Thursday, August 16, 2012

துவாரமலை இரவுகள் - 3


Share/Bookmark
குறிப்பு: இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. 

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

காலை 7 மணி.. சூரியன் லேசாக முகம் காட்ட துவங்கியிருந்தது. கதவிடுக்கு வழியே உள்நுழைந்த சூரிய ஒளி ஆறுமுகத்தின் முகத்தில் தட்டி எழுப்பியது. மெல்ல கண் திறந்து சுற்றி பார்க்க, இரண்டு மகன்களும் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு அந்த சம்பவத்தை பார்த்த பஞ்சவர்ணம் இன்னும் காப்பி வைக்க கூட எழுந்திராமல் படுத்திருந்தாள். மெல்ல அவள் அருகில் சென்று  "பஞ்சவர்ணம்... எழுந்திரு.. நேரம் ஆச்சு பாரு.."என கையை தொட, உடல் நெருப்பாக கொதித்தது. "ஏய் பஞ்சவர்ணம் எழுந்திரு வைத்தியர்ட்ட பொய்ட்டு வந்துடலாம்.." என ஆறுமுகம் கூற :"இல்லைங்க கொஞ்சம் கசாயம் வச்சி சாப்டா சரியா போயிடும் என்று கூறியவாறே படுக்கையிலிருந்து எழுந்தாள். எழுந்து உட்கார்ந்து அவள் ஆறுமுகத்தை பார்த்த பார்வை ஆயிரம் கேள்விகளை உள்வைத்திருந்தது. "ராத்திரி நடந்தது கனவா இல்ல நிஜமா... யார் இப்படி செய்தது... எதுக்கு இங்க அத செய்தாங்க" என இன்னும் நீண்டு கொண்டே சென்றது.

ஆறுமுகம் எழுந்து வீட்டு கதவை திறந்து வெளியேவர பஞ்சவர்ணமும் பின் தொடர்ந்தாள். மரவள்ளி செடிகளை கடந்து அந்த புதர் அருகில் செல்ல செல்ல இருவருக்கும் எதோ ஒரு பயம் கலந்த படபடப்பு நெஞ்சுக்குள். புதருக்கு அருகில் கிடந்த அந்த நீளமான குச்சியை எடுத்து செடியை விலக்கிப் பார்க்க நேற்று இரவு கண்ட ஏதும் கண்ணுக்கு தென்படவில்லை. வேகவேகமாக மற்ற பகுதிகளையும் விலக்கி பார்த்த ஆறுமுகத்திற்கு ஏமாற்றம் கலந்த ஆச்சர்யமே மிஞ்சியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இன்னும் சற்று முன் செல்ல நேற்று இரவு நடந்து கனவல்ல என்று அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் மீது உறைந்து போயிருந்த ரத்தம் சொன்னது. மரங்களுக்குள் முழுவதும் தேடியும் ஆட்டின் தலையோ உடலோ கிடைக்கவில்லை. இருவரும் வெளிவந்து வீட்டிற்கு பக்கவாட்டில் உள்ள காய்ந்த தரையில் உட்கார்ந்தனர்.

"என்னங்க...என்ன நடக்குது இங்க? எனக்கு ஒண்ணுமே புரியலைங்க?"

"பஞ்சவர்ணம்..நா உன்கிட்ட இன்னொன்னையும் மறைச்சிட்டேன்.. முந்தாநாளு நடுச்சாமத்துல வயிறு முட்டுச்சின்னு ஒண்ணுக்கு போகலாம்னு வந்தேன்... அப்ப கால்ல எதோ மிதி பட்டுச்சி.. என்னன்னு பாத்தா ஒரு சேவலோட தலைமட்டும் தனியா கெடந்துச்சி.. எங்க உன்கிட்ட  சொன்ன பயப்படுவியேன்னுதான் அத எடுத்து சரிவுல வீசிட்டேன் புள்ள.."

"என்னங்க சொல்றீங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. இங்க எதோ நமக்கு தெரியாம நடக்குதுங்க.. நீங்க இன்னிக்கே போய் சடையப்ப சாமிய  பாத்துட்டு வாங்க .. அவருதான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு
சொல்ல முடியும்..."

