Friday, April 25, 2014

ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார் - FACEBOOK BOYS!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கோ, தனிப்படா எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.  ரொம்ப ரொம்ப நல்லங்க சில பேரு நம்மூர்ல இருந்தாங்கன்னா அது நம்ம விக்ரமன் படத்து ஹீரோக்கள் தான். "அநியாயத்தை கண்டால் பொங்குறது" "அடி மனச டச் பண்றது", "அடுத்தவங்களுக்காக அடி வாங்குறது"  "எவ்வளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கிறது" இந்த மாதிரியான வேலைகள்லாம் செஞ்சி  படம் பாக்குறவிங்கள 'அவ்வளவு நல்லவனாடா நீயி"ன்னு ஆச்சர்யப்பட வைக்கிற டெக்னிகெல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா இப்போ அவிங்களையெல்லாம் மிஞ்சிடுற அளவுக்கு சில  நல்லவர்கள் நம்ம  சமூக வலைத்தளங்கள்ல உலவிக்கிட்டு இருக்காய்ங்க. அதாவது இவிங்களுக்கு மட்டும் தான் மனித நேயம், நாட்டுப்பற்று, பண்பாடு, எறுமைமாடுன்னு அத்தனையும் இருக்க மாதிரியும்,   சார் தமிழ்நாட்டு மானத்த நீங்க தான் காப்பாத்தனும்னு அனைவரும் இவனுங்கள கேட்டுக்கிட்ட மாதிரியும் மனசுக்குள்ள நெனைச்சிகிட்டு  போடுறானுங்க பாருங்க ஒரு படம்.. நம்மள நாமலே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி ஊசிபோட்டுக்க வேண்டியது தான்.

மொதல்ல இந்த எலெக்சன் வந்தாலும் வந்துச்சி.. மைக்செட் போட்டு ப்ரச்சாரம் பண்றவனுங்க கூட பரவால்ல போலருக்கு. "ஓட்டு போடுவது நம் உரிமை" "நண்பர்களே மறக்காமல் வாக்களியுங்கள்" "நா ஓட்டு போடப்போறேன் அப்ப நீங்க?" டேய் என்னடா கல்யான் ஜூவல்லர்ஸ் பிரபு மாதிரி ஏண்டா ஹைபிட்ச்ல கத்திகிட்டு இருக்கீங்க..மொதல்ல நீங்க ஃபேஸ்புக்க விட்டுட்டு எழுந்து போய் ஓட்டு இருந்தா போடுங்கடா.. என்னமோ எல்லாரும் நா ஓட்டு போட மாட்டேன் நா ஓட்டு போடமாட்டேன்னு மல்லுகட்டிகிட்டு இருக்க மாதிரியும் இவனுங்கதான் அத அத தூக்கி நிறுத்தி எல்லாரையும் ஓட்டு போட வைக்கிற மாதிரியும் மனசுக்குள்ள ஒரு நெனைப்பு போல. உங்கள மாதிரி தாண்டா மத்தவைங்களும்.. உங்க பொறுப்ப காட்டுறதா நெனைச்சி மத்தவன் பருப்பல்லாம் எடுத்துருவீங்க போலருக்கு. இந்த வருசம் ஓட்டுப்பதிவு கொஞ்சம் அதிகமா இருந்துட்டா இவனுங்களாலதான்னு சொன்னாலும் சொல்லுவாய்ங்க. கம்பெனி லீவு விட்ட ஆட்டோமேட்டிக்கா எல்லாரும் ஓட்டு போடப்போறாய்ங்க.

ஃபேஸ்புக்ல இருக்கவிங்களுக்கு தான் அரசியல் அறிவு அருவியா வழிஞ்சி ஊத்துது. மோடிக்கு நாட்டை  ஆள தகுதி இல்லை. மன்மோகன் சிங்கிற்கு எதுவுமே தெரியாது. ராகுல் காந்தி இவர்களை விட அறிவு கம்மியான ஒரு சின்ன பையன்... அதாவது அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அடிப்படை அறிவு கூட இல்லாத மாதிரியும் இவிங்களுக்கு அறிவு அப்புடியே கொப்புளிக்கிர மாதிரியும், இவிங்க போனா ரெண்டே நாள்ல நாட்டை வல்லரசு வாஞ்சிநாதன் தென்னவனாக மாத்திடுற மாதிரியும் பேசிறாய்ங்க . ராசா
உங்களுக்கு தெரிஞ்ச அளவு விஷயமோ இல்லை உங்களுக்கு இருக்க அளவுக்கு அறிவோ அவங்களுக்கெல்லாம் இல்லைப்பா. பேசாம பொத்துனாப்ல நீங்களே பிரதமர் ஆயிடுங்க. அவிங்களுக்கு உங்க அளவுக்கு கூறு இல்லை.


