Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் – ஒரு விரிவன அலசல்!!


Share/Bookmark

 


தனுஷ் நான் வியந்து பார்க்கும் ஒரு நடிகன். அவர் எப்படி திரைத்துறைக்குள் வந்திருந்தாலும், அதன்பிறகு அவர் தன்னை மெருகேற்றிக்கொண்ட விதம் அபாரம். அதே போல கார்த்திக் சுப்பராஜூம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். அவர் இதற்கு முன்னர் எடுத்திருந்த ஐந்து படங்களுமே எதோ ஒருவிதத்தில் எனக்கு பிடித்திருந்தது.  இந்த இருவரும் சேரும் படம் நிச்சயம் ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பது என்னுடையது மட்டுமல்ல. பலருடைய நம்பிக்கையும்.

ஆனால் ஜகமே தந்திரம் அத்தனையையும் சுக்கு சுக்காக நொறுக்குகிறது.. டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்துமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 18ம் தேதி வெளியான ஜகமே தந்திரம் அது ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது நிஜம். வலுவில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, எந்த உணர்வுகளையும் ஏற்படுத்தாத மிகச் சாதாரணமான வசனங்கள் என அதற்கான காரணங்கள் ஏராளம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்திற்குத் தேவை ஒரு தெளிவான கதை. அந்த கதையைப் பொறுத்து கதை நடக்கும் கதைக்களம். லண்டனில் இருக்கும் இரண்டு தரப்புகளுக்கு இடையே நடைபெறும் கேங் வாரில் கதாநாயகன் கொண்டு வரப்படுக்கிறார். பிறகு தான் செய்த தவறிற்கு பிராயச்சித்தமாக மனம் திருந்தி இலங்கை அகதிகளுக்கு உதவுகிறார்.  இங்கு கதை மதுரையில் ஆரம்பிக்கிறது பிறகு லண்டனிற்கு பயணித்து அங்கேயே முடிகிறது. அவர்கள் கூறியிருக்கும் கதைக்கு மதுரை வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. படத்தை லண்டனிலேயே ஆரம்பித்து லண்டனிலேயே முடித்திருக்கலாம்.

அடுத்து இந்த திரைப்படம் எந்த வகையைச் சேர்ந்தது? ஒரு சீரியஸான கேங்கஸ்டர் படமா? அல்லது ஒரு லைட் ஹார்ட்டர்டாக பார்க்கும் ஜாலியான நகைச்சுவை கலந்த கேங்ஸ்டர் படமா? அல்லது ஈழத் தமிழர்கள் ப்ரச்சனையை பேசும் ஒரு புரட்சிப் படமா? அதில் இயக்குனருக்கே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. ஒரு திரைப்படம் பயணிப்பதற்கு எதாவது ஒரு பாதையை (Genre) தெரிவு செய்து, அதில் மாறாமல் பயணித்தால் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர முடியும். அல்லாமல் எல்லா பாதையும் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தால் ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான்.

அடுத்து  கதாநாயகன் சுருளியின் கதாப்பாத்திர அமைப்பு.  பரோட்டா கடையில் வேலை செய்பவர். 35 கொலைகள் செய்திருப்பவர் என்பதைத் தாண்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு வேறு எந்த பிண்ணனியும் கொடுக்கப்படவில்லை.

அத்தனை கொலைகள் எதற்காக செய்தார்? தன்னுடைய எதிரிகளைக் கொன்றாரா அல்லது யாருக்காவும் கொன்றாரா? காசு கொடுத்தால் கொலை செய்வாரா? ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை மறித்து ஏறி உள்ளே சிவனேன்னு சென்றுகொண்டிருக்கும் சேட்டு தம்பியைக் ரொம்ப காமெடியாக, ஜாலியாக கொலை செய்கிறார். இவர் உண்மையில் இது போல டம்மி பீஸ்களைத்தான் கொலை செய்வாரா அல்லது டெரர் பீஸ்களையும் கொலை செய்வாரா? எந்த ஒரு க்ளாரிட்டியும் இல்லை.

