Friday, September 23, 2016

தொடரி – பயணம்!!!


Share/Bookmark
நெகட்டிவ் க்ளைமாக்ஸ வச்சிக்கிட்டு படத்த ப்ரமோட் பண்ணி வெற்றி பெற வச்ச பாலா , பாலாஜி சக்திவேல், அமீர் வரிசையில இன்னொரு ருசிகண்ட பூனை ப்ரபு சாலமன். பல நூறு இயக்குனர்களுக்கு மத்தியில தனக்குன்னு ஒரு அடையாளத்தையும், தன்னை நோக்கி அனைவரின் கவனத்தயும் வெகு விரைவில் ஈர்க்கவும் கடந்த பத்தாண்டுகள்ல சில இயக்குனர்கள் கண்டுபிடிச்ச ஈஸியான வழிதான் இந்த நெகடிவ் க்ளைமாக்ஸ். நெகடிவ் க்ளைமாக்ஸ் மட்டும் ஒரு படத்தை ஓட வைக்கிறதில்லை. அதுக்கேற்ற கதை, திரைக்கதை இருந்தா மட்டுமே ஹிட் ஆகுது.

டி.ஆர் ஒரு பேட்டில சொல்லுவாரு. “சார் ஒரு படத்தோட ஆரம்பத்துல ஆடியன்ஸ சிரிக்க வைக்கலாம் சார்… இடைவேளையில சிரிக்க வைக்கலாம் சார். ஆனா க்ளைமாக்ஸ்ல ஆடியன்ஸ சிரிக்க வைக்க கூடாது சார். அழ வைக்கனும் சார்.. அப்பதான்சார் அவன் ஒரு நல்ல டைரக்டர்” அப்டின்னு அவர் சொன்னதக் கேட்டு பல பேரு சிரிச்சாங்க. ஆனா சில டைரக்டர்கள் அத சீரியஸா எடுத்துக்கிட்டாங்க போலருக்கு. நல்லா போயிட்டு இருக்க கதையில படக்குன்னு ஹீரோவையோ, ஹீரோயினையோ இல்லை இன்னும் எதாவது ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தையோ போட்டுத்தள்ளி சிம்பத்தி கிரியேட் பன்ற யாவாரம் ரொம்ப நாள ஓடிக்கிட்டு இருக்க, சமீப காலமா அந்த யாவாரம் டல் அடிச்சி போயிருச்சி.

அதே ஃபார்முலாவ ஆரம்பத்துலருந்து இப்ப வரைக்கும் மாத்தாம படம் எடுக்குற பாலா படங்கள்லாம் இப்ப டண்டனக்கா போடுது. ப்ரபு சாலமனும் கிட்டத்தட்ட அதே கேட்டகிரி தான். அவருக்கு இதுவரைக்கும் ஓடிய படங்களப் பாத்தா, எல்லாமே அந்த மாதிரியான க்ளைமாக்ஸ் உள்ள படங்கள்தான்.  இப்பவும் மாறலன்னா நமக்கும் அதே கதிதான்னு நல்லா உணர்ந்த ப்ரபு சாலமன், அவரோட பானிலருந்து கொஞ்சம் விலகி ஒரு படத்த குடுக்க முயற்சி பன்னிருக்காரு.

டெல்லிலருந்து சென்னை வர்ற ஒரு ட்ரெயின்ல Pantry செக்‌ஷன்ல வேலை பாக்குற ஒரு சாதாரண பையன் தனுஷ். அதே ட்ரெயின்ல பயணம் செய்யிற ஒரு நடிகையோட touch up girl ah வர்றவங்க கீர்த்தி சுரேஷ். பாத்த உடனே தனுஷுக்கு காதல் பத்திக்க, அத இத சொல்லி கீர்த்தி சுரேஷ உசார் பன்னும் போது வேற ஒரு பெரிய ப்ரச்சனையாகி ட்ரெயின நிறுத்த முடியாம முழு ஸ்பீடுல ஓடிக்கிட்டு இருக்கு. அதுலருந்து எப்படி எஸ் ஆகுறாங்கங்குறதுதான் மீதிக் கதை.

கதை, ஒரு பகுதி திரைக்கதை, characterization எல்லாத்தையும் கொஞ்சம் டீப்பா உள்ள இறங்கி பாத்தோம்னா இந்தத் தொடரி “சென்னையில் ஒரு நாள்” மற்றும் “பயணம்” படங்களோட கலவை தான். ரயில்ல பயணம் செய்யும் ஒரு அரசியல் ப்ரமுகர், ஒரு சினிமா ப்ரபலம், குடிக்கு அடிமையான ஒருத்தன்னு நிறைய கேரக்டர்களும் பயணம் படத்தோட ஒத்துப் போகுது.

ப்ரபு சாலமனோட வழக்கமான படைப்புகள் மாதிரி லவ்வுக்கு அதிக முக்கியத்துவம் குடுக்காம முதல் பகுதி காமெடிக்கு குடுத்துருக்கது மகிழ்ச்சி. அதுவும் நிறைய வசனங்கள் சிரிப்பையும் வரவழைக்கிறது இன்னும் மகிழ்ச்சி. தம்பி ராமைய்யா தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு மிகச் சிறந்த நடிகர். ரியாக்‌ஷன்லாம் பின்னி எடுக்குறாப்ள. என்ன ஒரே மாதிரி காமெடி ரெண்டு மூணு தடவ ரிப்பீட் ஆகுறதுதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு.

கொஞ்சம் கப்பித்தனமான கிராஃபிக்ஸ் மற்றும் ரெண்டு பாடல் காட்சிகளைத் தவிற வேற எதுவுமே போர் அடிக்கல. சொல்லப்போனா செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சதுலருந்து எதோ நம்மளும் அவய்ங்க கூட அதே ட்ரெயின்ல ட்ராவல் பன்ற மாதிரி ஒரு பதட்டமாவே இருக்கு.. க்ளைமாக்ஸ் முடிஞ்சி வரும்போது உண்மையிலயே டெல்லிலருந்து ரெண்டு நாள் ட்ராவல் பன்னிட்டு செண்ட்ரல்லருந்து வெளில வர்ற ஃபீல் தான்.