அப்புறம் இன்னொரு புதுவிதமான பிரச்சாரம் ஒண்ணு கண்டுபுடிச்சி வச்சிருக்காய்ங்க... நேரடியா இந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேக்க மாட்டாய்ங்க.. "அந்த ஊழல் பண்ண அந்த கட்சிக்கா உங்கள் ஓட்டு..இல்லை இந்த ஊழல் பண்ண இந்த கட்சிக்கா உங்க ஓட்டு எனவே சிந்தித்து வாக்களியுங்கள் தோழர்களே" ன்னு போடுவாய்ங்க. அதாவது அவரு நேரடியா அவரு சப்போர்ட் பண்ற கட்சிய சொல்ல மாட்டாராம். நடுநிலையா இருக்காராம்... நாயே நீ நடுவுல இருந்தா என்ன இல்லை நட்டுகிட்டு இருந்தா என்ன.... ஒருவேளை இவரு இந்த கட்சிய சப்போர்ட் பண்றேன்னு சொன்னா ஆல் இந்தியா லெவல்ல அவரோட இமேஜ் பாதிக்கப் படுமாம். 

அப்புறம் பார்ப்பன எதிர்ப்பு... இதப் பன்னாதான் இவரு ஒரு மிகப்பெரிய போராளின்னு ஊருக்கு தெரியுமாம். இவனுங்க அவனுங்க ஜாதிக்கட்சில இருக்கலாம். அவன் சொந்தக்காரனுங்களை மட்டுமே கட்சில வச்சிக்கலாம். இவன் திமுக காரண்டா, இவன் அதிமுக காரண்டான்னு அவன் அவன் கட்சில இருக்கவனுக்கு சப்போர்ட் பண்ணலாம். ஆனா இதயே ஒரு பிராமணர் அவன் சொந்தகாரனுக்கோ இல்லை ஜாதிக்காரனுக்கோ உதவி பண்ணா அதுக்கு பேரு பார்ப்பனியம். 50 வருசமா இத சொல்லி சொல்லியே ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க. முன்னாடி சொன்னீங்க ஓக்கே. இப்போ எல்லாம் மாறியாச்சி. அவிங்களுக்கு எல்லா சலுகைங்களையும் குடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சி. ஆனாலும் எல்லா எடத்துலயும் அவங்கதான் மொதல்லை இருக்காய்ங்கன்னா அதுக்கேத்த மாதிரி படிக்கிறானுங்க. அவன் ஆளுங்களுக்கு உதவி பண்றானுங்க. முடிஞ்சா நீயும் உன் ஜாதிக்காரனுக்கு உதவி பண்ணி அவன தூக்கி விடு. அது நம்மாள பண்ண முடியாது. ஆனா அடுத்தவன் பண்றான்னு குறை மட்டும் சொல்லவேண்டியது.

