Thursday, September 2, 2010

அந்த நேரம் அந்தி நேரம்- II


Share/Bookmark

இந்த பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியே...முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.. பகுதி I

இதயம் உச்சகட்ட படபடப்பிற்கு சென்றது கதிருக்கு. சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான்.உடல் லேசான நடுக்கத்திற்குட்பட்டது. ஒருபுறம் பயம் முழுமையும் ஆட்கொண்டிருந்தாலும், இன்னொரு முறைஅந்த ஒலி கேட்குமா என எதிர்பார்த்தான். ஆனால் கேட்கவில்லை.

கேட்டது ஒரு வேளை பிரம்மையா? கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா? காட்டுப்பூனை, நாய், நரியை தவிற வேறு எந்த விலங்கினங்களும் இங்கு இருக்க
வாய்ப்பே இல்லை. காட்டுப்பூனை சில சமயம் குழந்தை அழுவதைப்போன்ற சத்தமிடும். ஆனால் இது குழந்தையின் சத்தமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும்? நொடிப்பொழுதில் பல கேள்விகள் அவன் மூளையை குதறின.

வண்டியில் ஏறி உக்கார்ந்து கிக்கரை உதைத்தான். எஞ்ஜின் உயிர் பெற்றது. லேசான வெளிச்சத்துடன் ஹெட்லைட் எரிய ஆரம்பித்தது.இருப்பினும் போக மனதில்லை. என்னதான் அது என பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
பயத்தை விட மேலோங்கி நின்றது. வண்டியை சவுக்கு காட்டு பக்கம் திருப்பி வைத்துவிட்டு, இஞ்ஜினை அணைக்காமல்,ஹெட் லைட் வெளிச்சத்தில் தோப்புக்குள் இறங்க ஆரம்பித்தான்.

ரோட்டு பகுதியை விட்டு சற்று பள்ளமான இடத்தில் அமைந்திருந்தது அந்த தோப்பு. ரோட்டின் சரிவல் பகுதியில் மெல்ல இறங்கி கால் வைக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, ஐஸ்கட்டி கரைக்கப்பட்ட நீரில் கால் வைத்ததைப் போல. ஆம் அவன் கால் வைத்தது, ஆற்றிலிருந்து பாசனத்திற்காக ஊருக்குள் பிரித்து விடப்பட்ட வாய்க்காலில். சத்தமின்றி சென்றுகொண்டிருந்த அந்த நீரின் வெப்பநிலை மார்கழி குளிரால் ஒற்றை இலக்கத்தை அடைந்திருந்தது. மெதுவாக வாய்க்காலை கடந்து அந்த தோப்புக்குள் சத்தம் வந்த பகுதியை நோக்கி குத்து மதிப்பாக நடந்தான்.

சிறிது தூரத்திற்கு பிறகு வண்டியின் வெளிச்சம் பொருட்களை காட்ட மறுக்க, பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து இன்னும் சற்று உள்ளே சென்றான்.தரை முழுதும் சவுக்கு இலைகளால் மூடப்பட்டு இருந்ததால்
காலடிச்சத்தம் எதும் கேட்கவில்லை.அங்கிருந்து ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பான். அதன் பின் காடு மிக அடர்ந்திருப்பதால் செல்வது ஆபத்து என நின்றுவிட்டான்.

அதன் பின் டார்ச்சை அவனை சுத்தி ஒரு முறை அடித்து ஏதேனும் தென்படுகிறதா என நோட்டம் விட்டன். ஏதும் அகப்படவில்லை.சரி இது நமக்கு வேண்டாத வேலை கிளம்பலாம் என முடிவு செய்தபோது அது அவன் கண்ணில் பட்டது. தரையில் ஒரு சிறிய மின்மினி பூச்சி போன்றதொரு ஒளிப்புள்ளி. டார்ச்சையும் பார்வையயும் அதன் மீது செலுத்தி, குனிந்து பார்த்த போது தெரிந்தது..அது ஒரு அணைக்கப்படாத சிகரட் துண்டு.

இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. கண்டிப்பாக இங்கு இருப்பது தவறு என உணர்ந்து திரும்பும் போது, தரையில் ஏதோ இழுபடுவது போன்ற சத்தம் கேட்டது. உன்னிப்பாக கேட்டன். ஆம் கண்டிப்பாக ஏதோ சத்தம் கேட்கிறது. மனதை இரும்பாக்கிகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி டார்ச்சை அடித்துக்கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்தான்... சில அடிகள் நகர்ந்திருப்பான்...

அங்கு அவன் கண்ட காட்சி, அவன் ரத்த அழுத்ததை நொடிப்பொழுதில் உயரச்செய்தது. ஒரு பெண்ணின் உடல் கை, கால்களை தரையில் அடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, கசாப்பு கடையில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி இறுதியில் உயிருக்கு போராடுவதைப்போல.. அன்று குடித்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அப்போதே வியர்வையாக வெளிவந்தது கதிருக்கு. மெதுவாக அந்த உடலின் மேல் டார்ச் வெளிச்சத்தை செலுத்தினான். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணின் உடலில் ஏதும் காயம் இருப்பதாக தென்படவில்லை.. மெதுவாக வெளிச்சத்தை சற்று மேலேற்றினான். கழுத்தில் ஆழமான ஒரு வெட்டு இருப்பதை கழுத்துப்பகுதியை முழுதும் நனைத்திருந்த ரத்தம் சொன்னது.. அவள் அணிந்திருந்த மீன் டாலர்
கோர்த்த அந்த ச்செயின் அவள் தாடைப்பகுதியில் தங்கி இருந்தது.

வெளிச்சம் முகத்தில் அடித்தபோது, அவள் கண்கள் இடப்புறமும், வலப்புறமும் இரண்டு முறை சென்று வந்து, பின் கதிரை நோக்கி பார்த்து அப்படியே நிலை குத்திப்போய் நின்றது. கை, கால்களின் அசைவும் நின்றிருந்தது. ஒரு விதமான பயம், அழுகை இரண்டும் சேர்ந்து அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. திரும்பி பைக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தன். இந்த முறை நடக்கவில்லை
ஓடினான்..

அடுத்த பதிப்பில் முற்றும்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...