மணி
இரவு பதினொன்னரையைக் கடக்கும் பொழுது, அந்த வீட்டில் முகுந்தன் மட்டுமே விழித்திருந்தான்.
அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி வசுந்தராவையும் 4 வயது மகன் தினேஷையும் பார்த்தான்.
அந்த ஹாலில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ்
பல்பின் வெளிச்சத்தில் அம்மாவைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் அழகை முகுந்தன் ரசித்துக்கொண்டே இருக்க, மனதில் பல எண்ணங்கள் வட்டமிடத் தொடங்கின.
காதலித்து
பல எதிர்ப்பிற்கிடையே வசுந்தராவைக் கரம் பிடித்து, இருவர் குடும்பத்திலும் எந்த உதவியையும்
எதிர்பார்க்காமல், தரம்தாழ்த்தி பேசியவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற
வைராக்யத்தில் நான்காண்டுகள், செலவைக் குறைத்து, வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி என்னென்ன
லோன்களெல்லாம் வாங்க முடியுமோ அத்தனையும் வாங்கி இப்போது உறங்கிக்கொண்டிருக்கும் அந்த
வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
என்றாலும்
வீட்டின் கிரகப்ப்ரவேசத்திற்கு வந்த உறவினர்களில் முக்கால்வாசிப்பேர் “என்னப்பா இப்படி
ஊர்க் கோடில வீடு கட்டியிருக்கியே.. ஆத்திர அவசரத்துக்கு கூட பக்கத்துல ஒரு வீடு இல்லையே”
என்பதைத் தான் கேட்டு விட்டுச் சென்றனர். முகுந்தன் காதில் இதெல்லாம் பெரிதாக விழவில்லை.
”நானும் என் மனைவியும் வாழ எங்களுக்கென ஒரு வீடு. அது எங்கிருந்தால் என்ன?” என மனதில்
நினைத்துக் கொள்வான்.
முதலில்
எதுவும் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் நாட்கள் போகப் போக அதன் தாக்கம் சற்று இருக்கத்தான்
செய்தது. வேலையில் சில நாட்கள் தாமதமாகும்போது எப்படி வீட்டில் வசுந்தராவும், தினேஷும்
இருக்கப்போகிறார்களோ என்ற ஒரு சிறு பதைபதைப்பு அவ்வப்போது வந்து வந்து சென்றது.
பகலைப்
பொறுத்தவரை எந்தக் கவலையும் இல்லை. இருட்டும்வரை வயல்காட்டிற்கு செல்வோரெல்லாம் முகுந்தன்
வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே தான்
இருக்கும். இரவில் தான் கொஞ்சம் அச்சம் எட்டிப்பார்க்கும். முதுந்தன் வீட்டிற்கு அடுத்த
வீடு எனப் பார்த்தால் அவன் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு
ஓட்டு வீடுதான். அதில் வசிக்கும் ஒரு வயதான கிழவனும் கிழவியும் 8 மணிக்கே விளக்குகளை
அணைத்து உறங்கச் சென்று விடுவார்கள். அதனால் இருட்டிவிட்டாலே முகுந்தன் வீட்டில் தனிமைப்
படுத்தப்பட்ட ஒரு சூழலே.
இதையெல்லவற்றை
விட முகுந்தனுக்கு மிகவும் சிரமத்தையும் அசவுரியத்தையும் ஏற்படுத்துவது. நள்ளிரவில்
நாய்கள் எழுப்பும் ஓலம். நாய்கள் அழுவது போன்ற அந்த வித்யானமான ஒலியைக் கேட்கும்போது
உள்ளிருந்து எழும் பய உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை. முகுந்தன் வீட்டைத்தாண்டி கொஞ்ச
தூரம் வயக்காடுகள். அதன் பின்னர் வெறும் கருவேல மரங்கள் அடந்த காடுபோன்ற பகுதிகளே.
அதனால் நரிகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதுவும் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால்
இரை தேடி வயல் வெளிகளிலெல்லாம் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும்.
