Showing posts with label muthusiva review. Show all posts
Showing posts with label muthusiva review. Show all posts

Monday, January 9, 2023

HIT – The second Case - அபத்தம்!!


Share/Bookmark


Strictly படம் பார்த்தவர்களுக்கு மட்டும்


ஹிட் முதல் பாகம் “Hit- The first case” eh சுமார் ரகம்தான். ஆனால் படம் வெற்றி பெற்று ஹிந்தியில் ரீமேக்கும் ஆகியுள்ளது.  (முதல் பாகத்தின் விமர்சனம் கீழே )


http://www.muthusiva.in/2020/05/forensic-hit-v1-murder-case.html?m=1

 இரண்டாம் பாகம் ஆத்வி ஷேஷ் நாயகனாக நடிக்கிறார் என்றதும் முதல் பாகத்தை விட நிச்சயம் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. சமீபகாலமாக ஆத்வி சேஷின் கதைத் தெரிவுகள் அப்படி இருந்தது.


வழக்கமான டெம்ப்ளேட் சீரியல் கில்லர் கதை.  ஆரம்பத்திலேயே மூலக்கதையுடன் ஆரம்பித்து, ஹீரோவின் கதாப்பாத்திரத்தை விளக்க ஒரு சிறிய கொலையை துரிதமாகாக் கண்டுபிடிப்பது போலக் காட்டுவது, அடுத்து அவரையே மிரள வைக்கும் கொலை என முறையான ஒரு சீரியல் கில்லர் இன்வெஸ்டிகேஷனாகச் செல்கிறது. பெரிதாக எங்கும் போரடிக்கவில்லை. அதே சமயம் மிகவும் எக்ஸைட்டிங்காகவும் இல்லை. ஏனென்றால் எதுவுமே புதிதாக இல்லை. 


புதிதாக இல்லையென்றாலும் இந்த மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதைகள் எப்பொழுதுமே யார் கொலையாளி என்கிற யூகத்தை நமக்குள் ஓடவிட்டு ஒரு சுவாரஸ்யத்தைக் உண்டாக்கும். அதை நிச்சயம் உண்டாக்குகிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் நிறைய கதாப்பத்திரங்களைக் கொண்டு வந்து, பார்வையாளர்களைக் குழப்புவார்கள். ஆனால் இங்கு அதுவும் இல்லை. எப்படி யூகித்தாலும் இருவர்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. வேறு ஆப்ஷன்கள் இல்லை. அதே போல அந்த இருவரில் ஒருவர்தான் கொலையாளியாகவும் காட்டுகிறார்கள். 


இதுபோன்ற சஸ்பென்ஸ் படங்களில் முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த முடிச்சிற்கான மதிப்பு. லாஜிக் ரொம்பவே முக்கியம். ஆனால் இந்த ஹிட் இரண்டாம் பாகத்தில் லாஜிக் பல்லைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் அபத்தமாகவும் இருக்கிறது. 


படத்தில் எனக்கிருந்த சில கேள்விகள், லாஜிக் மீறல்கள் எனத் தோன்றியவற்றை பதிவிட்டிருகிறேன்.. ஒருவேளை நான் சரியாகக் கவனிக்காமலோ, தவறாகவோ குறிப்பிட்டிருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும்.


1. முதன் முதலில்  கொலையாகிக் கிடக்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பற்களின் அச்சு இருக்கிறது. அதன் மூலம் கொலையாளிக்கு சிங்கப்பல் இருக்கும் எனக் கணித்து அதை மூலதனமாக வைத்தே விசாரணையைத் தொடங்குகிறார்கள். கடைசியில் கொலையாளி அவனாகக் கடிக்காமல் ஒரு பல் செட்டை வைத்துக் கடிப்பது போன்ற ஒரு மார்க்கை உருவாக்குகிறார். அவர் ஏன் அப்படி ஒரு தழும்பை உருவாக்குகிறார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை? ஒருவேளை அது அவருடைய Signature ah என்றால் அப்படியும் எதுவும் காண்பிக்கவில்லை.


2. ஒருவேளை காவல்துறையைக் குழப்புவதற்காக என்று வைத்துக்கொண்டாலும், அவர் ஏன் காவல்துறையைக் குழப்ப வேண்டும் என்பதற்கும் எந்தக் காரணமும் காட்டப்படவில்லை. இல்லை அவர் காவல்துறையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அவர் கொலை செய்த பெண்களின் உடல்களை அவரே முழுவதும் மறைத்தே வைத்திருக்கலாம். ஏன் அதைக் காவல்துறையின் கண்களில் படுமாறு வைக்கிறார் என்பதற்கும் எந்தக் காரணமும் இல்லை.  கொலையாளியின் டார்கெட் குறிப்பிட்ட சில நபர்கள் என்றால் கூட சரி எனலாம். ஆனால் அவர் பழி வாங்குவது குற்றத்துடன் நேரடித் தொடர்பில்லாத ஒரு சமூகத்தை. அப்படியிருக்கும் போது அவருடைய டார்கெட் என்பது முடிவில்லாத ஒன்று. பிறகு ஏன் காவல்துறக்கு “இங்க பாருங்கண்ணே நா எத்தனை கொலை பண்ணிருக்கேன்னு” எனக் காண்பிக்க வேண்டும்?


3. முதல் பாதியில் கிடைக்கும் ஒரு தடயத்தைக் கொண்டு ஒருவனைத் தவறுதலாக காவல்துறை கைது செய்கிறது. அவன் வீட்டில் கிடைத்த தடயத்தை உருவாக்கியதே கொலையாளிதான். அதே கொலையாளி காவல்துறை அவனைக் கைது செய்தபின்னர், அவன் உண்மையான கொலையாளி இல்லை என காவல்துறைக்கு அனானிமஸ் ஐடியிலிருந்து தகவல் கொடுக்கிறான்? எலே செத்தப் பயலே என்னலே வேணும் உனக்கு?  “ நீ என் மேல காட்டுன இண்ட்ரெஸ்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சி. அதனாலதான் உனக்கு தகவல் சொன்னேன்” என ஒரு வரியில் காரணம் சொல்கிறார்கள். ஆனால் அது எதையுமே விளக்கவில்லை என்பது தான் உண்மை. 