"நானும் அதான் நெனைச்சேன் புள்ள... நீ கொஞ்சம் சாப்பாடு மட்டும் செஞ்சி குடு... நா மதிய வாக்குல பொய்ட்டு பாத்துட்டு வந்துடுறேன்... "

"ம்ம் சரிங்க" என்றவள் மதியம் பதினொருமணிவாக்கில் சமைத்து இலைபொட்டலமாக ஒருவேளை உணவை கட்டி கொடுக்க, அதனை ஒரு சாயம் போன ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு, துவாரமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மலை அடிவாரத்திலுள்ள சடையப்பரை காண புறப்பட்டான்,

"இந்தா புள்ளை நா வந்து சேர எப்புடியும் பொழுதாயிரும்... வீட்ட நல்ல சாத்திகிட்டு பத்தரமா இருங்க.." என்று பஞ்சவர்ணத்திடம் கூறிவிட்டு கிளம்பினான். மலையடிவாரத்தை அடையவே கிட்டத்தட்ட பொழுது சாய்ந்திருந்தது. மலையிலிருது கொட்டும் ஒரு காட்டருவி தரையை அடையும் ஓரிடத்திலேயே சாமி எப்போதும் காணப்படுவார். அங்கிருக்கும் சிறு குகை ஒன்றிலேயே தங்கியிருப்பவர். கிட்டத்தட்ட ஆள் அரவமற்ற ஒரு பகுதி. எப்படி  சாப்பிடுகிறார் எப்போது தூங்குகிறார் என்பதெல்லாம் எவருக்கும் தெரியாயாதது. பத்து பதினைந்து நாட்களுக்கு மாதம் முறையே ஊருக்குள் வந்து செல்பவர். அதுவும் பெளர்ணமியன்று ஊருக்குள் இருக்கும் அம்மனை வழிபடுவதற்காக.

எப்போதாவது ப்ரச்சனை நேரும் போது இவரை தேடி வரும் சிலரிடம், நல்வாக்கு கூறி அனுப்பி  வைப்பார். சிலர் இவரை சக்தியுள்ள சாமி என்று கருதினாலும் சிலர் இவரை ஒரு சாதாரண  மனிதனாகத்தான் பார்க்கின்றனர். ஆறுமுகம் அந்த அடசலான காட்டுப்பகுதியை நெருங்கும்போது  கிட்டத்தட்ட சூரியன் முகத்தை முழுவதும் மூடியிருந்தது. லேசான அரைவெளிச்சத்தில் சென்று அங்கு சுற்றித்தேட அங்குள்ள ஒரு பெரிய மரத்தின் கீழ் குத்துக்காலிட்டு கண்கள் மூடியிருந்த நிலையில், ஒரு கையில் மூங்கில் குச்சியுடன் உட்கார்ந்திருந்தார் சாமி. ஆண்டுகளாக வளர்ந்த நரைதாடியும், மாதங்களுக்கு முன்னர் துவைத்தது போலான ஒரு அழுக்கு காவி வேஷ்டியுடன் காணப்பட்டார் சடையப்பர். ஆறுமுகம் மெல்ல நடந்து சென்று அவருக்கு பத்தடி தொலைவில் அமர்ந்து

"சாமி" என்றான்.. மெல்ல கண்களை திறந்தவர் "சொல்லுப்பா யார் நீ"

"சாமி என் பேரு ஆறுமுகம்... நா ஆறுமாசத்துக்கு முன்னாடி உங்களை ஒருதடவ வந்து பாத்தேன்.. நீங்கதான் இனிமே நல்லது நடக்கும்...உனக்குன்னு ஒரு இடம் அமையும்னு சொல்லி அனுப்சீங்க..அதே மாதிரி ஆறுமாசமா நிம்மதியா ஒரு எஸ்டேட்ட்ல வேல பாத்துகிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப ரெண்டுநாளா ஒரு ப்ரச்சனை சாமி."

"என்ன ப்ரச்சனை?"

இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு நடந்தவற்றை விளக்கமாக கூறினான் ஆறுமுகம்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் "நீ அந்த ஊர்ல யாரோடவாது கடுமையான பகைய வளத்துருக்கியா?" என்றார்

"புரியலையே சாமி... எந்த மாதிரி கேக்குறீங்க"

"அதாவது உன்மேல பில்லி சூன்யம் ஏவல்னு எந்த சக்தியவாது அவங்க ப்ரயோகிக்கிற அளவுக்கு யாரோடவாது நீயோ இல்லை உன் மனைவியோ பகைய வளத்துருக்கீங்களான்னு கேட்டேன்"

"அய்யயோ அதெல்லாம் இல்லை சாமி.. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம். பகைன்னு சொல்லிக்க எங்களுக்கு யாரும் இல்லை. அதோட நாங்க இன்னும் கூலி வேலைதான் பாத்துகிட்டு இருக்கோம் எங்கமேல மத்தவங்க பொறமை படுற அளவு வாழ்க்கை கூட நாங்க வாழ ஆரம்பிக்கல.. நிம்மதியா ரெண்டு வேலை கஞ்சி குடிச்சிட்டு இருக்கோம் அவளவுதான்... இன்னும் சொல்லப்போனா எனக்கு  இந்த பில்லி சூன்யம் மேலல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாதுய்யா..."