வழக்கமாக குத்துப் பாடலின் கடைசியில் ஒரு காட்சியில் டான்ஸ் மாஸ்டர் வந்து சல்யூட் அடித்து விட்டு போவது வழக்கம். அதேபோலத்தான் வருகிறார் பாபா பாஸ்கர். சரி டான்ஸுக்கு தானே வந்துட்டு போகட்டும் என விட்டால் அவரே பெரிய தாதா போல “சுருளி அவன போடனும்.. இவன போடனும்” என்று பேசிக்கொண்டிருக்கிறார். சார்.. உங்க ஃபேஸ்கட்டுக்கு இதெல்லாம் செட் ஆகல சார்.

சுருளியைக் காண லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் வருகிறார். அவர் எப்படி வருகிறார் என்றால் சுருளியைப் பற்றி அப்ரைசல் மீட்டிங்கில் ஒரு பணியாளர் பேசுவதைக் கேட்டு, சுருளி மாதிரி ஒரு ஆள் தான் வேண்டும்  என மெனக்கெட்டு இங்கே வருகிறார். இதுவே படத்தின் ஆகப்பெரிய அபத்தம்.

அதைவிட பெரிய அபத்தம் அப்ரைசல் மீட்டிங்கில் கேங்க்ஸ்டரைப் பற்றி பேசச் சொன்னார்களாம். அப்ரைசல் மீட்டிங்கில் செய்த வேலையைப் பற்றித்தான் பேசச் சொல்லுவார்கள். இது போன்ற குரூப் டிஸ்கஷன்களெலாம் வேலை தேடிப்போகும் போது தான் நடக்கும். எதுனா அடிச்சி விடுவோம் என்கிற ரீதியில் எடுக்கப்பட்ட காட்சி. அந்த ஒரு  காட்சியே படத்தின் மீதான பிடிப்பை பாதியாகக் குறைக்கிறது.

லண்டனிற்கு அதற்கு முன்னர் சுருளி சென்றதில்லை. பவுண்ட் என்றால் என்ன? பவுண்டின் மதிப்பு எவ்வளவு என்று கூட தெரியாமல் இருப்பவர் லண்டனிற்கு சென்ற இரண்டு நாட்களில் சிவதாசின் முழு டீட்டெய்லை கண்டறிந்து வில்லன் குரூப்பிற்கு ஒப்பிப்பது அபத்ததிலும் அபத்தம். ஏண்டா இது கூட தெரியாமலா இவ்வளவு நாள் கேங்க்ஸ்டர் தொழில் பண்ணிகிட்டுருக்கீங்க எனத் தோன்றியது.

அடுத்து சிவதாஸாக வரும் ஜோஜூ ஜார்ஜின் கதாப்பாத்திரம். ”டானுன்னா நாலு இடத்துக்கு போகனும் வரனும்” என்கிற பாணியிலேயே அவரை இங்கும் அங்குமாக நடக்க விட்டு தூரத்திலிருந்து நமக்கு காண்பிக்கிறார்கள். மற்றபடி அவர் மட்டை ஆவதற்கு முன் வரும் இரண்டு காட்சிகளில் கூட அவர் நல்லவரா கெட்டவரா என்கிற எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆளை போட்டுத்தள்ளி விட்டு கடைசியில் “பாவம்baa… அவர் எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஹெல்ப் பண்ணாரு தெர்மா?” என்கிறார்கள். ”ஏண்டா இத கொஞ்சம் முன்னாலயே சொல்லிருந்தா அவன் சாகும்போது கொஞ்சம் ஃபீல் பண்ணிருப்போமேடா” என தோன்றுகிறது.

சரி ரெண்டாவது பாதியில் ஹீரோயின் ”சிவதாஸ் யாருன்னு தெரியுமா?” என கத்திக்கொண்டே ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.

