Friday, November 28, 2014

பாக்ஸர் மனோகரன்!!!


Share/Bookmark
மூன்று மாதம் முன்பு  ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக நானும் என் அலுவலக நண்பர் ஒருவரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். வரிசை நகராமல் நிற்கவே நாங்கள் வெகுநேரம் அலுவலகக் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரம் கழித்தே உணர்ந்தோம் எங்களை அருகிலுருக்கும் வரிசையிலிருந்த நபர் நெடுநேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று. நாங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவரை பார்க்க, “என்ன சார் எந்த ஊரு நீங்க?” என்று அவர் கேட்க குதூகலமானோம். அட நம்மூருதான். ”நாங்க சென்னைலருந்து வர்றோம். நீங்க எந்த ஊர்?” என்றவுடன்

“நா வேலூர் சார். இப்போ பெங்களூருல செட்டில் ஆயிட்டேன். இந்திய பாக்ஸிங் டீம் கோச்சா இருக்கேன்” என்று அவர் சாதாரணமாகச் சொன்னாலும் எங்களுக்கு டக்கென்று தூக்கிவாரிப்போட்டது.

”இந்தியன் டீமுக்கா? ”என்று கேட்டு வியந்த எங்களுக்கு சிறிது நேரம் அவரிடம் பேசக்கூட எங்களுக்கு மனதில்லை. பிறகு அவர் அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து 19 மாணவர்களை அறிமுகம் செய்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது வரிசை நகர ஆரம்பித்தது. அவரின் அலைபேசி எண்ணையும், இரவில் ஒரு இருபது நிமிடம் பேச அனுமதியையும் பெற்றுக்கொண்டு நகர்ந்தேன். அன்று இரவு அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலின் எழுத்து வடிவம் இதோ.

முதலில் மனோகரன் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை:

வேலூர் மாவட்டத்தில் பிறந்த மனோகரன் அவர்கள் சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மனோகரன் அவர்களின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சேர்ந்த மனோகரன், ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெறும் பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தீவிரப் பயிற்சியில் சிறந்த பாக்ஸிங் வீரரானார். பல்வேறு பதக்கங்களைக் குவித்தார். தொடர்ந்து 5 முறை பாக்ஸிங்கில் இந்திய அளவில் சாம்பியனாகத் திகழ்ந்தார். இந்திய அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது, உலக அரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கத்தைக் குவித்தவர். 1984ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதைப் குடியரசுத் தலைவர் ஜியானி ஸாயில் சிங் அவர்களிடமிருந்து பெற்றார். கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் அவர்களும் அதே ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்த பாக்ஸிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மனோகரன், தொடர்ந்து 28 ஆண்டுகளாக பயிற்சியாளராகத் தொடர்கிறார். “இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்” என பலராலும் பாராட்டப்பெற்ற மனோகரன், 2000மாவது ஆண்டில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய ஆடவர் மற்றும் மகளிரணி பயிற்சியாளராக விளங்கிய மனோகரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் 19 வயதிற்குட்பட்ட ( under 19) வீர்ர்களின் பயிற்சியாளராக தொடர்கிறார்.
அர்ஜூனா விருது உள்ளிட்ட நான்கு உயரிய விருதுகளை வென்ற மனோகரன் இந்த வருடம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “துரோனாச்சார்யா “விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்
(பதிவின் நீளம் கருதி மனோகரன் அவர்களைப் பற்றி வெகு குறைவாகவே கூறியிருக்கின்றேன்.  The Hindu நாளிதழ் மனோகரன் அவர்களை பற்றி விரிவான ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை ஒரிரு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது)

மனோகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவரின் பதிலும் இதோ.

1. பாக்ஸிங்ல உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? பாக்ஸிங் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்தது?
உண்மைய சொல்லனும்னா நா ஆர்மில சேர்றதுக்கு முன்னால வரைக்கும் வாலிபால் பாத்தது கிடையாது, ஹாக்கி ஸ்டிக் பாத்தது கிடையாது  ஏன் Foot Ball கூட பாத்தது கிடையாது. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்டு இந்த ஸ்கூல்ல ரிங் வச்சி ஆடுறது தான். ஆர்மில சேர்ந்தப்புறம் தான் ஒவ்வொன்னா கத்துகிட்டேன். அப்போ மத்த விளையாட்டுக்கள விட பாக்ஸிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. என் கவனத்த முழுசா பாக்ஸிங்ல திருப்பிட்டேன்.