படம் முழுசும் ஒரே ஒரு ட்ரெய்ன சுத்தி மட்டுமே நடக்குறதால முதல் பாதி படம் முடியிறதுக்கே எதோ படமே முடிஞ்ச மாதிரி ஒரு ஃபீல். ட்ரெயின் மட்டும்தான் லொக்கேஷன்ங்குறதால பாடல் காட்சிகளையும் அவ்வளவு சிறப்பா குடுக்க முடியல. ஒரே ஷாட்ல நாலு கார்மேல ஏறி மின்னல் வேகத்துல “ஜிந்தா.. ஹே ஜிந்தா.. ஹே ஜிந்தா” ன்னு வெறித்தனமா ஆடுன தனுஷ ட்ரெயின் மேல நின்னு கிழக்கே போகும் ரயில் சுதாகர் மாதிரி காலையும் கையயும் ஆட்ட விட்டுருக்கதப் பாத்தா பாவமா இருக்கு.

இந்தப் படம் மத்த ப்ரபு சாலமன் படங்களை விட நல்லா இருக்கதா நா ஃபீல் பன்னதுக்கு இன்னொரு காரணம் படத்தோட star casting. எப்பவும் வெந்தது வேகாதது, ஈயம் பூசுனது பூசாதது மாதிரி ஆட்களை வச்சி படம் எடுப்பாரு. ஒண்ணு ரெண்டு ஆட்களைத் தவிர மற்ற எல்லா நடிகர்களுமே நமக்கு புதுசா இருப்பாங்க. ஆனா இதுல தனுஷ், ராதாரவி, சின்னி ஜெயந்த், A.வெங்கடேஷ், கருணாகரன், படவா கோபி, பட்டி மன்ற ராஜா, கு.ஞானசம்பந்தம், கணேஷ் வெங்கட்ராம், போஸ் வெங்கட்ன்னு அத்தனை பேரும் நல்ல ஃபெமிலியரான ஆட்கள். அவங்களோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸே படத்துக்கு பெரிய பெரிய பலத்த குடுக்குது.

கட்சியால மதிக்கப்படாத ஒரு மொக்கை மினிஸ்டரா வர்ற ராதாரவி பட்டையக் கெளப்பிருக்காப்ள. ”யோவ் என்னோட டிப்பார்டெம்ண்ட்ட பத்தியே எனக்குத் தெரியாது. இதுல ரயில்வேயப் பத்தி வேற கேக்குற” “எப்பவுமே வேலை தெரியாதவன்கிட்டதான்யா இவனுங்க வேலையக் குடுப்பானுங்க”ன்னு அவர் பேசுற வசனமெல்லாம் நச்.

இளையராஜா ஒரு காலத்துல பல ராமராஜன்களை காப்பாத்தி விட்ட மாதிரி இப்ப வர்ற மீடியம் பட்ஜெட் படங்களையெல்லாம் காப்பாத்தி விடுறது நம்ம இமான் தான். இந்தப் படத்தோட பாடல்கள் அவரோட பெஸ்ட்டுன்னு சொல்ல முடியாது. ஆனா பாட்டெல்லாம் நல்லா இருந்துச்சி. BGM வெறும் ட்ரெயின் சவுண்டு மட்டும் தான்.

என்னைப் பொறுத்த அளவு படத்துல மைனஸ்னா மூணு விஷங்களைச் சொல்லலாம். முதலாவது கீர்த்தி சுரேஷும் அதோட பாத்திரப் படைப்பும். சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஃபீல கொண்டு வர்ற மாதிரி நினைச்சிக்கிட்டு கொன்னு எடுத்துருக்காங்க. அதுவும் போன உசுறு வந்துருச்சி பாட்டுல மொத்தமும் ஃபேஸ் ரியாக்‌ஷன் தான். அங்கதான் ஒண்ணும் வரலன்னு தெரிஞ்சப்புறமும் கேமராவ அந்தப் புள்ள மூஞ்சிக்கிட்டயே வச்சி பாட்ட எடுத்துருக்காய்ங்க. ஆளும் பாக்க ரொம்ப டொம்மையா இருக்கு இந்தப் படத்துல.

அடுத்தது படத்தோட கிராஃபிக்ஸ். லோ பட்ஜெட்டுக்கு அவ்வளவுதான் வரும்னு சொன்னாலும் அதுக்கேத்த மாதிரி கொஞ்சம் ட்ரெயின் மேல நிக்கிற காட்சிகளக்  கம்மி பன்னிருக்கலாம். அடுத்து பாடல்களோட காட்சிப்பதிவு. ஏற்கனவே சொன்னமாதிரி ட்ரெயின் மட்டும்தான் லொக்கேஷன்ங்குறதால பாடல்களை அவ்வளவு சிறப்பா காமிக்க முடியல.

அங்கங்க கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள், நானே உள்ளுக்குள்ள ஒரு இடத்துல சிரிச்சிக்கிட்டேன். ”சார் ட்ரெயின் இப்ப மீஞ்சூர்ல இருக்க ஒரு பாலத்த க்ராஸ் பன்னுது சார்” ம்பானுங்க. ட்ரெயினப் பாத்தா எதோ ஊட்டி மாதிரி உள்ள ஒரு லொக்கேஷன்ல உள்ள ஒரு பாலத்த க்ராஸ் பன்னும். அடுத்து “சார் ட்ரெயின் அத்திப்பட்டுவத் தாண்டி அடுத்து ஒரு forest க்குள்ள நுழையிது சார்” ன்னானுங்க. எனக்கு நெஞ்சு டபீர்ன்னு வெடிச்சிருச்சி. அடேய்… அத்திப்பட்டுலயும், மீஞ்சூர்லயும் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் வெறும் காய்ஞ்சி போன கருவ மரம் மட்டும்தாண்டா நிக்கும். இதுல அத்திப்பட்டுல ஃபாரஸ்ட்டா… ஊட்டி லொக்கேஷன்ல மீஞ்சூரா.. ஏண்டா நீங்க காலண்டர்ல கூட மஹாலட்சுமியப் பாத்ததில்ல போலருக்கே. அத்திப்பட்டு மீஞ்சூர் ஏரியாவுல ரொம்ப நாளா குப்பை கொட்டுறதால எனக்கு சிரிப்பு வந்துருச்சி. மத்தவங்களுக்கு அப்டி இருக்காதுன்னு நினைக்கிறேன்.

