நாட்டுல ரொம்ப முக்கியமான சம்பங்கள் எதாவது நடந்து முடியிறப்போ அடுத்த ஒருவாரம் பத்துநாள்ல அந்த சம்பவத்தை மையமாக வச்சி ஒரு படம் வரப்போகுதுன்னு கண்டிப்பா ஒரு அறிவிப்பு வந்தே தீரும். அப்படி இந்த வருஷம் ஜனவரில நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட பூஜைதான் இந்த கருப்பன் போல.
ட்ரெயிலரப் பாக்குறப்போ எதோ ஜல்லிக்கட்ட மையமா வச்சி எடுக்கப்பட்ட ஒரு கிராமத்து ஆக்ஷன் படம் மாதிரி தோணுச்சி. ஆனா படத்தோட ஆரம்பத்துலயும் க்ளைமாக்ஸ்லயும் வர்ற வாடிவாசல் காட்சிகளத் தவற படத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இல்ல.
படம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆகியும் படத்தோட கதை என்ன , எதை நோக்கிப் போயிட்டு இருக்கு அப்டிங்குறதயே புரிஞ்சிக்க முடியல. ”புரிஞ்சி போச்சு சார்… இண்டர்வல் ப்ளாக்குல வச்சிருக்கீங்க ட்விஸ்ட்ட” அப்டின்னு பயணம் படத்துல பிரித்திவிராஜ் ரசிகன் வெய்ட் பன்றமாதிரி வெய்ட் பன்னா இண்டர்வலும் வந்துருச்சி. ஆனா கதைக்கான எந்த அறிகுறியும் இல்லை. “செகண்ட் ஹாஃப்ல மொத்தக் கதையும் சொல்லலாம்னு தானே வெய்ட் பன்றீங்க… தெரியும் சார்”ன்னு மறுபடியும் செகண்ட் ஹாஃப் பாத்தா படமே முடிஞ்சி போச்சு. கடைசிலதான் படத்தோட கதையே நமக்கு வெளங்குச்சி. ”கதையே இல்லாம படம் எடுக்குறது எப்படி?” அப்டிங்குறத்த்தான் இந்தப் படத்தோட கதையே.
மாடுபிடி வீரனான கருப்பனுக்கு, தன்னோட மாட்டை அடக்குனா தங்கச்சிய கல்யாணம் பன்னித்தர்றேன்னு வாக்கு குடுக்குறாரு ஊர்ல பெரிய கையான பசுபதி. கருப்பனும் மாட்ட அடக்கிட, அழகான தங்கச்சிய கருப்பனுக்கு கட்டி வச்சிடுறாங்க. ஆனா பாருங்க பசுபதியோட மச்சான் பாபி சிம்ஹா இளவு காத்த கிளி மாதிரி அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்க மாமா வீட்டுலயே குத்த வச்சி உக்கார்ந்துருக்க, நேத்து வந்த கருப்பன் லபக்குன்னு கவ்விக்கிட்டுப் போயிட பாபி சிம்ஹாவுக்கு கோவம் வருது பாருங்க… ”அவளுக்கு எத்தனை கல்யாணம் பன்னாலும், தாலிய அறுத்துட்டு அவ கூட வாழாம விடமாட்டேண்டா”ன்னு ஒரு சபதம் போடுறாரு. வரே…வா.. இதுவல்லவா சபதம்.
அதுக்கு பல ஜால்ரா வேலைகள்லாம் பாத்து கருப்பன் ஜோடிய பிரிக்க முயற்சி செய்ய, கடைசில பிரிச்சாரா இல்லையாங்குறது தான் கதை. அவரு பிரிச்சாரோ இல்லையோ தியேட்டருக்குள்ள விட்டுக்கிட்டு நம்மள நல்லா பிரிக்கிறாங்க.
விஜய் சேதுபதி காது வரைக்கும் மீசை வச்சிக்கிட்டு கெத்தா வந்து மாட்ட அடக்கும்போது, இன்னிக்கு செம ஆக்ஷன் ப்ளாக் காத்துக்கிட்டு இருக்குன்னு நினைச்சேன். கடைசில சார்லி சொல்ற மாதிரி “அவரும் ஆசைப்பட்டார்”ங்குற நிலமையாயிருச்சி. அந்த மீசைக்கு ஒரு மதிப்பு குடுத்தாவது இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாம்.
