Wednesday, January 24, 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ஒரு கிளுக் அனுபவம்!!


Share/Bookmark

சுமார் நாலரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி தமிழ்ப்படம் சிவாவைப் போல் முதலில் பைக், அடுத்து மெட்ரோ, அடுத்து மின்சார ரயில் அதன்பிறகு ஒரு ஆட்டோ என பல விதமான பயணங்களுக்குப் பிறகு சுமார் 8 மணிக்கு கிளாம்பாக்கத்தை அடைந்தேன். அந்த ஆட்டோக்கார அண்ணனிடமே இன்னும் ஒரு அரைமணி நேரம் ஓட்டச் சொல்லியிருந்தால் வீட்டிலேயே போய் இறங்கியிருக்கலாம். ஆனால் முன்பதிவு செய்த டிக்கெட் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிடச் சொல்லி இறங்கிக்கொண்டேன். 

முன்னதாக வண்டலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வந்த உடனேயே நான்கைந்து ஷேர் ஆட்டோக்கள் காத்திருந்தன. "கிளாம்பாக்கம் அம்பது அம்பது அம்பது" என ஆட்களை அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"என்னது ஒரு ஆளுக்கு அம்பதா?" என ஆச்சர்யப்பட்ட ஒருசில அக்காக்களிடம் "போ.. ட்ராஃபிக்ல மாட்டி சாவு" என அசால்டு காட்டினார்கள். 

தென் சென்னைப் பகுதி ஷேர் ஆட்டோக்களில் கொடுமை என்னவென்றால் ஒரு வரிசை சீட் இருக்குமிடத்தில் படிக்கட்டுபோல இரண்டடுக்கு சீட்டுகளை வைத்து மேல் கீழ் என ஆட்களை அடைப்பார்கள்.

இதில் பாவப்பட்டவர்கள் பின்வரிசையில் உட்காருபவர்கள்.

"கால நல்லா மடிச்சி 

ஒக்காருணா.. நல்லா மடிச்சி ஒக்காருணா" அவர்கள் சொல்வது போல மடித்து உட்கார்ந்தால் இறங்கும்போது ஆள்வைத்துத்தான் மடிப்பை எடுக்கவேண்டும்.

ஒருவழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். "வாவ்.. ஏர்போர்ட் மாதிரி பயங்கரமா இருக்கே" என ஒருசில செல்ஃபிக்களைப் போட்டுவிட்டு உள்ளே சென்றால் கவுண்டமணி ஒரு படத்தில் அவர் வீடு என்று ஒன்றைத் திறந்தால் பின்புறம் வெட்டவெளியாக இருக்குமே அப்படிப்பட்ட ஒரு ஃபீல் இருந்தது.

"இங்கதான் டிவி வரப்போகுது.. இங்கதான் ஃப்ரிச்ஜ் வரப்போகுது" என்பாரே அதே போலவே அனைத்து இடங்களிலும் போர்டுகள் மட்டும் இருக்கிறதே தவிற கட்டப்பட்டிருக்கும் அனைத்து கடைகளும் ஷட்டர் போட்டு மூடப்பட்டிருக்கிறது.

பசி வயிற்றைக் கிள்ள உணவகத்தைத் தேடினேன். ஆங்காங்கு பயணிகளுக்கு உதவ இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.

"அண்ணே.. ஹோட்டல் இருக்காண்ணே?"

இருக்குசார்.. கடைசில சங்கீதாவும் கணேஷ் பவனும் இருக்கு என்றார்கள். வேகமாகச் சென்றேன். முதலில் கணேஷ் பவன் வந்தது. அதற்கு முன் நின்று நிறைய பேர் தயிர்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"ப்ளடி பக்கர்ஸ்.. என்னடா நைட்டுல தயிர்சாதத்த சாதத்த சாப்டுகிட்டு இருக்கீங்க. இப்பபார்ரா நா என்ன சாப்புடுறேன்னு"என்று வேகமாகச் சென்று "அண்ணே சாப்ட என்னன்ன இருக்கு" என்றேன்.

"எதுவும் இல்ல.. தயிர்சாதம் மட்டும்தான் இருக்கு" என்றார். அப்போதுதான் அத்தனை பேர் ஏன் தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. 

"அண்ணே.. பக்கதுல வேற எதாவது?" 

அந்தக் கடைசில சங்கீதா இருக்கு போங்க என்றார். வேகவேகமாக சங்கீதாவைப் பார்க்கச் சென்றேன். 

