எந்த
படம் பாக்கனும்னு முடிவு பன்னாலும் உசாரா முன்னாலயே டிக்கெட்டெல்லாம் புக் பன்னி வச்சிருவேன்.
ஆனா புலி விஷயத்துல கொஞ்சம் கண் அசந்த நேரத்துல புக்கிங்க ஓப்பன் பன்னி சீட்டெல்லாம்
புல்லப் பண்ணிட்டாய்ங்க. எங்கயும் முதல்நாள் டிக்கெட் கிடைக்கல. அப்புறம் எங்க மாமா மூலமா காசி தியேட்டர் அதிகாலை நாலரை மணி
ஷோக்கு ஒரு டிக்கெட் உசார் பன்னிட்டேன். மொதநாள் நைட்டே ஐடி காரங்க அண்ணன அமுக்கிட்டாங்க.
அண்ணனுக்கு ஏழரை நடக்கும்போது நாலரைக்கு எப்புடி படம் போடுவாய்ங்கன்னு உள் மனசு கேள்வி
கேட்டாலும், ஒரு நம்பிக்கையில காசி தியேட்டருக்கு போனேன். ஏற்கனவே அங்க கூடியிருந்த
குழந்தைகள் கூட்டத்த, போலீஸ்காரங்க “தம்பி எல்லாரும் பொய்ட்டு பத்து மணிக்கு மேல வாங்க..
பொட்டி வரலயாம்”ன்னு கலைச்சி விட்டுக்கிட்டு இருந்தாங்க.
அந்த
கூட்டத்துலருந்த ஒரு LKG பையன் “காசுகுடுத்து டிக்கெட் வாங்குன நம்மல்லாம் என்ன சொம்பையா..
வாங்க பாஸூ பஸ்ஸ மறிக்கலாம்” ன்னு நாலு பேர சேத்துகிட்டு இருந்தான். ஏண்டா பொட்டி என்ன
MTC பஸ்லயாடா வந்துட்டு இருக்க்கு. அதுக்கு ஏண்டா பஸ்ஸ மறிக்க ப்ளான் பன்றீங்க. ஆத்தாடி
இங்க நின்னா நம்மளையும் அண்ணாவின் விழுதுகள்னு நினைச்சிட்டு போலீஸ் வெளுத்து விட்ருவாய்ங்கன்னு
பொத்துனாப்புல கெளம்பி கம்பெனிக்கு பொய்ட்டேன். நல்ல வேளை படம் போடாததால கம்பெனிக்கு
போனேன். ஒருவேளை படத்த காலைலயே பாத்துருந்தேன்னா கம்பெனிக்கு லீவு போட்டுட்டு ரூம்
போட்டு அழுதுட்டு இருந்துருப்பேன். சரி வாங்க புலிக்கு ஆப்ரேசன் பன்னுவோம்.
நம்மூர்ல
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால மொதநாளே சில வெளிநாடுகள்ல நைட்ஷோ போட்டுருவாய்ங்க.
அத பாத்தவியிங்க ஓவர் சீஸ் ரிவியூன்னு ட்விட்டர்ல “ஆசெம்” “excellent” ன்னு வாய்க்கு
வந்தத அடிச்சி விடுவாய்ங்க. மறுநாள் நம்ம படம் பாக்கும்போதுதான் அவனுங்கள தேடிப்புடிச்சி
கொல்லனும் போலத் தோணும். இது வழக்கமா எல்லா படத்துக்கும் நடக்குறதுதான்.