4. உதாரணமாக டெக்ஸ்டரில் கொலையாளி கதாநாயகனின் கவனத்தைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக கதாநாயகனுக்க்குத் தெரியவேண்டும் என்றே சில தடயங்களை விட்டுச் செல்வார். இங்கு கொலையாளியின் நோக்கம் என்ன? தான் பாதிக்கப்பட்டதற்காகப் பெண்களைப் பழி வாங்குவது மட்டுமா? காவல்துறையில் சிக்கிக் கொள்ளாமல் பழி வாங்குவதா? காவல்துறையின் கவனத்தைப் பெறுவதா அல்லது காவல்துறையின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டே பழிவாங்குவதா? அப்படி காவல்துறையிடம் சவால் விட்டுச் செய்வதென்றால் அதற்கான காரணம் என்ன என எந்தத் தகவலும் இல்லை. 


மேக்கிங்கெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. படம் போரடிக்கவும் இல்லை. ஆனால் அந்தக் கிளைமாக்ஸ் அதுவரை படத்தின் மீதிருந்த மதிப்பை முற்றிலுமாகக் குறைத்துவிட்டது. 


-அதிரடிக்காரன். 


#hitthesecondcase #hitseries #hit

Tuesday, August 2, 2022

D Block (2022)


Share/Bookmark


அருள்நிதி ஏன் அனைத்துப் படங்களிலும் ஒரு மாதிரி சைக்கோ கேரக்டர்களில் சிரிக்காமலேயே நடிக்கிறார் என்கிற கேள்வி அடிக்கடி எனக்கு எழுவதுண்டு. அதற்கான விடை  D block இல் கிடைத்தது. முதல் பாதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவராக அடிக்கடி சிரிப்பவராக நடித்திருந்தார். அவர் சிரிக்காமல் நடிப்பது தான் படம் பார்க்கும் நமக்கு நல்லது என்பதை அதன் பின்னர் புரிந்து கொண்டேன். 


சிறுபிள்ளைத் தனமான கதை. அமெச்சூரான மேக்கிங்.  காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் காலேஜ். ஒன்பது மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது, மொட்டை மாடிக்கு போகக்கூடாது என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட லாஜிக்கிற்கு மெனக்கெடவில்லை. எதயாவது எடுத்து வைப்போம் என்பதைப் போல எடுத்திருக்கிறார்கள்.


மொட்டை மாடிக்கு போகக் கூடாது என்றால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண் போக வேண்டும் என்பது தானே உலக வழக்கம். அப்படி ஹாஸ்டல் மொட்டை மாடிக்கு செல்லும் ஒரு பெண் மறு நாள் வேறு ஒரு இடத்தில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடக்கிறாள். சிறுத்தை அடித்துவிட்டது என்கிறார்கள்.


பிரின்சிபாலிடம் பெண் மரணத்திற்கு நியாயம் கேட்கச் செல்கிறார்கள் அருள்நிதி குழுவினர். அதற்கு பிரின்சிபால்


“மொட்டை மாடிக்கு போகக்கூடாதுன்னு நாங்க எவ்வளவு சொல்லியும் அந்தப் பொண்ணு அங்க போச்சுல்ல. அதான் சிறுத்தை அடிச்சிருச்சி” என்கிறார்.


”ஏண்டா கொன்னப்பயலே மொட்டை மாடிய என்ன சிறுத்தைக்கு வாடகைக்காடா விட்டுருக்கீங்க? மொட்டை மாடிக்கு எப்டிடா சிறுத்தை வரும்?” என படம் பார்க்கும் நமக்கே கேட்கத் தோன்றும். ஆனால் துப்பறியும் புலி அருள்நிதிக்கோ அல்லது அந்த கல்லூரியில் படிக்கும் எந்த மாணவ மாணவியருக்கோ இந்த சந்தேகம் வரவே இல்லை. இதைப்போல இன்னும் பலப் பல அபத்தங்கள்.


பெரியார் பேரன் கரு பழனியப்பன் படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை கல்லூரியில் படமாகத் தொங்குகிறார். பின் ஒரே ஒரு காட்சியில் எண்ட்ரி கொடுத்து சந்திரமுகி பாம்பை ஒரு கோல் வித்யாசத்தில் வெற்றி பெறுகிறார். 


மொத்ததில் எருமைச்சாணி விஜய்யின் இயக்கத்தில் உருவான இப்படமும் அவர்கள் சேனலின் பெயரைப் போலத்தான் இருக்கிறது.


-அதிரடிக்காரன்


#Dblock #Athiradikkaran

Friday, April 1, 2022

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!


Share/Bookmark

 


RRR புகழ்ச்சிப்பதிவுகள் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப் ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான் நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.. 2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத 2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?

காலாவ ஏன் ஓட விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச் சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால் திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.

ஸ்டாலின் திரைப்படத்தில் சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட  ”அவங்க உனக்கு நன்றி சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.

அதேபோலத்தான் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.

”புதுப்பேட்டையெல்லாம் எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப் பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின் முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி.. ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும்.  திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.

ஒரு திரைப்படம் வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும். பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில் எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.

ஒருவர் மாததிற்கு ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம் சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?

மழை காலத்திலும், குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நல்ல திரைப்படங்களை எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து, வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

Saturday, November 20, 2021

பொன் மாணிக்கவேல்!!


Share/Bookmark

 


Caution : மொரட்டு ஸ்பாய்லர்ஸ் ahead!!


வின்னர் திரைப்படத்தில் கிரண் வீட்டிற்குள் ஏறிக் குதிக்கும்போது வடிவேலு கயிற்றை வைத்துக்கொண்டு எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருப்பார். என்னடா செய்ற என்பதற்கு “நா என்னமோ பன்றேன் போடா” என்பார். கிட்டத்தட்ட பொன்மாணிக்கவேல் படத்து இயக்குனரும் இந்த வடிவேலுவின் மனநிலையில் தான் இருந்திருப்பார் போல. என்ன செய்கிறார் படம் எங்கே செல்கிறது என்பது கடைசி வரைக்குமே அவருக்கே வெளிச்சம்.


ஆரம்பக் காட்சியில் நீதிபதி ஒருவர் இரண்டு வெவ்வேறு துப்பாக்கியால் சுடப்பட்டு, தலை தனியாக வெட்டபட்டு இறந்துகிடக்கிறார். விவேக் சொல்லும் கொன்னு, கொலைபண்ணி, மர்டர் பன்னிருவேண்டா டோங்க்ரே என்பது இதுதான் போல. 