காமெடிக்கு ஒரு ஜோடி சிங்கம் புலி. சிங்கம் புலிய காமெடிக்கு சேத்துக்கிட்ட படம் எதாவது வெளங்கிருக்கா? கொடுமை என்னன்னா விஜய் சேதுபதியும், சிங்கம் புலியும் பாடி கண்டிஷன்ல ஒரே மாதிரி இருக்காங்க. ஒரே மாதிரி சட்டை வேற போட்டுருக்காங்க. மூஞ்ச மூடிட்டு பாத்தா யாரு சேதுபதி யாரு சிங்கம்புலின்னே கண்டுபுடிக்க முடியாது போல. ஒரு ஹீரோவுக்கு ரொம்ப முக்கியமே உடம்புதான். சேதுபதி சார் அதப் பத்தி கண்டுக்கிறதே இல்ல போல. டி.ஆர் மாதிரி ஆகிட்டு இருக்காரு.
பசுபதிக்கு நல்ல கேரக்டர். ஆனா நடிக்கிறதுக்கு தான் எந்த நல்ல சீனும் இல்ல. இந்த மசாலா படங்கள்லயெல்லாம் “விஷயத்த பெருசு பன்ன வேணாம்”, “இப்ப வேணாம்… ஆறு மாசம் கழிச்சி செய்வோம்”, “எலெக்ஷன் வர்றதால இப்ப கை வச்சா நம்ம பேர்தான் கெட்டுப்போகும்” “அடுத்து நம்ம அடிக்கிற அடி தலையிலயா இருக்கனும்” இப்டிப்பட்ட வசனங்கள சொல்றதுக்குன்னே வில்லனுக்கு அள்ளக்கையா பக்கத்துலயே ஒரு கேரக்டர் வரும். அந்த மாதிரி ஒரு சூப்பர் கேரக்டர்தான் பாபி சிம்ஹா இந்தப் படத்துல பன்னிருக்காரு. பாடி சோடா ஆறு மாசமா பில்ட் அப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்க மாதிரி கடைசி வரைக்கும் அள்ளக்கையாவே நடிச்சிருக்காரு கருப்பன் படத்தோட மெயின் வில்லன் பாபி சிம்ஹா.
படத்துல ஒரே ஆறுதல் ஹீரோயின். தங்கம் மாதிரி செம அழகு. இந்த நாய்க்கு ஒரு முழு எழும்புத்துண்டு கிடைச்சிதுன்னா அது ஒரு இடத்துல இருக்காது. அத வச்சிக்கிட்டு ரோட்டுல சுத்தும், கொஞ்ச நேரத்துல எதாவது சந்துல நிக்கும், அப்புறம் அதக் கொண்டு போய் எதாவது ஒரு இடத்துல வச்சிட்டு அது பக்கத்துலயே உக்காந்துக்கும். படத்துல விஜய் சேதுபதிக்கு அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்குடுத்த அப்புறம் நடக்குறது அதுதான். கொஞ்சுறாரு.. கொஞ்சுறாரு.. கொஞ்சிக்கிட்டே இருக்காரு. வீட்டுல ரோட்டுல, கோவில்ல, ஹாஸ்பிட்டல்லன்னு இதே தான். எடுக்குறதுக்கு சீன் இல்லாம எடுத்த சீனையே எத்தனை தடவய்யா எடுப்பீங்க. படத்துல முக்கால்வாசிக் காட்சிகள் சேதுபதியும் ஹீரோயினும் பேசிக்கிற காட்சிகள்தான்.
ஒருகட்டத்துல விஜய்சேதுபதி குரலே நமக்கு அலர்ஜியாகுற அளவுக்கு நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டு இருக்காரு. ஒருசில இடங்கள்ல விஜய்சேதுபதியோட ட்ரேட் மார்க் நக்கல் ரசிக்க வைக்கிது. ஆனா ஓவராலா விஜய் சேதுபதி அலுக்கிறாரு.