முகுந்தனுக்கு
ஆச்சர்யமூட்டிய ஒரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதெல்லாம் நாய்களின் ஓலம் கேட்கிறதோ
அப்பொழுதெல்லாம் கடிகாரத்தைப் பார்த்தால் மணி பன்னிரண்டுக்கு ஒரு ஐந்து நிமிடம் முன்னே
அல்லது பின்னேயாக மட்டுமே இருந்திருக்கிறது. இது ஆச்சர்யத்தை மட்டுமல்லாமல் ஒரு வித
பயத்தையுமே மனதில் விதைத்திருந்தது.
நிறைய
நாட்களில் நள்ளிரவில் இந்த நாய்கள் ஓலமிடும்போது மகன் தினேஷ் விழித்துக்கொண்டு அதைப்
பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவான். ”அப்பா.. அதுங்கல்லாம்
எதுக்குப்பா கத்துது?” “ராத்திரில மட்டும் ஏன்ப்பா கத்துது?” என கேட்டுக்கொண்டிருந்தவனிடம்
பள்ளியில் யாரோ ஒருவன் நாய்கள் கண்களுக்கு மட்டுமே பேய்கள் தெரியும் எனவும், பேய்களைப்
பார்த்தால் நாய்கள் அவ்வாறுதான் ஓலமிடும் எனவும் சொல்லி வைக்க அன்று முதல் தினேஷின்
கேள்விகளில் “உண்மையிலயே பேயெல்லாம் இருக்குதாப்பா?” “நாயிங்க கண்ணுக்கு பேய் தெரியுமாப்பா?”
“அப்ப நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குதாப்பா? அதனாலதான் நாயிங்கல்லாம் கத்துதாப்பா?”
என்பன போன்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டன.
தினேஷின்
பெரும்பாலான கேள்விகளுக்கு முகுந்தன் அவனைப்போல குழந்தைத் தனமான பதில்களைக் கூறி சமாளித்திருந்தாலும்,
உண்மையில் அவனுக்குள்ளும் அதே கேள்விகள் விடை தெரியாமல் உலவிக்கொண்டிருந்தன. நிச்சயம்
ஒருநாள் நள்ளிரவில் வெளியில் சென்று நாய்கள் அந்நேரத்தில் ஏன் ஓலமிடுகின்றன என்பதை
அறிந்து வந்து தினேஷிற்கு உண்மையைக் கூறவேண்டும் என்ற எண்ணம் முகுந்தன் மனதிற்குள்
இல்லாமல் இல்லை. இருந்தாலும் தனியே செல்வதற்கு மனதைரியம் போதுமானதாக இல்லை.
ஆனால்
அன்று கண்விழித்த போது ஏதோ ஒரு அசாத்திய தைரியம் இருப்பதைப் போல உணர்ந்தான். தினேஷூம்
அம்மாவுடந்தான் உறங்கிக் கொண்டிருக்கிறான். மணியும் பதினொன்று நாற்பதைக் கடக்க, இன்று
கண்டிப்பா வெளியில் சென்று நாய்கள் ஓலமிடும் காரணத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
எண்ணம் தோன்ற, சட்டென எழுந்தான். சத்தம் கேட்டு வசுந்தரா எழுந்துவிட்டால் இந்நேரத்தில்
நிச்சயம் வெளியில் செல்ல விடமாட்டாள் என்பதால் ஒலி எழும்பாத வண்ணம் மெல்ல ஒவ்வொரு அடியாக
எடுத்து வைத்து வாசற்கதவை அடைந்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியில் சென்று மூடினான்.
சுற்றிலும்
கும்மிருட்டு. எங்கோ ஒரிடத்தில் எரிந்த மின் விளக்கு தூரத்து நட்சத்திரம்போல் காட்சியளித்தது.
இந்த இருட்டில் எப்படிச் செல்வது என சற்று குழம்பும்போது நிலவை முடியிருந்த மேகம் மெல்ல
விலகிச் செல்ல, ஓரளவு வெளிச்சம் பரவியது. வயல்வெளியை நோக்கி நடந்தான். கருதருக்கப்பட்ட
உலர்ந்த நிலம் நீரில்லாமல் வெடித்து கரடுமுரடாக கால்களைக் குத்தியது.
குத்துமதிப்பாக
வயல்வெளிகளில் எதோ ஒரு திசையை நோக்கி நடந்தான். வீட்டை விட்டு கனிசமான தொலைவு வந்தாயிற்று.