சாதாரணமா  ட்ல்லியிலருந்து சென்னைக்கு  36 மணி நேரப் பயணம். அதுவும் இந்தப் படத்துல ட்ரெயின் நிக்காம 160 குலோ மீட்டர் வேகத்துல ஓடுது. கூட்டி கழிச்சி பாத்த இன்னும் சீக்கிரம்தான் வரனும் . ஆனா படத்துல காமிக்கிறதப் பாத்த அந்த ட்ரெயின் பல நாளா ஓடிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு. அதுவும் அந்த ட்ரெயினுக்கு ஆகுற மீடியா பப்ளிசிட்டி, ஆன் த ஸ்பாட் விவாத மேடை அது மட்டும் இல்லாம ட்ரெயின்ல நடக்குற அனைத்து விஷயத்தையும் டிவி ஒளிபரப்ப, அத ட்ரெயின்ல இருக்க மக்கள் மொபைல் ஃபோன்லயே பாத்து ரசிக்கிறாய்ங்க. அடேய் டெல்லி-சென்னை ட்ரெயின்ல நீங்க நிம்மதியா ஒரு கால் பேசுறதே பெரிய விஷயம்டா.. அதுக்குள்ள சிக்னல் போயிலும். இதுல ஆன்லைன் ஸ்ட்ரீமிங்ல லைவ் வீடியோ பாத்துக்கிட்டு வர்றீங்க. 

என்னென்னமோ சொல்றீங்க. தனுஷப் பத்தி எதுவுமே சொல்லலையேன்னு தானே கேக்குறீங்க. தனுஷ் பட்டையக் கெளப்பிருக்காரு. நடிப்புல பின்னி எடுத்துருக்காருன்னு சொல்றதுக்கு எனக்கும் ஆசைதான். ஆனா அப்டி எந்த சீனுமே இல்லை. இன்னும் சொல்லப்போனா இது தனுஷுக்கான படமே இல்லை. விதார்த் நடிச்சிருந்தா கூட இந்த படத்துக்கு இதே இம்பாக்ட் இருந்துருக்கும். தனுஷ உள்ள இறக்குனதுனாலதான் இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்துக்குள்ள வந்துச்சின்னு சொல்லலாம்.

ப்ரபு சாலமன் ரொம்ப நல்லாவே இந்த ஸ்க்ரிப்ட ஹேண்டில் பன்னிருக்காரு. எந்த இடத்துலயும் ரொம்ப செண்டிமெண்ட்டாவும், ரொமான்ஸாவும் உள்ள போயிடாம எல்லா இடத்துலயுமே டக்குன்னு ஒரு காமெடி வசனத்த வச்சி ஆடியன்ஸூக்கு போர் அடிக்காம பாத்துக்குறாரு. வசனங்கள் எல்லாம் சூப்பர். எல்லாத்தையும் வியாபாரமாக்கும் மீடியாக்காளை அங்கங்க வசனங்களால குத்திருக்காரு. விவாதமேடையைக் கலாய்க்கும் ஒரு சீன் சூப்பர்.

மொத்தத்தில் தொடரி கண்டிப்பா பாக்கலாம். தனுஷூக்கு ஒரு நல்ல படம்னு சொல்றத விட ப்ரபு சாலமனுக்கு ஒரு நல்ல படம். 


Friday, September 9, 2016

இருமுகன் – HARRIS’S SHOW!!!


Share/Bookmark
ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் ஒரு வட்டம் இருக்கு. அதுவும் அவங்களா போட்டுக்குறது. அவரோட படம்னா இப்டித்தான் இருக்கும்னு மக்கள் மனசுல பதிய வைக்கிற மாதிரியான வட்டத்த ஹீரோக்களோட ஆரம்ப கால படங்கள் போட்டு விட்டுருது. அதுக்கப்புறம் மக்களோட எதிர்பார்ப்பும் அதே வட்டத்துக்குள்ளயே இருக்க, பின்னால அந்த ஹீரோவே வட்டத்த விட்டு வெளில வரனும்னாலும் முடியாது. விக்ரம பொறுத்த வரையில் அந்த வட்டம் கொஞ்சம் பெருசு. அவரோட ரீ எண்ட்ரீக்கு பிறகு அவர் கொடுத்த படங்கள் மூலமா அவர கம்ளீட் ஆக்‌ஷன் மசாலா ஹீரோவாகவும் நம்மால ஏத்துக்க முடியும். கதையோட ஒன்றி நடிக்கிற சாமான்ய நடிகனாகவும் ஏத்துக்க முடியும்.

தமிழ் சினிமாவப் பொறுத்த அளவு பாவப்பட்ட ஒரு ஹீரோன்னா அது விக்ரம்தான். போக்கிரி படத்துல வடிவேலுவ பாத்து “இவன நீங்க கொண்டு போய் ஒரு ரெண்டாயிரம் லிட்டர் எடுத்துக்குங்க. அப்புறம் நாங்க கொண்டு போய் ஒரு ரெண்டாயிரம் லிட்டர் எடுத்துக்குறோம்”ன்னு சொல்ற மாதிரி, இவன நீங்க ரெண்டு வருஷம் யூஸ் பன்னிக்குங்க. நான் ரெண்டு வருஷம் யூஸ் பன்னிக்கிறேன்னு தமிழ் சினிமா இயக்குனர்கள் அவங்களோட வித்தையை இறக்குறதுக்கு இவரத்தான் கருவியா பயன்படுத்திக்கிட்டாங்க. விக்ரம் செஞ்ச தப்பெல்லாம் கதைக்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராக இருந்தது மட்டும் தான்.