அப்புறம் இந்த இயற்கைய காப்பாற்றும் நல்லவர்கள். இதுவும் அதே கதை தான். மரத்த வெட்டுறவனுங்கள கண்டா இவனுங்களுக்கு கோவம் வந்துரும். "மரத்தை வெட்டும் பாவிகள்.. இவர்களுக்கு சோறு கிடைக்காது.. நாசமாக போவர்கள்.." அது இதுன்னு திட்டுவாய்ங்க. அதாவது இயற்கை மேல இவரு அளவு கடந்த பாசம் வச்சிருக்காராம். ஏண்டா டேய் அறிவுங்குறது கொஞ்சம் கூட இருக்காதா. மரத்த வெட்டுறவன் கொண்டுபோய் அவன் வீட்டுல மட்டுமா வச்சி திங்கிறான்?  நீ வீடு கட்டுறதுக்கும் , நீ மர நாற்காலில உக்கார்றதுக்கும், நீ நியூஸ் பேப்பர் படிக்கிறதுக்கும் நீ தீப்பெட்டி யூஸ் பண்றதுக்கும் தாண்டா அவனுங்க மரத்த வெட்டுறானுங்க. இதுல சாபம் வேற. அதாவது பிரியாணி திங்கிறவனுங்க நல்லவங்க. ஆட்டை வெட்டுறவன் கெட்டவன்.
அப்புறம் இன்னொரு பெருங்காமெடி குரூப்பு இந்த மனித நேய குருப்பு. இவிங்க என்னன்னா மனித நேயத்த போற்றுரவிங்களாம். என்ன பண்ணுவாய்ங்க. எவனாவது ஒருத்தனுக்கு தூக்கு தண்டனை குடுத்துட்டா அவனை தூக்குல போடவே கூடாதுன்னு அடம் புடிப்பாய்ங்க. தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் இது மனித நேயமற்ற செயல் அது இதுன்னு பேச ஆரம்பிச்சிருவாய்க. அதே ஒருத்தன் ஒரு பெண்ணை கற்பழிச்சிட்டதா ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்குவோம். இப்பொ இவிங்க ரியாக்சன பாருங்க.. "இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நடுரோட்டுல நிக்கவச்சி அடிச்சே கொல்லனும்" ன்னு கொந்தளிப்பாய்ங்க. ஏன்னா முன்னாடி சொன்னது வேற வாயி. இது நாற  வாயி. ஏண்டா நடுரோட்டுல வச்சி அடிச்சி ஒருத்தனை கொன்னா அது தப்புல்லை. அதே கற்பழிப்பு கேசுக்கு அரசாங்கம் அவனுக்கு மரண தண்டனை குடுத்தா  அது மனித நேயமில்லாத செயலா? அதாவது அநீதிய கண்டா பொங்கவும் செய்வாங்க.. அதே குற்றவாளி உயிரை காப்பாத்தவும் செய்வாய்ங்க. இதற்குப் பேரு தான் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்.

அடுத்த குரூப்பு செண்டிமெண்ட் க்ருப்பு.. "இவருக்கு லைக் வராது" அப்டின்னு ஒரு கேப்சனோட  ஒருவர் சாக்கடை சுத்தம் செய்யும் ஃபோட்டைவ போட்டு போஸ்ட் பண்ணிருப்பாய்ங்க. அதாவது இவரு வித்யாசமானவராம். அதாவது அவரு லைக் வராதுன்னு போட்டா செண்டிமெண்ட்டா அட்டாச் ஆயி எல்லாரும் அத லைக் பண்ணுவாய்ங்களாம். ஆமா இங்க அந்த ஃபோட்டோவ ஒரு 500 பேர் லைக் போட்டா சாக்கடை அள்ளுரவருக்கு  ஒரு 50000 ரூவா பணம் போகப்போவுது பாருங்க. நேர்ல அந்த மாதிரி ஆளுங்க கூட முகம் குடுத்து பேசக் கூட தயங்குறவங்க, தங்களை நல்லவர்களா காட்டிக்கிறதுக்கு அவங்க ஃபோட்டோ தேவைப்படுது. அந்த ஃபோட்டோக்கள போடுற எத்தனை பேரு உண்மையிலயே அந்த மாதிரி ஆளுங்க கிட்ட முகம் சுழிக்காம நின்னு பேசுவீங்க?

அப்புறம் இன்னொரு கதை எல்லாரும் கேள்விப்ப்பட்டுருப்பீங்க.

ஒருத்தன் ஏர்போர்ட் பக்கத்துல நின்னு சிகரெட் குடிச்சிட்டு இருந்தானாம். அப்போ அங்க வந்த இன்னொருத்தன் அவர் கிட்ட ஒரு நாளுக்கு எத்தனை பாக்கெட் குடிப்பீங்கன்னு கேட்டாராம்

அதுக்கு சிகரெட் குடிச்சவர் "ரெண்டு பாக்கெட்" ன்னாராம்

திரும்ப அவன் "எத்தனை வருஷமா குடிக்கிறீங்க" ன்னானம்

 அவர் " 30 வருஷமா" ன்னு பதில் சொன்னாராம்

அதக்கேட்டதும் "ஏன் இந்த மாதிரி சிகரெட் குடிச்சி காச வேஸ் பண்றீங்க. இதுவரைக்கும் நீங்க குடிச்ச சிகரெட் காச சேத்து வச்சிருந்தா அங்க நிக்கிற மாதிரி ஒரு ஃப்ளைட்டே வாங்கிருக்கலாம்" ன்னு சொன்னோன்ன சிகரெட் குடிச்சவர் கேட்டாராம்