2. உங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளரா ஆகுற வாய்ப்பு எப்படி கிடைத்தது?
NIS (Certificate Course in Sports Coaching) ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு .கோச் ஆகனும்னா கண்டிப்பா அந்த கோர்ஸ் முடிச்சாகனும்.  அந்த கோர்ஸ்ல நமக்கு நிறைய விஷயம் கத்துக்கொடுப்பாங்க. ஒரு ஒண்ணுமே தெரியாத புது ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், நல்லா சீசனான ஒரு ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும், வீர்ர்களுக்கு எதாவது அடி பட்டுட்டா நாம என்ன செய்யனும், நெருக்கடியான தருணங்கள எப்படி சமாளிக்கனும்னு நிறைய சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாம நம்மோட performance, நம்மால வீர்ர்களுக்கு ஒழுங்கா பயிற்சி குடுக்க முடியுமா? நம்முடைய பழைய ரெக்கார்ட்ஸெல்லாம் என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து தான் தேர்ந்தெடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நா அந்தக் கோர்ஸ் முடிச்ச மூணாவது நாளே நா இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டேன். 

3. நீங்க இதுவரைக்கும் எந்தெந்த நாட்டுக்கு போயிருக்கீங்க? எந்த நாட்டுல பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்?
நான் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்குமே போயிருக்கேன். பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்னு பாத்தா க்யூபா தான். அங்க பாக்ஸிங் தான் மெயின் விளையாட்டே.

4.உங்களால பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரை இண்டர்நேஷனல் லெவல்ல எத்தனை பதக்கங்கள் வாங்கியிருப்பாங்க?
சார் உண்மைய சொல்லனும்னா எனக்கே கவுண்ட் மறந்து போச்சு கிட்டத்தட்ட எல்லா tournament லயும் பதங்களை ஜெயிச்சிருக்காங்க. இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு 150 பதக்கங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன் என்று அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு தலை ஒரு நொடி கிர்ர்ர் என்றது.



5. உங்களுடைய மாணவர்களை அதாவது இந்திய அணிக்கான வீர்ர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு வருஷமும் தேசிய அளவிலான போட்டிகள் மாநிலங்களுக்கிடையே நடக்கும். அதுல செலக்‌ஷன் கமிட்டில ஒரு மூணு பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒருவர். அந்த போட்டிக்கள்ல ஜெயிக்கிற நான்கு பேர் அதாவது தங்கம் ஒருவர், வெள்ளி ஒருவர், வெண்கலம் இருவர் என்று பதக்கங்கள் வெல்லும் நால்வரும் இந்திய அணிக்கான பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவாங்க. இது மாதிரி 10 ரவுண்டுலருந்து மொத்தம் 40 மாணவர்களை பயிற்சிக்கு தேர்ந்தெடுப்போம். பதக்கம் வாங்குறவங்க மட்டுமில்லாம, எங்களுடைய பார்வையில் வேறு யாராவது சிறப்பாக விளையாடியிருந்தால் அவர்களையும் கூட பயிற்சிக்கு தெரிவு செய்வோம். 

6. நீங்க பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்?
அரசாங்கம் ஒரு வருஷத்துக்கு ஒரு வீர்ருக்கு 180 நாட்கள் பயிற்சி நாட்களாக ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கு. ஒரு வேளை அதிகப்படியான tournament இல் கலந்து கொள்ள வேண்டியிருந்தா, ஒரு 20 நாட்கள் அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொள்ளலாம்.

7. பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு ஏதேனும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறதா?

