1985ம் வருடம்: மார்கழி: 23
வெள்ளிக்கிழமை. அந்தப் பழைய அரசுப்
பேருந்திலிருந்து பாஸ்கர் இறங்கும் போது இரவு 10.45 மணி. எப்பொழுதும் 8 மணிக்கு வர
வேண்டிய பேருந்து, வழியில் ஏற்பட்ட கோளாருகளால் இன்று 10.45க்கே வந்து சேர்ந்தது. 19
வயதான பாஸ்கரின் சொந்த ஊர் திருமலைக்காடு. அவன் இறங்கிய பேருந்து நிறுத்தத்திலிருந்து
சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஊர். விவசாயமே முதன்மைத் தொழில்.
திருமலைக்காட்டிற்கு அருகில் கல்லூரிகள் எதுவும் இல்லாததால், 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும்
அக்கா வீட்டில் தங்கி ஒரு கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருப்பவன் வாரமொருமுறை
திருமலைக்காட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தான்.
அந்த வெள்ளிக்கிழமையும் கல்லூரியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கையில் தான் அந்தப் பேருந்து காலை வாரிவிட்டது. இறக்கிவிட்ட பேருந்து சென்ற பின், சுற்றி முற்றி ஒரு முறை பார்க்க, அவனுடன் சேர்ந்து நடக்க ஒருவருமில்லை. இறங்கிய இடத்தில் கண்ணாடி உடைக்கப்பட்ட ஒரு சாலை விளக்கு மட்டும் லேசான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஒன்பது மணிக்குள் வந்திருந்தாலாவது யாராவது சைக்கிளில் வருபவருடனோ அல்லது எதேனும் மாட்டு வண்டியிலோ ஏறி ஊருக்குச் சென்றிருக்கலாம். இருப்பினும் நெல் அரைக்கச் சென்ற ஏதேனும் மாட்டுவண்டிகள் வந்தாலும் வரலாம் என கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்தான். நேரம் வீணானது மட்டுமே மிச்சம். சரி நடப்போம் என கையிலிருந்த சிறிய துணிப்பையை தோளில் மாட்டிக்கொண்டு திருமலைக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பேருந்து நிறுத்தத்தை விட்டு தூரம் செல்லச் செல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளும் மறைந்து மரங்களும் வயல்வெளிகளும் வந்தன. ஒரு மாட்டு வண்டி சென்றால் மறைந்துவிடும் அளவுக்கே இருந்தது அந்தச் சாலையின் அகலம். அதுவும் எப்பொழுது போடப்பட்டு நிறுத்தப்பட்ட சாலையோ தெரியவில்லை, நடக்கும் பொழுது கப்பிகள் காலை நன்றாக பதம் பார்த்தது. ஆனால் அடித்த குளிரில் பாஸ்கருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. வழியிலிருக்கும் தென்னந் தோப்புகளிலிருந்து அடித்த தென்றல் கூட உறை குளிராயிருந்தது.
பெளர்ணமி முடிந்த மூன்றாம் என்பதால் நிலவு அப்பொழுதுதான் கிழக்கில் உதித்திருந்தது. இருப்பினும் வெளிச்சத்திற்கு பஞ்சமில்லை. குளிர் ஒண்றே பாஸ்கருக்கு எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது. சரியாக இருபது நிமிட நடையில் கணிசமான தொலைவை கடந்திருந்தான். அப்பொழுது வந்தது அந்த குறுக்குப் பாதை. பெரும்பாலும் பகல் நேரங்களில் திருமலைக்காட்டிற்கு நடந்து செல்வோர் அந்தக் குறுக்குப் பாதையை தேர்ந்தெடுப்பதுண்டு. குறுக்குப் பாதை என்றால் ஒன்றுமில்லை. வயல் வரப்புகளினூடே நடந்து சென்றால் ஒரு 10 நிமிடம் முன்னதாக திருமலைக்காட்டை அடையலாம். இரவில் யாரும் குறுக்குப் பாதையை தெரிவு செய்வதில்லை.இரவில் வயல் வெளிகளில் சுற்றி திரியும் சாரைப்பாம்புகள் வரப்புகளில் படுத்து உரங்கி கொண்டிருக்கும் என்பதால் இரவில் இந்த குறுக்கு பாதையை பெரும்பாலானோர் தவிர்ப்பது வழக்கம். மேலும் சிலர் இரவில் அந்த வழியே செல்லும் போது விசித்திரமான சில சம்பவங்கள் நடந்ததாகவும் கதை கட்டி விட்டிருந்தனர்.