படம் ஏற்கனாவே செத்து சுண்ணாம்பான பிறகு, படம் பார்க்க ஆரம்பித்த பாதிபேர் தூங்கிய பிறகு ஈழம் சம்பந்தப்பட்ட ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது.  சரி சிவராஜைப் பற்றி எதோ பயங்கரமான ஃப்ளாஷ்பேக்கை சொல்லப்போகிறார்கள் எனப் பார்த்தால் இல்லை. அவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள். எப்படி நாடு நாடாக சென்றார்கள். கடைசியில் எப்படி லண்டன் வந்து சேர்ந்தார்கள் என அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் ”இப்படி இங்கே வர்ற எங்களுகெல்லாம் உதவுபவர்தான் சிவதாஸ்” என்கிறார்.

ஒரு உதாரணம் சொல்லுவார்களே.. ஒரு சிறுவன் தென்னைமரத்தின் பயன்களை படித்துவிட்டு தேர்விற்குச் சென்றான். ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி மாட்டின் பயன்பாடுகளை கூறுக என்று. ஆனால் அவனுக்குத் தெரிந்ததோ தென்னை மரத்தின் பயன்பாடுகள்.  தென்னை மரம் தேங்காய் கொடுக்கும், மட்டை கொடுக்கும், கீற்று கொடுக்குமா, கயிறு கொடுக்கும் என அதை அப்படியே எழுதினான். எழுதிவிட்டு கடைசியில் மாட்டை கட்டுவதற்கும் தென்னை மரம் பயன்படுகிறது என கடைசியில் ஒரு சொருகு சொருகி விட்டான். ஹீரோயின் கூறிய ஃப்ளாஷ்பேக்கில் அந்த மாடுதான் சிவதாஸ்.

அதைவிடுங்கள். எனக்குத் தெரிந்து நிறைய பேர் சிலாகிக்கும் ஒரு காட்சி சிவதாஸ் சாவதற்கு முன்னர் கூறும்

“துரோகம்.. தமிழ் இனத்தோட சாபம்” என்பது.

அப்டியாண்ணே.. ரொம்ப நல்லாருந்துச்சி.. நல்ல டயலாக்.

”சரிங்க சிவதாஸ்ணே…. நீங்க என்ன பண்ண ட்ரை பண்ணீங்க?”

”பீட்டருக்குத் தெரியாம தனுஷ தனியா செட்டிங் போட்டு பீட்டர்கிட்ட வேலைபாக்குற தனுஷ வச்சே பீட்டரக் கொல்ல ப்ளான் பன்னேன்”

“அப்ப அதுக்கு பேரு என்ன?”

“அதுக்கு பேரு ராச தந்திரம்”

“எடு செருப்ப”

சரி திரைக்கதைதான் கொஞ்சம் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு கேங்க்ஸ்டர் படம்… பரபரப்பாக சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகளை இடையில் சொருகிவிட்டு அதை வைத்து சில குறைகளை மறக்கச் செய்திருக்கலாம். அதுவும் இல்லை. பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  சரி வசனமாவது கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

லண்டனுக்கு சும்மா போகக்கூடாது என்று இந்த சுந்தரபாண்டியன் சவுந்தர்ராஜாவையும் வேறு கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவர் அங்கேயும் போய் ”என்ன மாப்ள இவன் கட்டைய போட்டுக்கிட்டுருக்கியான்… ஓவரா பண்றியான் மாப்ள..” என்கிறார். என்னடா இது லண்டன்ல சுந்தரபாண்டியன் ஓடிகிட்டுருக்கு. லண்டன்ற பேருக்காச்சும் கொஞ்சம் மரியாதை குடுங்கடா என்பது போல இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈரான் ஈராக் பார்டரில் வில்லனை கொண்டு போய் விட்டு, அவரிடம் ரிபப்ளிக் ஆப் மாட்டுத்தாவணி என்கிற ஒரு பாஸ்போர்ட்டைக் கொடுத்து ஒரு கொடுமையான தண்டனை கொடுக்கிறார்கள் பாருங்கள்… யப்பா அத்திப்பட்டி சிட்டிசன் தோற்றார்.