யார் கொலையாளி என்பதைக் கண்டறிய போலீஸ் திணற, துப்பாக்கி ஸ்பெசலிஸ்ட் பொன் மாணிக்கவேல் வரவழைக்கப்படுகிறார். அவர் எதையுமே வித்யாசமாகச் செய்பவர். அதாவது சீரியாக இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக செல்லும் இடங்களில் கேஸைப் பற்றிப் பேசாமல் “டீ சாப்டுவோமா” வடை சாப்டுவோமா” என சம்மந்தம் இல்லாமல் பேசி தான் கேஷூவலாக இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுபவர். ஆரம்பக் காட்சிகளில் பொன்மாணிக்கவேலின் அதிகப் பிரசங்கித் தனம்  தாங்காமல் நமக்கே அவர் பொடனியில் பொளேர் என்று ஒன்று வைக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது. 


நீதிபதி சுடப்பட்ட இடத்தில் புல்லட்டே கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஃபோரன்ஸிக் ரிப்போர்ட்டில் சுடப்பட்டது என்ன துப்பாக்கி, எப்போது வாங்கிய துப்பாக்கி, யார் யாரிடம் அது இருக்கின்றது என்பது வரை டீட்டெய்ல் கொடுக்கிறார்கள். எப்படி என்றே தெரியவில்லை. 


இது ஒரு முறையான மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதையாகவும் செல்லவில்லை. ஒரு கமர்ஷியல் போலீஸ் கதையாகவும் செல்லவில்லை. ஒரு மாதிரியாகச் செல்கிறது.


பல இன்வெஸ்டிகேஷன்களுக்குப் பிறகு கொலையாளி முள்ளும் மலரும் மகேந்திரன் எனக் கண்டறிகிறார்கள். வயது முதிர்ந்த மகேந்திரனின் உடல்நிலையைப் பார்த்து நமக்கே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் போலீஸில் கமிஷ்னர் முதல் ஐஜி வரை அவர்தான் அந்த மூன்று கொலைகளை செய்தார் என்று நம்புக்கிறார்கள். ஹியூமன்ஸாடா நீங்கல்லாம்?


ஒரு தொழிலதிபரை இன்னும் சில மணி நேரத்தில் கொலை செய்து விடுவதாக கொலைகாரன் மிரட்டுகிறான். அந்த தொழிலதிபரின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கில் போலீஸ் குவிக்கப்பட,பொன் மாணிக்கவேலும் அதில் இருக்கிறார். 


ஆனால் கொலைகாரன் இவற்றையெல்லாம் தாண்டி தொழிலதிபரை கொன்றுவிட, போலீஸ் மொத்தப்படையும் அந்த இடத்திற்கு விரைகிறது. பொன்மாணிக்கவேல் துப்பாக்கியும் கையுமாக “சார் கொலைகாரன் தொழிலதிபரை சுட்டுட்டான். நான் அவனை சுட்டுட்டேன்” என்கிறார். உடனே அனைவரும் “வெல்டன் பொன்மாணிக்கவேல்” “வெல்டன் பொன்மாணிக்கவேல்”  என்கிறார்கள். ஏண்டா நீங்க யாரக் காப்பாத்தனும்னு வந்தீங்களோ அவன் பொனாமா கெடக்கான். இதுல என்ன வெல்டன்? எதுக்கு வந்தோம்னே தெரியாம சமயக்காரனாவே மாறிட்டீங்களேடா?


அதயெல்லாம் விட உச்சகட்ட காமெடி ஒன்று இருக்கிறது. மகேந்திரனை பொன்மாணிக்கவேல் ஒரு மார்ச்சுவரிக்கு அழைத்துச் சென்று, அங்கிருப்பவரிடம் மகேந்திரனைக் காட்டி “அண்ணே ‘ஓ’ பாசிடிவ் ப்ளட் குரூப்புல ஐயா மாதிரியே ஒரு பாடி வேணும்” என்று கேட்கிறார். 


டேய்… என்னடா துணிக்கடையில போய் ”அண்ணே 34 சைசுல ரெண்டு பேண்ட் குடுங்கண்ணேன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க? பொணம்டா

”

இப்படி எக்கச்சக்கமாகப் போகும் படத்தின் படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா “பெத்த”ராஜ்  மட்டும்தான். இமானின் பின்னணி இசை ஓகே.  


மொத்தத்தில் பொன் மாணிக்கவேலின் முதல் அரைமணிநேரம் நம்மை பயங்கரமாக சோதிக்கும். அப்புறம் அதுவே பழகிரும். 

Thursday, April 4, 2019

சூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் Vs சுமார் திரைப்பட ரசிகர்கள்!!!


Share/Bookmark


நம்ம தமிழ்நாட்டுல சினிமா ரசிகர்களைப் பொறுத்த அளவு மூணு வகை..ஒண்ணு எதாவது ஒரு நடிகரை சார்ந்த ரசிகர்கள். அவங்களோட ஃபேவொரெட் நடிகரோட படங்களுக்கு எப்பாடு பட்டாவது சப்போர்ட் பன்றவங்க. அந்த நடிகருக்கு போட்டியா இருக்க நடிகரோட படங்கள் எப்படி இருந்தாலும் அத ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறவங்க. இந்த ரசிகர்களோட கருத்து இவங்க வந்து அவனுக்கு பிடித்த, பிடிக்காத ரெண்டு நடிகர்களத் தவற மத்தா எல்லா படங்களுக்கும் கரெக்டான கருத்து சொல்லுவானுங்க. தமிழ்நாட்டுல பெரும்பாலானவங்க இவங்கதான். தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்க முக்கிய காரணமும் இந்த மாதிரியான ரசிகர்கள்தான்.

ரெண்டாவது இந்த நடுநிலை ரசிகர்கள். அதாவது  நடுநிலை அப்டின்னு சொல்றதவித எந்த நடிகர் மேலயும், இயக்குனர் மேலயும் ஏன்  சினிமா மேல கூட அவ்வளவு ஆர்வம் இல்லாம என்னத்த கன்னையா மாதிரி இருக்கவங்க. இவய்ங்கள பெருசா ஒண்ணும் கண்டுக்க தேவையில்ல. ஏன்னா இவய்ங்க யாருமே தியேட்டர்ல படம் பாக்க மாட்டானுங்க. பஸ்ஸுல, காலேஜ்ல, ஆபீஸ்லன்னு யார்கிட்ட என்ன படம் இருந்தாலும் வாங்கி பாப்பானுங்க. இவய்ஙளுக்கு எல்லா படமுமெ நல்லாருக்க மாதிரி தான் தெரியும். ஏன்னா பாட்ட ஓட்டிருவானுக, ஃபைட்ட ஓட்டிருவானுக… ஒரு சீன் போர் அடிச்சிதுன்னா ஒட்டிருவானுக்க. ரெண்ட்ரை மணி நேரம் ஓடுற ஒரு பட்த்த அதிகபட்சம் முக்கா மணி நேரத்துல பாத்து முடிச்சிருவானுக. இவனுகளால பெரிய அளவுல சினிமாவுக்கு  ஒரு புரயோஜனமும் இல்ல. 200 கோடில பாகுபலி எடுத்தாலும் சரி, 300 கோடில எந்திரன் எடுத்தாலும் இவங்களுக்கு அது 400 MB தான்.