இது ஒரு நல்ல கேள்வி. சம்பளம்னு எதுவும் தனியா வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. ஆனால் ஒரு வீரர் Asian boxing la ஒரு மெடல் எடுத்தா ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசாங்கம் அந்த வீர்ருக்கு வழங்கும்.  அதே போல ஒலிம்பிக்ஸ்ல ஒரு மெடல் எடுத்தா ஒரு தொகை அந்த வீரருக்கு வழங்கப்படும். வீரர்கள் வெல்லும் போட்டிகளுக்கேற்ப மத்திய மாநில அரசுகளிடமிருந்து பணப்பரிசு கிடைக்கிறது.  அதுமட்டுமில்லாம அரசு வேலை வாய்ப்புகள்ல குறிப்பா ரயில்வே துறை, காவல் துறை தபால் துறைகள்ல வீரர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிது.

8. சரி சார். ஆனா எல்லா வீரர்களும் மெடல் எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. மேலும் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் பயிற்சிக்காகவே வீர்ர்கள் செலவளிக்கிறார்கள். அந்த சமயங்கள்ல அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளவதற்கோ எதேனும் மாதாந்திர ஊதியம் கொடுக்கப் படுகிறதா?

அப்படி எதுவும் இல்லை. வீரர்களோட உணவு, தங்கும் வசதி போக்குவரத்தை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். மற்றபடி சம்பளமெல்லாம் எதுவும் இல்லை.

9. உங்களையும் வீரர்களையும் அரசாங்கம் எப்படி பார்த்துக் கொள்கிறது? அதாவது உங்கள் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறதா?
நாங்க பயிற்சி எடுப்பதற்காகவே மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்ல அனைத்து வசதிகளுடன் கூடிய தனி இடத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. வீரர்களுக்குத் தேவையான practice kits, playing kits அனைத்தும் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாம குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு வீர்ர்கள் ரயிலில் 2nd AC யில் பயணம் செய்து கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது..

 10. உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அல்லது நீங்கள் அடிக்கடி நினைத்து பெருமைப்படக் கூடிய தருணம் என்று எதாவது இருக்கிறதா?
1981ல் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பெயின் நகரில் நடந்த போட்டியில, எனக்கு கையில பலமா அடிபட்டு இருந்தப்போ கூட நா கோல்டு மெடல் ஜெயிச்சிட்டு வந்தேன். மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்ல குவார்ட்டர் ஃபைனல் வரைக்கும் பொய்ட்டு லாஸ் ஆயிட்டேன். இது ரெண்டும் தான் இப்பவும் நா அடிக்கடி நினைச்சி பாக்குற சம்பவங்கள்

11. நம்ம மக்கள்கிட்ட இந்த பாக்ஸிங் அப்டிங்குற விளையாட்டு எந்த அளவு ரீச் ஆயிருக்கு சார்?
முன்னால இருந்தத விட இப்போ சவுத் சைடுல பெரும்பாலான கிராமங்கள்ல கூட பாக்ஸிங்ன்னா என்னன்னு தெரியிது. பாக்ஸிங் விளையாடுறதில்லை, அந்த விளையாட்டப் பத்தி அதிக அறிவு இல்லையின்னாலும் பாக்ஸிங்ன்னா என்னன்னு மக்களுக்கு இப்போ தெரியிது. பஞ்சாப், ஹரியானா மாதிரியான மாநிலங்கள்ல நிறைய க்ளப்புகள் (clubs) நடத்தி, நிறைய டோரணமெண்டுகள் நடத்தி நிறைய வீரர்களை உருவாக்குறாங்க. தென் மாநிலங்கள்ல இந்த மாதிரியான க்ளப்புகளெல்லாம் இல்லை. அதானல இன்னும் பெரிய அளவுல வீரர்கள் உருவாவதில்லை.

12. சார் அப்புறம் நம்ம ஊரப் பொறுத்த அளவில கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கிறதில்லைன்னு ஒரு பரவலான கருத்து இருக்கு. இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
கிரிக்கெட்டும் ஒரு நல்ல விளையாட்டு தான். ரொம்ப டஃப்பாவும் இருக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்காவும் இருக்கு. அதானால மக்களும் அதை ரொம்ப விரும்புறாங்க. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற வசதிகள் மத்த விளையாட்டுக்களுக்கும் கிடைச்சா மத்த விளையாட்டுக்களும் நல்ல ரீச் ஆகும்

