என்னய்யா
இவன் ரெண்டு மாசத்துக்கு ஒருதபா நாங்க காலேஜ்ல அதப் பண்ணோம் இதப்பண்ணோம்னு ஆரம்பிச்சிடுறானேன்னு
வெறிக்காதீங்க. கடுப்புல இருக்க சமயத்துல சந்தோஷமா இருந்த நாட்களை கொஞ்சம் திரும்பிப்
பாத்துக்குறதுக்காகத்தான் அடிக்கடி கல்லூரிப் பதிவு. மேலும் சில விஷயங்கள் மறந்துடக்
கூடாதுங்குறதுக்காக தோணுறப்போ பதிவா எழுதி வச்சிக்கிறதுக்கும் கூட. படிக்கிற நேரம்
போக மிச்ச நேரத்தல நாங்க என்ன பன்னுவோம்னா….. யார்ரா அது சிரிக்கிறது? ஒரு பேச்சிக்கு
கூட படிச்சோம்னு சொல்லக்கூடாதாப்பு. சரி க்ளாஸ்ல போய் தூங்குற நேரம் போக மிச்ச நேரத்த
பயனுள்ள வகையில கழிக்கிறதுக்காக பல விளையாட்டுக்கள கண்டுபுடிச்சி வச்சிருந்தோம். அப்படி
ஒரு விளையாட்டுக்களப் பத்தி தான் இன்னிக்கு பாக்கப் போறோம்.
க்ளாஸ்
ரூமுக்கு வெளில பொழுது போறது ஒரு பெரிய விஷயமே இல்ல. இவிய்ங்க பாடம் நடத்தும்போது பொழுதப்
போக்குறதுதான் ரொம்ப கஷ்டம். சரி சைடுல திரும்பி ”ஆல் யங் கேர்ள்ஸ்” ah பாத்தாவது டைம்
பாஸ் பன்னலாம்னு பாத்தா, நம்ம எந்தப் புள்ளைய பாக்க நினைக்கிறமோ அதத் தவற மத்த எல்லாம்
நம்ம அதப் பாக்குறத பாத்துரும்ங்க. ஒரே குஸ்டமப்பா. அந்த கேப்புல உருவானதுதான் “வரியப்படி..கண்டுபுடி”
விளையாட்டு.. நாலாவது டெஸ்க்லருந்து ஒரு பிட்டு பேப்பர்ல எதாவது ஒரு பாட்டோட சரணத்துல
வர்ற ரெண்டு வரிய எழுதி பின்னாடி ஆறாவது டெஸ்க்ல உள்ள என் நண்பனுக்கு அனுப்பி விடுவேன்.
அவன் அது என்ன பாட்டுன்னு கண்டுபுடிப்பான். கண்டுபுடிச்சா அவன் ஒரு கோலு. கண்டுபுடிக்காட்டி
நா ஒரு கோலு.. இப்படியே மாறி மாறி மாறி மாறி… க்ளாஸ் முடிஞ்சிரும். அப்புறம் கெளம்பி
ஹாஸ்டலுக்கு போக வேண்டியதுதான்.
அப்புறம்
ஹாஸ்டல்ல ஒரு கேம் உருவாக்குனோம் பாருங்க. உலகத்துல ஒருபய விளாண்டுருக்க மாட்டான் அதுமாதிரி.
அதான் ”செருப்பத் தூக்கு… எல்லாம் உனக்கு” விளாட்டு. சப்ளிங் மாதிரி இதுவும் ஒரு புதுமாதிரியான
விளாட்டு. அதாவது என் ஃப்ரண்ட்டு போட்டுருக்க செருப்ப அவனுக்கு தெரியாம தூக்கி ஒளிச்சி
வைக்கனும். ஒரு நாள் டைம். அவன் அசந்த நேரத்துல செருப்ப தூக்கி ஒளிச்சி வச்சிட்டா அந்த
செருப்பு நமக்கு. ஒளிச்சி வச்ச செருப்ப அவன் கண்டுபுடிச்சிட்டா அவனுக்கு. ” ஏண்டா இதெல்லாம்
ஒரு கேமாடா… எல்லா கல்யாண மண்டபத்துலயும் இந்த கேம்தானடா வெளாடுறாய்ங்கன்னு எல்லாரும்
வாயில எச்சிய காரிக்கிட்டு என்னப் பாக்குறீங்கன்னு இங்கருந்தே தெரியிது. ஆனா நானும்
என்னோட ரூம்மேட் ப்ரபுவும் இந்த கேம ரொம்ப சீரியஸா விளாடுவோம். எங்க செருப்ப தூக்கிருவாய்ங்களோன்னு,
செருப்ப காலோட கயிறு போட்டு கட்டிக்கிட்டெல்லாம் தூங்கிருக்கான். ஒன்ஸ் செருப்ப தூக்கிட்டா
கண்டுபுடிக்கிறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. 60 ரூமுக்குள்ள எந்த ரூம்ல போய் தேடுறது.