"நீங்க தான் சிகரெட் குடிக்க மாட்டிங்கல்ல.. நீங்க சேத்து வச்ச காசுல வாங்குன உங்க ஃப்ளைட் எங்க இருக்கு"ன்னு கேட்டராம்

அதுக்கு அவன் பெப்பேன்னு முழிக்க இவர் திரும்ப சொன்னாராம் "ஆனா உள்ள ரன்வேல நிக்கிறது என்னோட ஃப்ளைட்டுன்னு"

இத ஏன் இப்போ சொல்றேன்னா "சாமிக்கு பால் ஊத்துறதயும் ஒரு நடிகரோட கட் அவுட்டுக்கோ என்னிக்கோ ஒரு நாள் பால் ஊத்துறதயும் போட்டு "இந்த பாலை பசியில் வாடும் குழந்தைகளுக்கு குடுத்தா அவங்க சாப்புடுவாங்கன்னு சொல்ல வேண்டியது. சரி சார்... பால் ஊத்துறவிங்க தான் அறிவில்லாத கேனப்பயலுக. நம்ம கோயிலுக்கும்  போறதில்லை எந்த நடிகர் கட் அவுட்டுக்கும் பால் வாங்கி ஊத்துறதுமில்லை.. சரி தினம் எத்தனை ஏழைங்களுக்கு நீங்க பால் வாங்கியோ இல்லை சாப்பாடு வாங்கியோ குடுக்குறீங்க? இல்லை தெரியாம தான் கேக்குறேன் கோயிலுக்கு போறவன் புண்ணியம் கெடைக்கும்னாவது நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி குடுப்பான்... நடிகனுக்கு பால் ஊத்துறவன் படம் ரிலீசு பொறந்த நாளுன்னு எதுக்காவது ஊருக்கு தெரியனும்னாவது சில ஏழைங்களுக்கு உதவி பண்ணுவாய்ங்க. ஆனா நாம கடைசி வரைக்கும் பகுத்தறிவு செம்மலா இருந்துகிட்டு எதுவும் செய்யாம இந்த மாதிரி வெட்டி நியாயம்  பேசிகிட்டே திரிய வேண்டியது தான்.

யப்பா டேய் போதும்பா... எங்களால முடியல. நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கன்னு நாங்க எழுதி கையெழுத்து வேணாலும் போட்டுத்தர்றோம். தயவு செஞ்சி நிறுத்துங்கடா சாமி..

Wednesday, April 23, 2014

எ(க)லெக்சன்!!!


Share/Bookmark

Tuesday, April 15, 2014

RACE GURRAM- ரேஸ் குர்ரம்!!!


Share/Bookmark
மசாலா படங்கள் எடுக்குறதுல எப்பவுமே தெலுங்குல நம்மள விட ஒருபடி மேல தான் இருக்காங்கன்னு சொல்லனும். சில படங்கள்ல கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிட்டாலும், நிறைய படங்கள் பக்காவான கலவையாவே வருது.  நம்மாளுங்களுக்கு தெலுங்குன்னா கொஞ்சம் அலர்ஜி. ஏண்டான்னு கேட்டா என்னடா ஒருத்தன் நூறு பேர  அடிக்கிறானுங்க. 50 அடி ஜம்ப் பண்றானுங்க. ஜிகு ஜிகுன்னு ட்ரெஸ் போடுறானுங்க. சரி இருக்கட்டும் நம்மாளுங்க என்ன பன்றாங்க? கொஞ்சம் கம்மியா பண்றானுங்க அவ்வளவுதான் . 50 பேர அடிக்கிறானுங்க. 25 அடி ஜம்ப் பண்றானுங்க. ஒருத்தானால 100 பேர அடிக்க முடியாதுங்கறது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை ஒருத்தனால 50 பேரயும் அடிக்க முடியாதுங்குறது. ஒருத்தனால 50 அடி ஜம்ப் பண்ண முடியாதுங்கறது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை 25 அடி ஜம்ப் பண்ண முடியாதுங்கறது. இதுல என்ன அவங்க ஜாஸ்தி நம்ம கம்மி. ஹீரோயிஸம்னு வந்துட்டா ஒருத்தன் 500 பேர அடிச்சாலும் நம்பித்தான் ஆகனும். அப்பதான் நாம சரியா சினிமா பாக்குறோம்னு அர்த்தம்.

