Monday, February 5, 2018

ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன் – கொல்லுறேன்னு வச்சிருக்கனும்!!!


Share/Bookmark
”விஜய் சேதுபதி மாதிரி ஒரு நல்ல மனுஷனப் பாக்க முடியாதுப்பா… ஃப்ர்ண்ட்ஸ் போய் கேட்டா இல்லைனு சொல்லாம உடனே படம் நடிச்சி குடுப்பாருப்பா…. இது அவர் நட்புக்காக நடிச்சி குடுத்த படம்ப்பா… அதான் அவ்வளவு நல்லா இல்லை.. “ விஜய் சேதுபதியின் மொக்கை படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் இது போன்ற பல வசனங்கள் காதுல வந்து விழவது இப்பல்லாம் சகஜமாகிப் போச்சு. எதோ இவருக்கு மட்டும்தான் நண்பர்கள் இருக்க  மாதிரியும் மத்தவங்கல்லாம் யாருமே இல்லாம அத்துவிட்டு திரியிற மாதிரியும்.

ஒரு பையன் டீச்சர் கிட்ட “மிஸ்… இன்னிக்கு நா ரெண்டு பேருக்கு உதவி பண்ணிருக்கேன்”ன்னாம்.

உடனே டீச்சர்.. “அப்டியா.. சூப்பர்.. யார் யாருக்கு உதவி செஞ்ச?”ன்னு கேட்டதும்

“வழில ஒரு கிளி பறக்க முடியாம பாவமா விழுந்து கிடந்துச்சி…  அது வண்டில எதுவும் அடிபட்டுறக் கூடாதுன்னு காப்பாத்துனேன்”

 “சரி ரெண்டாவது உதவி ?

“வழில வந்துகிட்டு இருக்கும்போது ஒரு பூனை பசியோட இருந்துச்சி.. அந்தப் பூனைக்கு நா காப்பாத்துன கிளிய சாப்புடக் குடுத்தேன்” ன்னானாம். விஜய் சேதுபதி செய்யிற உதவியும் அப்டித்தான். சேதுபதி சார்.. உதவி செய்யிங்க.. வேணாம்ங்கள..  நீங்க உதவி செய்யிறதுக்கு ஏன் உங்கள நம்பி படம் பாக்க வர்ற எங்க உசுற எடுக்குறீங்க?

விஜய் சேதுபதி படம்னா யார் இயக்குனர்னுலாம் பாக்காம “விஜய் சேதுபதி படம்னா நல்லாருக்கும்யா”ன்னு நம்பி வர்றவன “இனிமே வருவியா.. வருவியா”ன்னு கழுத்தாம்பட்டையிலயே சாத்து சாத்துன்னு சாத்துற படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

Spoiler Alert லாம் போட்டு spoiler alert க்கு உள்ள மரியாதைய நா கெடுக்க விரும்பல.

நகைச்சுவைப் படம் எடுக்குறது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்ல. என்ன சொன்னாலும் சிரிக்கிறதுக்கு நம்மாளுக முட்டாள்களும் இல்லை. என்னதான் நகைச்சுவைப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லைன்னாலும் கதை திரைக்கதையில சில அடிப்படைகளையாவது பின்பற்றியாகனும். அது எதுவுமே இல்லாம ஏனோதானோன்னு எடுக்கப்பட்ட ஒரு அரை வேக்காடு தான் இந்தப் படம்.

”கதைக்களம்” மற்றும் ”கதாப்பாத்திர அமைப்புகளில் தெளிவு” இது ரெண்டும் ஆடியன்ஸ படத்தோட ஒன்றச் செய்யிறதுல மிக முக்கியமான பங்கு வகிக்கிது.  ஆனா இங்க இந்த ரெண்டுலயுமே எந்தத தெளிவும் இல்ல. விஜய் சேதுபதி காட்டுக்குள்ளருந்து ஊருக்குள்ள திருட வந்து, மாறுவேடங்கள்ல போய்த் திருடுறாரு. அதுக்கு ஒரு விக் வச்சி விட்டுருக்காங்க பாருங்க… போக்கிரி பாடி சோடா கெட்டப்பெல்லாம் தோத்துரும். அந்த மண்டையோட ஒருத்தன் ஒரு இடத்துக்கு போனாலே மண்டையில நெருப்ப கொளுத்திப் போட்டு அனுப்பிருவானுங்க. இவரு அந்த கெட்டப்ல பல இடங்கள்ல திருடுறாரு.