என்னதான் மாத்தி மாத்தி கஷ்டப்பட்டாலும் கடைசில “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” ன்னு அதையும் அவரோட ஃப்ளாப் லிஸ்டுல சேத்துருவாய்ங்க. கடைசியா இவரு ஒரு க்ளீன் ஹிட் அடிச்சி பல வருஷம் ஆச்சு. எனக்குத் தெரிஞ்சி சாமி தான் கடைசின்னு நினைக்கிறேன். அந்நியன் கூட நிறைய பேருக்கு திருப்தியைத் தரலைன்னு தான் சொல்லனும். இவரு கஷ்டப்பட்டு கெட்டப்பெல்லாம் மாத்தி நடிச்சி ஒரு ஃப்ளாப் குடுத்துட்டு அடுத்து கொஞ்சம் relaxed ah ஒரு நார்மல் படம் நடிப்பாரு. ஆனா அதுவும் டஸ் ஆயிரும். அந்நியனுக்கு அப்புறம் மஜா, ஐ க்கு அப்புறம் பத்து என்றதுக்குள்ளன்னு காணாமப் போன படங்கள் எத்தனையோ.

அப்படி இருக்க இப்ப வந்திருக்க இந்த இருமுகன் எந்த category? கமர்ஷியல் Aspects உம் இருக்கனும் அதே மாதிரி விக்ரம்ங்குற ட்ரேட் மார்க்கும் படத்துல இருக்கனும்ங்குறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தான் இருமுகன்னு சொல்லலாம். படத்தின் சுவாரஸ்யங்கள் எதையும் இங்க போட்டு உடைக்கப்போவதில்லை என்பதால் பயப்படாம தொடர்ந்து படிக்கலாம்.

என்னை பொறுத்த வரை கடந்த சில ஆண்டுகள்ல வெளிவந்த விக்ரம் படங்கள்ல பெஸ்டு இருமுகன் தான். எந்தக் காட்சியுமே அருக்கல, கடுப்பேத்தல. ஒரு சில சுமார் மற்றும் predictable காட்சிகளைத் தவிற மற்றபடி படத்துல குறைன்னு எதுவும் இல்ல.

கதையெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட நாடாவ கொஞ்சம் வித்யாசமா சொருகிருக்காங்க. மலேசியாவுல இந்தியன் எம்பஸி விநோதமான முறையில தாக்கப்பட, நாலு வருஷத்துக்கு முன்னால சஸ்பெண்ட் செய்யப்பட்ட RAW ஏஜெண்ட் விக்ரம்ம மறுபடியும் அந்த கேஸ விசாரிக்கிறதுக்காக கூட்டிட்டு வர்றாங்க.

விக்ரம் ட்யூட்டில இல்லாததால, ஆஃபீசர் நித்யாமேனனுக்கு அஸிஸ்டண்டுன்னு சொல்லி ரெண்டு பேரயும் மலேசியாவுக்கு இன்வெஸ்டிகேஷனுக்காக அனுப்பி வைக்கிறாங்க. ஆஃபீசர் நித்யா மேனன்னு சொன்னதும் ”யா யா” படத்துல டொப்பி மூக்கிய பாத்து சந்தானம் “டைனிங் டேபிள் ஹைட்டுல இருக்க உன்னையெல்லாம் எப்புடி போலீஸ் வேலைக்கு எடுத்தாங்க” ன்னு சொல்ற டயலாக் உங்க மனசுல வந்து போச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

அப்புறம் இன்வெஸ்டிகேஷங்குற பேர்ல நாலு பேர விசாரிச்சி வில்லன நெருங்குனா, அந்த வில்லன்  யாருன்னு ட்ரெயிலர் பாத்த எல்லாருக்குமே தெரியும். வில்லன பாத்தப்புறம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வித்தைய இறக்க, கடைசில எப்புடியும் தர்மம்தான் வெல்லும்னு வாழ்க்கையில ஒரே ஒரு தமிழ்ப்படம் பார்த்தவனுக்கு கூடத் தெரியும்.

படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் ரெண்டு விஷயம். ஒண்ணு R.D.ராஜ சேகரோட cinematography. சிறப்பா இருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமும் பயங்கர ரிச்சா இருக்கு. மலேசியாவ செமையா காமிச்சிருக்காங்க. செம கலர்ஃபுல்லா இருக்கு. ”ஹெலெனா” பாட்டெல்லாம் விஷூவலா ரொம்ப நல்லா இருக்கு. ஆனா மீசையில்லாத விக்ரம்-நயந்தாரா ஜோடிதான் சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன் மாதிரி இருந்துச்சி.

படத்துக்கு இன்னொரு ப்ளஸ் இன்னும் சொல்லப்போனா இன்னொரு ஹீரோன்னு கூட ஹாரிஸ் ஜெயராஜ சொல்லலாம். என்னடா ஒருகாலத்துல கழுவி கழுவி ஊத்துனவன் இப்படி ஏத்தி விடுறானேன்னு நினைக்க வேணாம். உண்மையிலயே BGM நல்லா இருக்கு. பாட்டு ஆல்பத்துல ரிலீஸ் பன்ன அதே மியூசிக் தான். ஆன தியேட்டர் சவுண்ட் எஃபெக்ட்டுக்கு  செம்மையா இருந்துச்சி. அதுவும் ”இருமுகன் சேட்டை” பாட்டு ஆரம்பிக்கிறப்போ ஒரு செகண்ட் புல்லரிச்சிருச்சி. BGM க்காகவே இன்னொருக்கா போகலாமான்னு வேற யோசிச்சிட்டு இருக்கேன்.

ஆனந்த் ஷங்கரோட திரைக்கதை இயக்கம் நல்லாவே இருக்கு. எங்கயுமே படம் ரொம்ப drag ஆகவும் இல்ல ரொம்ப போர் அடிக்கவும் இல்லை. "LOVE" விக்ரமோட மூஞ்சிய க்ளோஸ் அப்ல காமிக்கும்போது மட்டும் லைட்டா வாமிட் வர்ற ஃபீல் வந்துட்டு போச்சே தவிற மத்தபடி எதுவும் இல்லை.