ஆனா நேத்து ஒண்ணு பன்னாய்ங்க பாருங்க. உன்னைப்போல்
ஒருவன் படத்துல வர்ற டிவி ஷோவுல மறுநாள் நடக்கப்போற தாக்குதலுக்கு மொதநாளே முஷரப், புஷ்ஷுக்கு ஃபோன் பண்ணி இதுக்கும் எங்களுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லைன்னு மன்னிப்பு கேப்பாரு. அது மாதிரி நேத்து சாயங்காலம் புலி
ரிவியூன்னு ஒரு லிங்க்க எல்லாரும் ஷேர் பன்னிட்டு இருந்தாய்ங்க. அதுல பாத்தா
“sridevi excellent performace” “vijay steals the show” "visuals better than bahubali" ன்னு அடிச்சிவிட்டு அஞ்சிக்கு
நாலு ஸ்டார் வேற குடுத்துருந்தாய்ங்க. ”அண்ணன் ஷோ தான் நல்லாருக்காதேடா.. அப்புறம்
எப்டி நாலு ஸ்டாரு” ன்னு பாத்தாதான் தெரியிது நாயிங்க படம் வந்தோன போடுறதுக்காக ஒருமாசம்
முன்னாலயே எழுதி வச்சிருந்த ரிவியூ, படம் ரிலீஸ் ஆகாதது தெரியாம அவசரப்பட்டு போஸ்ட்
பன்னி விட்டுட்டாய்ங்க.
இந்தப்
படத்தோட கதையை கேக்குறதாலயோ இல்லை காட்சிகளப் பத்தி கேக்குறதாலயோ படம் பாக்கும்போது
சுவாரஸ்யம் கம்மியாயிடும்னு ஃபீல் பன்னீங்கன்னா அதவிட மடத்தனம் எதுவும் இருக்காது.
ஏன்னா அப்புடி எதுவுமே இங்க நடக்க வாய்ப்பு இல்லை. ஒரு பெரிய கோட்ட சின்னதாக்கனும்னா
என்ன பண்ணனும். அதுக்கு பக்கத்துல மிகப்பெரிய கோடு ஒண்ணு போடனும். விஜய் என்னிக்கோ
ஒருநாள் சிம்புதேவன பாக்கும்போது வில்லு, சுறா படங்களோட ஃப்ளாப் பத்தி சொல்லி ஃபீல்
பன்னிருப்பாருன்னு நினைக்கிறேன். அதுக்கு தான் சிம்பு தேவன் அந்தப் படங்கள்ளாம் தங்கம்னு
மக்கள் மனசுல தோணுற மாதிரி “அதுக்கும் மேல” ஒரு படத்த எடுத்துருக்காரு.
”முன்னொரு
காலத்தில் நமது நாட்டை வேதாளங்கள் ஆட்சி செய்து வந்தன” ங்குற narration ஆரம்பிக்குது
படம். அவர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள், கோவம் வந்தா பல்லு முளைக்கும்னு , கண்ணு புளூ
கலரா மாறிடும்னு என்னெனவோ சொல்றாய்ங்க. அவங்களுக்கு கீழ உள்ள 59 கிராமத்துல நம்ம கல்யான்
ஜூவல்லர்ஸ்காரர் ஒரு ஊர்ல இருக்காரு. அவரு ஒரு ஊர்ல இருக்காருன்னு சொல்றதுக்கு பதிலா
அவரையே ஒரு ஊருன்னு கூட சொல்லலாம். அப்ப ஆத்து தண்ணில அடிச்சிட்டு வந்த
ஒரு குழந்தை ஒதுங்குது. அந்த குழந்தையோடவே ஒரு முட்டையும் இருக்கு. என்னது? ச்ச ச்ச
அந்த முட்டை அந்த குழந்தை போட்டது இல்லைங்க. வேற.
உடனே அந்தக் குழந்தைய அந்த கிராமத்தோட
வைத்தியர்கிட்ட தூக்கிட்டு போறாங்க. அவரு குழந்தை மொகரைய பாத்தோன “இது ரொம்ப ஆபத்தான
மிருகம். இத அப்புடியே வீட்டீங்கன்னா இது நம்மள கடிச்சி வச்சிரும். அதனால இந்த குழந்தைக்கு
டெய்லி இந்த இலைய குடுங்க”ன்னு ஒரு மூலிகை இலையையும் குடுக்குறாரு. இந்த பில்டப்பெல்லாம்
குடுக்கும்ப்போதே அண்ணனோட ஃப்ளாஷ்பேக் என்ன அண்ணன் எங்கருந்து வர்றாருன்னு எல்லாமே
நமக்கு தெரிஞ்சிடும். ஏன்னா சமீபத்துலதான் நாம பாகுபலி வேற பாத்தோம். கல்யாண் ஜுவல்லர்ஸ்காரர்
அந்த குழந்தைக்கு “மறுதீரன்”ன்னு பேரு வச்சி தான் குழந்தையா வளர்க்குறாரு. அந்தக் குழந்தையே
நம்ம அண்ணாதான். ஊருக்குள்ள அப்பப்ப வேதாள வீரர்கள் வந்து கொடுமை பன்றாங்க. இதப் பாக்குற
கல்யாண் ஜுவல்லர்ஸ் “புலி பதுங்குறது பாயிறதுக்குத்தான்வே “ ன்னு பில்டப் குடுத்துட்டு
இருக்காரு.