அதோட ஸ்வாகாதான். இதான் கேம் நம்பர் ரெண்டு.
அடுத்த
கேம் தான் நாங்க டெவலப் பன்னதுலயே ரொம்ப சக்ஸஸ்ஃபுல் கேம். வேற ஒண்ணும் இல்லை.. நம்ம
விஜய் டிவில கொஞ்ச நாள் முன்னால வந்த “யார் மனசுல யாரு” game ah தமிழ் சினிமா கேரக்டர்களுக்காக
மட்டும் வச்சி விளையாடுவோம். கேமோட ரூல்ஸ் இது தான். தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை
மட்டும் தான் நினைச்சிக்கனும். நடிகர், நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டான்ஸ்
மாஸ்டர்னு யார வேணாலும் நினைச்சிக்கலாம். மொத்தம் இருபத்தி ஒரு கேள்வி. ஒரிஜினல் கேம
போலவே இதுலயும் Yes/No பதில் மட்டும் தான் சொல்லனும். நீங்க சொல்ற பதில்/Data எல்லாம்
தமிழ் சினிமாவை சார்ந்ததா இருக்கனும். நாங்க கேக்குற கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியலன்னா
அந்த கேள்வி கணக்குல எடுக்கமாட்டோம். இப்படி பல ரூல்ஸ்போட்டு விளையாடுவோம்.
இது
கேக்க சாதாரணமா இருந்தாலும் எல்லாராலயும் விளையாட முடியாது. நாடி நரம்பு ரத்தம் சதை
புத்தி எல்லாத்துலயும் சினிமா வெறி இருக்கவிங்களாலதான் விளையாட முடியும். Just
like that ஒரு கேரக்டர நினைச்சிக்கிட்டு விளையாட வந்துட முடியாது. அந்த கேரக்டர பத்தி
கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல டேட்டா கரெக்டா இருக்கனும். ஆரம்பத்துல சிம்பிளா எல்லாரும்
ரஜினி, கமல் ரேஞ்சுக்கு நினைச்சிக்குவாய்ங்க. போகப்போக விளாவாரியா உள்ள புகுந்து வத்தலு,
தொத்தலு, வெந்தது வேகாதது, ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சதுன்னு ரண கொடூரமான கேரக்டர்களையும்
நினைச்சிக்குவாய்ங்க.
கிராண்ட்
மாஸ்டர் பொசிஷன்ல கேள்வி கேட்டு கண்டுபுடிக்கிறது நானும் நண்பர் ப்ரபுவும் தான். எங்களால
முடியாத பட்சத்துல எங்க டேட்டா பேஸ் குண்டு கார்த்தியையும், சிவில் கார்த்தியையும்
refer பன்னிக்குவோம். சில சமயம் அவனுங்களே கண்டெஸ்டண்ட்டா வந்துட்டா நமக்கு தாவு தீந்துரும்.
ஃபைனல்
இயர்.. ஏழாவது செமஸ்டர் நடந்துகிட்டு இருக்கு. குண்டு கார்த்தி நினைச்சிக்கிட்ட ஒரு
கேரக்டர நான், ப்ரபு, கணேசன் மூணு பேரும் கேள்வி கேட்டு கண்டுபுடிச்சிட்டு இருக்கோம்.
பெரும்பாலும் அவங்க நினைச்ச கேரக்டருக்கு ரஜினி, கமல் படங்களோட எதாவது தொடர்பு இருக்கான்னு
தான் முதல்ல செக் பன்னுவோம். அப்டி இருந்தா கண்டிப்பா அவுட்டு. ரஜினி படத்துல வர்ற
கேரக்டர்னா நா கண்டுபுடிச்சிருவேன். கமல் படம்னா ப்ரபு கண்டுபுடிச்சிருவான். ஆனா அன்னிக்கு
எதுவுமே சிக்கல. கண்ட கருமாந்திரத்த நினைச்சிருப்பான் போல. இருபத்தி ஒரு கேள்வியும்
முடிஞ்சிருச்சி. அந்த நாயி யாருன்னே கண்டுபிடிக்க முடியல. நாங்க கேட்ட கேள்வியிலருந்து
எங்களுக்கு கிடைச்ச டேட்டா என்னன்னா ”ஒரே ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிருக்க ஒரு ஆள்..