காஸ்டிங்க்ல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம். குறிப்பா தம்பி ராமைய்யா கேரக்டருக்கும், கருணாகரன் கேரக்டருக்கும் வேற யாரையாவது போட்டுருக்கலாம். தம்பி ராமைய்யா காமெடி ரோல்ங்குறதுக்காக மலேசியா போலீஸ் ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டும் கும்கில பயந்து சாகுறது மாதிரியே இதுலயும் நடிக்க வச்சிருக்கது சுத்தமா அந்த கேரக்டரோடவே ஒட்டல. ஆனாலும் ஒரு சில இடங்கள்ல லேசா சிரிப்ப வரவழைக்கிறாரு. கருணாகரன் கேரக்டரும் அப்டித்தான். சீரியஸா யாரையோ எதிர்பாத்தா அங்க கருணாகரன் நின்னுகிட்டு இருக்காப்ள.

ஒரு சில சீரியஸ் காமெடிகளும் அங்கங்க இருக்கு. வாக்கி டாக்கிய வச்சி ரெண்டு மூணு கிலோமீட்டருக்கு மேல பேசமுடியாது. ஆனா விக்ரம்ன்ஹே கீழருந்து ஃப்ளைட்டுல பறக்குறவர்கிட்ட வாக்கில பேசுறாப்டி. இன்ஹேலர்ல டைமர் ஓடுறது சரி. அதுக்கேத்த மாதிரி மனுஷ உடம்பும் கரெக்ட்டா 5 நிமிஷத்துல ப்ரோகிராம் பன்ன மாதிரி respond பன்றது காமெடியா இருந்துச்சி. அதுவும் அந்த சமயத்துல இன்ஹேலர் யூஸ் பன்ன கேரக்டர்கள் திரும்பும்போது கூட எதோ ரோபோ திரும்புற மாதிரியான மியூசிக் குடுக்குறாய்ங்க. லாஜிக் ஓட்டைகள் ஏராளம். ஆனா இது லாஜிக் பார்க்க வேண்டிய படம் இல்லை. அதனால அதப்பத்தி ரொம்ப விளாவாரியா இறங்கி அலசத் தேவையில்லை.

விக்ரம் வழக்கம்போல மேக்கப் போடுவதற்கு ஆறு மணி நேரம் செலவிட்டார். சாப்பிடாமால் மேக்கப் போட்டார்ன்னு நிறைய பேர் விக்ரமோட உழைப்ப காரணமா காட்டி படத்த சப்போர்ட் பன்ன கிளம்புவாங்க. ஆனா உண்மையிலயே படத்த காப்பாத்துறது கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு லேடி மாதிரி நடிச்ச விக்ரம் இல்லை. சாதாரண மேக்கப்ல தாடியோட RAW ஏஜெண்ட்டா வர்ற விக்ரம் தான். ஆனா வில்லன் விக்ரம் கேரக்டர்ல விக்ரம் நடிக்காம வேற யாராவது ஒரு பெரிய நடிகர் நடிச்சிருந்தா படம் வேற லெவல்ல இருந்துருக்கும்.

விக்ரமைப் பொறுத்த வரைக்கும் அவருக்கு காமெடி சுத்தமா வராது. ஆக்சன் நல்லா வரும். விக்ரம் படங்கள்ல ஆக்‌ஷன் காட்சிகள் தவிர்த்து மற்ற சமயங்கள்ல திரையில் காட்சிகளை நகர்த்துரது ரொம்ப கஷ்டம். அதனாலதான் ஒரு நல்ல காமெடியனப் போட்டு, காமெடியும், விக்ரம வச்சி நல்ல ஆக்‌ஷன் ப்ளாக்கும் கலந்து கொடுக்கும்போது படம் பிச்சிக்கிட்டு போகும். இதத்தான் ஒருகாலத்துல ஹரியும், தரணியும் செஞ்சாங்க. அந்த காம்போசிஷன் மிஸ் ஆனபிறகுதான் விக்ரமுக்கு வெற்றியே ரொம்ப தூரமா போயிருச்சி.

இந்தபடத்துல கிட்டத்தட்ட விக்ரமுக்கான ஆக்‌ஷன் ப்ளாக்க கரெக்ட்டா குடுத்துருக்காங்க. ஆனா சரியான காமெடியனும் காமெடி ட்ராக்கும்தான் அமையல.

ஆனாலும் பெருசா ஒண்ணும் மோசம் போயிடல. வழக்கம்போல இணைய மக்கள் அடித்து விடுறது மாதிரி படம் மொக்கையெல்லாம் இல்லை.  கண்டிப்பா சமீபத்துல வந்த விகரம் படங்கள்ல விஷூவல், மியூசிக், ஆக்‌ஷன்னு எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட். கண்டிப்பா பாக்கலாம். நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டர்ல பாத்தீங்கன்னா இன்னும் சிறப்பு. 
Wednesday, September 7, 2016

நம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…!!!


Share/Bookmark
ரெண்டு நாளுக்கு முன்னால facebook ல ஒரு பிரபலம் போன வாரம் சமீபத்துல சசிகுமார் நடிப்புல ரிலீஸான கிடாரிங்குற படத்துக்கு விமர்சனம் எழுதி அதுல நிறைய புலம்பிருந்தாரு. அதுக்கு ஒருத்தர்
“என்ன சார்.. நீங்க போய் இந்தப் படம்லாம் பாக்கலாமா? நீங்க பாக்குற மாதிரி இன்னொரு படம் வந்துருக்கேன்னு இன்னொரு படத்து பேர சொல்லி, அத விட்டுட்டு இந்த பாடாதி படத்துக்கெல்லாம் ஏன் சார் போனீங்க?” ன்னு கமெண்ட் போட்டுருக்கார்.

அதுக்கு நம்ம பிரபலம் “என்ன சார் பன்றது பொது வாழ்க்கைன்னு வந்துட்டதால இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போக வேண்டியிருக்கு” ன்னு ரிப்ளை பன்னிருந்தாரு.