13. வசதிகள்னா என்ன மாதிரி வசதிகள சொல்றீங்க?
உதாரணத்துக்கு ஸ்பான்ஸர்ஸ் (sponsors). கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்ஸ் அதிகம். அதனால அந்த விளையாட்டு அதிகமா விளம்பரமும் படுத்தப்படுது. கிரிக்கெட் வீரர்களுக்கு எதாவது அடிபட்டா கூட மருத்துவ செலவுங்களை அந்த ஸ்பான்ஸரே எடுத்துக்குவாங்க. ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. பாக்ஸிங் இண்டிவிஜூவல் கேம்னு சொல்லி ஸ்பான்ஸர்ஸ் எங்களுக்கு அதிகம் கிடைக்கிறதில்லை. எங்க பையன் ஒருத்தன் கை உடைஞ்சி கிடந்தா கூட அவன் சொந்த செலவுல தான் பாத்துக்கனும். இப்பதான் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைக்க ஆரம்பிக்குது. அதுவும் ரொம்ப நல்லா விளையாடுற வீரர்களுக்கு மட்டும் தான் கிடைக்குது. இது மேலும் வளரனும். கிரிக்கெட் மாதிரி பாக்ஸிங்கும் மக்கள் கிட்ட நல்லா ரீச் ஆகனும்கறது தான் என்னோட ஆசை


என்று முடித்து விட்டு Under 19 ஒலிம்பிக்ஸிற்காக சீனாவிற்கு புறப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு , அவரின் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டு முடித்துக் கொண்டேன். 


Sunday, November 23, 2014

நாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை!!!


Share/Bookmark
உன் லவ்வுக்கு பூரா என் மூளையத்தானே யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். உன் மூளை ஃப்ரஷ்ஷ்ஷா அப்டியேத்தானே இருக்குன்னு வடிவேலு கேக்குற மாதிரி இப்போ நம்மூர் படங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் மூளைய மட்டுமே யூஸ் பண்ணிட்டு நம்ம மூளைய அப்டியே ஃப்ரஷ்ஷா வச்சிருக்கோம். எதாவது ஒரு படம் வித்யாசமா வருதேன்னு பாத்தா அத எங்கருந்தாவது சுட்டுட்டு வந்துருக்காய்ங்க. வித்யாசமான  தலைப்ப வச்சே படத்துக்கு இழுக்குற படங்களின் வரிசையில அடுத்த ஒரு படம். இந்தப்படம் பார்க்குற ஐடியாவுல இருக்கவங்க தொடர்ந்து படிப்பது உசிதமல்ல.

இந்த நாய்கள் ஜாக்ரதை படம் எடுக்குறதுக்காக டைரக்டர் பல ஆங்கில போலீஸ் படங்களை பாத்துருக்காப்டி. ஒவ்வொரு படத்துலருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு ரெண்டு நாய வச்சி எடுத்து முடிச்சிட்டாப்டி.

ஒரு கொலைகார கும்பல் ஒரு பில்டிங்ல பதுங்கியிருக்க விஷயம் தெரிஞ்சி ஹீரோ போலீஸ் அவரோட டீம அழைச்சிட்டு போறாரு. அங்க போனா முகமூடி போட்ட நாலு பேரு உள்ள வர்ற போலீஸயெல்லாம் வித்யாச வித்யாசமா கொண்ணு வீடியோ எடுத்துத்துட்டு ஹீரோவ மட்டும் உயிரோட விட்டுட்டு போயிடுறாங்க. போகும் போது வில்லன் குரூப்புல ஒரே ஒருத்தரோட வாட்ச் மட்டும் கீழ விழுந்துடுது. மற்ற போலீஸெல்லாம் இறந்து போனதுக்கு ஹீரோதான் காரணம்னு ஹீரோவ சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. அந்த விரக்திலயே ஹீரோ பஜங்கர குடிகாரரா மாறிடுறாரு. அப்புறம் ஒரு சின்ன பையன் அவரோட வாழ்க்கையில வந்து அவர மாத்தி அந்த கொலைகார கும்பல கண்டுபுடிக்கிறாங்க. இது இப்டியே இருக்கட்டும்.