அடுத்து அவரோட பழக்கவழக்கமும் பேச்சும். தமிழ் லோக்கல் பாஷையில பேசுறாரு.. தெலுங்குல பேசுறாரு.. திடீர்னு இங்க்லீஷ்ல பேசுறாரு. அதுவும் அவர் கூட இருக்க ரெண்டு அள்ளக் கையிங்க.. அடடா அபாரம்.. Sneak Peak ஒரு சீன் பாத்திருந்தாலே தெரிஞ்சிருக்கும். ”அண்ணேன் நாங்க காரு… நீங்க சாவி” அதுதான் படத்துல இருக்கதுல கொஞ்சம் பரவால்லாத மொக்கன்னா பாத்துக்குங்க..

அரை கிரவுண்ட் இடத்துல போடப்பட்ட ஒரு கண்றாவியான செட்டுல, கருப்பு ட்ரஸ் போட்ட ஒரு நாப்பது பேர் அங்கயும் இங்கயும் சுத்தவிட்டா அதான் விஜய் சேதுபதியோட மலை கிராமம். லோ பட்ஜெட்ல படம் எடுக்க வேணாம்னு சொல்லல.. பட்ஜெட்டே இல்லாம படம் எடுக்காதீங்கன்னுதான் சொல்றோம். விஜய் சேதுபதியின் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள்லாம் கிட்டத்தட்ட ZEE டிவி டப்பிங் சீரியில் பாக்குற எஃபெக்ட்ட தான் குடுக்குது.

ஹீரோயின் பாக்குற மாதிரி இருக்கு. “ஃப்ரண்டு ஃபீல் ஆயிட்டாப்ள” டேனியல் தான் ஒரளவுக்கு ஆறுதல். அவரும் காமெடிங்குற பேர்ல நிறைய சீன்ல கத்தி கத்தி காது ஜவ்வ கிளிச்சி விட்டுட்டாரு.

இந்தக் கொடுமையெல்லாம் ஒரு பக்கம்னா கவுதம் கார்த்திக் இன்னொரு பக்கம். அடிக்கடி மூஞ்ச மூஞ்ச காட்டி ஒரே இம்சை. அவர ஹீரோயின் பக்கத்துல வச்சி பாக்குறப்போ யார் ஹீரோ யார் ஹீரோயின்னு கண்டுபுடிக்கிறதே நமக்கு பெரிய சவால்.

“கீழ ஒரு கிராமம்.. மேல ஒரு கிராமம்” இந்த கான்செப்ட் நல்லா இருந்துச்சி. இத மெயினா வச்சி இது தொடர்பான சுவாரஸ்யமான காட்சிகள முதல்ல குடுத்துட்டு பொண்ண தூக்குற மேட்டர சைடாக்கிருந்தா  ஒரு வேளை சுவாரஸ்யமா இருந்தாலும் இருந்திருக்கலாம்.

விஜய் சேதுபதி தலையில கொம்பு வச்ச கிரீடம் வச்சிட்டு வரும்போது, நீளமான முடி வச்சிருக்க கெட்டப்புல வரும்போதெல்லாம் அவரப் பாக்க பாவமாத்தான் இருந்துச்சி. இதெல்லாம் தெரிஞ்சிதான் பன்றாரா இல்ல கமிட் ஆயிட்டோமேன்னு கடனுக்கு எதாவது செய்வோம்னு செய்றாரா இல்ல உண்மையிலயே எதுவும் தெரியாம இதயெல்லாம் சீரியஸா செய்றாரான்னு ஒண்ணும் புரியல. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நா எத வேணாலும் பொறுத்துக்குவேன். ஆனா படம் முடியும்போது ரெண்டாவது பார்ட்டுக்கு டைரக்டர் ஒரு லீடு குடுக்குறாரு பாருங்க… அத மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியல. பட் அந்த confidence ah பாராட்டியே ஆகனும். ”அந்த ஓட்டக் கண்ணாடியப் போட்டுக்கிட்டு எப்புடித்தான் துணிஞ்சி முன்னால நிக்கிறியோ..”
  

இன்னும் கழுவி ஊத்த நிறைய இருந்தாலும் மூடு இல்லாத காரணத்தால இதோட முடிச்சிக்குவோம்.


