மூன்று மாதம் முன்பு ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக நானும் என் அலுவலக நண்பர் ஒருவரும் வரிசையில்
நின்றுகொண்டிருந்தோம். வரிசை நகராமல் நிற்கவே நாங்கள் வெகுநேரம் அலுவலகக் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,
சற்று நேரம் கழித்தே உணர்ந்தோம் எங்களை அருகிலுருக்கும் வரிசையிலிருந்த
நபர் நெடுநேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று. நாங்கள்
பேச்சை நிறுத்திவிட்டு அவரை பார்க்க, “என்ன சார் எந்த ஊரு நீங்க?”
என்று அவர் கேட்க குதூகலமானோம். அட நம்மூருதான்.
”நாங்க சென்னைலருந்து வர்றோம். நீங்க எந்த ஊர்?”
என்றவுடன்
“நா வேலூர் சார். இப்போ பெங்களூருல செட்டில் ஆயிட்டேன்.
இந்திய பாக்ஸிங் டீம் கோச்சா இருக்கேன்” என்று
அவர் சாதாரணமாகச் சொன்னாலும் எங்களுக்கு டக்கென்று தூக்கிவாரிப்போட்டது.
”இந்தியன் டீமுக்கா? ”என்று கேட்டு வியந்த எங்களுக்கு
சிறிது நேரம் அவரிடம் பேசக்கூட எங்களுக்கு மனதில்லை. பிறகு அவர்
அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து
19 மாணவர்களை அறிமுகம் செய்தார். சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்த போது வரிசை நகர ஆரம்பித்தது. அவரின் அலைபேசி
எண்ணையும், இரவில் ஒரு இருபது நிமிடம் பேச அனுமதியையும் பெற்றுக்கொண்டு
நகர்ந்தேன். அன்று இரவு அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலின் எழுத்து வடிவம் இதோ.
முதலில்
மனோகரன் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை:
வேலூர்
மாவட்டத்தில் பிறந்த மனோகரன் அவர்கள் சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மனோகரன் அவர்களின் தந்தையும்
ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சேர்ந்த
மனோகரன், ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெறும் பாக்ஸிங் எனப்படும்
குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தீவிரப் பயிற்சியில் சிறந்த
பாக்ஸிங் வீரரானார். பல்வேறு பதக்கங்களைக் குவித்தார்.
தொடர்ந்து 5 முறை பாக்ஸிங்கில் இந்திய அளவில் சாம்பியனாகத்
திகழ்ந்தார். இந்திய அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது,
உலக அரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கத்தைக்
குவித்தவர். 1984ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா
விருதைப் குடியரசுத் தலைவர் ஜியானி ஸாயில் சிங் அவர்களிடமிருந்து பெற்றார்.
கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் அவர்களும் அதே ஆண்டில் அர்ஜூனா
விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ம் ஆண்டு இந்த பாக்ஸிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மனோகரன்,
தொடர்ந்து 28 ஆண்டுகளாக பயிற்சியாளராகத் தொடர்கிறார்.
“இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்” என பலராலும் பாராட்டப்பெற்ற மனோகரன், 2000மாவது ஆண்டில்
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய ஆடவர் மற்றும் மகளிரணி
பயிற்சியாளராக விளங்கிய மனோகரன் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் 19 வயதிற்குட்பட்ட ( under 19) வீர்ர்களின் பயிற்சியாளராக
தொடர்கிறார்.
அர்ஜூனா
விருது உள்ளிட்ட நான்கு உயரிய விருதுகளை வென்ற மனோகரன் இந்த வருடம் பயிற்சியாளர்களுக்கு
வழங்கப்படும் உயரிய விருதான
“துரோனாச்சார்யா “விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்
(பதிவின் நீளம் கருதி மனோகரன் அவர்களைப் பற்றி வெகு குறைவாகவே கூறியிருக்கின்றேன். The Hindu நாளிதழ் மனோகரன் அவர்களை பற்றி விரிவான ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை ஒரிரு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது)
(பதிவின் நீளம் கருதி மனோகரன் அவர்களைப் பற்றி வெகு குறைவாகவே கூறியிருக்கின்றேன். The Hindu நாளிதழ் மனோகரன் அவர்களை பற்றி விரிவான ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை ஒரிரு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது)
மனோகரன்
அவர்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவரின் பதிலும் இதோ.
