Monday, November 3, 2014

ராமவிலாசத்தில் ரணகளம்!!!


Share/Bookmark
ஹாஸ்டலுக்கும் காலேஜுக்கும் அப்புறம் காரைக்குடியில ஒரு இடத்துல அதிக நேரம் ஸ்பெண்ட் பன்னிருக்கோம்னா அது ராமவிலாசம் தியேட்டர்ல தான். தரை மொக்கை படத்துலருந்து தரமான படம் வரைக்கும் காமிச்சி எங்களுக்கு சினிமா அறிவை ஊட்டிய  தியேட்டர். டிக்கெட் எடுத்துட்டு முதல் தடவ உள்ள போற சில பேரு அய்யோய்யோ இடம் மாறி கல்யாண மண்டபத்துக்குள்ள வந்துட்டோமே” ன்னு திரும்ப வெளில வந்து பாக்குறதும் உண்டு. குறுக்க குறுக்க தூணுங்க, ஆணியில் நம்ம தலைக்கு மேல மாட்டி தொங்குற ஸ்பீக்கருங்க, பால்கனியிலருந்து எவனாவது ஒண்ணுக்கு போறதுக்கு எழுந்தாலே, ப்ரொஜெக்டர் லைட்டு அவன் தலையில பட்டு ஸ்கிரீன்ல அவன் தலை விழுகுறமாதிரி ஆப்பரேட்டர் ரூம்னு ராமவிலாசத்தோட பெருமைய சொல்லிக்கிட்டே போகலாம். எல்லா தியேட்டர்களும் AC/Dts dolby sorround  ன்னு என்னென்னமோ சிஸ்டத்தயெல்லாம் கொண்டு வந்தாலும் அங்க மட்டும் படம் ஓடும்போது கதவெல்லாம் திறந்து வச்சி இயற்கை ஏ/சியத்தான் நமக்கு போட்டு விடுவாய்ங்க.

கிட்டத்தட்ட காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ இருந்த டைம். காரைக்குடி சத்தியன் தியேட்டர்ல வீராச்சாமி ரிலீஸ் ஆனதும் மொத்தமா கெளம்பி பசங்க போனாங்க.. என்னதான் டிஆர் படம்னாலும் ஒருத்தனால எவ்வளவு நேரம் சிரிக்க முடியும்? சிரிப்பு ஒரு கட்டத்துல வெறியா மாறி படம் முடிஞ்சி வெளில ஒட்டியிருந்த போஸ்டர்ல மண்ணை வாறி இறைச்சிட்டு வந்தாய்ங்க. பேச்சுக்கு சொல்லல.. உண்மையிலேயே மண்ணை வாறி இறைச்சாய்ங்க. இறைத்தவர் பெயர் கஜேந்திரன் (எ) கஜா. இன்னும் இங்க  தான் சுத்திக்கிட்டு இருக்காரு. மறு வாரமே ஜீவா நடித்த உலக மகா காவியமான பொறி ரிலீஸ் ஆக இருந்ததால நா வீராசாமிக்கு போகல.. என்ன எல்லாம் பணப்பற்றாக்குறை தான்.

அடுத்த வாரம் பொறி ராம விலாசத்துல ரிலீஸ் ஆகவும் சங்கத்த கூட்டிக்கிட்டு நைட் ஷோக்கு கிளம்புனோம். ஒரு நாலஞ்சி பேர் தான் இருந்தால சங்கத்துல ஆள் பத்தலை. எவனையாச்சும் மண்டையக் கழுவி கூப்டு போகனுமேன்னு பாத்தா எல்லாரும் உசார இருக்காய்ங்க. அப்போ பாத்து வந்தான் நம்ம ’ஆல்பஸ்’ விஜய் (Albus dumbledore மீது கொண்ட வெறியினால் தனது பெயரை அவரே அப்படி மாற்றிக்கொண்டார்) அவண்ட  போய் மச்சி வாடா படத்துக்கு போவோம்னு சொன்னதும் “இல்லை மச்சி போன வாரம் தாண்டா வீராச்சாமி போனேன். நா வரலடான்னுட்டான்.