மொத்தத்துல இந்தப் படம் பாக்கப்போற மூணு மணி நேரத்துல காலு ரெண்டயும் கதவுக்கு முட்டுக்குடுத்து, மல்லாக்கப் படுத்து விட்டத்தப் பாத்து கொரட்டை விட்டு நல்லா தூங்குறது மேல்…

    
   

Sunday, January 28, 2018

நிமிர் - நிமிருதா இல்ல நம்மள நிமுத்துதா??!!


Share/Bookmark
“நான் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது” அப்டின்னு உதயநிதி சொன்னதும் “யய்யா…எங்க வகுத்துல பீர வாத்தைய்யா.. பீர வாத்த.. தயவு செஞ்சி சினிமாவ விட்டுட்டு அரசியலுக்கே போயிரு”ன்னு எல்லாருமா ஒண்ணா சேர்ந்து வழியனுப்பத் தயாரா இருக்கப்போ வந்து நிக்கிது நிமிர்.

“சார் இத்தனை வருஷமா சினிமால இருக்கீங்களே. நீங்க நடிச்ச நல்ல படம் ஒண்ண சொல்லுங்க” அப்டின்னு டக்குன்னு யாராவது கேட்டா உதயநிதிக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருக்கும். அப்டித்தான் இருக்கு அவரோட ட்ராக் ரெக்கார்டு. உதயநிதி படங்கள்ல ஓரளவுக்கு நல்ல படம்னு பெரும்பாலவங்க சொல்ற ”மனிதன்” படத்துலயே உதயநிதி சீரியஸா பேசுற பல இடங்கள் சிரிப்பை வரவழைக்கிற மாதிரி தான் இருக்கும். குறிப்பா சொல்லப்போனா அந்தப் பட்த்துக்கு மிகப்பெரிய மைனஸே உதயநிதிதான்.

அப்படிப்பட்ட சூழல்ல ஃபகத் ஃபாஸிலோட மிகப்பெரிய வெற்றிப்படமான மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தோட தமிழ் ரீமேக்குல, ”நடிச்சா உதயநிதிதான் நடிக்கனும்”ன்னு இயக்குனர் ப்ரியதர்ஷன் ஒத்தக் கால்ல நின்னதால உதயநிதி இந்தப் படத்துல ஹீரோவாயிருக்காருன்னு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம ஃபஹத் ஃபாசில விட உதயநிதி இந்தப் படத்துல நல்லா நடிச்சிருக்காருன்னு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால ப்ரியதர்ஷன் ஒரு போடு போட்டாரு பாருங்க…. “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” நம்புனாதான் produce பன்றேன்னு உதயநிதி சொல்லிருக்காரு.. நீங்க எப்டி நம்புறீங்களா இல்லயா?” சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு அழகான கிராமம். அங்க ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தர்.. அவருடைய அப்பா, அவரோட காதலி, அவரோட எதிரி, அவர் படும் அவமானம்ன்னு இப்படி செல்வம்ங்குற கதாப்பாத்திரத்த சுத்தி நடக்குற சின்னச் சின்ன எதார்த்தமான அழகான விஷயங்கள்தான் இந்த நிமிர்.

படம் பார்க்குற ஆடியன்ஸூக்கு எந்த வித மன அழுத்ததையும் குடுக்காம, ரொம்ப அழகா, சுவாரஸ்யமா எடுக்கப்படுற படங்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த நிமிர். ஆரம்பத்துலருந்து கடைசி வரை எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாம முழுமையா படத்தோட ஒண்றி ரசிக்க முடிஞ்சிது. கதை திரைக்கதை, கதாப்பாத்திர அமைப்புகளத் தாண்டி, கதை நடக்குற கிராமமும் அதை வித விதமனா ஷாட்ல ரொம்ப அழகா காமிச்ச கேமாராவும் படத்த ரசிக்க முடியிறதுக்கு மிகப்பெரிய காரணம்.

“பூவுக்கு தாப்பா எதுக்கு.. ஊருக்கு கதவா இருக்கு”ன்னு ஸ்வேதா மோகனோட தேன் சொட்டுற குரலோட ஆரம்பிக்கிற ஒரு அருமையான பாட்டுல கதை நடக்குற கிராமத்தோட அழக காட்டுறாங்க. அதே அழகு படம் முடியிற வரையிலும் தொடருது. ஆனா என்ன ஒண்ணு அன்னக்கிளில ஆடிட்டு ரிட்டயர்டு ஆகியிருந்த ஒரு ஆயாவ கூப்டு வந்த அந்த முதல் பாட்டுக்கு ஆட வச்சதுதான் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சி.

