Wednesday, February 14, 2018

கலகலப்பு 2!!!


Share/Bookmark
ஹீரோக்கள் அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரியும் காமெடியர்கள் ஹீரோக்கள் மாதிரியும் திரைப்படங்கள்ல உலா வருவது பெரும்பாலும் சுந்தர்.சி படங்கள்ல மட்டும்தான். ஒரு மார்க்கெட் இல்லாத ஹீரோ, பீக்ல இருக்க ஒரு காமெடியன் இந்த காம்பினேஷன்ல தான் சுந்தர்.சி படம் பண்ணிட்டு இருக்காரு. இந்த காம்பினேஷன் தொடர்ந்து அவருக்கு வெற்றியையும் குடுத்துக்கிட்டு இருக்கு.

இத்தனை வருஷ தமிழ் சினிமா வரலாற்றுல ரொம்ப நாளா போரடிக்காத ஒரு ஃபார்முலா இருக்குன்னா அது சுந்தர்.சியோட ஃபார்முலாதான். கூட்டுக்குடும்பம், கல்யாணம், ஊர்த்திருவிழா, ஹீரோ காமெடியனுக்கு லவ் பன்ன சொல்லிக்குடுக்குறது, காமெடியன் ஹீரோவுக்கு லவ் பன்ன சொல்லிக்குடுக்குறது.. பெரும்பாலான சுந்தர்.சி படங்கள் இந்த மாதிரி காட்சிகள்தான் சுத்தி சுத்தி வரும். கதை வேணும்னு நினைச்சார்ன்னா எப்பவாச்சும் சேர்த்துக்குவாரு..இல்லன்னா அதயும் டீல்ல விட்டுருவாரு. உள்ளத்தை அள்ளித்தா படத்துல பண்ண அதே காமெடிகளத்தான் இன்னும் செய்யிறாரு. ஆனா இப்பவும் அந்த காமெடிக்கு நம்மள சிரிக்க வைக்கிறாரு. அதான் அவரோட ப்ளஸ்ஸே.. அதே வரிசையில வந்துருக்க அடுத்த படம்தான் கலகலப்பு 2.

கலகலப்பு முதல் பாகத்தோட அதே டெம்ப்ளேட்ல, கிட்டத்தட்ட அதே கதையோட எடுக்கப்பட்ட படம். கடந்த பத்து வருடங்கள்ல மக்களை அதிகம் சிரிக்க வைத்த ஒருசில படங்கள்ல கலகலப்புக்கு முக்கியமான இடம் உண்டு. அப்படிப்பட்ட படத்துக்கு ரெண்டாவது பகுதி எடுக்குறது, அதுவும் முதல் பகுதில இருந்த முக்கிய காமெடியனான சந்தானம் இல்லாமல் எடுக்குறது மிகப்பெரிய சவால்னு தான். சந்தர்.சி அந்த சவால்ல கண்டிப்பா ஜெயிச்சிட்டார்னுதான் சொல்லனும்.

மொத்தப்படமுமே கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரி இருக்கு. அவ்வளவு முண்ணனி நடிகர்கள். இன்னிக்கு சூழல்ல வடிவேலு, சந்தானம், விவேக், சூரி இந்த நாலு பேரத்  தவற, மற்ற எல்லா காமெடியன்களும் படத்துல இருக்காங்க. இவ்வளவு பேரயும் இனிமே ஒட்டுமொத்தமா ஒரே படத்துல பாக்குற வாய்ப்பு மிகக் குறைவுதான்.

முதல் பாதி போர் அடிக்காம அதே சமயம் ரொம்பவும் சிரிக்க வைக்காம சுமாரான காமெடிகளோட நகருது. முதல் பாதியப் பொறுத்த அளவு  கதாப்பாத்திரங்களையும், அவங்களோட தன்மையையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ரெண்டாவது பாதியில நம்மள நான் ஸ்டாப்ப சிரிக்க வைக்கிறதுக்கான ஒரு வார்ம் அப் தான்.