பாஸ்கர் பெரும்பாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. எதற்கும் பயந்ததும் இல்லை. எந்தப் பாதையில் போகலாம் என்ற அரை நிமிட யோசனை. நாம் பார்க்காத பாம்புகளா, நமக்குத் தெரியாத கதைகளா என மனதில் நினைத்துக் கொண்டு, விரைவாக வீட்டுக்குச் சென்றால் போதும் என குறுக்குப் பாதையையே தெரிவு செய்தான். சில நிமிட மண்பாதை பயணத்தை தொடர்ந்து, வயல் வரப்புகள் வந்தடைந்தன. நிலவின் புண்ணியத்தில் கிட்டதட்ட வரப்புகள் நன்றாகவே கண்ணுக்கு புலப்பட்டன. வயல்களின் நெற்பயிர்களையும் வரப்பின் புற்களையும் மார்கழிப்பனி குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது.
மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்து வரப்புகளை கடந்தான். நல்ல வேளை.பாம்புகள் எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை.
"தட்... தட்...
தட்" என ஒரு சத்தம் சீரான இடைவெளியில் கேட்கத்தொடங்கியது. பாஸ்கருக்கு மனதில்
ஓரளவு சந்தோஷத்துடன் தைரியமும் சேர்ந்து கொண்டது. "அப்பா... வயலுக்கு தண்ணி கட்ட
வந்தவங்க குளிச்சிட்டு இருக்காங்க போலருக்கு.. அவங்களோட பேசிகிட்டே வீட்டுக்கு போயிடலாம்"
என்று நினைத்துக் கொண்டே மேலும் மேட்டில் ஏறி குளக்கரையை பார்த்த பாஸ்கர் முகத்தில்
ஒரு சிறிய மாறுதல்.
குளத்தில் இருந்தது 75 வயது மதிக்கத்தக்க ஒரு வயாதான பாட்டி. தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டு, தான் கட்டிய சேலையின் முந்தானையை மட்டும் நீரில் கசக்கி துணி துவைக்கும் கல்லில் "தட் தட் தட்" என அடித்துக் கொண்டிருந்தது.
முகம்
தூரத்திலிருந்து சரியாக தெரியவில்லை.. மேலும் சில அடிகள் நடந்து சென்று குளத்தின்
சரிவான பகுதியில் இறங்கினான். பாட்டியின் முகம் ஒரளவு நன்றாகவே தெரிந்தது. பார்த்த
முகமில்லை. ஒரு வேளை வேறு ஊருக்கு செல்லும் வழியில் இங்கு குளிக்க வந்திருக்க வேண்டும். பாட்டி
துணியை கல்லில் அடிப்பதால் நீர்த்துளிகள் லேசான தூரல் போல பாஸ்கர் மீது பட,
அது மேலும் குளிரை ஏற்படுத்தியது.
"ஏன் பாட்டி...
இந்த குளுருல குளிக்கிறியே.. கொஞ்சம் சீக்கிரமாவே வந்து குளிச்சிட்டு
போயிருக்கலாம்ல"
"......"
பாட்டியிடம்
பதில் எதுவும் இல்லை.
"உன்ன தான் பாட்டி
கேக்குறேன்"
"............"
துணியை கல்லில்
அடிப்பதை நிறுத்தப்படவும் இல்லை.
"பாட்டி தண்ணி மேல
தெறிக்குது கொஞ்சம் மெதுவாதான் அடியேன்"
இந்த முறை பாட்டி
லேசாக நிமிர்ந்து பார்வையை கூராக்கி முறைத்தது. இது ஒரு வித பயத்தை உண்டு செய்ய,
"நமக்கு ஏன் வம்பு" என நினைத்துக் கொண்டு , இரண்டு மூன்று அடிகள்
மேலே சென்று நின்று கொண்டான். மேலும் சில
நிமிடங்கள் துணியை துவைத்து கொண்டிருந்து விட்டு குளிப்பதற்காக சற்று
ஆழத்திற்கு சென்று, பாஸ்கரை பார்த்த
வாறு நீரில் முழுகியது.