அடுத்து மூணாவது குரூப்பு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் படங்களை ஆதரிப்பவர்கள். இவயங்கதான் ரொம்ப டேஞ்சராஜ குரூப்பு. இவங்கள கண்டுபுடிக்கிறது ரொம்ப ஈஸி… Bro உங்க ஃபேவொரெட் படம் பேரு ஒண்ணு சொல்லுங்க ப்ரோன்ன உடனே யோசிக்காம “அன்பே சிவம்”… அப்டின்னான்ன நீங்க யோசிக்காம 2 ஸ்டெப் பேக் போயிருங்க. அடுத்த கேள்வி… உங்களுக்கு பிடிச்ச் இயக்குனர் யாருன்னு கேளுங்க… “ராம்” “தியாகராஜா.. குமார்ராஜா” இப்டி எதாவது ஒரு பேர சொன்னான்னா முடிஞ்சிது. அதுக்கப்புறம் அவன் பக்கம் தலை வச்சி படுத்துறாதீங்க.. ரொம்ப டேஞ்சர்.

இவய்ங்களோட முக்கியமான வேலை என்னன்னா, most underrated இயக்குனர்கள கண்டுபுடிச்சி எழுதுற்துதான். அதாவது அதன் மூலமா என்ன சொல்லுவானுங்கன்னா இவரு ரொம்ப நல்ல டைரக்டரு… இவரோட திறமைய நா மட்டும்தான் சரியா புரிஞ்சிக்கிட்டு இருக்கேன். நீங்கல்லாம் இவர அண்டர் ரேட் பன்னி வச்சிருக்கீன்றதுதான். 

இவனுங்கள நல்லா உற்று நோக்குனா தெரியும்.. இந்த ப்ளாக் காமெடிங்குற பேர்ல சிரிப்பே வராத மாதிரி சில படங்கள் வரும்ல.. அதெல்லாம் பயங்கரமான காமெடி படங்கள்னுவானுங்க. நம்ம எதிர்த்து எதாவது சொன்னா நம்மளுக்கு சினிமா அறிவு இல்லைன்னுவானுக.. இல்லன்னா நம்மள C செண்டர் ஆடியன்ஸூன்னுவானுக… அதயும் மீறி நாம எதாவது சொன்னோம்னா  “ப்ரோ.. ஆக்சுவலா உங்களுக்கு இந்தப் படம் புரியல.. இன்னும் ஒரு ரெண்டு தடவ பட்த்த பாத்து புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்து பேசுங்கன்னுவானுக… ஏண்டா ஒருதடவே படத்த பாக்க முடியாமத்தான் இங்க வந்து குத்த வச்சிருக்கேன். இதுல இன்னும் ரெண்டு தடவையா… அப்டின்னு அதோட ஓடிருவானுக.

இல்லன்னா குறியீடு கண்டுபுடிப்பாங்க.. இந்த ஷாட்ல ஏன் ப்ளூ கலர் லைட்டிங்க் வச்சிருக்காங்க தெரியுமா? பேக்ரவுண்டுல அந்த சுவத்துல ஏன் பூனை படம் வரைஞ்சிருந்துச்சி தெரியுமா? இந்த சீன்ல கேமரா ஆங்கிள கீழ வச்சதனால டைரடர் இன் டைரக்டா என்ன சொல்ல வர்றாரு தெரியுமா? டேய் இதெல்லாம் மொதல்ல அந்த டைரக்டருக்கு தெரியுமா?  
இவய்ங்க என்ன பண்ணி விட்டுருவானுங்கன்னா இப்டி குறியீடு கண்டுபுடிக்கிறேன், ஸ்க்ரீன் ப்ளேய அனலைஸ் பன்றேன் அப்டின்னு அந்த படத்த எடுத்த இயக்குனருக்கே தெரியாத விஷயங்கள எழுதி எழுதி அந்த இயக்குனர்களை உத்தமபுத்திரன் விவேக் மாதிரி ஆக்கி விட்டுருவானுங்க.. “அப்ப என்னோட பவர் தெரியாமலேயே நான் இவ்வளவு நாள் வாழ்ந்துகிட்டு இருக்கேன்”ன்னு அந்த இயக்குனர்கள் வேற உலகத்துல வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. விளைவு என்ன… பரிசு குடுக்க மேடைக்கு கூப்டா ஏன் என்னோட படத்துக்கு பரிசு குடுக்கல.. ஏன் இந்த பாட்டுக்கு குடுக்காம அந்த பாட்டுக்கு குடுக்குறீங்கன்னு ஆங்கர் பன்றவன்கிட்ட போய் சண்டை போட வேண்டியதாயிரும்.  அடுத்த வருஷம் ஃபங்க்‌ஷனுக்க்கே கூப்ட மாட்டானுங்க.

இந்த மாதிரி இந்த மூணாவது குரூப்பு கண்டுபுடிச்ச ஒரு அண்டர் ரேட்டட் இயக்குனர்தான் தியாகராஜா குமார்ராஜா… ஆரண்ய காண்டம்னு ஒரு படம்.. ஓடல.. ஆனா நம்ம குருப்பு அந்தப் படத்த identify பன்னிட்டாங்க பல வருடங்களுக்கு அப்புறம் இந்த தியாகராஜா குமார்ராஜா படம் எடுக்குறாரு…பட்த்துக்கு ட்ரெயிலர் ஒண்ணு விட்டுருந்தாரு பாருங்க.. ச்சை.. ஆனா நம்ம குரூப்பு அந்த ட்ரெயிலர்லயே தாத்தா தெரிறாரு… பக்கத்து வீட்டு பாட்டி தெரியிதுன்னு ஆயிரம் குறியீட கண்டுபுடிச்சி படம் வர்றதுக்கு முன்னாலயே விமர்சனம்லாம் எழுதி வச்சிகிட்டு படம் ரிலீஸூக்காக காத்திருந்து படம் வந்தப்புறம் அப்படியே கக்கிட்டாங்க.
 
