எதிர்மறை விமர்சனங்கள் ஒரு புறம் கொடிகட்டிப் பறந்தாலும் மறுபுறம் விவேகம் வசூல் சாதனை புரிந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் பெருநடிகர்களின் முதல் வார வசூலைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. இது போன்ற முண்ணனி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும் திரையரங்கிற்கு வரும் குடும்பங்கள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் விவேகம் இயக்குனர் சிவா-அஜித் கூட்டணியில் உருவான முந்தைய இரு படங்களின் அளவு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
விவேகம் படத்தில் கதை இருக்கிறதா இல்லையா என்பதையே நமது நெட்டிசன்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்கட்டும். கதை அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் எந்த ஒரு படத்தையும் ரசிக்க வைத்துவிடலாம். ”பையா” திரைப்படத்தில் கதை என்ற ஒண்றே இல்லை என்பது லிங்கு பாய் அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டது. ஆனாலும் கார்த்தியின் முக்கியமான வெற்றிப்படங்களில் இன்று பையாவும் ஒண்று.
விவேகத்தில் அவர்கள் காட்டிய கதையில் எந்தெந்த காரணங்களால் பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை? எதை எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதை நம் அறிவுக்கு எட்டிய கோணத்தில் காண்போம்.
படத்தின் முக்கியமான குறைகளில் ஒண்று படத்தின் கதை ஓட்டத்தில் நம்மை பொறுத்திக்கொள்ள முடியாமை. படத்தில் அஜித்திடம் காணப்படும் அதே பரபரப்பு நம்மிடமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே பார்வையாளர்களான நமக்கு ஏற்படவில்லை.
வழக்கமாக நம் தமிழ் சினிமாக்களில் வில்லன் ஒரு இடத்தில் குண்டு வைத்திருப்பார். ஹீரோ அதனைத் தேடி அலைந்து கடைசி நிமிடத்தில் கண்டுபிடிப்பார். அதில் ஓடிக்கொண்டிருக்கும் டைமர் சொற்ப நொடிகளே மிச்சமிருப்பதைக் காண்பிக்கும். சிவப்பு, நீலம் என்ற இரு ஒயர்களில் ஏதேனும் ஒன்றை நறுக்க வேண்டும். ”சிவப்பா நீலமா” என்ற குழப்பத்தில் ஹீரோவின் முகத்திலிருந்து வியர்வை வழிய, அவருக்கு இருக்கும் படபடப்பில் ஒருபகுதியாவது பார்க்கும் நமக்கும் இருக்கும். பார்க்கப்போனால் எந்தப் படத்திலுமே ஹீரோ ஒயரை நறுக்கும்போது குண்டு வெடித்ததாக சரித்திரம் இல்லை. அப்படியிருந்தும் நமக்கு லேசாக படபடக்கும். அந்த படபடப்புதான் நாம் கதைக்குள் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.
விவேகம் திரைப்படத்தில் அப்படி எந்த இடத்திலுமே நம்மால் உணர முடியவில்லை. ஹீரோவின் அறிமுகக் காட்சிகள், பில்ட் அப் காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளெல்லாம் முடிந்து கதைக்குள் நுழையும் காட்சி என்பது “செயற்கை பூகம்பம்” ஒண்று ஏற்பட்டதாகவும் அதனால் பலர் உயிரிழந்ததாகவும், அடுத்து ஒரு செயற்கை பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் அதைத் தடுக்க வேண்டும் எனவும் விவேக் ஓபராய் அஜித்திடம் விவரிக்கும் காட்சிதான்.
அந்த செயற்கை பூகம்பம் ஏற்படுவதையும், அதன் தாக்கத்தையும் தனிக் காட்சியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அது எவ்வளவு கொடூரமானது என்பதும் , அடுத்த பூகம்பம் நிகழாமல் தடுப்பது எவ்வளவு அவசியம் என்பதும் பார்வையாளர்களால் உணர முடியும். ஆனால் உண்மையில் நமக்கு காட்டப்படுவது என்ன? பூகம்பம் ஏற்பட்டதை அஜித்தும் விவேக் ஓபராயுமே திரையில்தான் பார்க்கிறார்கள். திரையில் காட்டப்படும் காட்சிகளுக்கே தாக்கம் குறைவாக இருக்கும்போது திரைக்குள் திரையில் காட்டினால் எப்படி தாக்கம் இருக்கும்? பார்வையாளர்கள் கதையுடன் ஒண்றாமல் போனதற்கு இது ஒரு மிக முக்கியக் காரணம்.