சங்கீதாவுக்கு முன் ஒரே கும்பல்.

"என்ன இவ்வளவு கூட்டம்..பொங்கல் தொகுப்பு எதும் குடுக்குறானுகளா?" கொஞ்சம் முண்டிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் பில் போடும் அம்மணி பில் போடமாட்டேன் என்று நிற்கிறார். சுத்தி அத்தனை பேர் கையில் காசை நீட்டியபடி சாப்பாடிற்காக நிற்கிறார்கள்.



அனைத்தும் தீர்ந்துவிட்டது. இப்போதுதான் அடுத்த ரவுண்டு இறக்குகிறார்கள். அதைப் பார்த்தபின் தான் பில் போடமுடியும் பத்துநிமிடம் ஆகும் என்கிறார். 

அதுக்குள்ள பஸ்ஸ விட்டுட்டா என்ன பன்றது. சரி கணேஷ் பவன் தயிர்சாதத்தையாச்சும் வாங்கிடலாம் என்று மீண்டும் அங்கே சென்றேன்.

"அயாம் வெரி சாரி சார். ஒரு பத்து நிமிசம் முன்னால வந்துருந்தா கிடைச்சிருக்கும்" என்றார்.

அடப்பாவிகளா.. வியட்நாம் காலனி படத்தில் நள்ளிரவில் கவுண்டமணி வினிதாவிடம் உச்சகட்ட பசியில் "பழைய கஞ்சி எதாவது இருக்குமா" எனக் கேட்பார்

"இப்பதான் மாட்டுக்கு ஊத்துனேன்"

"மாடு இந்நேரம் குடிச்சிருக்குமா?" என்பார். கிட்டத்தட்ட அந்த நிலமையாகிவிட்டது.

மீண்டும் சங்கீதாவை நோக்கிச் சென்றேன். கொஞ்ச நேரத்தில் பில் போட ஆரம்பித்தார்கள். பரோட்டா சப்பாத்தி இருக்கு. ஆனா குருமா இல்ல. தொட்டுக்க சாம்பார்தான் என்றார்கள்.

அடேய்.. பரோட்டாவுக்கு சட்னி தொட்டு சாப்டுறவனுங்ககூடயே டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பன்றவய்ங்கடா நாங்க. நெஞ்சில கொஞ்சம் கூட ஈரம் இல்லாம பரோட்டாக்கு சாம்பார் குடுக்குறீங்களேடா.. மனுசடா நீங்கல்லாம்..

ஒருசிலர் நேரமின்மையால் வேறு வழியில்லாமல் அதையும் வாங்கிச் சென்றார்கள். கும்பலுக்கு நடுவில் நிற்கும்போது வயிற்றில் பார்வார்த்தது போல ஒரு செய்தி காதில் விழுந்தது. "வெஜ் பிரியாணி இருக்காம்" 

" யப்பா சாமி.. அதக் குடுறா.." என 131 ரூபாய் கொடுத்து வாங்கினால் நாலு வாய்க்குக் கூட காணவில்லை. சரி இதாச்சும் கிடைச்சிச்சே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஒரு டீக்கடை இல்லை. அவசரத்திற்கு பிஸ்கெட் வாங்காலாம் என்றால் கண்ணில் ஒரு கடை தென்படவில்லை. ஒரு கணேஷ் பவன், ஒரு சங்கீதா ஒரு ஆவின். இவ்வளவுதான் அந்த மொத்த பேருந்துநிலையத்திலும் இயங்குகிறது என நினைக்கிறேன்.

பயணத்தில்தான் மக்களை அலைக்கழிக்கிறார்கள் என்றால் சாப்பாட்டிற்கும் அலைய விட்டிருக்கிறார்கள். எதையுமே முறையாக ஏற்பாடு செய்யாமல், உணவிற்குக் கூட தட்டுப்பட விட்டு அவ்வளவு அவசரமாக பேருந்துகளை இங்கு மாற்றவேண்டுமா? 

இதில் சென்னையிலிருந்து இயக்கினால் பேருந்துகளுக்கு ஃபைன் வேறு போடுவதாக எச்சரிக்கிறார்கள். 

இவர்களின் சுயநலத்திற்காக, மக்களை அலைக்கழிக்கும் இந்தப் பாவமெல்லாம் இவர்களைச் சும்மா விடாது. அதுவும் பரோட்டவிற்கு சாம்பார் தொட்டுத் தின்றவர்களின் சாபம் சத்தியமாக இவர்களைச் சும்மாவிடாது.

-அதிரடிக்காரன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...