இன்னொரு டிடெக்டிவ் இருக்காரு. அவரோட பார்ட்னருக்கும் அவருக்கும் அவ்வளவா புடிச்சிக்காது. ரெண்டு பேரும் ஒரு கொலைகாரன புடிக்கப் போறாங்க. கொலைகாரன் பனிமூட்டமா இருக்க ஒரு மலைப் பாறையில ஓடுறான். ஹீரோவும் அவரோட பார்ட்னரும் தனித்தனியா தேடுறாங்க. பனிமூட்டத்தால யாரு எங்க இருக்காங்கன்னே கண்ணு தெரிய மாட்டுது. வில்லன் கையில வேற துப்பாக்கி. ஹீரோ சுத்தி சுத்தி பாக்குறாரு. திடீர்னு பனிமூட்டத்துல யாரோ ஓட, டுமீல்னு துப்பாக்கியால சுட்டுடுறாரு. அப்புறம் பக்கத்துல போய் பாத்தா தான் தெரியிது சுட்டது கொலைகாரன இல்லை அவரோட பார்ட்னரன்னு. அத யாரும் பாக்காததால கொலைகாரந்தான் பார்ட்னர சுட்டுட்டு ஓடிட்டதா எல்லார்டயும் சொல்லி நம்மவச்சிடுறாரு. ஆனா குற்ற உணர்ச்சியால தூக்கமே வராம தவிக்கிறார் டிடெக்டிவ். இன்னொரு மேட்டர் என்னன்னா டிடெக்டிவ் அவரோட பார்ட்னர சுட்டத வில்லன் பாத்துடுறான்.

அட என்னப்பா ஒரு படத்துக்கு ரெண்டு கதைய சொல்றானே.. இவன் படம் பாத்தானா இல்லையான்னு வெறிக்காதீங்க. நா மொத சொன்ன கதை ஜாக்கிசானோட “NEW POLICE STORY” ரெண்டாவதா சொன்ன கதை அல் பாச்சீனோ நடிச்ச ”INSOMNIA”. இந்த ரெண்டையும் K-9 ங்குற இன்னொரு படத்தோட மிக்ஸ் பண்ணி அடிச்சி அதுல சிபிராஜ் நடிச்சி வந்துருக்க படம் தான் இந்த நாய்கள் ஜாக்ரதை.  

சரி காப்பியடிக்கிறாய்ங்க இல்லை என்னவோ பண்றாய்ங்க. ஆனா எடுத்துருக்க கதையவே இன்னும் செமையா எடுத்துருக்கலாம். முதல்ல சத்யராஜோட சொந்த ப்ரொடக்‌ஷங்குறதால செலவுங்குற ஒண்ணே படத்துல பண்ணல. நீங்க செட்டு போடுங்க போடாதீங்க ஃபாரின் போங்க போகாதீங்க.. ஆனா casting மட்டுமாது ஒழுங்கா பண்ணிருக்கலாம்ல. நீங்க ப்ரொடியூசருங்குறதால சிபிராஜ் தான் ஹீரோ… வேற வழியில்ல நாங்க அத சகிச்சிகிட்டு தான் ஆகனும். ஆனா மத்த கேரக்டரயாது ஒழுங்கா செலக்ட் பண்ணிருக்கலாம்.

ஹீரோவோட போலீஸ் ஃப்ரண்ட்ஸா ஒரு நாலு பேர் வர்றாய்ங்க. அவனுங்க பானி பூரி விக்கிறாய்ங்கன்னு சொன்ன கூட யாரும் நம்ம மாட்டாங்க. அவனுங்க கையில ஸ்னைப்பரெல்லாம் குடுத்து கண்றாவி.. அதுவும் அவிங்க ஒரு சீன்ல “மச்சான் நா சுடல மச்சான்.. நா சுடல மச்சான்” ன்னு சொல்லும் போது.. டேய் சத்தியமா நீங்கதான் சுட்டீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாய்ங்கடா.. ஹோட்டல்ல வடை சுடுற மாதிரி இருந்துகிட்டு இவிங்க கையில துப்பாக்கி.