அப்படி ஒரு ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்ட படம் தான் இந்த சூப்பர் டீலக்ஸ். ஒருத்தன் என்னான்னா தமிழ்சினிமாவோட அடுத்த கட்டம்ன்றான். இன்னொருத்தன் என்னடான்னா இவர மாதிரி டைரக்டரு ஒலகத்துலயே இன்ல்லன்றான்… சரி என்னா பன்னி வச்சிருக்கானுங்கன்னு பாக்கலாம்னு தியேட்டருக்கு போனா.. ச்சை…

இதுல படம் பாத்தவியிங்க ஸ்டேட்டஸூ.. இந்தத் திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. உண்மைதான் அந்த முணு மணி நேரத்த கடந்து போறதுக்குள்ள நா பட்ட பாடு இருக்கே… அய்யயோ… அருவை… அருவை… அருவை..

படம் வந்து எந்த காலகட்டத்துல நடக்குதுன்றதே பெரியபியூஷனா இருக்கு. Background ல ஃபுல்லா ஒரே பழைய பாட்டுங்களா ஓடுது. காதாப்பத்திரங்கள் வாழுற வீடு, உபயோகிக்கிற பொருட்கள்ணூ எல்லாத்துலயும் ஒரு ரெட்ரோ எஃபெக்ட் இருக்கு. நாம எதோ 80s ல நடக்குற கதை போலன்னு நினைச்ச்சா இல்ல. இப்ப நடக்குற கதை தான். அதுவே பெரிய கடுப்பு.

அதவிட பெரிய கடுப்பு படம் எத நோக்கி பயணிக்கிதுன்னு கடைசி வரைக்குமே நம்மளால கண்டுபுடிக்க முடியாது. படத்துல ஒரு கதை இருந்தா குத்து மதிப்பா இந்த இட்த்துல இண்டர்வல் விடுவாங்க இந்த இட்த்துல படம் முடியும்னு ஒரு அனுமானம் நமக்க் இருக்கும். ஆனா இந்த பட்த்த பொறுத்த அளவு இண்டர்வல் எப்ப வரும்னு நம்மாளால சொல்ல முடியாது, படம் எப்ப முடியும்னும் நம்மளால சொல்ல முடியாது. அவனுங்களா மனசு வச்சி பட்த்த முடிச்சி விட்டாதான் உண்டு.
படம் முழுக்க. ரொம்ப ஆக்வர்டான காட்சிகளால நஎிரம்பி வழியிது. விஜய் சேதுபதிய போலீஸ் இன்பெக்டர் ஸ்டேஷன்ல மிரட்டுற காடையாகட்டும், ஃபகத் ஃபாசில் தண்ணியடிச்சமாதிரி கார்ல புலம்புற காட்சியாகட்டும் அருவருப்போட உச்சம். இது ஒரு மாதிரியான அருவருப்புன்னா மிஷ்கின் ரம்யாகிருஷ்ணன் வர்ற காட்சிகள் அருவையோட உச்சம். சத்தியமா தலைவலிதான் வந்துச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு ஏலியன்லாம் வேற பட்த்துல வந்துட்டுட்டு போகுது. பைத்தியமா இவன் .. ரொம்ப நேரம் நல்லவன் மாதிரித் தெரிஞ்சானேய்யா…

அடுத்த கட்ட சினிமான்றது சென்சார் பன்னாம கெட்ட வார்த்தைகள விடுறதுலயோ , இலைமற காயா காமிக்க வேண்டிய சில விஷயங்கள explicit ah காமிக்கிறதுலயோ இல்ல.  அடுத்தகட்டம்ன்றது technical excellence தானே தவிற இந்த மாதிரி கருமம் புடிச்ச படங்கள் இல்ல.

நம்ம கதையவே நாம இன்னும் சுவாரஸ்யமா, technically strong ah எப்டி சொல்றோம்றதுதானே தவிற இந்த மாதிரி மூன்றாம் தர திரைப்படங்கள் நிச்சயமா தமிழ்சினிமாவின் அடுத்த கட்டம் இல்லை. நமக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. நாம ஏன் அடுத்த நாட்டு படம் மாதிரி எடுக்கனும்னு ஆசைப்படுறோம்? நம்ம நம்ம நாட்டு படம் மாதிரி எடுப்போம். தெலுகு சினிமால இதப் பன்றாங்க. ஒரு சில படங்கள் நகைப்புக்குள்ளாக்குனாலும்  பெரும்பாலான படங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டு இருக்கு. Technically நம்மள விட அட்லீஸ்ட் அஞ்சு வருஷமாவது முன்னால இருக்காங்க.. இத நாஞ்சொன்னா என்ன தெலுங்குகாரன்னு சர்டிஃபிகேட் குடுக்குறானுக.

இந்த சூப்பர் டீலக்ஸ் மாதிரி படங்களால நிச்சயம் திரையரங்கிற்கு மக்களோட வரத்த கம்மி பண்ணும். எதோ முகம் தெரியாத நாலு பேர வச்சி இதே பட்த்த எடுக்குற பட்சத்துல யாரும் இந்தப் பட்த்த மதிச்சிருக்கப்போறதில்ல.  அன்னிக்கு பாத்தா அவ்வளவு கூட்டம் கூட்டமா குடும்பத்தோட படம் பாக்க வந்துருக்காங்க. காரணம் ஃபஹத் ஃபாசிலோ இல்ல தியாகராஜா கொமாரராஜாவோ இல்லை. விஜய் சேதுபதி திருநங்கையா நடிச்சிருக்காரு.. படம் நல்ல ஜாலியா போகும்ன்ற ஒரே காரணம்தான்.  அவங்கல்லாம் அடுத்த தடவ நம்பி குடும்பத்தோட ஒரு படத்துக்கி வருவாங்களா? A CERTIFICATE போட்டு வச்ச படத்துக்கு உங்கள யார் குடும்பத்தோட வரச்ச்சொன்னதுன்னு சிலர் கேள்வீ வேற? Violence க்கும் A certificage than.. vulgarity க்கும் A certificate தான். Violence tha குடும்பதோட பாக்க முடியும். Vulgar ah இருக்க படங்கள குடும்பத்தோட பாக்க முடியாது. படம் பாக்குறதுக்கு முன்னால எத்தனை பேரு படம் A certifiaacte ah u certificate ah nu  பாத்துட்டு புக் பன்றது? இன்னும் நம்ம ஊர்ல நடிகர்களப் பாத்துதான் புக் பன்றாங்க.