அப்பாடா.. என்றவாரு பாஸ்கர் சர சரவென இறங்கி கால்களை அலம்ப ஆரம்பித்தான். முதலில் நீர் பட்டவுடன் உடம்பு உறைந்து விடுவது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தது. நன்றாக முகம் கை கால்களை அலம்பிக் கொண்டிருந்தவனுக்கு சட்டென மூளை ஒரு அலாரம் அடித்தது. ஷாக் அடித்தது போல நீரை விட்டு விலகி இரண்டடி வெளியே சென்ற பின் தான் மூளை அலாரத்திற்கான காரணத்தை விளக்கியது...
"நீரில் மூழ்கிய கிழவி எங்கே?"
"எப்படியும் கால் அலம்ப ஆரம்பித்து மூன்று நிமிடம் இருக்கும். இவ்வளவு நேரமாகக் கிழவி தண்ணீருக்குள்ளா இருக்கும்? கிழவி மூழ்கிய இடத்தில் எழும்பிய நீரலையும் அடங்கியிருந்தது. குளத்தை சுற்றி கோரைப்புற்கள்... வேறு வழியாக கரையேறியிருக்கவும் முடியாது.
10 நிமிடம்...
கிழவி வந்த பாடில்லை..... மூளையிடமிருந்து சிக்னல் வந்துவிட்டது.. கரையில்
வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு திரும்பிப்
பார்க்காமல் ஓட்டமெடுத்தான் பாஸ்கர்... குளத்திலிருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ
அவ்வளவு தூரம் ஓடினான். கால் சோர்ந்து விட்டது. குளத்தை தாண்டி வந்து
விட்டோம் என நம்பிக்கையும் வந்தது. சற்று நேரம் குனிந்து இளைப்பாறினான். வழக்கதை
இவிட இரண்டு மடங்கு அதிக ஆக்ஸிசனை நுரையீரல் கொள்முதல் செய்து கொண்டிருந்தது.
ஒரு முறை சுற்றி பார்த்தான்.. இப்பொழுதும் எவரும் இல்லை... சுற்றி வெறும் பனை மரங்கள்... மறுபடியும் நடக்க மனமில்லை. லேசான ஓட்டத்தை எடுத்த அவனுக்கு கலங்கரை விளக்கம் போல தூரத்தில் ஒரு ஒளிப்புள்ளி தெரிந்தது.. அதை நோக்கி வேகமாக முன்னேறினான். அருகில் செல்ல செல்ல அந்த ஒளிப்புள்ளி ஒருவர் கையில் இருக்கும் அரிக்கன் விளக்கு என்பது தெரிந்தது (அரிக்கன் விளக்கு-பெட்டர்மாக்ஸ் லைட்டின் older version).விளக்குடன் நடந்து வருபவரை நோக்கி வேகமாக ஓடிய பாஸ்கரன் அவரருகில் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து அவரது காலை பற்றினான்.
உடனே அவர் பாஸ்கரனை கையால் பற்றி மேலெலுப்ப, அவர் முகத்தை பார்த்த பாஸ்கரனுக்கு அப்போது தான் உயிரே வந்தது... வேறு யாருமல்ல. செல்லையன். திருமலைக்காட்டில் துணிகளை வெளுக்கும் தொழில் செய்து வருபவர்.
"என்னப்பா பாஸ்கர்... ஏன் இப்டி ஓடி வர்ற... என்னாச்சு"
"அண்ணேன்.. அண்ணேன்... " முழுவதுமாக பேச்சு வரவில்லை... "எ... என்னை வீட்டுல விட்டுருங்கண்ணே"
"எதயாவது பாத்து பயந்துட்டியா... சரி சரி... பதட்டப்படாத... ஒண்ணும் இல்ல...ஒண்ணும் இல்லை" என்றவர்... கையில் இருந்த விளக்கை பாஸ்கரிடம் கொடுத்து "இந்தா... இத எடுத்துகிட்டு நீ வீட்டுக்கு போ... மேலவீட்டுக் காரரு வயலுக்கு தண்ணி பாயுதான்னு பாத்துட்டு வர சொன்னாரு.. நா பாத்துட்டு வந்துடுறேன்"
"அண்ணே நீங்களும் வாங்கண்ணே.."