அண்ணன்
கொஞ்ச நாள்ல பெடல சுத்தி பெரியாளாயிடுறாப்டி. பிரபு வேதாளங்கள சந்திக்கும்போது வில்லன்
அவரோட ஒரு கைய வெட்டிடுற மாதிரி ஒரு காட்சி. அந்த காட்சி வச்சதுக்கான அர்த்தம் எனக்கு
லேட்டதான் புரிஞ்சிது. அவர கேமராவுல காமிச்சா வேற யாருமே ஃப்ரேம்ல தெரிய மாட்டுறாங்க.
அதுனால ஃப்ரேம்ல மத்தவங்களும் தெரியனும்ங்குறதுக்காக அவரோட ஒரு கைய வெட்டி, அந்த கை
மறைச்சிருந்த இடத்துல தான் மத்த ஆக்டர்லாம் நின்னு பேசுறாங்க.
ஊருக்குள்ளயே
வேதாளங்கள எதிர்க்குற ஒரே ஆள் அண்ணந்தான். வேதாள வீரர்கள் வந்தாலே அண்ணன கூப்டுருவாங்க.
அண்ணன் வந்து வேதாளங்களோட கால்ல விழுந்து, ஊர காப்பாத்துவாரு. ஹலோ இது காமெடி சீனுங்க.
சிரிங்க. இப்ப எப்புடி இருக்க்கு மூஞ்சி. அவ்வளவு பழங்காலத்துலயும் அண்ணன் ட்ரிமிங்க்
மிஷின் வச்சி, சைடு கட்டிங்கெல்லாம் பண்ணி, தெய்வ திருமகள்ல விக்ரம் போட்டுருந்த ஷ்வெட்டர
வாங்கி கைய மட்டும் நறுக்கிட்டு போட்டுகிட்டு சுத்துறாரு. பழைய கால காஸ்டியூமாம்.
அப்ப
வர்றாங்க வெளியூருக்கு சின்ன வயசுல படிக்க போயிருந்த ஈரோயின். சின்ன வயசுல ஹன்சிகா மாதிரி போன குழந்த
வளர்ந்து சுருதி ஹாசன் மாதிரி கண்றாவிய வருது. அதுலயும் குரலு இருக்கெ குரலு. நம்ம
ஐபிஎல் மேட்சுக்கு பொய்ட்டு ஃபுல்லா கத்தி எஞ்ஜாய் பன்னிட்டு வந்தா, வந்த மறுநாள் காலையில
நம்ம குரலு எப்டி இருக்குமோ அச்சு அசல் அதான் சுருதி குரல். ”அமைச்சரே இவன் காதிற்குள்
அரைப்படி கட்டெரும்பை விடுங்கள். அவை அனைத்தும் மறுகாது வழியாக வரவேண்டும். அதனை நான்
மறுநாள் வந்து பார்க்க வேண்டும்” ன்னு வடிவேலு குடுப்பாரே ஒரு தண்டனை. அந்த தண்டனைய
குடுத்தா நம்ம காது என்னவாகுமோ, அப்டித்தான் ஆகுது சுருதியோட கொரல கேக்க்கும்போது.
காதுல பாறைக்கம்பிய சொருகுன மாதிரி. சுருதியோட காஸ்டியூம் பிரமாதம்.