"உனக்கு நம்பிக்கையில்லை சரிப்பா... ஆனா மத்தவங்களுக்கு இருக்கே.. அடுத்தவன் நாசமா போகனும் நெனைக்கிறவன் எத்தனை பேரு இருக்காங்க.. சரி விடு நீ சொல்றத பாத்தா உனக்கு பில்லி சூன்யம்  ஏவல் வைக்கிற மாதிரி யாரையும் நீ சம்பாதிக்கலை... அப்படின்னா இதெல்லாம் நடந்ததுக்கு ஒரே காரணம் தான் இருக்கமுடியும்.."

"என்ன சாமி அது?"

"தீராத பாவங்களால சில காரியங்கள் நடக்கவிடாம துர்தேவதைகள் தடுத்து வைச்சிருக்கும்.. அப்படி இருக்க சமயத்துல அதுங்களுக்கு சில பலிகளை கொடுத்தா அதுங்க சாந்தி அடைஞ்சி தடைபட்ட செயல்கள நடக்க வழிவிடும்.. உதாரணமா ஒருவனுக்கு தீராத திருமண தோஷம் இருந்துச்சின்னா எந்த காலத்துலயும் திருமணம் நடக்கவிடவே விடாது.. அந்த மாதிரி சமயங்கள்ல இந்த மாதிரி பலி கொடுக்கும் வழக்கம் இருக்கு..."

இதைக்கேட்ட உடன் ஆறுமுகத்தின் மூளையில் எதோ பொறி தட்டியது.

சாமி தொடர்ந்தார்... அதே மாதிரி இன்னொரு சாத்தியமும் இருக்கு... ஒரு இடத்துல பழங்கால  பொக்கிஷங்கள் புதைஞ்சி கிடந்தா அதை சில காவல் பூதங்கள் காத்துகிடக்கும். அந்த புதையலை எடுக்க எவரேனும் முயற்சி செய்தால் அந்த காவல் பூதங்களை திருப்திப் படுத்த இந்த மாதிரி பலிகள் கொடுப்பதுண்டு..  ஆனா இந்த காலத்துல இப்படி யாரும் நடந்துக்கிறதா எனக்கு புலப்படல..."

"சாமி.. எனக்கும் இதெல்லாம் ஏன் நடக்குதுண்ணு வெளங்கல சாமி... சரி நா கெளம்புறேன்..பொழுதாகிப் போச்சி..."என்று புறப்பட்டவனை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு தலையை  குனிந்துகொண்டே சொல்ல ஆரம்பித்தார்

"உங்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. நா கடைசியா சொன்ன அந்த துர்தேவதைகளுக்கு கொடுக்கிற பலியோ இல்ல காவல் பூதங்களூக்கு கொடுக்கிற பலியோ இறுதியில் ஒரு நரபலியிலேயே முடியும். ஒரு பறவை, ஒரு கால்நடையை தொடர்ந்து குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு நரனை ஒரு பெளர்ணமி பின்னிரவில் பலி கொடுத்தே இந்த பூஜைகள் முழுமையடையும்... இன்று  பெளர்ணமி.. கடந்த இரண்டு பின்னரவுகளில் ஒரு உன்னுடைய வீட்டில் ஒரு பறவையும் ஒரு  கால்நடையும் பலி கொடுக்கப்பட்டு விட்டன. என்னுடைய யூகம் சரியானால் இன்று பின்னிரவில் விழப்போவது ஒரு நரபலியாகவே இருக்கவேண்டும்... ஜாக்கிரதை..." என்று கூறி முடிக்க ஆறுமுகத்தின் கால்கள் லேசான நடுக்கத்திற்கு உட்பட தொண்டை வறண்டு போனது...  சாமியிடம் விடைபெற்றுவிட்டு வேகமான நடையில் வீடுநோக்கி புறப்படலானான்.