படத்துல எது நடக்குதோ இல்லையோ , கால் மணி நேரத்துக்கு ஒரு பாட்டு மட்டும் கரெக்ட்டா வந்து நிக்கிது. கருவா கருவா பயலே பாட்டு மட்டும் சுமார் ரகம். மத்ததெல்லாம் கடினம். பாடல்களப் படமாக்குன விதம் அதுக்கும் மேல. சும்மா ஹீரோ ஹீரோயின் மூஞ்ச மூஞ்ச காமிச்சா மட்டும் பாடல்களுக்கு பத்தாது. எதாவது ஒரு தீம் எடுத்துக்கிட்டு அதுல பன்னாதான் சுவாரஸ்யமா இருக்கும்.
தொண்டன் படத்துல தோழர் சமுத்திரக்கனி சம்பந்தமே இல்லாம காளைகள் பேரெல்லாம் நாலு பக்கம் எழுதிவச்சி மனப்பாடம் பண்ணி ஒப்பிச்ச மாதிரி இங்க சம்பந்தமே இல்லாம தீடீர்னு விஜய் சேதுபதி விவசாயம் பன்றாரு. விவசாயிகளப் பத்தி பெருமையா ரெண்டு வசனம் பேசுறாரு. தியேட்டர்ல விசில். ஏன் இதெல்லாம்?
படத்தோட முக்கால்வாசி இடங்கள்ல கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள்தான் கண்ணுமுன்னால தெரியிது. முத்தையா ஒரே மாதிரி படம் எடுத்தாலும், ஒரே படத்த திரும்பத் திரும்ப எடுத்தாலும் இந்த அளவுக்கு ஜவ்விழுப்பா இழுக்க மாட்டாரு. படம் மொத்தம் ரெண்டே கால் மணி நேரம்தான் ஓடுது. ஆனா எதோ ரெண்டு நாளா படம் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கி. இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் இன்னும் சுவாரஸ்யமா திரைக்கதை எழுதுனா மட்டும்தான் ஜெயிக்க முடியும்.
முதல் காட்சிக்கு விஜய் சேதுபதியோட ரசிகர்கள் செம சவுண்டு. டைட்டிலுக்கெல்லம் ஒரே ஆர்ப்பாட்டம். இண்ட்ரோ சீன் முடிஞ்சோன ஆஃப் ஆனவங்கதான். அதுக்கப்புறம் படம் முடிஞ்சப்புறம் ரெண்டு மூணு பேர நாந்தான் எழுப்பி விட்டேன். அதுவும் படம் முடிஞ்சி போகும்போது அவங்கள்ள ஒருத்தர் சிங்கம்புலி வாய்ஸ்ல “நீங்கல்லாம் மாடுமுடித்தாண்டி சாகப்போறீங்க”ன்னு படம் எடுத்தவங்களத் திட்டிட்டுப் போனது ஹைலைட்.
மொத்தத்துல வந்த தடமே தெரியாமா இப்டி வந்துட்டு அப்டிப் போற விஜய் சேதுபதியின் படங்கள்ல கருப்பனும் ஒண்ணு.
9 comments:
:-))))
Nan iniki dha padam parthen. Enaku Padam one time watchable nu dha thonudhu aana Yappa. Padathula 15 paatu irukum pola. Romance scene over aah vechu bore adika vechutanga. 15 Song, and over romance mattum kalichu partha padam ok.
உடம்பு மட்டுமென்ன... முகத்திலேயே ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி.இவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடிந்ததே ஆச்சரியம்தான்
உடம்பு மட்டுமென்ன... முகத்திலேயே ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி.இவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடிந்ததே ஆச்சரியம்தான்
செம கடுப்பன்
செம கடுப்பன்...
செம கடுப்பன்...
கருப்பன விட கடுப்பன் சூப்பர்
நாகார்ஜுனா,சமந்தா நடிச்ச "Raju gaari ghadhi 2" பாத்துட்டீங்களா?
Post a Comment