ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் துவங்கும் எனத் தகவல்கள் வருகின்றன. அது உண்மையெனில் மிகவும் நல்ல முடிவு.
சில வருடங்களுக்கு முன் அதிகாலைக் காட்சி என்பது ஒரு சில நகரங்களில் அதிலும் ஒரு சில திரையரங்கத்தில் மட்டுமே நடக்கும். ஆனால் இன்று திரையிடப்படும் அத்தனை திரையரங்களிலும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிகாலைக் காட்சிகள் பார்ப்பது ஒரு பெருமையாகவும், எந்தத் திரையரங்கம் முதலில் திரையிடுகிறது என்பது ஒரு மானப் பிரச்சனையாகவும் இன்று பார்க்கப்படுகிறது.
இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு முதலில் தவறான விமர்சனங்கள் வெளியாவது இந்த அதிகாலைக் காட்சிகளால்தான்.
ஒருபுறம் முதல் நாள் முதல் காட்சி பெருமைக்கு என்று வைத்துக்கொண்டாலும், டைட்டில் கார்டு, அறிமுகக் காட்சி, இடைவேளை, க்ளைமாக்ஸ் என அனைத்தையும் பிட்டு பிட்டாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விடும் 2k கிட்ஸ்களிடமிருந்து தப்பித்து ஒரு திரைப்படத்தின் சுவார்ஸ்யத்தை முழுமையாக உணர முதல் காட்சி பார்த்துவிட முடிவு செய்பவர்களும் பலர்.
மற்றொன்று அதிகாலைக் காட்சி என்றால் படத்தையும் பார்த்துவிட்டு, அலுவலகத்திற்கும் நேரத்திற்கு சென்றுவிடலாம்.
ஒரு திரைப்படத்தை நாம் ரசிப்பதற்கு தெளிவான, அழுத்தமற்ற மனநிலை வேண்டும். அதிகாலைக் காட்சிகளில் இது அத்தனையுமே பெரும்பாலானோருக்கு இல்லாமல் போகிறது.
உதாரணத்திற்கு கபாலியின் அதிகாலைக் காட்சியைப் பார்க்க முயற்சித்தேன். டிக்கெட் எங்கும் கிடைக்கவில்லை. ரோஹினியில் மதியம் 3 மணிக் காட்சிக்கு மட்டும் இரண்டு டிக்கெட் கிடைத்தது.
மறுநாள் காலை படம் ரிலீஸ். இரவு 9 மணிக்கு நண்பர் ஒருவர், அவர் நண்பரிடம் அதிகாலைக் காட்சிக்கு டிக்கெட் இருப்பதாகவும் விருப்பப்பட்டால் செல்லலாம் எனவும் கூறி அவர் நண்பரின் நம்பரைக் கொடுத்தார். "இந்தாப் போறேன் சுசேட்டிக்கு" என உடனே அவருக்கு கால் செய்தேன்.
அவர் டிக்கெட் இருப்பை உறுதி செய்தார். ஆனால் இரு சின்ன சிக்கல். அவர் இருப்பது வில்லிவாக்கம் அருகே. அவரின் வண்டியில் ஏதோ பிரச்சனை. அதனால் தன்னை பிக்கப் செய்து கொள்ள இயலுமா என்றார். நான் இருந்தது திருவொற்றியூர். தியேட்டர் ரெட்டில்ஸ். அவர் இருந்தது வில்லிவாக்கம. இது பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டி வர்ற ரூட்டாச்சே.. முடியாதென்று கூறினால் சிரியான நேரத்திற்கு அவர் வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து சரி என்றேன்.
4 மணிக் காட்சி மற்றும் என்பதால் அதிகபட்சம் 8 மணிக்குள் வெளியே வந்துவிடலாம் என நினைத்து அலுவலகத்தில் விடுப்போ, தாமதமாக வருவேன் என்றோ கூறவில்லை. மதியம் 3 மணிக் காட்சிக்கு எடுத்த இரண்டு டிக்கெட்டுகளை நண்பருடன் வேறு ஒருவரை லிங்க் செய்து அனுப்பி விட்டு விடலாம் என நினைத்தேன்.
பொள்ளாச்சி புளியம்பட்டி தொலைவையும் 4 மணிக் காட்சியையும் கணித்து நான் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் 2:30. அதற்கு முன் குளித்துக் கிளம்ப ஒரு அரை மணி நேரம். ஆக 2 மணியிலிருந்து தூங்கவில்லை. நானே இப்படியென்றால் ஒரு மணி நேரம் முன்னதாகத் திரையரங்கிற்குச் சென்று டான்ஸ் ஆடி Behindwoods ற்கு கண்டெண்ட் கொடுப்பவர்கள் எத்தனை மணிக்கு எழுவார்கள் என்பதை யூகித்துக் கொள்ளவும்.
ஒரு வழியாக திரையரங்கையடைந்து காட்சியும் ஆரம்பித்தது. பத்து நிமிடம் தாண்டி திரையரங்கில் மயான அமைதி. எமோஸன் எமோஸன் என்று ரஞ்சித் பேட்டிகளில் இழுக்கும்போதே சுதாரித்திருக்க வேண்டும். எமோஸனைப் பிழிந்ததில் அழுதே விட்டேன். ஆமா.. விட்டுருங்க விட்டுருங்க என அழுதேன்.