ஆனா  அத ஈக்குவல் பன்ற மாதிரி ரெண்டாவது பாதி ஆரம்பிச்சதுலருந்து  முடியிற வரைக்கும் நம்மள சிரிக்க வைச்சிருக்காங்க. முதல் பாதி பெரிய அளவுல நம்மள ஈர்க்கத்தற்கு காரணம் ஜீவா. என்னைப்பொறுத்த அளவு ஜீவா ஒரு ஹீரோ மெட்டிரியலே இல்ல. கதை சற்று டொம்மையாக இருந்தாலும் சில ஹீரோக்கள் திரையில அந்த குறை இல்லாம பாத்துக்குவாங்க. உதாரணமா சமீபத்துல வந்த ஸ்கெட்ச். ரொம்ப சுமாரான க்ளீஷேயான காட்சிகள்தான் படம் முழுக்க., அதுல விக்ரமுக்கு பதில வேற ஒரு சுமார் ஹீரோ நடிச்சிருந்தா பத்து நிமிஷம் கூட உக்கார்ந்திருக்க முடியாது.

ஜீவாவுக்கு அந்த கெப்பாகுட்டி ரொம்ப ரொம்பக் குறைவு. ஜீவாவால இந்தப் படத்துக்கு எந்த ஒரு value addition உம் இல்ல. கலகலப்பு முதல் பாகத்துல நடிச்ச விமலே பரவால்லன்னு தோணுச்சி. விமலுக்கு காமெடி வராதுன்னாலும் விமல வச்சி காமெடி பண்ணிக்கலாம். என் கூட படம் பாத்த ஒருத்தர் படம் ஆரம்பிச்சி ஒருமணி நேரத்துக்கப்புறம் ஹீரோ எப்பங்க வருவாருன்னு கேட்டுக்கிட்டு இருக்காரு. மிர்ச்சி சிவா ஃபேன் போல.


படத்துக்கு பெரிய ப்ளஸ் சிவா. சிவாவுக்கு ப்ளஸ் அவரோட டயலாக் டெலிவரி. சீரியஸான டயலாக்க அவர் பேசுனா கூட செம்ம காமெடியா இருக்கும். கலகலப்பு 1ல வில்லன்கிட்ட “நீ அந்த வைரத்த குடுத்ததாதான் எனக்கு கல்யாணம் ஆகும். எனக்கு கல்யாணம் ஆகனும்னு உனக்கு ஆசையில்லை” அப்டின்னு மூஞ்ச செம சீரியஸா வச்சிட்டு கேப்பாரு. இந்தப் படத்துலயும் அவர் பேசுற நிறைய அசால்ட்டு வசன்ங்கள் சிரிக்க வைக்கிது 
  

மத்தபடி எல்லா காமெடியன்களுமே நல்லா பண்ணிருக்காங்க. முனீஷ்காந்த்துக்கு இன்னும் நல்ல ஸ்கோப் குடுத்துருக்கலாம். யோகிபாபு, சிங்கமுத்து காம்பினேஷன் செம. ராதாரவிக்கு பதிலா அவரோட ரோல் ஆனந்தராஜ் பண்ணிருந்தா பட்டைய கிளப்பிருக்கும். ஜெய் ஒரு தேவையில்லாத ஆணிதான். பெரிய அளவுல ஸ்கோப் இல்லை. ஹீரோயின்கள் எப்பவும்போல பாட்டுக்கு மட்டும். 

பாடல்கள் ஹிப்ஃஹாப் தமிழா. எல்லா பாடல்களுமே கேக்குற மாதிரி போட்டுருக்காரு. படத்துல மொத்தம் 5 பாட்டு. அஞ்சி பாட்டுலயுமே ரெண்டு ஹீரோவும் ரெண்டு ஹீரோயினும் டான்ஸ் ஆடுறாங்க. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்னா ரெண்டு ஹீரோவுக்கும் ஈக்குவல் இம்பார்டன்ஸ் குடுக்கனும்னு சொல்லுவாங்க. ஆன இந்த அளவுக்கு பாட்டுல கூட துண்டு விழுகாம ரெண்டு ஹீரோவுக்கும் சமமா பிரிச்சி குடுத்து டீல் பன்றத நா இப்பதான் பாக்குறேன். அந்த மூணாவது ஹீரோ எங்கன்னுதானே கேக்குறீங்க..? அவர் இண்டர்வல்ல வர்றதால செகண்ட் ஹாஃப்ல வர்ற ரெண்டு பாட்டுல அவரும் ஜாய்ண்ட் அடிச்சிக்குவாரு.


மொத்தத்துல அரண்மனை 2 ல விட்டத கலகலப்பு 2 ல சுந்தர்.சி புடிச்சிட்டாரு. சத்யம் தியேட்டர்லயே சத்தம் போட்டு சிரிக்கிறாய்ங்கன்னா பாத்துக்குங்க. குடும்பத்தோட கண்டிப்பா பார்த்து சிரிக்கவேண்டிய படம். 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...