சிபிராஜோட பெரியக்கா மாதிரி இருக்கு ஹீரோயின். அந்தப்புள்ளை வந்து அரைமணி நேரம் வரைக்கும் அது சிபிராஜோட லவ்வரா இல்லை wife ahன்னு ஒரே கன்பியூசன். நிறைய இடத்துல சொல்ல வந்தத தெளிவாவே சொல்லல. படம் ஆரம்பிச்சி ஒரு அரைமணி நேரத்துல நா என்னோட படம் பாக்க வந்த நண்பர்கிட்ட “ஜி படத்துல நிறைய தப்பு இருக்குஜி..”ன்னேன் அதுக்கு அவரு ”ஆமாஜி… இந்தக் கதைய இந்த நாயிட்ட சொன்னதே பெரிய தப்புஜி…” ன்னாரு. ஆஹா நம்மளவிட கோவக்காரரா இருக்காரேன்னு விட்டுட்டேன்.  

படத்தொட பெரிய பலம் சுப்ரமணிங்குற நாய் தான். முதல் ரெண்டு காட்சிலயே சுப்ரமணி யாரு, எப்படிப்பட்டவங்குறத தெளிவா காட்டிடுறாங்க. ஆனா அதுக்கப்புறம் சுப்ரணிக்கும் சிபிராஜூக்கும் இடையில ஒரு bonding கொண்டு வர்றதுக்காக வச்சிருக்க காட்சிகள் தான் ரொம்ப அருவை ரகம். சுப்ரமணிய சிபிராஜ் வழக்கமான நாய்கள பழக்குற மாதிரி என்னென்னவோ சொல்லிப்பாக்குறாரு. ஆனா சுப்ரமணி எதுவுமே செய்யாது.

என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது திடீர்ன்னு ஒரு ஆர்மி ஆஃபீஸர் “soldier sit” ன்னு சொன்னதும் சுப்ரமணி டக்குன்னு உக்காருறான். இந்த சீன ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. இப்ப பாக்குறப்பவே புல்லரிச்சிருச்சி. இன்னும் செம மாஸா எடுத்துருக்கலாம். அதுவும் இண்டர்வலுக்கு முன்னால வர்ற chasing la சுப்ரமணி பட்டையக் கெளப்பிருக்கும். படத்துல உருப்படியான சில விஷயங்கள்ல அதுவும் ஒண்ணு.

சிபிராஜ் wife ah வில்லன் கடத்தி ஒரு இடத்துல புதைச்சிருவான். Wife ah புதைச்ச பெட்டில ஒரு கேமரா வச்சி அதோட லைவ் வீடியோ சிபி லேப்டாப்ல டெலகாஸ்ட் ஆயிகிட்டு இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்துல ஹீரோயின் செத்துருவாங்க. (Note this point : 6 மணி நேரம்) அதுக்குள்ள அவங்கள எங்க புதைச்சிருக்காங்கன்னு கண்டுபுடிக்கனும். அங்க தான் காமெடியே ஸ்டார்ட் ஆவுது. சிபிராஜ் அவர் கூட இருக்க அந்த நாலு பானிபூரி நண்பர்களோட இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றாரு.

”தமிழ்ப்படம்” படத்துல ஹீரோயின வில்லன் துப்பாக்கியால சுடுவான். புல்லட் travelling la இருக்கும். அப்போ ஹீரோயின் “sivaaaaa” ன்னு கத்தும். உடனே ஹாஸ்பிட்டல்ல இருக்க சிவா எழுந்து exercise பண்ணுவாரு. போய் டீ குடிப்பாரு. மெதுவா ஆட்டோவுல ஏறி ஆட்டோகாரண்ட பேரம்லாம் பேசுவாறு. எல்லாம் பண்ணி கடைசில புல்லட் வர்றதுக்குள்ள ஹீரோயின காப்பாத்திருவாரு. தமிழ்ப்படத்துல சிவா காமெடியா பண்ண இந்த விஷயத்த சிபி இந்தப்படத்துல சீரியஸாவே பண்ணிருக்காரு.