அவர் நடிச்ச அந்தப் படம் பெரிய ஹிட்டெல்லாம் இல்ல. அவருக்கு சின்னத்திரையோட தொடர்பு
இருக்கு” இவ்ளோதான். மண்டை காயிது. பெரும்பாலும் நாங்க இந்த கேம்ல தோக்குறதில்லை.
ஒரு
எக்ஸாம் முடிஞ்சி அடுத்த எக்ஸாமுக்கு மூணு நாள் லீவு. அந்த கேப்புல் படிக்காம இத விளையாண்டுகிட்டு
இருக்கோம். நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல ஆயிப்போச்சு. இதக்கண்டுபுடிக்காம விடக்கூடாதுடான்னு
யோசிச்சிக்கிட்டே உக்காந்துருக்கோம். டக்குன்னு கணேசன் “டேய் டெய்லி காலையில ஒருத்தன் ஒரு படத்துல
மீசை இல்லாம தண்ணிக்குள்ள பூ பரிச்சிட்டு இருக்க ஒரு பாட்டு டிவில போடுவாய்ங்களே.. அவன் கூட சீரியல்ல வருவானே…
“ அப்டின்னு எடுத்து விட அடுத்த 30 செகண்ட்ல புடிச்சிட்டோம். வேற யாரும் இல்லை ”மோக
முள்”ங்குற படத்துல ஹீரோவா நடிச்ச , இப்ப பல சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்குற, பெரும்பாலான
ஆங்கில டப்பிங் படங்களுக்கு குரல் கொடுக்குற “நடிகர் அபிஷேக்” தான் அந்த கேரக்டர்.
அவனயெல்லாம் கண்டுபுடிச்சது எங்க கேம் ஹிஸ்ட்ரில மிகப்பெரிய Achievement.
இந்த
குண்டு கார்த்திதான் இப்டின்னா சிவில் கார்த்தி அதுக்கும் மேல நினைப்பான். அவன்கிட்ட
விளையாடனும்னா சாதாரண கேள்விகள விட்டுட்டு Advanced mode la தான் விளையாடனும். ஒரு
தடவ ஒரு கேரக்டர் நினைச்சிக்கிட்டான். ரஜினிக்கு ஜோடியா நடிச்ச ஒரு பொண்ணு. ஒரே ஒரு
படத்துல தான் நடிச்சிருக்கு. அந்தப் படம் வந்தது 1990 க்கு அப்புறம். எவ்வளவு ஈஸின்னு
முதல்ல தோணுச்சி. எதைக்கேட்டாலும் இல்லை இல்லைங்குறான். இதுக்குமேல ரஜினி இனிமே படம்
நடிச்சாதாண்டா உண்டுன்னு தோல்விய ஒத்துக்கிட்டேன். கடைசில அது யாருன்னு கேட்டா “வள்ளி”
படத்துல ரஜினிக்கு ஜோடியா ஒரு பொண்ணு வரும். அத அதிகபட்சம் 30 செகண்ட் தான் காமிப்பாய்ங்க.
அதுவும் மூஞ்ச காமிக்க மாட்டாய்ங்க. அந்தப் பொண்ணோட பேர சொல்லி அது சம்பந்தமான ஒரு
ஆர்டிக்கிளையும் எடுத்து என்கிட்ட காமிச்சான். அன்னிக்கோட நா பொது வாழ்க்கையிலருந்து
ஓய்வு பெறலாம்னு முடிவு பன்னிட்டேன்
.