எனக்கு உடனே   “அதாவது சார் இங்கிலீஸ் பேப்பர் தான் படிப்பாரு… பீட்சா பர்க்கர் தான் சாப்புடுவாரு” ந்ங்குற சந்தானம் வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.

அவரு மட்டும் இல்லை. அவர மாதிரி இன்னும் நிறைய பேரு இந்த மாதிரிதான் சுத்துறாய்ங்க. தமிழ்ப்படங்களை பாக்குறதே ஒரு பாவமாவும், வெளில சொல்ல கூச்சப்படுற விஷயமாவும்தான் சித்தரிக்கிறாய்ங்க. இன்னும் சில பேரு சில படங்களை பாத்தேன்னு சொல்றதுக்கு “அய்யய்யோ… என்னை ஃப்ரண்ட்ஸ் கம்ப்பல் பன்னி கூப்டதால இந்தப் படத்துக்கு வந்தேன்… இல்லைன்னா வந்தே இருக்கமாட்டேன்” ந்ங்குற பில்ட் அப்போட ஆரம்பிக்கிறத நிறைய தடவ பாத்துருக்கேன்.

இது எப்டின்னா, நம்ம பெற்றோர் ஏழைங்குறதாலயும், கல்வி அறிவு இல்லாதவங்கங்குறதாலயும் மத்தவங்ககிட்ட  “என்ன சார் பன்றது… இவங்க என்னோட அப்பா அம்மாவா இருக்க தகுதியே இல்லாதவங்க.. ஆனா அப்பா அம்மா வேணுமேங்குறதுக்காக என்னோட கெரகம் இவங்கள அப்பா அம்மான்னு சொல்லிகிட்டு இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு.

நாப்பது அம்பது இங்க்லீஷ் படங்களையும் பத்து பதினைஞ்சி கொரியா படங்களையும் பாத்துட்டு இவய்ங்க குடுக்குற அலும்பு இருக்கே.. ஆத்தாடி.. பாருங்க… எல்லா மொழிலயும் பாருங்க… நல்ல படங்களை ரசிங்க.  ஆனா தமிழ்லயும் அதே மாதிரி படம் எடுக்கனும்னு ஆசைப்படுறீங்க. மத்தவய்ங்கல்லாம் அவன் அவனோட ஒரிஜினல் ஸ்டைல்ல படம் எடுக்குறாய்ங்க.

அதே மாதிரிதான் நம்மாளுகளும். நம்ம சினிமாவுக்குன்னு ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கு. நம்ம ஆடியன்ஸுக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு. அதத்தான் நம்மாளுங்க எடுக்குறாய்ங்க. அவய்ங்க எடுக்குற படம் நல்லாருக்கு நல்லா இல்லைங்குறது வேற விஷயம். ஆனா நீங்க நாலு கொரியன் படம் பாத்துட்டீங்கங்குறதுக்காக “Something fundamentally wrong with our indian cinema” ன்னு ஆரம்பிச்சிட்டீங்க.

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால வேலைக்காக சில மாதம் வெளிநாடு பொய்ட்டு வந்தேன். அப்ப ரொம்ப நாள் கழிச்சி என்ன பாத்த என்னோட நண்பன் ஒருத்தன் “ என்ன மாப்ள.. உன்னப் பாத்தா வெளிநாடு பொய்ட்டு வந்தவன் மாதிரியே இல்லையே” ன்னான். எனக்கு ஒண்ணுமே பிரியல.

அவன் என்கிட்ட என்ன எதிர்பார்த்தான்னும் தெரியல. வெளிநாட்டுக்கு பொய்ட்டு வந்துட்டா எப்ப பாத்தாலும் பொது இடங்கள்ல அவனுங்கள மாதிரியே ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஒரு கேன்வாஷ் ஷூவ போட்டுக்கிட்டு கண்ணாடி போட்டுக்கிட்டு சுத்தனும்னு நினைச்சானான்னு தெரியல. ஊர்ப்பக்கம் இருக்கவங்க  வெளிநாட்டுலருந்து வந்தாலே வெற்றிக்கொடி கட்டு வடிவேலு மாதிரி தனியா தெரிவாய்ங்க. அவய்ங்க கட்டுற கைலி டிசைன்லருந்து அடிக்கிற பெர்ஃபியூம் மொதக்கொண்டு தனியாத் தெரியும். அப்டி எதுவும் எதிர்பாத்தானான்னும் தெரியல.

ஒரு மூணு மாத ஆறு மாத வெளிநாட்டு பயணம் நம்மோட அடிப்படையவே மறக்க வச்சி வேற மாதிரி மாத்துதுன்னாதான் something fundamentally wrong. நாம நம்மளா இருக்கதுல என்ன ப்ரச்சனை? அந்த ஊர்க்காரய்ங்க காலையிலயே பர்க்கர் சாப்புறாய்ங்க.. நம்மூர்ல வெறும் பழைய சோறுதான் இருக்குன்னு பொலம்புற கதை தான் இதெல்லாம்.

உண்மைய சொல்லப்போனா இப்பல்லாம் B, C செண்டர்கள்ல மக்கள் மத்தியில தியேட்டருக்குப் போய் சினிமா பாக்குற ஆர்வம் குறைஞ்சதே இந்த மாதிரி அந்திய மொழி சினிமாவோட ஆதிக்கம் நம்ம சினிமாவுல நுழைஞ்சதுனாலதான். இளம் இயக்குனர்கள், அடுத்த கட்ட சினிமான்னு ஆரம்பிக்கிற பல பேரு இந்த மாதிரி அந்நிய மொழிப் படங்களோட தாக்கத்தால நம்ம சினிமாவயும் மாத்தனும்னு நினைச்சி புது மாதிரியா படம் எடுக்குறேன்னு எடுத்து மக்களோட ஆர்வத்த குறைக்கிற வேலையத்தான் பாத்துட்டு இருக்காய்ங்க. ஒரு சாரரை அவங்க திருப்தி படுத்துனாலும் பெரும்பாலான மக்களுக்கு அது ஏமாற்றத்தையே தருது.