1. பாக்ஸிங்ல
உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
பாக்ஸிங் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்தது?
உண்மைய
சொல்லனும்னா நா ஆர்மில சேர்றதுக்கு முன்னால வரைக்கும் வாலிபால் பாத்தது கிடையாது, ஹாக்கி ஸ்டிக் பாத்தது கிடையாது ஏன் Foot Ball கூட பாத்தது கிடையாது. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்டு
இந்த ஸ்கூல்ல ரிங் வச்சி ஆடுறது தான். ஆர்மில சேர்ந்தப்புறம்
தான் ஒவ்வொன்னா கத்துகிட்டேன். அப்போ மத்த விளையாட்டுக்கள விட
பாக்ஸிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. என் கவனத்த முழுசா
பாக்ஸிங்ல திருப்பிட்டேன்.
2. உங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளரா ஆகுற வாய்ப்பு எப்படி கிடைத்தது?
NIS
(Certificate Course in Sports Coaching) ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு
.கோச் ஆகனும்னா கண்டிப்பா அந்த கோர்ஸ் முடிச்சாகனும். அந்த கோர்ஸ்ல நமக்கு நிறைய விஷயம்
கத்துக்கொடுப்பாங்க. ஒரு ஒண்ணுமே தெரியாத புது ப்ளேயருக்கு எப்படி
பயிற்சியளிக்கனும், நல்லா சீசனான ஒரு ப்ளேயருக்கு எப்படி பயிற்சியளிக்கனும்,
வீர்ர்களுக்கு எதாவது அடி பட்டுட்டா நாம என்ன செய்யனும், நெருக்கடியான தருணங்கள எப்படி சமாளிக்கனும்னு நிறைய சொல்லித் தருவாங்க.
அது மட்டுமில்லாம நம்மோட performance, நம்மால வீர்ர்களுக்கு
ஒழுங்கா பயிற்சி குடுக்க முடியுமா? நம்முடைய பழைய ரெக்கார்ட்ஸெல்லாம்
என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து தான் தேர்ந்தெடுப்பாங்க.
என்னைப் பொறுத்தவரைக்கும் நா அந்தக் கோர்ஸ் முடிச்ச மூணாவது நாளே நா
இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டேன்.
3. நீங்க இதுவரைக்கும் எந்தெந்த நாட்டுக்கு போயிருக்கீங்க? எந்த நாட்டுல பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்?
நான் கிட்டத்தட்ட
எல்லா நாடுகளுக்குமே போயிருக்கேன்.
பாக்ஸிங்குக்கு ஆதரவு அதிகம்னு பாத்தா க்யூபா தான். அங்க பாக்ஸிங் தான் மெயின் விளையாட்டே.
4.உங்களால பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரை இண்டர்நேஷனல் லெவல்ல எத்தனை பதக்கங்கள்
வாங்கியிருப்பாங்க?
சார் உண்மைய
சொல்லனும்னா எனக்கே கவுண்ட் மறந்து போச்சு கிட்டத்தட்ட எல்லா tournament லயும் பதங்களை
ஜெயிச்சிருக்காங்க. இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு 150 பதக்கங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன் என்று அவர் கூறியதைக் கேட்டதும்
எனக்கு தலை ஒரு நொடி கிர்ர்ர் என்றது.
5. உங்களுடைய மாணவர்களை அதாவது இந்திய அணிக்கான வீர்ர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு
வருஷமும் தேசிய அளவிலான போட்டிகள் மாநிலங்களுக்கிடையே நடக்கும். அதுல செலக்ஷன் கமிட்டில ஒரு மூணு பேர் இருப்பாங்க. அதுல நானும்
ஒருவர். அந்த போட்டிக்கள்ல ஜெயிக்கிற நான்கு பேர் அதாவது தங்கம்
ஒருவர், வெள்ளி ஒருவர், வெண்கலம் இருவர்
என்று பதக்கங்கள் வெல்லும் நால்வரும் இந்திய அணிக்கான பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவாங்க.