வேதாளங்கள்
சுருதிய வேதாளக் கோட்டைக்கு கடத்திட்டு போயிடுறாங்க. உடனே அண்ணன் காப்பாத்த கெளம்புறாரு.
அதுவும் வேதாளம் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு (போடாமலேயே மொகர வேதாளம் அப்டித்தான்
இருக்கு) வேதாளங்களுக்கு கண்ணு புளு கலருல இருக்கும். அதுக்கு அண்ணன் ஒரு ஐடியா பண்றாரு
பாருங்க. கையில க்ளீனிக் ப்ளஸ் ஷாம்பு மாதிரி எதோ ஒண்ண லைட்டா ரெண்டு சொட்டு ஊத்தி
விரல வச்சி அழுத்தி எடுத்து கண்ணுக்குள்ள வச்சிக்கிறாரு. அட நாயே கண்டத கண்ணுக்குள்ள
வச்சா கண்ணு நொள்ளையாயிடும்டா. இவ்வளவு சுலபமா காண்டாக்ட் லென்ஸ் தயார் பன்ன அண்ணாவால
மட்டுமே முடியும்.
அண்ணன்
எப்பல்லாம் ஹீரோயின்கள கவரனும்னு நினைக்கிறாரோ அப்பல்லாம் சண்டை போட்டு பெர்ஃபார்மன்ஸ்
பண்ண யாராவது கிடைச்சிருவாங்க. அப்டித்தான் ஹன்சிகாவ பாக்கும்போது ஒரு கருப்பு புலியோட
அண்ணன் சண்டை போடுறாரு. சண்டை பீக்ல போயிடுட்டு இருக்கும்போது கரும்புலி, விஜய் அண்ணாவ
தூக்கி ஒரு புதருக்குள்ள வீசிட்டு அதுவும் அந்த புதருக்குள்ள பாயிது. கொஞ்ச நேரம் சல
சலன்னு புதர் ஆடுறத மட்டும் காமிக்கிறாங்க. என்னது? ச்ச..ச்ச,,, அண்ணன் அப்டியெல்லாம்
பன்னிருக்க மாட்டாருய்யா. சும்ம புதர் ஆடுனோன நீங்க இப்டியெல்லாம் பேசக்கூடாது. ஆனா
கொஞ்ச நேரத்துல வெளில வந்த புலி, சைலண்ட்டா திரும்பி போயிடுது. அதப்பாத்தாதான் எனக்கும்
ஒரு டவுட்டு. ரெண்டு படத்துல வடிவேலு சொன்னதும், அந்த மனிதக்குரங்கு அமைதியா போவுமே
அது மாதிரி.
இவரு வேதாளக்கோட்டைய தேடிப்போகும்போது வழில ரோபோ ஷங்கர்,
இமான் அண்ணாச்சி, வித்யூலேகா, ஆலே உள்ளிட்ட குள்ளர்கள சந்திக்கிறாரு. அவங்களோட பேர
பாத்தா ஆல்ஃபா, பீட்டா, காமா, ஐன்ஸ்டின்னு என்னென்னவோ வச்சிருக்காய்ங்க. இதப்பாத்தோன்ன
தான் சிம்புதேவன் சுத்தமா மெண்டல் ஆயிட்டாரோன்னு டவுட் வந்துச்சி. எதோ இம்சை அரசன்ல
வித்யாசமா எதோ பண்ணாரு. எல்லாருக்கும் புடிச்சிச்சி. அதயே திரும்ப திரும்ப போட்டு அருத்தா
எப்டி. அதுவும் இது ஒரு பழங்காலத்து கதையா வச்சிக்கிட்டு அதுல ஐன்ஸ்டின், ஃபெர்னாண்டஸ்
ஆல்ஃபா பீட்டான்னுகிட்டு. காமெடியாமாம்.
தலைநகரம்
வடிவேலு மனோபாலாகிட்ட சொல்றமாதிரி “மிஸ்டர் சிம்புதேவன். இதுவரைக்கும் நீங்க பண்ண காமெடி
எதுக்குமே எங்களுக்கு சிரிப்பு வரல. அப்டின்னா உங்க வீக்குனசு என்னன்னு தெரிஞ்சிகிட்டு
படம் எடுக்க பாருங்க.”