நம்ம மொழியில எடுக்கப்படுற படங்களை அதே ஸ்டைல்ல அப்படியே ஏத்துக்குறதுல நமக்கு என்ன தயக்கம்? அதுல என்ன வெக்கம்? நாலு பேரு சுத்தி ஏத்திவிடுறதுக்கு இருந்தாலே தந்நிலை மறந்து வானத்திலிருந்து குதிச்சதப்போல அதிகப்பிரசங்கித்தனங்களைக் காட்டும் கூட்டம் இங்க ஏராளம். ஆரம்பத்துல டீசண்ட்ட இருந்துட்டு கொஞ்சம் ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டாலே, சமூக வலைத்தளங்கள்னு கூட பாக்காம கெட்ட வார்த்தைகளை நேரடியா பதிவிடும் தைரியம் பலருக்கு வந்துருது.

பத்தாயிரம் பேர் ஃபாலோ பன்றாங்கங்குறதுக்காக இவங்களோட behavior eh இப்படி மாறும் போது, பல லட்சம் ரசிகர்களோட, இருபது முப்பது கோடி பிஸினஸ் பன்ற படங்களைக் கொடுக்கும் சிவகார்த்திகேயர்கள் சீன் போடுவதில் எந்தத் தவறும் இல்லைன்னே தோணுது.

                             

Friday, September 2, 2016

JANATHA GARAGE!!!


Share/Bookmark
ரெண்டு வெவ்வேற மொழி ஹீரோக்கள போட்டு படம் எடுத்து ரெண்டு மொழியிலயுமே நேரடிப்படமா ரிலீஸ் பன்னுற வழக்கம் தொண்றுதொட்டு இருந்து வர்றதுதான். அதுவும் தெலுங்குல சமீபகாலமா இந்த மாதிரி வேற்றுமொழி ஹீரோவ வச்சி பன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்டுங்க கொஞ்சம் அதிகமாயிருச்சின்னு தான் சொல்லனும். அல்லு அர்ஜூன் –உபேந்திரா காம்பினேஷன்ல S/o சத்யமூர்த்தி, கார்த்தி- நாகர்ஜூன காம்பினேஷன்ல ஊப்பிரி இப்ப மோகன்லால்-ஜூனியர் NTR காம்பினேஷன்ல இந்த ஜனதா கேரேஜ்.

மோகன்லால் தலைமையில ஒரு ஏழு பேர் கொண்ட குழு ஜனதா கேரேஜ்ங்குற மெக்கானிக் ஷாப்ப நடத்திகிட்டு வர்றாங்க. கேரேஜ்ஜ நடத்துறது மட்டும் இல்லாம நாயகன் வேலு நாயக்கர், தளபதி சூர்யா-தேவா மாதிரி சட்டத்தால் கைவிடப்பட்ட மக்களுக்கு அடிதடி மூலம் நீதி வாங்கித் தரும் வேலையைப் பார்க்குறாங்க.. மோகன்லால் தம்பி ரஹ்மானுக்கு கல்யாணம் ஆகி ஒரு சின்ன குழந்தை இருக்கு. மோகன்லால் ஊரு ஃபுல்லா இழுத்த உரண்டையால அவரோட தம்பியும், தம்பியோட மனைவியும் எதிரிகளால கொல்லப்படுறாங்க. அதற்கு எல்லாரும் மோகன்லாலை காரணம் காட்ட, தம்பி குழந்தையை, அந்த குழந்தையோட அம்மா வழி மாமன் சுரேஷ்கிட்ட குடுத்து இனிமே என்னோட நிழல் கூட இந்த குழந்தை மேல படாது. நீங்களே இத வளர்த்துங்குங்கன்னு கொடுத்து அனுப்பிட்டு வழக்கம்போல தப்பை தட்டி கேக்குற வேலைய பாத்துக்கிட்டு இருக்காரு.

அந்தக் குழந்தைதான் நம்ம ஜூனியர் NTR. எப்படி மோகன்லாலுக்கு மக்களை காப்பாத்துறது புடிக்குமோ அதே மாதிரி NTR க்கு இயற்கையை காப்பாத்துறது புடிக்கும். Pollution பன்னக்கூடாது, மரத்த வெட்டக்கூடாது, மலைய நோண்டக்கூடாதுன்னு கிட்டத்தட்ட அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரூல்ஸ் பேசிக்கிட்டு திரியிறவரு. மாமன் பொண்ணு சமந்தாவையே லவ்வுறாரு.

பொதுவா தெலுங்கு படங்கள்ல சமந்தாவ ஹீரோயினா போட்டாலே, கண்டிப்பா அதவிட அழகான ஒரு பொண்ண அதுக்கு அள்ளக்கையா போடுவாய்ங்க.  என்ன கேட்டீங்க? இந்தப் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானான்னு தானே? தெலுங்குல ஒரு ஹீரோயின்லாம் வச்சி எடுத்தா அவய்ங்க லட்சியத்துக்கு இழுக்கு வந்துடாதுங்களா… யூரியா மூட்டைக்கு லேடீஸ் ட்ரஸ் போட்டு விட்ட மாதிரி எதோ ஒண்ணு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு இருந்துச்சி. யாருன்னு பாத்தா.. அட நம்ம நித்யா மேனன். அதுவும் ஜுனியர் NTR உம் நித்யா மேனனும் ஒண்ணா ஸ்க்ரீன்ல நிக்கும்போது யாரு ஜுனியர் NTR  யாரு நித்யா மேனன்னு கண்டுபுடிக்கிறதே பெரும்பாடா இருக்கு. என்னம்மா இது சரியா வேகாத டைனோசர் முட்டை மாதிரி.