இப்பொழுதே இரவு முழுமையாக ஆக்ரமித்திருந்தது. பெளரணமி நிலவு இன்னும் வெளிச்சத்தை உமிழ காத்திருக்க நடுக்கத்திற்குட்ட கால்களுடன் துவாரமலை நோக்கி நடக்கலானான் ஆறுமுகம். சடையப்பர் கூறியதையும் நடந்தவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையிலேயே மனம் எதோ செய்தது... ஆறுமுகத்தின் மனதில் ஓடியவை "எஸ்டேட் ஓனர் திருச்சாமி அய்யாவுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம்  ஆகவில்லை... ஒரு வேளை சடையப்பர் சொன்னதுபோல இந்த பூஜை அவருக்காக நடத்தப் பட்டிருக்குமோ?அப்படி யென்றால் அவர் இன்று பலிகொடுக்கப்போகும் அந்த நரன் யார்? என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்போதே திருச்சாமி அடிக்கடி உன் மகன்களுக்காக தான் நான் உன்னை இங்கு வைத்திருக்கிறேன் என்று சொன்னதும் முதல்முறை தன் இளைய மகனை பார்த்த பொழுது அவர் ராசி நட்சத்திரங்களை விசாரித்து மகிழ்ந்தது கண் முன்னே வந்து சென்றது. அதுபோக அவர் ஒவ்வொருமுறையும் வெறும் கூலிக்காரனான என் மகன்களுக்கு பல பொருட்களை அவர் வாங்கித்தந்ததும் மனதுக்குள் நெருடலை அதிகப்படுத்தின. அதுபோக முந்தினம் அதிகாலையிலேயே வந்து வீட்டு பின்புறத்தை தேவையில்லாமல் பார்த்துவிட்டு சென்றதும் அடிவயிற்றில் கிலியை அதிக்ப்படுத்த,...ஒரு வேளை சடையப்பர் சொல்வது உண்மையானால் இன்று பலியாகப் போவது என் இளைய மகனா...." என்று நினைக்க நினைக்க கால்கள் வேகம் பிடித்தது...

வழியிலேயே மேகங்கள் மழைத்தூரலை பொழிய, மலையேறுவது இன்னும் கடினமானது ஆறுமுகத்திற்கு. ஆனால் அவன் கண்முன்னே தெரிந்தது திருச்சாமியும், அவனது இளைய மகனுமே... துவாரமலையை அடைவதற்குள் நடுச்சாமத்தை தாண்டியிருக்க ஓட்டமும் நடையுமாக மூச்சிறைக்க வீட்டை அடைந்த ஆறுமுகம் கதைவை திறக்க முயற்சிக்க... முடியவில்லை... கதவு நாரால் இழுத்து வெளிப்புறமாக கட்டப்பட்டிருந்தது. ஆறுமுகத்திற்கு அழுகையே முட்டிக்கொண்டு வந்தது... அந்த நாரை பிய்த்து எறிந்து விட்டு வீட்டுக்குள் செல்ல, எவரும் இல்லை.. அறிக்கனை தேடி ஏற்றிக்கொண்டு ஆத்திரம் கலந்த அழுகையுடன் வீட்டின் பின்புற மரங்களுக்குள் ஓரிடம் விடாமல் அலசிச்சென்றான்...

புதர்களுக்குள் சென்று "பஞ்சவர்ணம்... பஞ்சவர்ணம்..." என்று சத்தம் போட்டுக்கொண்டே அறிக்கனை மேலாக தூக்கி தூரத்தில் தேடிக் கொண்டிருக்க... காலில் எதோ தட்டுப்பட்டது.. குணிந்து அறிக்கன் ஒளியில் தட்டுப்பட்ட பொருள் என்னவென்று பார்க்க... ஓனர் திருச்சாமியின்  துண்டிக்கப்பட்ட தலை தனியாக கிடந்தது.. கண்ணை திறந்திருந்த படியே உயிர் நீத்திருந்தார் திருச்சாமி.


அடுத்த பதிவில் முற்றும்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... மெகா தொடர் போல் "தொடரும்..." போட்டு விட்டீர்களே...

நன்றி... (TM 1)

வலைஇல்லம் said...

சிவா அடுத்த பகுதியையும் சீக்கிரம் எழுதுங்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்கிறேன்

முத்துசிவா said...

@திண்டுக்கல் தனபாலன்:
ஹிஹி.. இந்த பகுதியோட முடிச்சிடலாம்னு பாத்தேன்... ஆனா ரொம்ப பெருசா வந்ததால தொடரும் போட வேண்டியதாயிடுச்சி தல :)

முத்துசிவா said...

@வலைஇல்லம்:

கண்டிப்பாக விரைவில் அடுத்த பகுதியை பதிவிடுகிறேன்

Shareef S M A said...

சூப்பர் தல‌

இளா said...

சூப்பர் அண்ணாத்த.. செம.. ஆனா திருச்சாமி தலைவர பொசுக்குனு போட்டு தள்ளிட்டிங்க..அதான் வருத்தமா இருக்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...