உண்மையிலயே நடிகர்களுக்கு தான் அந்த ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கனும். ஏற்கனவே சொன்னதுதான். விஜய் சேதுபதிக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாயிருக்கு. அவர் படங்களுக்கு போன ஜாலியா சிரிச்சிட்டு வரலாம்னு ஒரு இமேஜும் உண்டாயிருக்கு. அத அப்டியே குழியில தூக்கி போட்டு பொதைக்கிற மாதிரி தான் இந்தப் படம் வந்துருக்கு. ஒரு நடிகனோட அடுத்த கட்டம் ரசிகன மதிச்சி அவனுக்கு பிடிச்ச மாதிரி படங்கள கொடுக்குறதுதான். ரசிகர்கள மதிக்காத நடிகர்கள் பல பேர் இருக்க இடம் தெரியாம பொய்ட்டாங்க. விஜய் சேதுபதியும் அதை நோக்கிதான் போயிட்டு இருக்காரு.

விஜய் சேதுபதி பையனா வர்ற அந்த சின்னப் பையன் பட்டைய கிளப்பிருக்கான். விஜய் சேதுபதி தாத்தா அடிக்கிற கமெண்ட்ஸ், விஜய் சேதுபதி மிஷ்கின்கிட்ட மன்னிப்பு கேக்குற சீன்னு அங்கங்க சில நல்ல காட்சிகளையும் மத்த காட்சிகள் நாரடிச்சி வச்சிருது

மொத்தத்துல இந்த மாதிரி சினிமாக்களை புறக்கணிக்கிறதுதான் தமிழ்சினிமா நீண்ட நாள் உயிரோட இருக்க நாம செய்யிற உதவியா இருக்கும்.   



Friday, January 11, 2019

பேட்ட – ரஜினி படம்..!! ரஜினி மட்டுமே படம்!!!


Share/Bookmark

”மாறாததெல்லாம் மண்ணோடு.. மாறுவதெல்லாம் உயிரோடு” கோச்சடையானில் வரும் ஒரு பாடல் வரி. காலத்துக்கு ஏற்ப மாறாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். ஒருவர் ஒரு துறையில் நாற்பது ஆண்டுகள் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக திகழ்கிறார் என்றால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதுதான் முக்கியக் காரணம். அதுபோக ஒரு நடிகர் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைக்கும்பொழுதே அந்த நடிகனின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. இதைத் அன்றிலிருண்டு இன்றுவரை கடைபிடிப்பவர் திரு.ரஜினிகாந்த்.

அதே போல ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகரை இயக்கும் இயக்குனர், அவருடைய ரசிகனின் பார்வையிலிருந்து அவரை ரசித்து இயக்கும்போதே மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்கிறது. “நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரை எப்படியெல்லாம் பாக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதை மனசுல வச்சி உருவாக்கியிருக்கது தான் இந்த சிவாஜி திரைப்படம்” இது சிவாஜி திரைப்பட உருவாக்கத்தின் போது ஷங்கர் சொன்னது. அவர் சொன்னது போலவே பட்த்தின் அவுட் புட்டும். ஒவ்வொரு ரசிகனும் ரஜினியை எப்படி பார்க்க நினைத்தானோ அப்படி இருந்தது திரைப்படம்.

அதே மாதிரியான ஒரு அற்புதத்தைதான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கிறார். “அட.. இப்டி தலைவரப் பாக்காத்தானே நாங்கல்லாம் ஆசப்பட்டோம்” என படம் பார்த்துவிட்டு இப்பொழுது கூறாதவர்கள் இல்லை. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலயும் ரஜினிவெறி ஊறிப்போன ஒரு ரசிகனுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.

பேட்ட ஆடியோ லாஞ்ச் ஃபங்க்‌ஷன்ல கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது “நாங்க தலைவர எந்தெந்த ஆங்கிள்ல காமிக்கனும்.. அவரு எப்டி வரனும்.. எப்டி நிக்கனும்னுலாம் உக்கந்து பேசிக்கிட்டே இருப்போம்” என்றார். உண்மையில் அது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பொதுவாக ஒரு படத்தின் காட்சியில் நடிகர் ஒண்றிரண்டு ஃப்ரேம்களில் அழகாகத் தெரிவார். ஆனால் பேட்டயில் ஒவ்வொரு ப்ரேமிலுமே தலைவர் அவ்வளவு அழகாக  இருக்கிறார். 

அதற்கேற்றார்போல் கதை நடக்கும் இடம் மலைப்பிரதேசம். அந்த லொக்கேஷனுக்கும் அவருடைய காஸ்ட்யூமிற்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதுவும் ஹாஸ்டலுக்குள் வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளையும் , இண்டர்வல் ப்ளாக்க்கில் ”உள்ளே போங்கடா” என்று அரட்டுவதையும் சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒப்பிட்டால் அது சற்று குறைவாகத்தான் இருக்கும்.  அவ்வப்போது தலைவர் வைத்திருக்கும் ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன. ஸ்டண்ட் அதகளம். அதுவும் இண்டர்வல் ப்ளாக்கிற்கு முந்தைய பில்ட் அப் சீன் வெறித்தனம்.

பேட்ட ஒரு தனி திரைப்படமாக இல்லாமல் ஒரு ரஜினி ரசிகனின் ஒட்டுமொத்த ரஜினி சார்ந்த அனுபவங்களையும், இன்றைய ட்ரெண்டில் மூண்று மணிநேரத்தில் ரீவைண்ட் செய்து பார்க்கும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. மணல் மாஃபியா, RSS, டம்மி பீஸ் சிங்காரம் என படம் முழுவதும் நிஜத்தில் பார்க்கும் பல கதாப்பாத்திரங்களை உலவ விட்டு ஊமை குத்தாக குத்தி விட்டிருக்கிறார்.

ஒரு ரஜினி ரசிகனாகவும் ஒரு சினிமா ரசிகனாகவும் படத்தில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு. வழக்கமாக தலைவர் படங்களில் அந்த படத்திற்கான ட்ரேட் மார்ட் ரஜினி ஸ்டைல் என்று ஒண்று இருக்கும். பாட்ஷா “ஒருதடவ சொன்னா” , படையப்பா “சல்யூட்” , பாபா முத்திரை, சிவாஜியின் கூல் வசனம், எந்திரனில் டாட்.. அதுபோல பேட்டைக்கென்ற ஒரு ட்ரேட் மார்க் மூவ்மெண்டோ, பஞ்ச்சோ இருந்திருக்கலாம்.

அதேபோல ஹீரோ எந்த அளவிற்கு கெத்தானவர் என்பது வில்லன் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர் என்பதைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் வில்லனின் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். நவாஸுதீன் கடைசி வரை கதாநாயகனுக்கு பயந்த ஒரு வில்லனாகத்தான் காண்பிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர், அவர் செல்வாக்கு எப்படி என்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. விஜய் சேதுபதியை இன்னும் சிறப்பான வில்லனாக உபயோகித்திருக்கலாம்.