போஸ்டர் ஒட்டுன அன்னியிலிருந்தே கலவரத்த ஆரம்பிச்ச படம். அல்லு அர்ஜூன் மேல ஸ்ருதி சம்மனக்கால் போட்டு உக்காந்த மாதிரி ஒரு போஸ்டர் ரிலீஸ் ஆக மொத்த பேரும் கொந்தளிச்சிட்டாய்ங்க. "போஸ்டர கிழிங்கடா"ன்னு ஒட்டுன போஸ்டரயெல்லாம் கிழிச்சி எறிஞ்சிட்டாய்ங்க. ஏண்டா நல்லாத்தானடா இருந்துச்சி அத ஏண்டா கிழிச்சீங்க? ஒருவேளை கிழிக்கிற சாக்குல பக்கத்துல போயி நல்லா பாத்துட்டு வருவோம்னு போனாய்ங்களான்னு தெரியல. இல்லை படத்துக்கு ஹைப்ப குடுக்க இவிங்களே ஒட்டிவிட்டு இவிங்களே ஆள விட்டு கிழிக்கிறாய்ங்களான்னும் தெரியல. என்னென்னவோ புதுசு புதுசான விளம்பர டெக்கினிக்கெல்லாம் கத்து வச்சிகிட்டு எப்புடியோ படத்த ஓட்டிடுறானுங்க. சரி படம் எப்டின்னு பாப்போம்.

சின்ன வயசுலருந்தே எந்த விஷயத்துலயுமே ஒத்துப்போகாத அண்ணன் தம்பி. அண்ணன் ரொம்ப சின்சியர். நல்லா படிச்சி போலீஸ் ஆபிசர் ஆயிடுறாரு. தம்பிக்கு படிப்பு வராது. தண்ணி அடிச்சிட்டு ஊர்சுத்துர மசால பட ஹீரோக்களுக்குன்னே அளவெடுத்து செஞ்சா மாதிரியான கேரக்டர். சின்சியர் போலீஸ் ஆபீசராக நம்ம ஷாம். ஊர்சுத்துற ஜாலி தம்பியாக அல்லு அர்ஜூன். ரேஸ் குர்ரம்னு பேரு வச்சதுக்காக இண்ட்ரொடக்சன் சீன்ல குதிரைங்க கூட ஓடிவர்றாரு. அதே போல 500 படங்கள்ல நம்ம ப்ரகாஷ்ராஜ் நடிச்சி நச்சி தூக்கிபோட்ட வில்லன் கேரக்டர தாதா ப்ளஸ் அரசியல்வாதி. அச்சு மாறாம இன்னொருத்தர் பண்ணிருக்காரு. 

ஸ்ருதியோட அப்பாவா ப்ரகாஷ்ராஜ். எந்த கேரக்டர் எடுத்தாலும் சிறப்பா செஞ்சி முடிக்கிறதுல இவர விட்டா ஆளே கிடையாது. ப்ரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ருதியோட Characterization செம. ஒரே பட்டுல ஸ்ருதிய கரெக்ட்  பண்ணிட்டு ப்ரகாஷ்ராஜ் கூட காமெடி பண்ணிகிட்டு சுத்திகிட்டு இருக்கும்போது தான் வில்லன் ஷாம கொல்ல ட்ரை பண்றது தெரியிது அல்லுவுக்கு. ரத்தம் சூடாயி வில்லன பந்தாடிருறாரு. இப்பதான் ரெண்டு பேருக்கும் இடையில ரேஸ் ஆரம்பிக்குது. சரி போய் டீ சாப்டு வாங்க. அட இண்டர்வல்baa. 