அந்த நாய்கள் எங்கே சுற்றுகின்றன என சுற்றும்
முற்றும் தேடிக்கொண்டே நடந்தான். சட்டென இரண்டு பலிங்கு வடிவில் தூரத்தில் எதோ மின்ன,
முகுந்தன் நடப்பதை நிறுத்தினான். உருவம் தெரிவதற்கு முன்னர் அதன் கண்களே அதனை காட்டிக்கொடுத்தது.
கண்களைச் சுருக்கி கூர்மையாக்க, முழு உருவத்தையும் கணிக்க முடிந்தது. இதோ நிற்கிறது
ஒரு நாய். வயல்வெளிகளில் கட்டவிழ்த்து சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் பெரும்பாலும்
ஆபத்தானவை. அப்படியே நின்றான். இதயம் வேகமாகத் துடித்தது. லேசாக வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்த
நிலவினை இன்னொரு பெரிய மேகக்கூட்டம் அப்படியே மூடிவிட மறுபடியும் முற்றிலும் இருள்.
வானை ஒரு முறை பார்த்து பின் கீழே பார்த்த முகுந்தனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்போது
ஒரு ஜோடி பலிங்குகள் அல்ல. அருகருகே பல ஜோடி..
இரண்டு
நிமிடம் அதே இடத்தில் நிற்க, அத்தனை ஜோலி பலிங்குக் கண்களும் முகுந்தனையே வெறித்தன.
முகுந்தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஒரு அடியை முன்னே எடுத்து வைக்க,
”ஊஊஊஓஓஓஓஒங்ங்ங்ங்”
என ஒரு நீண்ட ஓலத்தை எழுப்பியது கூட்டத்திலிருந்த ஒரு நாய். தொடரந்து மேலும் இரண்டு
நாய்கள் அதற்கு ஸ்வரம் பிடிப்பது போல் ஊலையில, முகுந்தன் மனதை கல்லாக்கிக் கொண்டு மேலும்
ஒரு அடி எடுத்து வைக்க இன்னும் நான்கு நாய்களும் இன்னிசையில் சேர்ந்து கொண்டன. முகுந்தன்
வீட்டிலிருந்தபடி நள்ளிரவில் கேட்கும் அதே இன்னிசை.
முகுந்தன்
முகத்தில் லேசான புன் முறுவல். இத்தனை நாள் கேள்விக்கு விடை தெரிந்து விட்ட ஒரு நிம்மதி.
நள்ளிரவில் இந்தப் பகுதியில் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தே இவை இப்படிக் கத்துகின்றன.
இதற்கு நாம்தான் என்னென்னவோ கதைகளைக் கட்டிவைத்து நம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்
என எண்ணி நகைத்துக் கொண்டான்.
நாளை
ஒரு முறை தினேஷையும் அழைத்து வந்து அவன் நண்பர்கள் அவனுக்கு சொல்லியதெல்லாம் தவறு என
நிரூபிக்க வேண்டும் என மனதில் மறுபடியும் வீட்டை நோக்கி நடந்தான். சத்தம் கேட்காதபடி
மெல்ல கதவை திறந்து மூடி உள்ளே சென்று சத்தமில்லாமல் நடந்து படுக்கச் செல்லும்போது
ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. தினேஷின் குரல்.
”அம்மா…
இந்த நாயெல்லாம் பேயப் பாத்துதான் கத்தும்னு என் ஃப்ரண்டு சொன்னாம்மா. பேயெல்லாம் இருக்காம்மா?
நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குமாம்மா?”
”பேயெல்லாம்
இல்லைப்பா.. அப்படியே பேய் இருந்தாலும் அதெல்லாம் சாமி பாத்துக்குவாருப்பா” என்றாள்
வசுந்தரா.
”எந்த
சாமிம்மா?”
”அதோ
அந்த சாமிதாம்ப்பா” என சுவற்றை நோக்கி வசுந்தரா கை காட்ட, அதில் மங்கிய வெளிச்சத்தில்
நெற்றியில் பொட்டுனனும், சந்தன மாலையுடனும் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்
சென்ற வாரம் இறந்துபோன முகுந்தன்.