"ஒண்ணும் இல்லப்பா... நா இங்கயே நின்னு பாத்துகிட்டு இருக்கேன்... நீ பயப்படாம போ" என்றவுடன் அரிக்கனை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லையனை பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். சரியாக 6 நிமிடம்... வீடு வந்தது... அய்யா இன்னுமும் தூங்காமல் திண்ணையில் உட்கார்ந்து சிமினி விளக்கில் எதோ ஒரு ஜாதகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பாஸ்கரின் அப்பாவை ஊரில் அனைவரும் அய்யா என்றழைப்பதே வழக்கம்.
பாஸ்கர் "அப்பா....." என்று அழைத்த தோரணையிலிருந்தே அவர் புரிந்துகொண்டார்.. முகம் முழுதும் வியர்த்தபடி இருக்க
"என்னப்பா ஆச்சு... ஏன் இவள நேரம் கழிச்சி வர்ற... ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்து இருக்கு" பதட்டத்துடன் அய்யா கேட்க
இரண்டு நிமிடத்தை எடுத்துக்கொண்டு நடந்தவற்றை பாஸ்கர் கூறினான்.
"நல்ல வேளை
செல்லையன் அண்ணன் தான் வழில வந்து அரிக்கன குடுத்து அனுப்பிச்சாரு... "
"செல்லனா... அவன் எதுக்கு அந்த நேரத்துல அங்க வந்தான்.... "
"மேலவீட்டு காரரு வயல்ல தண்ணி கட்டுறதுக்காக வந்தாராம்"
அய்யா போட்டிருந்த கைவத்த உள்பனியன் மேல் அந்த வெள்ளை துண்டை எடுத்து போட்டுக்கொண்டு, பாஸ்கரையும் அழைத்துக் கொண்டு அதே அரிக்கனை கையில் எடுத்து வேகமாக நடந்தார்.
"செல்லா... டேய்
செல்லா.... "
"....."
"செல்லையா... டேய் செல்லையா...."
வீட்டை
சாத்தியிருந்த அந்த மரகேட்டை திறந்து கொண்டு ஒரு கையால் கண்ணை கசக்கிக்கொண்டே
செல்லையன் வெளிப்பட்டார்... அய்யாவை
பார்த்தது சற்று வேகமாக கதவை திறந்து,
"அய்யா... என்ன இந்த நேரத்துல... எதாவது ப்ரச்சனையா... பாஸ்கரு... நீ எப்பப்பா ஊர்லருந்து வந்த " என செல்லையன் கூற பாஸ்கர் அய்யாவின் கையை சற்று இருக பற்றிக்கொண்டான்.
"ஏன் செல்லையா... மேல வீட்டுகாரரு வயலுக்கு தண்ணிகட்ட இன்னிக்கு நீயா போனா?"
"இல்லையேய்யா... என் மூத்த மவ வீட்டுக்கு வந்துருக்குன்னு சந்தைக்கு பொயிட்டு 9 மணிக்கு தான் வந்தேன்... அசதில 10 மணிக்கெல்லாம் தூங்கிட்டேன்ய்யா... என்னாச்சுங்கையா"
"இல்லை இல்லை சும்மாதான் கேட்டேன்... நீ போயி படு... காலைல வீட்டுக்கு வா பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்ற அய்யாவை ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்லன் மறுபடியும் நித்திரையை தழுவ சென்றார்.
அய்யாவும் பாஸ்கரும் வீட்டுக்கு திரும்பும் வழியில்
"அய்யா... அப்ப நா
பாத்தது யாரு"
"விடுப்பா...அதெல்லாம் போட்டு மனசுல கொழப்பிக்காத... வந்து படுத்து தூங்கு... காலைல எழுந்து மொத வேலையா (செல்லையாவிடம்
1 comment:
திகில் கதை எழுதற என்னையே திகில் ஊட்ட வைத்தது இந்த கதை! சிறப்பான எழுத்து நடை! வாழ்த்துக்கள்!
Post a Comment