விஜய்ய
வேதாளக்கோட்டை அடைஞ்ச உடனே வர்றாங்க நம்ம ஸ்ரீதேவி. அவங்கள பாத்தோன எல்லாருக்கும் நம்ம
நடுவுல கொஞ்ச பக்கத்த காணும் ரியாக்ஷன்தான். ”ப்ப்ப்ப்ப்பா.. யார்ரா இது பேய் மாதிரி”ன்னு.
கருமம். அங்க நம்ம அண்ணன ஒரிஜினல் வேதாளமா இல்லையான்னு செக்பன்ன பல டெஸ்டுகள் பன்றாங்க.
அண்ணன் பாஸ் பன்னிடுறாரு. அப்பதான் நமக்கு மொத சீன்லயே தெரிஞ்ச அண்ணனோட ஃப்ளாஷ்பேக்
அவருக்கு தெரிய வருது.
விஜய்ய
பொறுத்த அளவு கெட்டப் சேஞ்ச்னா முடிய கொஞ்சம் நீளமா வச்சிக்கிட்டு, வாய சாணி மிதிச்ச
மாதிரி வச்சிக்கிறது மட்டும் தான் போல. வேட்டைக்காரன் “ஒரு சின்னத்தாமரை” பாட்டுல அவரு
வச்சிருந்த அதே விக்க வச்சி, வாய வில்லு ஃப்ளாஷ்பேக்ல வர்ற விஜய் மாதிரி வச்சிக்கிட்டா
அதான் அப்பா விஜய். அதுவும் அப்பா விஜய் ஒரு வாய்ஸ் மாடுலேஷன் பன்னி டயலாக் பேசுறாரு
பாருங்க. காலங்காத்தால அவசரமா டாய்லெட்ல முக்குறத நிறுத்தாம வசனம் பேசச் சொன்னா எப்டி
இருக்கும்? அப்டிதான் இருக்கு.
கெட்டப்
மாத்தி நடிக்கனும்ங்குறது நடிகருக்கு அவசியம் இல்லைதான். ஆனா நம்ம கெட்டப்புக்கு எது
சூட் ஆகுதுங்குறத செலெக்ட் பண்ணி நடிக்கிறது நிச்சயம் ஒரு நடிகரோட கடமை. உங்களுக்கு
பழங்கால கதையில நடிக்கனும்னு கனவு இருந்துருக்கும். போனா போகுது. நடிச்சிட்டீங்க. இனிமே
படுக்கும்போது வெளக்கமாற தலைமாட்டுல வச்சி படுங்க. அந்த மாதிரி கனவெல்லாம் இனிமே உங்களுக்கு
வரவே கூடாது. பெரும்பாலான காட்சிகள்ல விஜய் கேமராவ பாத்து பேசாம சைடுல எங்கயோ பாத்து
பேசிகிட்டு இருக்கமாதிரியே வச்சிருக்காங்க. அதுவே மொதல்ல கடுப்பா இருக்கு.
லொக்கேஷன்லாம்
செம கப்பி. ஒரு பழங்கால படம் பாக்குற ஒரு ஃபீலே வரல. வேதாளக் கோட்டை காட்சிகள்ல மட்டும் ஒருசில vfx ஓக்கே.
படத்துல மிகக் கேவலமான இன்னொரு விஷயம் வசனம். பாசத்துக்கு முன்னால நா பனி,
பகைக்கு முன்னால நா புலி”, நீங்க வேதாளம் நாங்க பாதாளம்ன்னு கப்பியான வசனங்கள். வசனங்களுக்காக
அந்த அளவு முக்கியத்துவம் குடுக்கல போல. “அம்மா… தமிழ்நாட்டுக்கே நீங்க ராணி மாதிரி..
ஆனா நா தமிழ்நாட்டுக்கே… அத உடுங்க ஏன் என்வாயல சொல்லிக்கிட்டு” ன்னு தலைவர் சொல்லுவாரே.