நாங்க
சீரியஸா விளையாண்டுகிட்டு இருக்கும்போது சுத்தி இருக்கவிய்ங்க ஹெல்ப் பண்றதா சொல்லி
காண்டேத்துறதும் உண்டு. ஒருதடவ ஹாஸ்டலுக்கு வெளில சீரியஸா ஒருத்தனோட விளாண்டுக்கிட்டு
இருந்தோம். கிட்டத்தட்ட கேம் முடியப்போற சமயம். யோசிச்சிட்டு இருந்தோம். அப்ப டக்குன்னு
“பாஸூ” என்கிற “அருண் முருகன்” எண்டர் ஆனான். “யோவ் பாஸூ… என்னய்யா இவ்ளோ யோசிச்சிட்டு
இருக்கீங்க… என்கிட்ட சொல்லுங்கையா நா ஹெல்ப் பன்றேன்” ன்னான். சரி நம்ம பாஸூ கண்டிப்பா ஹெல்ப் பன்னுவாருன்னு அவர்கிட்ட
டீட்டெய்ல் சொன்னோம். “பாஸூ.. படையப்பா படத்துல நடிச்சிருக்கவருய்யா… வயசு நாப்பதுக்கு
மேல…” ன்னு சொல்லி முடிக்கல “யோவ் பாஸூ.. ரம்யா கிருஷ்ணன்யா… இதுகூட தெரியல உங்களுக்கு”
ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தான். நாங்க ரெண்டு பேரும் ஸ்லோ மோஷன்ல திரும்பி செவத்துல
டமார் டமார்னு முட்டிக்கிட்டோம். ஆக்சுவலா அவன் நினைச்சிருந்த கேரக்டர் “இடிச்ச புளி
செல்வராஜ்”
அதே மாதிரி நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சிட்டு இருக்கும்போது அசால்டா சில பேரு சொல்லிட்டு போயிருவாய்ங்க. ஒரு கேரக்டர கண்டுபுடிக்க முடியாம நானும் ப்ரபுவும் முழி பிதுங்கிட்டு இருந்தோம். ஞான சுந்தர் அந்த வழியா வந்தான். டீட்டெய்ல கேட்டான். “டேய் இவன் இந்த க்ரோதம் படத்துல நடிச்சவண்டா” ன்னுட்டு போய்ட்டே இருந்தான். உண்மையிலயே நாங்க கண்டுபுடிக்க கஷ்டப்பட்டது க்ரோதம் ப்ரேமத்தான். இவனுக்குள்ளயும் எதோ இருக்கு பாரேன்னு ஸாக் ஆயிட்டோம்.
அடுத்த
சம்பவம் நண்பர் கஜேந்திரனோட. கஜேந்திரனப்பத்தி எப்ப நினைச்சாலும் எனக்கு ஒரு விஷயம்
ஞாபகத்துக்கு வந்து போகும். ஃபர்ஸ்ட் இயர் எங்க ரூமுக்கு அடுத்த ரூம்ல தான் கஜா இருந்தான்.
எல்லாரும் ஹாஸ்டல்ல சாப்பிட்டு பால் குடிச்சா, நம்மாளு மட்டும் பால புடிச்சிட்டு வந்து
ரூமுக்குள்ள வச்சி ஹார்லிக்ஸ் போட்டு கலக்கி குடிப்பான். குடிச்சிட்டு ஹார்லிக்ஸ் பாட்டில
பத்திரமா மூடி சூட்கேஸ்ல லாக் பன்னி வச்சிருவான். இது எங்களுக்கு ஒரே இரிட்டேட்டிங்கா
இருந்துச்சி. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்னு யோசிச்சோம். கடைசில பாருங்க அவன் வச்சிருந்த
VIP சூட்கேஸூம் நா வச்சிருந்ததும் ஒரே மாடல். அந்த மாடல்ல லாக் எல்லாமே காமன் தான்.
அவன் இல்லாத நேரத்துல நானு, ப்ரபு அனந்த், சுந்தர் எல்லாம் என்னோட கீய போட்டு தொறந்தோம்.
பொட்டி தொறந்துருச்சி. உள்ள பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ஹார்லிக்ஸ் பாட்டில எடுத்து
நாலு பேரும் வெறும் வாயிலயே மிச்சம் இருந்த அரை பாட்டில் ஹார்லிக்ஸயும் திண்ணுட்டோம்.
காலி பாட்டில உள்ள வச்சி பூட்டும்போது ஒரு யோசனை… இத இப்டியே வச்சா நல்லாருக்காதுன்னு
வேகவேகமா பாட்டில சுத்தமா கழுவி தொடச்சி, ஒரு பேப்பர்ல நாமம் வரைஞ்சி அந்த பாட்டிலுக்குள்ள
போட்டு எப்பவும் இருந்தமாதிரியே பூட்டி வச்சிட்டோம். ரெண்டு நாள் கழிச்சி ஆசையா ஹார்லிக்ஸ்
சாப்ட வந்த கஜாவுக்கு காத்திருந்தது அந்த நாமம் மட்டும்தான்.
இப்ப
நம்ம கஜா ஒரு நாள் நம்ம கேமுக்கு கண்டெஸ்டண்ட்டா வந்தான். அவன் நினைச்சது ஒரு ஹீரோயின்
கம் சைடு ஆக்டர். ரஜினி கூட நடிச்சிருக்கா. ஓரளவு க்ளிக் ஆயிருச்சி. உறுதிப்படுத்திக்க
“அந்த கேரக்டர் 90’s ல நடிச்ச ஒரு படம் மெகா ஹிட் ஆயிருக்கா?” ன்னு கேட்டோம். இல்லைன்னுட்டான்.