மோகன்லாலுக்கு ஒரு ஆர்வக்கோளாரு பையன். மோகன்லால் ஒரு ஆக்ஸிடெண்ட்ல சிக்கி உயிர் பிழைக்க, டாக்டர் ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்து எதும் பன்னக்கூடாதுன்னு சொல்றாரு. மோகன்லால் தனக்கு அப்புறம் அவர் செஞ்சிக்கிட்டு இருந்த வேலையை அவர் பையன செய்ய சொல்லி கேக்குறாரு. ஆனா அவன் “போயா யோவ் போயா.. பெரிய அம்பானி இவரு.. இவரு ரிட்டையர்ட் ஆன உடனே அவர் பதவிய என்கிட்ட் குடுக்குறாரு. என்னால இந்த கேரேஜ்ல நட்டு போல்ட்டையெல்லாம் திருவிக்கிட்டு இருக்க முடியாது” ன்னு சொல்லி மறுத்துடுறான்.

அந்த சமயத்துல இயற்கைய காப்பாத்த போராடுற NTR ஹைதராபாத்துக்கு ஒரு ப்ராஜெக்ட்காக வந்து, குவாரில மலைய குடைஞ்சி கல்லு எடுக்குறவய்ங்கள பின்னி பெடல் எடுக்குறாரு. இதக் கேட்டு இம்ப்ரஸ் ஆன மோகன்லால் “தம்பி  மரங்கள காப்பாத்துறதோட கொஞ்ச மனுஷங்களையும் காப்பாத்தனும்ப்பா.. எங்க கேங்ல சேந்துக்குறியா”ன்னு கேக்க அவரு சேர்ந்துடுறாரு. மோகன்லால்தான் அவர் பெரியப்பான்னு தெரியாமையே.


சூர்யாவும் தேவாவும் ஒண்ணு சேர்ந்தாச்சு. அப்புறம் என்ன.. ஜனதா கேரேஜ் NTR தலைமையில பழைய மாதிரி வேலைகள ஆரம்பிக்க, மோகன்லால் மகனே வில்லன்களோட சேர்ந்துகிட்டு ஜனதா கேரேஜ கலைக்க முயல, நம்ம கேங் என்ன பன்னாங்கங்குறதான் க்ளைமாக்ஸ்.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ்ஸும் சரி மைனஸூம் சரி. வசனங்கள் தான். நாட்டமை படத்துல சரத் குமார் கூட இவ்வளவு வசனம் பேசலப்பா. ஆனா NTR பேசிக்கிட்டே இருக்காப்ள. வசங்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா ஒரு அளவு வேணாமாய்யா.

இயக்குனர் கொரட்டலா சிவாவோட முந்தைய படம் ஸ்ரீமந்துடுவோட அதே ஃபார்முலாதான் இந்தப் படத்துக்கும். ரொம்ப கூலா ஆரம்பிச்சி சமூக அக்கரையோட ஆக்‌ஷனை கலந்து கொடுக்கப்பட்ட எண்டர்டைனர். ஆனா அந்தப் படத்துல இருந்த ஒரு முழுமையோ அல்லது காட்சிகளோட் அழுத்தமோ இதுல அவ்வளவா இல்லை.

ஏற்கனவே நிறைய படஙக்ள்ல வந்துட்டதாலயா என்னனு தெரியல ட்விஸ்டெல்லாம் எதுவும் வைக்கல. அதுக்கும்மேல NTR தான் தன்னோட தம்பி பையன்னு மோகன்லாலுக்கு தெரியிற சீனையும் ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. அதே மாதிரி NTR , சமந்தா வெளில எப்பவும் சண்டை போடுற மாதிரி நடிச்சிட்டே, யாருக்கும் தெரியாம லவ் பன்னிட்டு இருப்பாங்க. அத ரிவீல் பன்ற சீனையும் இன்னும் நல்லா எடுத்துருக்கலாம். ஆனா அதுவும் ரொம்ப சாதாரணம இருக்கு.

அவசர அவசராமா பன்னதாலயே என்னனு தெரியல நிறைய இடங்கள்ல ஸ்கிர்ப்ட் கம்ப்ளீட் ஆகாம இருக்கு. சம்ந்தாவ பாதிலயே அத்து விட்டாய்ங்க. நித்யா  மேனன் ஏன் வருதுண்ணே தெரியல. வில்லன்களுக்கு என்ன பன்றதுன்னே தெரியாம சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னவோ பன்னிட்டு இருக்கானுங்க.

ஆனா படம் கொஞ்சம் கூட போர் அடிக்கலங்குறது உண்மை. NTR வர வர செம டீசண்ட் ஆயிட்டாப்ள. முன்னடில்லாம் கொடூரத்துக்குன்னு பஞ்ச் டயலாக் பேசி கொல்லுவாப்ள. இப்பல்லாம் ஆளும் சரி அவர் தேர்ந்தெடுக்குற கேரக்டரும் சரி. ரொம்பவே நல்லாருக்கு.

படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் மோகன்லால். ரொம்ப டீசண்ட்டான கேரக்டர். ஜில்லாவுல ஆக்கிவிட்டமாதிரி கூப்டு வந்து மொக்கையாக்கி விடாம நல்லாவவே பன்னிருக்காங்க. செகண்ட் ஹஃப்ல லாம் வசனமே இல்ல. ஒண்லி ரியாக்‌ஷன் தான். ஆளு பின்னிருக்காப்ள. 

DSP வழக்குத்துக்கு மாறா BGM நல்லா பன்னிருக்காரு. வழக்கம்போல ஒரு 3 பாட்டு சூப்பரா போட்டுருக்காரு. “Jai ho Janatha” வும், “Apple Beauty” யும் சிறப்பு. காஜல் அகர்வால் ஒரு ஐடம் சாங்குக்கு வந்து chikne chameli காத்ரினா கைஃபுக்கே சவால் விட்டு ரொம்ப ஓப்பனா ஆடிருக்காங்க. ஸ்டண்ட்ஸ் எல்லாம் சூப்பர். செகண்ட் ஹஃப்ல கசகசன்னு நிறைய ஃபைட்டு.

மொத்தத்துல படம் ஸ்ரீமந்துடு அளவுக்கு சிறப்பா இல்லாட்டியும் கண்டிப்பா ஒரு தடவ பாக்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னர் தான். LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...