ஆறுமணி நேரம்தான் அந்தப்புள்ளை உயிரோட இருக்கும்னோன நமக்கே கொஞ்சம் படபடப்பா இருக்கும். ஆனா சிபி அப்பதான் நாய ட்ரெய்ன் பண்ணுவாரு. எதுக்கு? ஆறு மணி நேரத்துக்குள்ள கண்டுபுடிக்க. டேய் இதுக்கு மேல நீ நாய ட்ரெய்ன் பண்ணி.. உன் பொண்டாட்டிய கண்டுபுடிச்சி… வெளங்கும். அந்தப்புள்ளைய புதைச்ச இடத்துலருந்து வீடியோ லைவ் டெலகாஸ்ட் ஆகும். ஆனா இவிங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுக்கு அவன் ஃப்ரண்டு “மாப்ள இண்டர்நெட்ல ஒருத்தன தேடுறதுங்குறது கடல்ல ஊசிய போட்டுட்டு  தேடுற மாதிரிடா” ம்பான். “டேய் பானிபூரி.. உனக்கு கண்டுபுடிக்க தெரியலன்ன தெரியலன்னு சொல்லு.. சும்மா வாயில வந்தத பேசிக்கிட்டு… “

அந்த லைவ் டெலகாஸ்ட்ல ஹீரோயின் இருக்க பொட்டிக்குள்ள தண்ணி வரும். உடனே எந்த ஏரியாவுல மழை பெய்யிதுன்னு பாப்பாங்க. “மாப்ள சென்னைய சுத்தி எந்த ஏரியாவுலயுமே மழை பெய்யல. இப்பதைக்கு தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யிது” ம்பான் ஒரு ஃப்ரண்டு. உடனே சிபி “அப்போ அவள ஊட்டிலதான் புதைச்சிருக்காங்க.. வாங்க ஊட்டிக்கு போவோம்” ம்பாரு. ஆமா ஏண்டா ஊட்டிக்கு போறீங்க. அப்டியே காஷ்மீர் வரைக்கும் பொய்ட்டு வாங்க. ஆறுமணி நேரத்துல எத்தனை ஊருக்குடா போவீங்க. 

கடைசில வில்லனுங்க அவனுங்களா வந்து மாட்டிக்க, சுப்ரமணியும் சிபியும் அவனுங்கள பிண்ணி பெடலெடுத்து அந்தப் புள்ளைய காப்பத்துறாங்க. ஹீரோயின தொலைச்சிட்டு தேடுற கதைகள் இந்த வருஷம் மட்டுமே அரிமா நம்பி, இரும்புக் குதிரைன்னு ரெண்டு வந்துருச்சி. இது மூணாவது. மொக்கை மொக்கையான லாஜிக் வச்சதுக்கு இன்னும் ரெண்டு மூணு ஆங்கிலப்படங்களப் பாத்து கொஞ்சம் ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம்.

சிபிராஜ் முன்னால இருந்தத விட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு. ஆனா போலீஸ் கெட்டப் சூட் ஆகல. வசனம் பேசும்போதும் சரி நடிக்கும்போதும் சரி நிறைய இடங்கள்ல சத்யராஜ் தெரியிறாரு. “doggy style” பாட்டும் “பூமி சுற்றும் வரையே” பாட்டும் சூப்பர். BGM லாம் சுமார் தான்.

படம் முடிஞ்சி போயிட்டு இருக்கும்போது நண்பர் எண்ட ”ஜி.. படத்துல சுத்தமா செலவே இல்லஜி.. 5 லட்ச ரூவாய்ல எடுத்துருப்பாய்ங்க போல”ன்னாரு. அதுக்கு நா ”5 லட்சத்துலயெல்லாம் படம் எடுக்க முடியாதுஜி. நாய வேற வச்சி எடுத்துருக்காய்ங்கள்ள.. நிறைய டேக் வாங்கிருக்கும்ஜி” னேன். டக்குன்னு அவரு ”ஆமாஜி.. சின்ன நாய விட பெரிய நாய் நிறைய டேக் வாங்கிருக்கும்”ன்னு சொல்லி ஆஃப் பண்ணிட்டாரு.  


மொத்தத்துல அருமையா நடிக்கக்கூடிய ஒரு நாய வச்சி (இது சிபிராஜ் இல்ல) சூப்பர எடுத்துருக்க வேண்டிய ஒரு படத்த ரொம்ப சுமாராவே எடுத்துருக்காங்க. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...