நாங்க கெஸ் பன்னி வச்சிருந்ததெல்லாம் புஸ்ஸூன்னு ஆயிருச்சி. மறுக்கா இன்வெஸ்டிகேஷன
ஆரம்பிக்கிறதுக்குள்ள 21 கேள்வியும் முடிஞ்சி போச்சு. நாங்க கிட்டத்தட்ட மெண்டல் ஆகுற
ஸ்டேஜுக்கு வந்துட்டோம். இவன் சொன்ன பதிலுக்கெல்லாம் மேட்ச் ஆகுற மாதிரி இருந்த ஒரு
ஆள் நடிச்ச படம் 90’s la ப்ளாக் பஸ்டர். ஆனா இவன் இல்லன்னுடானே… யாரா இருக்கும். நைட்டு
ஃபுல்லா போச்சு. கண்டுபுடிக்க முடியல. கடைசில கஜாகிட்ட தோல்விய ஒத்துக்கிட்டோம். சரி
யாருன்னு சொல்லுடான்னு கேட்டா… அவனோட ஃபேவெரெட் ஸ்மைலோட “சில்க் ஸ்மிதா” மச்சின்னான்.
ஒக்கா
மவனே.. இத்தானடா அந்த கேரக்டர் நடிச்ச படம் 90’s la மெகா ஹிட்டான்னு மாறி மாறி கேட்டோம்.
சீவலப்பேரி பாண்டில சிலுக்கு தானடா நடிச்சிருக்கான்னோம். “ஆமா சீவலப்பேரி பாண்டி ஒரு
சுமாரான படம்தான.. அது எங்க ஓடுச்சி?” ன்னான். ”டொய்ய்ங்” ன்னு எங்களுக்கு தலை தொங்கிருச்சி.
“என்ன மச்சி இல்லையா?” ன்னு உன்னை நினைத்து சார்லி மாதிரி அவன் கேக்க பதிலுக்கு மேட்டுக்குடி படத்துல “இப்ப நாதான் காலிங்”
ன்னு சொல்ற கார்த்திய பாத்து கவுண்ட மணி கும்புடுவாரே.. அந்த மாதிரி ஒரு கும்புடப்
போட்டுட்டு சைலண்ட்டா பொய்ட்டோம். அவனோட விளாண்ட கடைசி விளாட்டும் அதான்.
அதே
கேம இன்னும் டெவலப் பன்னி, “ஒரு செகண்ட் கேரக்டர்” ன்னு ஒண்ணு விளையாண்டோம். அதாவது
ஒரு நல்ல ஃபெமிலியரான படத்த சொல்லி அதுல ஒரே ஒரு ஷாட்ல மட்டும் வர்ற கேரக்டர நினைச்சிக்க சொல்லி அத கண்டுபுடிக்கிறது. உதாரனமா ஒரு கேம்ல
நா படையப்பா படத்துல நா மீசைவச்ச குழந்தைபப்பா ந்ங்குற வரி வரும்போடு தலைவர் முகம்
ஒரு குழந்தை மாதிரி மாறுமே.. அந்தக் குழந்தைய நினைச்சிக்கிட்டேன். இப்படி பல பரிணாமங்களை
அடைஞ்ச இந்த கேம் காலேஜ் முடிஞ்சப்புறமும் நேரம் கிடைக்கும்போது, மீட் பன்னும்போது
விளையாண்டுக்கிட்டு தான் இருந்தோம். காலப்போக்குல அவன் அவன் குடும்பம் புள்ளை குட்டின்னு
செட்டில் ஆயிட்டதால இப்ப விளையாட ஆள் தான் இல்லை. இன்னும் யாருக்காவடு விளையாடனும்னு
ஆசை இருந்தா வாட்ஸப்ல ஒரு ping பன்னுங்க. ஐ ஆம் வொய்ட்டிங்...
குறிப்பு:
உடுமலைப்பேட்டை கவுரவக் கொலை சம்பந்தமாக நான் எழுதிய சென்ற பதிவின் கருத்துக்களை நண்பர்கள்
பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் சிலர் மனது புண்படும்படியாக இருந்தது எனைபதையும்
தனித்தகவல்கள் வாயிலாகவும், பின்னூட்டங்கள் வாயிலாகவும் அறிந்தேன். (சில “டீசண்டான”
பின்னூட்டங்கள் வாயிலாகவும் அறிந்தேன்). என் மனதுக்கு தோன்றியவற்றை எழுதினேன். பெரும்பாலும்
படிப்பவர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவுகளை எழுதி வருகிறேன். சிலசமயம்
கொஞ்சம் சீரியஸான பதிவுகளை முயற்சி செய்யும் போது இதுபோல் மாட்டிக்கொள்கிறது. மன்னிக்கவும்.