ரெண்டாவது பாதில அண்ணன்கிட்ட நல்ல பேர் எடுக்க அண்ணனோட பழைய காதலிய கல்யாண மேடையிலருந்து கூட்டிகிட்டு வந்து ஷாமோட சேத்து வைக்கிறாரு அல்லு. ஜாலியா போயிக்கிட்டு இருக்க டைம்ல வில்லன் ஆஸ்பத்திரலருந்து திரும்ப வந்து மந்திரியாடுறாரு, பருப்புல உசந்தது முந்திரி... பதவில ஒசந்தது மந்திரின்னு சொல்லிட்டு அவரோட பவர வச்சி அல்லுவுக்கு ஆப்பு வைக்கிறாரு. அப்புறம் அல்லு எப்டி ப்ளான் பண்ணீ வில்லனோட சாம்ராஜ்யத்த ஒரே நாள்ல தகர்த்தெறியிறாருங்கறது க்ளைமாக்ஸ்.நா சொன்ன கதை ரொம்ப போரடிக்கிதுல்ல? ஆனா படத்துல ஒரு சீன் கூட போர் அடிக்கல. காமெடில பட்டைய கெளப்பிருக்காங்க. காமெடி ஆக்சன் செண்டிமெண்டுன்னு அத்தனையும் தேவையான அளவு தேவையான இடத்துல. ரெண்டு மணி நேரம் காமெடில காத்து அடிச்சிதுன்னு சொன்னா கடைசி அரை மணி நேரம் சூராவளி. என்னன்னு பாக்குறீங்களா? தலைவர் ப்ராம்மானந்தம் தான். கால் மணி நேரம் வந்தாலும் தெறிக்க விட்டுருக்காரு. செம்ம மாஸ். சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சிருச்சி. தலைவர் பேரு கில் பில் பாண்டே... இவருக்கு பேரு வைக்க மட்டும் தனியா ஒரு குழு இருக்கும் போல. நா இந்த படம் பாத்து முடிஞ்சப்புறம் யோசிச்சி பாத்தேன். ஒருவேள இந்த படத்த தமிழ்ல ரீமேக் பண்ணா ப்ரம்மு கேரக்டர் யாரு பண்ணுவான்னு? சத்தியமா ப்ரம்முவ ரீப்ளேஸ் பண்ண தமிழ்ல ஆள் இல்லை.

தமனுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான்னு நெனைக்கிறேன். தெலுங்குல வர்ற படங்கள் அனைத்துக்கும் இப்போ இவருதான். மேட்டர் என்னன்னா எல்லா படத்துலயுமே பாட்டு செமையா இருக்கு. இதுலயும் நாலு பாட்டு பக்கா. என்ன ஒண்ணு DSP ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி standard template சாங்ஸ்தான் போடுறாரு. ஓடுறவரைக்கும் வண்டி ஓடட்டும். நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன "கலாசலா கலாசலா " பாட்டு மாதிரி இதுல  உஷா உதூப் ஒரு பாட்டு பாடிருக்கு. செம்ம. கடந்த ரெண்டு நாள்ல ஒரு 50 தடவ அந்த பாட்டை கேட்டுட்டேன். படத்துல தான் இந்த பாட்டை பேக்ரவுண்டுல போட்டுவிட்டு கடுப்பேத்திட்டாங்க.

எல்லா பாட்டுமே படமாக்கப்பட்ட விதம் சூப்பர். செட்டெல்லாம் செம ரிச்சா தாறுமாறா இருக்கு. ஸ்ருதி  தமிழ்நாட்டை தாண்டிருச்சின்னா ரொம்ப "ஓப்பன்" டைப்பா மாறிடுது. அல்லு அர்ஜுன் செம்ம ஃபிட்.  டான்ஸ்லாம் பக்கா. ஆனா வழக்கமான அல்லு பட டான்ஸ கம்பேர் பண்ணும்போது இதுல ஸ்பெஷலா எதும்  இல்லை.


ஜூனியர் NTR க்கு ஊசரவெல்லி ங்குற மொக்கைப் படத்த எடுத்தவருதான் இந்தபடத்துக்கும் டைரக்டர். ஆனா இந்த முறை கொஞ்சம் கூட மிஸ் ஆகாம எந்த இடத்துலயும் குறை சொல்லமுடியாதபடி க்ளீன் ஹிட் அடிச்சிருக்காரு.  ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தி. கூடிய விரைவில் நம்மாளுங்க இத ரீமேக் பண்ணக் கூட வாய்ப்பிருக்கு. நேரம் கிடைச்சா கண்டிப்பா பாருங்க.  குறிப்பா தலைவர் ப்ரம்மானந்தத்தோட ஆக்சன் ப்ளாக்குக்காக. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...