Sunday, January 28, 2018

நிமிர் - நிமிருதா இல்ல நம்மள நிமுத்துதா??!!


Share/Bookmark
“நான் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது” அப்டின்னு உதயநிதி சொன்னதும் “யய்யா…எங்க வகுத்துல பீர வாத்தைய்யா.. பீர வாத்த.. தயவு செஞ்சி சினிமாவ விட்டுட்டு அரசியலுக்கே போயிரு”ன்னு எல்லாருமா ஒண்ணா சேர்ந்து வழியனுப்பத் தயாரா இருக்கப்போ வந்து நிக்கிது நிமிர்.

“சார் இத்தனை வருஷமா சினிமால இருக்கீங்களே. நீங்க நடிச்ச நல்ல படம் ஒண்ண சொல்லுங்க” அப்டின்னு டக்குன்னு யாராவது கேட்டா உதயநிதிக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருக்கும். அப்டித்தான் இருக்கு அவரோட ட்ராக் ரெக்கார்டு. உதயநிதி படங்கள்ல ஓரளவுக்கு நல்ல படம்னு பெரும்பாலவங்க சொல்ற ”மனிதன்” படத்துலயே உதயநிதி சீரியஸா பேசுற பல இடங்கள் சிரிப்பை வரவழைக்கிற மாதிரி தான் இருக்கும். குறிப்பா சொல்லப்போனா அந்தப் பட்த்துக்கு மிகப்பெரிய மைனஸே உதயநிதிதான்.

அப்படிப்பட்ட சூழல்ல ஃபகத் ஃபாஸிலோட மிகப்பெரிய வெற்றிப்படமான மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தோட தமிழ் ரீமேக்குல, ”நடிச்சா உதயநிதிதான் நடிக்கனும்”ன்னு இயக்குனர் ப்ரியதர்ஷன் ஒத்தக் கால்ல நின்னதால உதயநிதி இந்தப் படத்துல ஹீரோவாயிருக்காருன்னு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம ஃபஹத் ஃபாசில விட உதயநிதி இந்தப் படத்துல நல்லா நடிச்சிருக்காருன்னு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால ப்ரியதர்ஷன் ஒரு போடு போட்டாரு பாருங்க…. “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” நம்புனாதான் produce பன்றேன்னு உதயநிதி சொல்லிருக்காரு.. நீங்க எப்டி நம்புறீங்களா இல்லயா?” சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு அழகான கிராமம். அங்க ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தர்.. அவருடைய அப்பா, அவரோட காதலி, அவரோட எதிரி, அவர் படும் அவமானம்ன்னு இப்படி செல்வம்ங்குற கதாப்பாத்திரத்த சுத்தி நடக்குற சின்னச் சின்ன எதார்த்தமான அழகான விஷயங்கள்தான் இந்த நிமிர்.

படம் பார்க்குற ஆடியன்ஸூக்கு எந்த வித மன அழுத்ததையும் குடுக்காம, ரொம்ப அழகா, சுவாரஸ்யமா எடுக்கப்படுற படங்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த நிமிர். ஆரம்பத்துலருந்து கடைசி வரை எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாம முழுமையா படத்தோட ஒண்றி ரசிக்க முடிஞ்சிது. கதை திரைக்கதை, கதாப்பாத்திர அமைப்புகளத் தாண்டி, கதை நடக்குற கிராமமும் அதை வித விதமனா ஷாட்ல ரொம்ப அழகா காமிச்ச கேமாராவும் படத்த ரசிக்க முடியிறதுக்கு மிகப்பெரிய காரணம்.

“பூவுக்கு தாப்பா எதுக்கு.. ஊருக்கு கதவா இருக்கு”ன்னு ஸ்வேதா மோகனோட தேன் சொட்டுற குரலோட ஆரம்பிக்கிற ஒரு அருமையான பாட்டுல கதை நடக்குற கிராமத்தோட அழக காட்டுறாங்க. அதே அழகு படம் முடியிற வரையிலும் தொடருது. ஆனா என்ன ஒண்ணு அன்னக்கிளில ஆடிட்டு ரிட்டயர்டு ஆகியிருந்த ஒரு ஆயாவ கூப்டு வந்த அந்த முதல் பாட்டுக்கு ஆட வச்சதுதான் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சி.

எந்தப் பாட்டையுமே நா முன்னால கேக்கவே இல்லை. ஆனாலும் படம் பாக்குறப்போ எல்லா பாட்டுமே நல்லா இருந்துச்சி. படத்துல மைனஸ்னு பெருசா எதுவுமே தோணல. க்ளைமாக்ஸ்ல நடக்குற ஒரு சண்டைக் காட்சி முக்கியமான ஒண்ணு. ஆனா அத மழையில நடக்குற மாதிரி படம் பிடிச்சிருக்கது கொஞ்சம் கவனத்த சிதறடிக்கிற மாதிரியும் சுவாரஸ்யத்த குறைக்கிற மாதிரியும் இருந்துச்சி.