James cosmo நடித்திருந்த பீட்டர் கதாப்பாத்திரத்திற்கு அல்பாச்சினோவை முதலில் கேட்டதாக கூறினார்கள். ஒருவேளை அல்பாச்சீனோ அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் அந்த ரோல் இன்னும் தாறுமாறாக இருந்திருக்கும். ஆனால் அதை மட்டும் வைத்துக்கோண்டு என்ன செய்வது.

ஒட்டுமொத்தமாக ஒன்றாக சேர்ந்து படம் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

ஜீவி said...

ஈரான் ஈராக் பார்டரில் விட்டு ரிபப்ளிக் ஆஃப் மாட்டு தாவணி என்று பாஸ்போர்ட் கொடுத்து...
யப்பா சிரிச்சு முடியல
செம நக்கல்..
உண்மையில் படத்தின் நிறை குறைகளை கச்சிதமாக அலசி வந்த விமர்சனம் உங்கள் ஒன்றுதான்.
மற்ற எல்லாம் ஈழ பிரச்சினை வலி தெரியுமா, அது பத்தின புரிதல் இருக்கா, ஈழ தமிழன் வெளி நாட்டில் தாதா போல் காட்டலாமா இது அடுக்குமா ரேஞ்சில் கொந்தளித்த விமர்சனம் தான்.
ஈழத்தை வச்சு
வைகோ
சீமான்
கருணாநிதி
நெடுமாறன்
திருமுருகன் காந்தி
திருமாவளவன்
எல்லாம் தங்கள் வசதிக்கு ஆதாயம் பார்த்து முடித்து விட்டார்கள்.
ஒருத்தரும் அங்கு போய் போராடவும் இல்லை.. களமாடவும் இல்லை
அட்லீஸ்ட் இங்கு ரொம்ப வருடமாக இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒரு பிள்ளைக்கு கூட இவர்கள் யாரும் ஸ்கூல் பீஸ் கட்டினதா கூட வரலாறு இல்லை.
ஆனால் இவர்கள் எல்லாம் நல்ல செழிப்பாக இருக்கிறார்கள். ஈழம் பற்றி சுவிட்சர்லாந்து, கனடா போய் பேசுவார்கள்
சினிமாவில் ஒரு கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் ஈழம் என்று சொன்னால் மட்டும்.. ஏய்.. ஈழத்தின் வலி உனக்கு புரியுமா தெரியுமா என்று இந்த மீடியாக்கள் கத்த ஆரம்பித்து விடும்.

ஜெயராஜ் said...

"ஜெகமே தந்திரம் ஒரு படம் என்று பார்க்கும்போது நன்றாகத்தான் இருந்தது.. ஹாலிவுட் திரைப்படங்களில் நேர்மறை கதாநாயகன் என்று ஒரு ஜெனர் இருப்பதே போல தமிழ் மொழியில் வெளிவந்த இந்த இடத்திலும் கதாநாயகனான சுருளி கதாப்பாத்திரம் நன்றாகவே அமைக்கப்பட்டுள்ளது.. குறைகள் சொல்வதாக இருந்தால் குறைகள் சொல்லலாம்.. ஆனால் படம் - கிளைமாகஸ் நன்றாகத்தான் இருந்தது.. அவெஞ்சர்ஸ் அளவுக்கு கம்பாரிஸன் பண்ணினால் ஒரு படம் பெரிய படம் இன்னொன்னு சின்ன படம் என்று சொல்வது எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயங்கள்தான்.. மறுத்து பேச எதுவுமில்லை..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...