இது மாதிரி 10 ரவுண்டுலருந்து மொத்தம்
40 மாணவர்களை பயிற்சிக்கு தேர்ந்தெடுப்போம். பதக்கம்
வாங்குறவங்க மட்டுமில்லாம, எங்களுடைய பார்வையில் வேறு யாராவது
சிறப்பாக விளையாடியிருந்தால் அவர்களையும் கூட பயிற்சிக்கு தெரிவு செய்வோம்.
6. நீங்க பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வருடத்தில் எத்தனை நாட்கள்
பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்?
அரசாங்கம்
ஒரு வருஷத்துக்கு ஒரு வீர்ருக்கு
180 நாட்கள் பயிற்சி நாட்களாக ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கு.
ஒரு வேளை அதிகப்படியான tournament இல் கலந்து கொள்ள
வேண்டியிருந்தா, ஒரு 20 நாட்கள் அதிகமாக
பயிற்சி எடுத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொள்ளலாம்.
7. பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு ஏதேனும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறதா?
இது ஒரு
நல்ல கேள்வி. சம்பளம்னு எதுவும் தனியா வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. ஆனால் ஒரு வீரர் Asian boxing la ஒரு மெடல் எடுத்தா ஒரு
குறிப்பிட்ட தொகையை மத்திய அரசாங்கம் அந்த வீர்ருக்கு வழங்கும். அதே போல ஒலிம்பிக்ஸ்ல ஒரு மெடல் எடுத்தா
ஒரு தொகை அந்த வீரருக்கு வழங்கப்படும். வீரர்கள் வெல்லும் போட்டிகளுக்கேற்ப
மத்திய மாநில அரசுகளிடமிருந்து பணப்பரிசு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாம அரசு வேலை வாய்ப்புகள்ல
குறிப்பா ரயில்வே துறை, காவல் துறை தபால் துறைகள்ல வீரர்களுக்கு
அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிது.
8. சரி சார். ஆனா எல்லா வீரர்களும் மெடல் எடுப்பாங்கன்னு
சொல்ல முடியாது. மேலும் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள்
பயிற்சிக்காகவே வீர்ர்கள் செலவளிக்கிறார்கள். அந்த சமயங்கள்ல
அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளவதற்கோ எதேனும் மாதாந்திர
ஊதியம் கொடுக்கப் படுகிறதா?
அப்படி
எதுவும் இல்லை. வீரர்களோட உணவு, தங்கும் வசதி போக்குவரத்தை அரசாங்கம்
கவனித்துக் கொள்ளும். மற்றபடி சம்பளமெல்லாம் எதுவும் இல்லை.
9. உங்களையும் வீரர்களையும் அரசாங்கம் எப்படி பார்த்துக் கொள்கிறது? அதாவது உங்கள் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறதா?
நாங்க
பயிற்சி எடுப்பதற்காகவே மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்ல அனைத்து வசதிகளுடன் கூடிய
தனி இடத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.
வீரர்களுக்குத் தேவையான practice kits, playing kits அனைத்தும் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாம
குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு வீர்ர்கள் ரயிலில்
2nd AC யில் பயணம் செய்து கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது..
10. உங்களுடைய வாழ்க்கையில் மறக்க
முடியாத தருணம் அல்லது நீங்கள் அடிக்கடி நினைத்து பெருமைப்படக் கூடிய தருணம் என்று
எதாவது இருக்கிறதா?
1981ல் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பெயின் நகரில் நடந்த போட்டியில, எனக்கு கையில பலமா அடிபட்டு இருந்தப்போ கூட நா கோல்டு மெடல் ஜெயிச்சிட்டு வந்தேன்.
மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்ல குவார்ட்டர் ஃபைனல் வரைக்கும் பொய்ட்டு லாஸ் ஆயிட்டேன். இது ரெண்டும் தான் இப்பவும்
நா அடிக்கடி நினைச்சி பாக்குற சம்பவங்கள்
11. நம்ம மக்கள்கிட்ட இந்த பாக்ஸிங் அப்டிங்குற விளையாட்டு எந்த அளவு ரீச் ஆயிருக்கு
சார்?
முன்னால
இருந்தத விட இப்போ சவுத் சைடுல பெரும்பாலான கிராமங்கள்ல கூட பாக்ஸிங்ன்னா என்னன்னு
தெரியிது. பாக்ஸிங்
விளையாடுறதில்லை, அந்த விளையாட்டப் பத்தி அதிக அறிவு இல்லையின்னாலும்
பாக்ஸிங்ன்னா என்னன்னு மக்களுக்கு இப்போ தெரியிது. பஞ்சாப்,
ஹரியானா மாதிரியான மாநிலங்கள்ல நிறைய க்ளப்புகள் (clubs) நடத்தி, நிறைய டோரணமெண்டுகள் நடத்தி நிறைய வீரர்களை உருவாக்குறாங்க.
தென் மாநிலங்கள்ல இந்த மாதிரியான க்ளப்புகளெல்லாம் இல்லை. அதானல இன்னும் பெரிய அளவுல வீரர்கள் உருவாவதில்லை.
12. சார் அப்புறம் நம்ம ஊரப் பொறுத்த அளவில கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை
மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கிறதில்லைன்னு ஒரு பரவலான கருத்து இருக்கு.
இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
கிரிக்கெட்டும்
ஒரு நல்ல விளையாட்டு தான்.
ரொம்ப டஃப்பாவும் இருக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்காவும் இருக்கு.
அதானால மக்களும் அதை ரொம்ப விரும்புறாங்க. கிரிக்கெட்டுக்கு
கிடைக்கிற வசதிகள் மத்த விளையாட்டுக்களுக்கும் கிடைச்சா மத்த விளையாட்டுக்களும் நல்ல
ரீச் ஆகும்
13. வசதிகள்னா என்ன மாதிரி வசதிகள சொல்றீங்க?
உதாரணத்துக்கு
ஸ்பான்ஸர்ஸ் (sponsors). கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்ஸ் அதிகம். அதனால அந்த விளையாட்டு
அதிகமா விளம்பரமும் படுத்தப்படுது. கிரிக்கெட் வீரர்களுக்கு எதாவது
அடிபட்டா கூட மருத்துவ செலவுங்களை அந்த ஸ்பான்ஸரே எடுத்துக்குவாங்க. ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. பாக்ஸிங் இண்டிவிஜூவல்
கேம்னு சொல்லி ஸ்பான்ஸர்ஸ் எங்களுக்கு அதிகம் கிடைக்கிறதில்லை. எங்க பையன் ஒருத்தன் கை உடைஞ்சி கிடந்தா கூட அவன் சொந்த செலவுல தான் பாத்துக்கனும்.
இப்பதான் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைக்க ஆரம்பிக்குது.
அதுவும் ரொம்ப நல்லா விளையாடுற வீரர்களுக்கு மட்டும் தான் கிடைக்குது.
இது மேலும் வளரனும். கிரிக்கெட் மாதிரி பாக்ஸிங்கும்
மக்கள் கிட்ட நல்லா ரீச் ஆகனும்கறது தான் என்னோட ஆசை
என்று
முடித்து விட்டு Under 19 ஒலிம்பிக்ஸிற்காக சீனாவிற்கு புறப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொண்டு , அவரின் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றியையும்
தெரிவித்துக் கொண்டு முடித்துக் கொண்டேன்.
2 comments:
மனோகரன் பாராட்டிற்கு உரியவர்
பாராட்டுவோம்
சாதனைகள் தொடர வாழ்த்துவோம்
arimugapaduththiyamaikku nadirikaL
Post a Comment