மகேந்திரன், பார்வதி நாயர், நமீதா ப்ரமோத்னு எல்லாருமே அவங்கவங்க கதாப்பாத்திரத்த சிறப்பா செஞ்சிருக்காங்க. ”கருத்து கந்தசாமி” சமுத்திரக்கணி எந்தக் கருத்தும் சொல்லாம படத்துல வசனம் எழுதிருக்கதே மிகப்பெரிய ஆறுதல்.  

யாராவது ஒரு ஆள புடிச்சிட்டா அவர உச்சானிக்கொம்புல தூக்கி வக்கிறதும், அவருக்கு நிகர் யாருமே இல்லங்குறதும், புடிக்கலன்னா பட்டுன்னு தூக்கிப்போட்டு மிதிக்கிறதும்தான் நம்ம ஆளுககிட்ட ஒரு கெட்டப் பழக்கம். நம்ம உலக சினிமா ஆர்வலர்களோட கவனம் கொரியன், ஸ்பானிஷ் படங்கள விட்டு இப்ப மலையாள சினிமா மேல விழுந்துருக்கு. அதுலயும் குறிப்பா ஃபஹத் ஃபாசில் மேல. உலகத்துலயே ஃபஹத் ஃபாசிலுகு ஈடு இணையே இல்லங்குற ரேஞ்சுல கூவல்கள்லாம் விழுது. இருக்கட்டும். அதுக்குன்னு எல்லாரும் அதே மாதிரி பன்னனும்னா எங்க போறது?

இப்டித்தான் மோகன்லால சொல்லுவானுங்க… “அவரு கன்னம் கூட நடிக்கும்டா”ன்னு. அவருக்கு கன்னத்துல சதை கொஞ்சம் ஜாஸ்தி.. டக்குன்னு திரும்பும்போது கன்னத்துல உள்ள சதை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆடும். உடனே நம்மாளுக கண்ணம் நடிக்கிது காது நடிக்கிதுன்னுலாம் கிளப்பி விடுவாங்க.

இவர்கள்லாம் சிறந்த நடிகர்கள் இல்லைன்னு நா சொல்லவே இல்ல. அதுக்காக அவர்கள கம்பேர் பண்ணி, உதயநிதியத் திட்டு திட்டுன்னு திட்டிக்கிட்டு இருக்கானுங்க. இந்தப் உதயநிதி நடிப்புல மிகப்பெரிய முன்னேற்றத்தயெல்லாம் காமிக்கலன்னாலும் இந்தப் படத்த நிச்சயமா அவர் கெடுத்துடல. நா ஒரிஜினல் வெர்ஷன் பார்க்கல. என்னைப் பொறுத்த அளவு   உதயநிதி இந்தப் படத்துக்கு ஓரளவு நல்ல தேர்வாத்தான் தெரியிறாரு.  

.முதல் பத்தில கேட்டமாதிரி இனிமே உதயநிதிகிட்ட “நீங்க நடிச்ச நல்ல படம் எதாவது சொல்லுங்க”ன்னு கேட்டா காலர தூக்கி விட்டுக்கிட்டு ”நிமிர்”ன்னு திமிரா சொல்லலாம். அதே “நீங்க நல்லா நடிச்ச ஒரு படம் சொல்லுங்க”ன்னு யாராவது கேட்டுட்டா….அவ்ளோதான்.. அதுக்கு இன்னும் ஒரு யுகமே ஆகலாம்.

மொத்தத்துல குடும்பத்துல எல்லாரையும் எதாவது ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போகனும்னு நீங்க ஒரு ப்ளான் வச்சிருந்தா அதுக்கு இந்தப் படம் மிகச்சரியான தேர்வு. மிஸ் பன்னாம பாருங்க.




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ஜீவி said...

.முதல் பத்தில கேட்டமாதிரி இனிமே உதயநிதிகிட்ட “நீங்க நடிச்ச நல்ல படம் எதாவது சொல்லுங்க”ன்னு கேட்டா காலர தூக்கி விட்டுக்கிட்டு ”நிமிர்”ன்னு திமிரா சொல்லலாம். அதே “நீங்க நல்லா நடிச்ச ஒரு படம் சொல்லுங்க”ன்னு யாராவது கேட்டுட்டா….அவ்ளோதான்.. அதுக்கு இன்னும் ஒரு யுகமே ஆகலாம்......... சூப்பரப்பு!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...