படம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்களின் பெரும்பாலான பதிவுகள் “பேட்டயில் ரஜினியுடன் நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தல அவர்களை ஒற்றை ஆளாக எதிர்க்கிறார்” என்பது போல இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கூற வேண்டும். படத்தில் அத்தனை பேர் இருந்தாலும் தலைவரின் கதாப்பாத்திரத்திற்கு அடுத்து படத்தில் அடுத்த வெய்ட்டான கதாப்பாத்திரம் யார் என்று கேட்டால் நிச்சயம் ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினி மட்டுமே கதையில் நிறைந்திருக்கிறார். மற்ற எந்த கதாப்பாத்திரமும் மெருகேற்றப்படவில்லை. சிம்ரன் கொஞ்ச நேரம், திரிசா கொஞ்ச நேரம், மேகா ஆகாஷ் கொஞ்ச நேரம் என பல கதாப்பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு அப்படியே அத்துவிடப்படுகின்றன. (தலைப்பே இன்னொரு முறை படிக்கவும்)

அடுத்து இதற்கு முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, புறாவை மறைய வைப்பது பெரிய விஷயமில்லை. மறைந்த புறாவை திரும்ப கொண்டுவருவதில் தான் அடங்கியிருக்கிறது prestige. மொத்தக் கதையும் பின்னப்பட்டிருப்பது அந்த ப்ளாஷ்பேக்கை சுற்றித்தான். அப்படியிருக்க அந்த ஃப்ளாஷ்பேக் எவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமோ அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்டயின் ஃப்ளாஷ்பேக் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம். ரொம்ப அவசர அவசரமாக ப்ளாஷ்பேக் ஓடி முடிந்ததைப் போல இருந்தது மட்டுமல்லாமல், சசிகுமார், திரிசா கதாப்பாத்திரங்களெல்லாம் மனதில் ஒட்ட மறுக்கின்றன. 

அதே போல பேட்டவேலனின் அடாவடிகளை எதிர்பார்த்து காத்திருந்த நமக்கு சட்டென ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் ஒரு ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் இழுத்து பிந்தைய பகுதி ரிவெஞ்ச் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

பின்னணி இசையில் அனிரூத் கலக்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் இல்லாத அளவுக்கு பாடல்கள் பேட்டயில் அதகளம். ஐந்து பாடல்களையும் முழுவதுமாக உபயோகித்திருக்கலாம். ஆஹா கல்யாணமும், பேட்ட பராக்கும் முழுவதுமாக இல்லாதது வருத்தமளித்தது.

ஒரே ஒரு பாட்ஷா தான். அதை யாராலும் உடைக்க முடியாது. நானே நினைச்சாலும் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது என தலைவர் முன்பொரு முறை சொல்லியிருந்தார். நூறு சதவிகித உண்மை. ஆனால் பேட்டயில் ஃப்ளாஷ்பேக்கும் வில்லனும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருந்தால் கண்டிப்பாக இதை அடுத்த பாட்ஷா என்றே கூறலாம்.

பேட்டயின் ட்ரெயிலரைப் பார்த்து உற்சாகமான நண்பர் ஒருவர் “நண்பா… நம்ம தலைவரு ஃப்ளாஷ்பேக்குல தலைவர் ரசிகராவே வந்தா எப்டி இருக்கும்.. முரட்டுக்காளை படத்துக்கு தலைவர் முதல் நாள் அளப்பரையா போய் படம் பாக்குற மாதிரி சீன் வச்சா செமையா இருக்கும்ல…”ன்னாரு… மெரண்டுட்டேன். உண்மையிலயே செம மேட்டர்.. அப்படி காட்சி அமைக்கப்பட்டால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் நண்பான்னு சொல்லியிருந்தேன். நானும் அப்படி இருக்காதா என எதிர்பார்த்துதான் காத்திருந்தேன். சிறிய ஏமாற்றம்.

”இதான்யா ரஜினி படம்.. அவர வச்சி இப்டித்தான் எடுக்கனும்” என்கிற வாசங்களை படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது கேட்ட முடிகிறது.  அதேபோல படம் முடிந்து வெளியில் வரும் அனைவர் முகத்திலும் பல நாட்களுக்கு முன் தொலைத்த எதோ ஒண்று மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் காண முடிகிறது. கண்டிப்பாக சிவாஜிக்குப் பிறகு முழுக்க முழுக்க ரஜினி படமாக வெளிவந்திருக்கும் இந்த பேட்ட அத்தனை பேருக்கும் பிடித்த படமாக இருக்கும்.
  

Saturday, December 22, 2018

சிலுக்குவார்பட்டி சிங்கம் - MUST WATCH!!!


Share/Bookmark

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நிலவி வரும் நகைச்சுவை வறட்சி பற்றிய ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  (தமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை) வடிவேலுவின் ஓய்வும், சந்தானத்தின் கதாநாயகன் ஆசையும் இதற்கு முண்ணனிக் காரணங்களாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைய இளம் இயக்குனர்கள் நமக்கு சற்றும் ஒட்டாத மேற்கத்திய ப்ளாக் காமெடி வகைகளை வலுக்கட்டாயமாக நமக்குள் திணிக்க முயல்வதும் இந்த நகைச்சுவை வறட்சிக்கு மிக முக்கியமானதொரு காரணம். கடந்த 5 ஆறு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படங்களை விரல் விட்டு எண்ணினால் நிறைய விரல்கள் மீதமிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் தமிழ்சினிமாவில் நகைச்சுவைப் படங்கள் இன்னும் சாகவில்லை என்பதை நமக்கு நினைவூட்ட வெளிவந்திருக்கிறது இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள்…”அன்னிக்கு காலையில் ஆறு மணியிருக்கும்” காமெடியை முதல் முறை பார்த்த பொழுது கண்ணில் நீர் வர சிரித்தேன். கதையைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் முற்றிலும் நகைச்சுவைக்காட்சிகளால் நிரம்பி வழிந்த படம். ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த படம்.  சூரி, ரோபோ ஷங்கர்களை முறையாக உபயோகித்த படமும் கூட. அதற்கு கதை திரைக்கதை எழுதிய செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் முதல் படம் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம். அந்தப் படத்தைக் காட்டிலும் இரண்டு  மடங்கு அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார்.