படம் முடிந்து வெளியே வருவதற்கும் தலைவலி உச்சத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது. குவாட்டர்ல பெப்பரக் கலந்து ஒரு பெக்கு போடுவோமா என நினைத்தேன். "பார்ட்டில சைடிஷ் திங்கிற மூதேவி" என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கவும் அந்தப் ப்ளானைக் கைவிட்டேன்.
அந்தத் தலைவலியுடன் வீட்டிற்கு வர மணி 8:45 ஆகியிருந்தது. சரி மதியம் ரெண்டு டிக்கெட் இருக்கே அத மொதல்ல பத்தி விடுவோம் என நினைத்து நண்பன் Anantha Narayanan ற்கு கால் செய்தேன்.
"டேய்.. நா கொஞ்சம் அர்ஜெண்ட்டா ஆஃபீஸ் போகனும்டா.. ரெண்டு டிக்கெட் இருக்கு. உன் ஃப்ரண்டு யாரயாச்சும் அழச்சிட்டு பொய்ட்டு வா"
"நீ வந்தா நா வர்றேன். இல்லன்னா நா போகல"
"டேய் நா என்ன உன் லவ்வராடா.. நா இல்லாம போமாட்டியா.. உசுற வாங்காம போய்த் தொலடா"
"இல்ல நீ வந்தாப் போறேன்.. இல்லனா விடு"
" எது இல்லன்னா உடா.. 600 ரூவா டிக்கெட்ரா அது"
"சரி டிக்கெட் கிடைச்சும் நீ ரெண்டாவது தடவ வரமாட்றன்னா படம் மொக்கதான.."
"ஆத்தாடி கரெக்டா கண்டு புடிச்சிட்டானே.. மொக்கைன்னு சொன்னா இவனும் வராம தனியா போகவிட்டுருவானே" என நினைத்து அதெல்லாம் இல்லடா "தலைவர் ஸ்டைல் சூப்பர்" "மியூசிக் செம" "எமோசன் அதுக்கும் மேல" என அஜித் படத்திற்கு கூறுவது போல் பிரித்து பிரித்து சொன்னேன். சரி என்றான்.
சரி தலையும் வலிக்குது. ஆஃபீஸுக்கு லீவப் போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுக்கா ரோஹினிக்கு போய் பாத்துட்டு வருவோம் என பாஸூக்கு கால் செய்தேன்.
"சார் தலை பயங்கரமா வலிக்குது"
"ஏன் படம் பாத்ததாலயா?"
" ஏ..எது..படம் பாத்ததாலயா.. ஆமா அதுக்கென்ன இப்ப"
"சரி வருவியா வரமாட்டியா"
"இல்ல சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு முடிஞ்சா மதியம் வர்றேன்"
"அவள அவசரமா வந்து இங்க ஒண்ணும் நீ பன்னப் போறதில்ல.. இருந்துட்டு நாளைக்கே வா"
"நன்றி அய்யா"
கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடி பொள்ளாச்சியைத் தாண்டியுள்ள ரோஹினிக்குச் சென்று மீண்டும் ஒருமுறை துங்கியெழுந்து வந்தேன்.
இதெல்லாம் எதுக்காகச் சொல்றேன்னா.. அதுக்காகச் சொல்றேன்.
என்னைப் போல் படம் பார்த்துவிட்டு அலவலகம் செல்லலாம் என சில பேர். பள்ளிக்குச் செல்லலாம் எனப் பல பேர் (இது அவர்களைக் குறிக்கவில்லை)
தர்பார் முதல் காட்சிக்கு ஒரு அம்மா பையனை அதிகாலைக் காட்சிக்கு அழைத்து வந்து படம் முடிந்த பிறகு அங்கேயே பையனுக்கு தலை சீவி ஸ்கூல் பேக்குடன் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியிருந்தது. அதையெல்லாம் தாண்டி தூக்கமின்மை.
அந்த சமயத்தில் படம் சில நிமிடம் நீடித்தாலே எரிச்சல் வரும். சாதாரண மொக்கைகள் முரட்டு மொக்கைகளாகத் தெரியும். முதல் காட்சியில் நமக்கு மரண மொக்கையாகத் தெரிந்த திரைப்படம் மறுநாள் மாலை பார்ப்பவருக்கு "அவ்வளவு மோசமில்லையே" எனத்தோன்றும். ஒரு சில நாட்கள் கழித்துப் பார்த்தல் நமக்கே அப்படித்தான் தோன்றும்.
எனவே அதிகாலைக் காட்சிகளை நிறுத்துவது தமிழ்சினிமாவிற்கு நல்லது.
குறிப்பு: ஒரு வேளை ஜெயிலர் அதிகாலைக் காட்சிகள் இருந்தால் தவறாமல் எனக்கும் ஒரு டிக்கெட் உசார் செய்யவும். ஏனென்றால் மேலே எழுதியிருப்பது சரியா இல்லையா என இன்னொரு முறை சரிபார்க்க வேண்டும்.
-அதிரடிக்காரன்
#Jailer #Rajnikanth #Athiradikkaran