நம்ம பழைய தளபதி அதயும் விட்டு வைக்கல… “நீங்க இந்த கோட்டைக்கு மட்டும்தான் தளபதி…
ஆனா நான்…” அப்டின்னு ஒரு வசனம். இவன அடிக்கிறதுல தப்பே இல்லை
காமெடிங்குற
பேர்ல கொன்னு எடுக்குறாய்ங்க. தம்பி ராமைய்யா கும்கில மனசுக்குள்ளயே பேசிக்கிட்டு அருத்த
மாதிரி இதுலயும் அதயே பன்னி கொல்றாரு. எங்கயுமே கொஞ்சம் கூட சிரிப்பு வரல. வழக்கமா
விஜய் படத்துல பாட்டெல்லாம் நல்ல எடுப்பாய்ங்க. இதுல அதுவும் இல்லை. “எங்க மக்காங்..
எங்க மக்காங்” ல ஒரு டான்ஸ் ஆடுறாரு பாருங்க. சில சமயம் நாயோட காலுங்க எதாவது கயித்துல
சிக்கிக்கும். கயித்துல மாட்டிக்கிட்ட கால எடுக்க நாயி முன்னங்கால தூக்கும் பின்னங்கால
தூக்கும். சுத்தி சுத்தி லூசு மாதிரி திரியும். அண்ணாவும் அந்த மாதிரிதான் எதோ பன்றாரு
அந்த பாட்டுல. வக்காளி இனிமே எவனாவது ஆசை நூறுவகை பாட்ட ஓட்டுனீங்க வெறியாயிருவேன்.
இத பாருங்க. அத ஓட்டமாட்டீங்க.
என்னது
DSP யா? யோவ் சும்மா எல்லா தடவையும் அந்த பச்ச புள்ளையையே ஓட்டுங்க. இங்க எதோ மத்தவன்லாம்
செமையா பன்னிருக்க மாதிரியும் DSP மட்டும் ஒழுங்கா பன்னாத மாதிரியும். போங்கப்பா. சுதீப் ஓக்கே.
ஆனா அவர டான்ஸெல்லாம் ஆடவச்சி நம்மள கொடும படுத்திருக்காய்ங்க. ஹன்சிகா அழகு. அவ்ளோதான்.
ஒரு
தடவ மக்கள் ஒரு விஷயத்துக்கு சிரிச்சாங்கன்னா எல்லாதடவையும் சிரிப்பாங்கன்னு அர்த்தம்
இல்லைங்குறத சிம்புதேவன் புரிஞ்சிக்கனும். பேண்டசி படம் எடுக்குறேங்குற பேர்ல (தமிழ்ல
அந்த பேர சொன்னா ரொம்ப கேவலமா இருக்கே) அதாவது fantasy படம் எடுக்குறேங்குற பேர்ல இனியும்
எங்கள கொல்லாதீங்க. எந்த genre படம் எடுக்குறோமோ அதுல தெளிவா இருந்து, அதுகேத்த காட்சி
மற்றும் காமெடிகள வைக்கிறதுதான் நல்லது. இங்க அந்த தெளிவே இல்லை. கேவலமான திரைக்கதை
மற்றும் வசனம். படத்துல வர்ற கேரக்டர்களோட பேருங்கள கேட்டாலே மனுசனுக்கு மண்டை காயிது.
படம்
முடிஞ்சி வெளில வரும்போது என்கூட வந்த ஒரு விஜய் ஃபேன்கிட்ட “என்னங்க படம் இவ்வளவு
மொக்கையா இருக்கு?”ன்னேன். அதுக்கு அவன் “இது குழந்தைங்களுக்கான படம் பாஸ்” ன்னான்.
“அப்புறம் என்ன நொன்னைக்கு எறுமை மாடே நீ படத்துக்கு வந்த?” ன்னேன். பத்து செகண்ட்
என்னை உத்து பாத்த அவன் “துப்பாக்கிடா” ங்குற சத்தத்த எழுப்பியபடியே கூட்டத்திற்குள்
சென்று மறைந்தான்.