சிலுக்குவார் பட்டியில் கான்ஸ்டபிளாக, உயர் அதிகாரிகளுக்கு டீ, டிஃபன் வாங்கிக் கொடுக்குத்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை மிக ஜாலியாக வாழ்ந்து வரும் கதாநாயகன் ஒரு மிகப்பெரிய ரவுடியிடம் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும்போது நடக்கும் காமெடி கலாட்டாதான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

முதலில் படத்தின் casting. யோகிபாபு, ஆனந்தராஜ், சிங்கமுத்து, மன்சூர் அலிகான். கருணாகரன் லொல்லுசபா மனோகர் இவர்களை ட்ரெயிலரைப் பார்க்கும்பொழுதே கண்டிப்பாகப் படம் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிகொள்கிறது. அதேபோல ஒவ்வொருவரையும் எவ்வளவு கச்சிதமாக உபயோகிக்க முடியுமோ அப்படி உபயோகித்திருக்கிறார்.

சிங்கமுத்துவின் சிறந்த நகைச்சுவை என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இந்தப் படம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும். Pre-Interval ஒரு இருபது நிமிடம் அதகளம் செய்திருக்கிறார். ஆட்டோ சந்திரனாக வரும் லோக்கல் ரவுடி ஆனந்தராஜ்… படத்தில் விஷ்ணுவின் இண்ட்ரோவுக்கு கூட யாரும் கத்தவில்லை. ஆனால் ஆனந்தராஜ் இண்ட்ரோவிற்கு விசில் பறக்கிறது. வில்லனாக பல வருடங்கள் நடித்தும் கிடைக்காத விசில் கைதட்டலெல்லாம் காமெடியனான பிறகு கிடைக்கிறது. ஆட்டோவில் கும்பலாக வந்து லோக்கல் கடைகளில் மாமூல் வசூல் செய்துவரும் ஆனந்த ராஜின்  அந்த கேரக்டரும் கெட்டப்பும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். படம் முடியும் போது அந்த சஸ்பென்ஸை அவிழ்க்கும்போது செம்ம ஃபீல்.

யோகிபாபு இவர்களுக்கெல்லாம் மேல். அநாயஸ்யாமான வசன உச்சரிப்பிலும் counter களிலும் பிரித்து மேய்கிறார். கவுண்டரும் வடிவேலும் கலந்த சரியான கலவை யோகிபாபு. அடுத்த ஒருசில வருடங்களுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் படங்கள் இவரை நம்பித்தான் இருக்கப்போகிறது. அதிலும் அவர் அணிந்து வரும் டீஷர்ட்டில் உள்ள வாசங்கள் தாறுமாறு “அக்கா மகளே இந்து” “ஏக் காவ்மே ஏக் கிசாத் ரஹதாத்தா” “ஃபீல்டிங்கா பவுலிங்கா” “தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” என்று இன்னும் ஏராளம்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இயக்குனர்களில் நகைச்சுவைப் படங்களுக்கென பெயர் போனவர் சுந்தர்.சி. அவர் படங்களில் அனைத்தையும் மறந்து சிரிக்கக் காரணம் என்ன என்று பார்த்தால், அவர் படங்களில் காட்சிகள் பார்வையாளர்கள் மேல் எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாது.

அழுத்தம் என நான் கூறுவது சூரியன் திரைப்படத்தில் மனோரமாவை ராஜன்.P.தேவ் நீரில் அழுத்திக் கொல்லும்போது நமக்குள் ஒரு பயமும் பதற்றமும் இருக்குமல்லவா. அதுதான். சுந்தர்.சி படங்களில் அது சுத்தமாக இருக்காது. வில்லன்கள் இருப்பார்கள்.. ஆனால் அவர்களைப் பார்த்து ரசிகர்களுக்கு பயம் வராது. ஹீரோவுக்கு ப்ரச்ச்னைகள் வரும். ஆனால் அவை மிக எளிதாக சரி செய்யக்கூடியவையாக இருக்கும். காதலிக்காமல் முரண்டு பிடிக்கும் கதாநாயகி இருப்பார். அவளைக் காதலிக்க வைப்பதிலும் நகைச்சுவைதான் விரவியிருக்குமே தவிற பார்வையாளர்களுக்கு அழுத்தம் தருவது போல் எதுவும் இருக்காது. ஒரு நகைச்சுவைப் படத்திற்கான முதல் தகுதி இதுதான். பார்வையாளர்களை comfortable லாக வைத்து  ஜாலியான ஒரு மனநிலையை உருவாக்குவது. அந்த பாணியை அப்படியே பிடித்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.  

பெரும்பாலான காட்சிகளும் , கதை ஓட்டமும் அப்படியே சுந்தர்.சியின் ஆரம்பகால படங்களைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. Pre-Interval ஒரு பாரில் ஆரம்பித்து அதை தொடர்ந்து நடக்கும் ஒரு இருபது நிமிடமும், இரண்டாவது பாதியில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு 10 நிமிட காட்சியும் அதகளம். கல்யாண மண்டப காட்சி இன்னும் ஒரு பத்து நிமிடம் கூட சேர்ந்து எடுத்திருக்கலாம்.  படத்தின் அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் ஒரே காட்சியில் கொண்டு வந்து பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால்.. இப்பொழுதுதான் மிக சீரியஸான ஒரு போலீஸாக நடித்து ராட்சசன் என்கிற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அந்த கதாப்பாத்திரத்திற்கு நேர் மாறாக மிக ஜாலியான ஒரு போலீஸாக வலம் வருகிறார். படத்திற்கு படம் ஆள் செம ஸ்மார்ட்டாகிக்கொண்டே செல்கிறார். ரெஜினா கஸாண்ட்ரா இன்னும் அழகு. அதிலும் அவரது காஸ்ட்யூம் செம்ம. இன்னும் ஓரிரு மாதங்களில் “96” திரிசாவின் சுடிதார் போல் ரெஜினாவின் புடவைகளும் ஃபேமஸ் ஆகிவிடும்.

மொத்தம் நான்கு பாடல்கள்.. அதில் இரண்டு montage. தேவையில்லாத இடைச்சொருகல் எதுவும் இல்லாம இருப்பதே மிகப்பெரிய ஆறுதல். Dio rio dia பாடலும், மயக்காத பாடலும் அருமை.  மற்ற இரண்டும் ஓகே ரகம். ஓவியா ஒரு பாடலுக்கும் இரண்டு மூன்று கொசுறு காட்சிகளுக்கும் வருகிறார். பிண்ணனி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்.
.
வசங்கள், காட்சியமைப்பு, கதாப்பாத்திர அமைப்பு என ஒரு தேர்ந்த இயக்குனருக்கான அத்தனை அம்சங்களையும் செல்லா அய்யாவு காட்டியிருக்கிறார்.

மொத்ததில் கலகலப்பு முதல் பாகத்திற்குப் பிறகு ஆரம்பம் முதல் கடைசி வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம் . கண்டிப்பாக குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் .  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...