எந்தப் பாட்டையுமே நா முன்னால கேக்கவே இல்லை. ஆனாலும் படம் பாக்குறப்போ எல்லா பாட்டுமே நல்லா இருந்துச்சி. படத்துல மைனஸ்னு பெருசா எதுவுமே தோணல. க்ளைமாக்ஸ்ல நடக்குற ஒரு சண்டைக் காட்சி முக்கியமான ஒண்ணு. ஆனா அத மழையில நடக்குற மாதிரி படம் பிடிச்சிருக்கது கொஞ்சம் கவனத்த சிதறடிக்கிற மாதிரியும் சுவாரஸ்யத்த குறைக்கிற மாதிரியும் இருந்துச்சி.

மகேந்திரன், பார்வதி நாயர், நமீதா ப்ரமோத்னு எல்லாருமே அவங்கவங்க கதாப்பாத்திரத்த சிறப்பா செஞ்சிருக்காங்க. ”கருத்து கந்தசாமி” சமுத்திரக்கணி எந்தக் கருத்தும் சொல்லாம படத்துல வசனம் எழுதிருக்கதே மிகப்பெரிய ஆறுதல்.  

யாராவது ஒரு ஆள புடிச்சிட்டா அவர உச்சானிக்கொம்புல தூக்கி வக்கிறதும், அவருக்கு நிகர் யாருமே இல்லங்குறதும், புடிக்கலன்னா பட்டுன்னு தூக்கிப்போட்டு மிதிக்கிறதும்தான் நம்ம ஆளுககிட்ட ஒரு கெட்டப் பழக்கம். நம்ம உலக சினிமா ஆர்வலர்களோட கவனம் கொரியன், ஸ்பானிஷ் படங்கள விட்டு இப்ப மலையாள சினிமா மேல விழுந்துருக்கு. அதுலயும் குறிப்பா ஃபஹத் ஃபாசில் மேல. உலகத்துலயே ஃபஹத் ஃபாசிலுகு ஈடு இணையே இல்லங்குற ரேஞ்சுல கூவல்கள்லாம் விழுது. இருக்கட்டும். அதுக்குன்னு எல்லாரும் அதே மாதிரி பன்னனும்னா எங்க போறது?

இப்டித்தான் மோகன்லால சொல்லுவானுங்க… “அவரு கன்னம் கூட நடிக்கும்டா”ன்னு. அவருக்கு கன்னத்துல சதை கொஞ்சம் ஜாஸ்தி.. டக்குன்னு திரும்பும்போது கன்னத்துல உள்ள சதை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆடும். உடனே நம்மாளுக கண்ணம் நடிக்கிது காது நடிக்கிதுன்னுலாம் கிளப்பி விடுவாங்க.

இவர்கள்லாம் சிறந்த நடிகர்கள் இல்லைன்னு நா சொல்லவே இல்ல. அதுக்காக அவர்கள கம்பேர் பண்ணி, உதயநிதியத் திட்டு திட்டுன்னு திட்டிக்கிட்டு இருக்கானுங்க. இந்தப் உதயநிதி நடிப்புல மிகப்பெரிய முன்னேற்றத்தயெல்லாம் காமிக்கலன்னாலும் இந்தப் படத்த நிச்சயமா அவர் கெடுத்துடல. நா ஒரிஜினல் வெர்ஷன் பார்க்கல. என்னைப் பொறுத்த அளவு   உதயநிதி இந்தப் படத்துக்கு ஓரளவு நல்ல தேர்வாத்தான் தெரியிறாரு.  

.முதல் பத்தில கேட்டமாதிரி இனிமே உதயநிதிகிட்ட “நீங்க நடிச்ச நல்ல படம் எதாவது சொல்லுங்க”ன்னு கேட்டா காலர தூக்கி விட்டுக்கிட்டு ”நிமிர்”ன்னு திமிரா சொல்லலாம். அதே “நீங்க நல்லா நடிச்ச ஒரு படம் சொல்லுங்க”ன்னு யாராவது கேட்டுட்டா….அவ்ளோதான்.. அதுக்கு இன்னும் ஒரு யுகமே ஆகலாம்.

மொத்தத்துல குடும்பத்துல எல்லாரையும் எதாவது ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போகனும்னு நீங்க ஒரு ப்ளான் வச்சிருந்தா அதுக்கு இந்தப் படம் மிகச்சரியான தேர்வு. மிஸ் பன்னாம பாருங்க.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...