அதேபோல அஜித் மற்றும் விவேக் ஓபராய் இடைப்பட்ட நட்பு. ”நண்பா.. நா நம்புறேன் நண்பா… நீ கலக்கு நண்பா… தெறிக்கவிடு நண்பா” இதுபோன்ற உதட்டளவு வசனங்களைத் தவிற அஜித்தும் விவேக் ஓபராயும் நல்ல நண்பர்கள் என்பதைக் காட்டும் காட்சிகள் எதுவுமில்லை. சர்வைவா பாடலோடு பாடலாக ஒருசில காட்சிகள் கடந்து செல்கிறது. ஆனாலும் பயனில்லை. அவர்கள் நண்பர்களாக இருப்பதே நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத பொழுது நண்பன் எதிரியாக மாறும் பொழுது, அவர்கள் படத்தின் ட்விஸ்ட்டாக நினைத்த அந்த காட்சி நமக்கும் ட்விஸ்டாகத் தெரியவில்லை. அதே சமயம் அவர்கள் செய்தது துரோகமாகவும் நம்மால் உணரமுடியவில்லை.
அடுத்ததாக படத்தில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தகர்த்ததுகதாப்பத்திரங்களின் தெரிவு எனலாம். முதலில் அஜித்தின் உதவியாளராக வரும் கருணாகரனின் தெரிவு. விவேக`ம் படத்தில் இருக்கும் அந்த கதாப்பாத்திரம் நிச்சயம் கருணாகரனுக்கானது அல்ல. உலகநாடுகள் அளவில் தேடப்படும் ஒரு பெண்ணை பிடிக்கும் உளவாளியின் உதவியாளன் வெறும் பயந்தாங்கோளியாக, காமெடி செய்ய முயற்சிக்கும் ஒருவர் மட்டும் போதாது. காமெடிக்கென தனி ட்ராக்குகள் இல்லை. கதையின் ஒட்டத்திலேயே பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். அதே சமயம் ஒரு போலீஸிற்கான கெத்தும் இருக்கவேண்டும் என்கிற பட்சத்தில் அந்த கதாப்பாத்திரத்திற்கு விவேக்கைத் தவிற வேறு எவரும் சிறப்பாகப் பொருந்தமுடியாது. ஏற்கனவே ஒரு படத்தில் அதே கூட்டணியில் நடித்ததால் விட்டுவிட்டார்களோ என்னவோ?
அடுத்தது காஜல் அகர்வாலின் தெரிவு, முண்ணனி நடிகர் என்பதால் அவர்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள முன்ணனி கதாநாயகிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது நான்கு பாடல்களுக்கு மட்டும் கதாநாயகிகளை அரைகுறை ஆடையில் ஆடவைக்கும் படங்களுக்குப் பொருந்தும். ஆனால் கதாநாயகியும் கதையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்பொழுது, அவரைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் போது முண்ணனி நடிகை என்பதைக் காட்டிலும் கதைக்கும், நாயகனுக்கும் பொருந்துகிறாரா என்பதையும் கவனித்திருக்க வேண்டும்.
சதிலீலாவதி திரைப்படத்தில் கமல் கோவை சரளாவை தனக்கு ஜோடியாக்கி நடித்திருப்பார். கோவை சரளா கமலுக்கான ஜோடியா? கதைக்குத் தேவைப்பட்டது. நம்மாளும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. டங்கல் திரைபடத்தில் சாக்ஷி தன்வார் எனப்படும் ஒரு சாதாரண நடிகைதான் இந்தியாவிலேயே முன்னணி நடிகரான அமீர்கானின் மனைவியாக நடித்திருந்தார். “இல்லை இல்லை.. நான் நம்பர் 1 நடிகன்.. இந்தப் படத்தில் எனக்கு கேத்ரினா கெய்ஃப் தான் மனைவியாக நடிக்க வேண்டும் என்று அமீர்கான் நினைத்திருந்தால், டங்கல் டொங்கல் ஆகியிருக்கும் அல்லவா?
அதுபோல் கதைக்குத் தேவையானவற்றையும் கருத்தில்கொண்டு கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யவேண்டும். விவேகத்தில் காஜல் அகர்வாலிற்குப் பதிலாக நயன்தாரா இதே கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பட்சத்தில் அதே காட்சிகள் இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது அவரின் ரேஞ்சுக்கு இதுபோன்ற டொம்மையான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கமாட்டார் என்பது வேறு விஷயம். காஜல் எந்த விதத்திலும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் அல்ல.
அடுத்ததாக ஆக்ஷனையும் செண்டிமெண்டையும் கலந்து கொடுப்பது தவறல்ல. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து விட்டு அடித்திருப்பதுதான் நகைப்பை வரவழைத்தது. படத்தில் உச்சகட்ட ஒரு பைக் சேசிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஃபோனைக் காதில் வைத்து குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்பது, பத்துப் பதினைந்து குண்டுகள் உடலில் பாய்ந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஃபோனை எடுத்து சிவாஜியின் “கைவீசம்மா… கைவீசு” பாணியில் “வர்றேம்ம்ம்மா” என்பது போன்ற காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த சால்ட் அண்ட் பெப்பர் சிகையழகை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். பெப்பர் எல்லாம் போய் தற்பொழுது வெறும் சால்ட் மட்டும் இருப்பது அஜித்தை தனியாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும் காஜலுடன் சேர்த்துப் பார்க்கும்போது.. சரி விடுங்க… அத ஏன் சொல்லிக்கிட்டு.. !!!