என்னடா இவன் இப்புடி சொல்றான். இவன விட்டா வேற ஆள் இல்லையே. சரி இவனை விட்டா சரியா வராதுன்னு நா “மச்சி திருடா திருடி டைரக்டர்டா.. படம் பட்டையக் கெளப்பும் வாடா” ன்னா இல்லை மச்சி நீங்க பொய்ட்டு வாங்கடான்னுட்டான். அப்ப போட்டான் ப்ரவீன் ஒரு பிட்ட. சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டு “என்ன மச்சி.. நம்மலாம் காலேஜ்ல இருக்கப்போறதே இன்னும் ரெண்டு மாசம் தான்... உன்கூடல்லாம் இனிமே எப்படா சேந்து படம் பாக்கப்போறோம்.. சரி விடு மச்சி நாங்க பொய்ட்டு வர்றோம்”ன்னு சொன்னது தான் தெரியும்... லா லலலல லால்லா... ”இரு மச்சி நானும் வர்றேன்”ன்னு விஜய் உடனே ரூமுக்கு போய் சட்டை மாத்திட்டு வர, உனக்கெல்லாம் விகரமன் டெக்னிக் தாண்டா கரெக்டுன்னு நெனைச்சிக்கிட்டு ப்ரவீன பாத்து சொன்னேன் “ராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறாயடா”. செருப்பால அடிச்சா திருந்தாதவன கூட செண்டிமெண்ட்டால அடிச்சா திருந்திருவாண்டா. 

நாக்கு தள்ள சைக்கிள மிதிச்சிட்டு தியேட்டருக்குப் போனா, அங்க கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைச்சி பேர் இருந்தாங்க. நா அப்டியே ஸ்டண் ஆயிட்டேன். படம் போடுவய்ங்களா மாட்டாய்ங்களான்னே ட்வுட்டாப் போச்சி. ஒரு வழியா இருபது பேர் ரவுண்டா வந்தொன்ன படத்த போட்டாய்ங்க. இதுல நாங்க 5 பேரும் பால்கனியில.. யாருமே இல்லாம தியேட்டர்ல படம் பாக்கவும் கொஞ்சம் பீதியாத்தான்யா இருக்குன்னு நெனைச்சிட்டு பாத்தோம். படம் ஓடும்போது தான் தெரிஞ்சிது பொறிக்கு வந்தது எங்களுக்கு நாங்களே வச்சிக்கிட்ட ”பொறி”ன்னு.

மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி “என்னோட இத்தனை வருச சர்வீஸ்ல இப்புடி ஒரு படத்த பாத்ததே இல்லை”ன்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டோம்.  ”மச்சி இதுக்கு வீராச்சாமியையே இன்னொருதபா பாத்துருக்கலாம்டா” ன்னு நானும் பிரவீனும் பேசிட்டு இருக்க நாங்க மண்டையக் கழுவி அழைச்சிட்டு போன விஜய் லைட்டா எங்கள திரும்பிப் பாத்தான்.. உடனே நாங்க அவன் காதுல விழுற மாதிரி “படம் ஓக்கே தான் மச்சி.. கொஞ்சம் ஸ்லோ.. பட் இண்ட்ரஸ்டிங்” ன்னு சொல்லிட்டு மூஞ்சிய திருப்பிட்டோம்.

