமிருந்து இடப்பக்கம் என ஒவ்வொருவர் முகமும் நான்கு ஐந்து முறை   "ஸிக்..  ஸிக்.. " என மியூசிக்குடன் காண்பிக்கப்படுகிறது. விளைவு "ஆ.. அப்டியா" என்கிற வசனத்திற்கு ஐந்து பேரின் ரியாக்‌ஷனை பதிவு செய்து முடிக்கும் பொழுது விளம்பர இடைவேளை வந்துவிடும். 

தொண்ணூறுகள் தமிழ் சீரியல்களின் வசந்த காலம் என்றே கூறலாம். வாரம் ஒருமுறை அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்படும். ஒரு நாள் நகைச்சுவை சீரியல், ஒரு நாள் த்ரில்லர், ஒரு நாள் ஆன்மீகம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் செல்லும்.

அதில் பெரும்பாலும் புதன்கிழமைகள் சிறப்புமிக்கவை. அதற்கு முக்கியக் காரணம் புதன் கிழமைகளில் ஒளிபரப்பாகும் மர்மதேசம் எனும் மர்மத் தொடர். இன்று எப்படி திங்கட் கிழமை காலை Game of Thrones எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ஒரு கூட்டம் போல் அப்பொழுது புதன்கிழமைக்காகக் காத்திருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 9 மணிக்கு தொலைக்காட்சியின் முன்  ஆஜர் ஆகிவிடுவார்கள்.

அதிலும் குறிப்பாக மர்மதேசத்தின் இரண்டாவது தொடரான  "விடாது கருப்பு" .
கதை, கதை சொல்லும் விதம், காட்சியமைப்பு என அத்தனையிலுமே தமிழில் புதுமையைப் புகுத்திய ஒரு சீரியல்.



கிழிந்து தொங்கும் முகங்கள் கொண்ட பேய்கள் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் "திடும் திடும்" இசையில் பயமுறுத்திவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு எபிசோடிலுமே பார்வையார்களுக்கு அந்த "திக் திக்" மனநிலையுடனேயே பார்க்க வைத்தது இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றி.

அதே போல கதை சொல்லும் விதம் என்று பார்த்தல் அந்த காலகட்டத்தில் வந்த அனைத்து சீரியல்களுமே  linear ஆன காட்சிகளுடம் செல்லும் போது, முதல் முறையாக 20 நிமிட எபிசோடையே "அன்று" "இன்று" என்று இரண்டு பகுதிகாகப் பிரித்து  இரண்டு வெவ்வேறு டைம் லைனில் கதையை எடுத்துச் சென்றது இந்த விடாது கருப்பு.

கதையிலும் கூட தமிழ் சினிமாவிற்கு 2005 ற்கு பிறகே பரிட்சையமான ஒரு புதுமையை 96 லேயே புகுத்தியிருப்பார்கள். அது என்ன புதுமை? சொல்லக்கூடாது சொல்லக்கூடாது.  அதுதான் கதையில் டர்னிங் பாய்ண்ட்டே. 

ஒருபுறம் தவறு செய்பவர்களைத் இரவில் தண்டிக்கும் கருப்ப சாமி, இன்னொரு புறம் யார் கருப்ப சாமி என்கிற மர்மம், இன்னொரு புறம் புதையலைத் தேடி அலையும் ஒருவர்,  இன்னொரு புறம் மிரட்டும் ஒரு பயங்கரக் கிழவி என எந்த வகையிலும் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத ஒரு சீரியல் இந்த விடாது கருப்பு.

இன்று ஒரு சீரியலின் ஒரு எபிசோடைத் தவற விட்டால் பெரிதாகப் பதற்றப் படத்தேவையில்லை. அதே சேனலில் பகலில் மறு ஒளிபரப்பு இருக்கும். அல்லது அடுத்த அரை மணி நேரத்தில் youtube இல் வந்து விடும். நமக்கு நேரமிருக்கும் பொழுது சாவகாசமாகப் பார்த்துக்கொள்ளலாம். அன்று ஒரு எபிசோடைத் தவறவிடுவது அப்படியல்ல. போனால் போனதுதான்.

ஒவ்வொரு எபிசோடிலும் தொடரும் என்று போடும்போது ஒரு கோபம் கலந்த ஏமாற்றம் உண்டாகும் பாருங்கள். அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இன்று நமக்கு வேண்டும் என்ன சீரியலை மொத்தமாக தரவிறக்கம் செய்து ஒரே இரவில் மொத்தமாக முடித்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறோம். அன்று கிடைத்த அந்த எதிர்பார்ப்பு கலந்த சுவாரஸ்யம் இன்று எங்கும் கிடைப்பதில்லை. சீரியல் முடிந்த பிறகு end credits இன் போது வாலில் எரியும் நெருப்புடம் ஓடும் ஒரு அனிமேஷன் குதிரை அன்றைய குழந்தைகளின் favorite.



90's கிட்ஸ்களின் ஆஸ்தான சீரியலான இந்த மர்மதேசம்  மீண்டும் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவில் சொந்த youtube சேனலில் கடந்த ஜூன் 21 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர்ந்து செப்டம்பர் 13 முதல் மர்மதேசத்தின் முதல் பகுதியான "ரகசியம்" தொடரும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

சிறுவயதில் தவற விட்ட 90's கிட்ஸ், இதனை பார்க்க வாய்ப்பு கிடைக்காத 2k கிட்ஸ் என அனைவரும் பார்த்து மகிழவும்.. சாரி.. பயப்படவும்!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...