இடைவேளையில வெளில வந்து நின்னு படத்த கிண்டல்பன்னி ஓட்டிட்டு இருக்கும் போது டிக்கெட் குடுக்குறவர் சிரிச்சிகிட்டே “இப்பவே போயிருங்க தம்பி.. நா வேனா மேனஜர்ட்ட சொல்லி பாதி காச வாங்கித் தர்றேன்” ன்னு சொல்லிட்டு போனாரு. (இதுவும் உண்மை) அவர் சொன்ன பேச்சை கேட்டாவது அப்பவே வந்துருக்கலாம்.இதுவரைக்குமே ஒரே நாள்ல ரெண்டு தடவ பாத்தது ரெண்டே படங்களைத் தான். அது ரெண்டும் ராமவிலாசத்துல தான். ஒன்னு சந்திரமுகி. இன்னொன்னு அந்நியன். சந்திரமுகி பாத்தது ஒரு மறக்க முடியாத சம்பவம். தனியா படம் பாக்க ஆரம்பிச்சி முதல் முதலா ரிலீஸ் ஆகப்போற தலைவர் படம். அதுக்கு முன்னால வந்த படங்களுக்கெல்லாம் படம் வந்து பத்து பதினைஞ்சி நாள் கழிச்சி வீட்டுல அழைச்சிட்டு போறப்போ தான். சந்திரமுகி பாட்டு கேசட் வாங்க முன்பதிவு பன்னி விடிய காலமே எழுந்து கடை முன்னால நின்னு வாங்கிட்டு வந்தேன்.

பாட்டு கேசட் ஈஸியா கெடைச்சிரும். படத்துக்கு டிக்கெட் எப்புடி கிடைக்கும்ன்னு நினைச்சிட்டு இருக்கப்போதான்  நம்ம நண்பன் மோகன்குமாரு ஃபோன் பண்ணான் படம் ரிலீஸ் ஆக ரெண்டு நாளுக்கு முன்னால ஃபோன் பண்ணி “மச்சி.. மொத ஷோ டிக்கெட் ரசிகர் மன்றத்துல விக்கிறாங்கடா.. 50 ரூவா.. வாங்கிடவா?” ன்னான். ”மச்சி.. இதுவரைக்கும் வாழ்க்கையில நீ பண்ண ஒரே நல்ல காரியம் இதாண்டா.. தயவு செஞ்சி வாங்கிட்டு வாடா.. ”ன்னு சொல்ல, சாயங்காலத்துக்குள்ள விஷயம் தீயா பரவி அனைவரும் 50 ரூவா டிக்கெட் மொத ஷோவுக்கு வாங்கியாச்சு..

காலையில எட்டு மணிக்கு ஷோ.. காலேஜ்ல இருந்த மொத்த சைக்கிளும் ராமவிலாசத்துக்கு போக, போற வழியில ஒரு நாலு சைக்கிளு மட்டும் சத்தியன் தியேட்டருக்கு மும்பை எக்ஸ்பிரஸூக்கும் ஒரே ஒரு சைக்கிள் பாண்டியன் தியேட்டருக்கு சச்சின் பாக்கவும் திரும்பிருச்சி. 7 மணிக்கெல்லாம் ராம விலாசம் போயாச்சி. ஹப்பாடா... மொத தடவையா தலைவர் படம் மொத ஷோ பாக்கப்போறோம்ன்னு ஐ ஆம் வெரி ஹாப்பி. கூட்டம் ஃபுல்லா சேந்தும் யாரையும் உள்ள விடவே இல்லை. டேய் மணி 7.45 ஆச்சு இன்னும் என்னடா
பண்றாய்ங்கன்னு பாத்த அங்கருந்த ஒருத்தன் “இருங்க பாஸ் இன்னும் வர வேண்டியது வரல”ன்னான். “அடப்பாவிகளா இன்னும் பொட்டி வரலாயா” ன்னு வெறிக்க “அட பொட்டியெல்லம் முன்னாலயே வந்துருச்சி. இன்னொன்னு வரவேண்டியிருக்கு... அது வந்தாத்தான் உள்ள விடுவோம்”ன்னான்

பொட்டியத்தவற வேற என்னப்பா வரவேண்டியிருக்குன்னு எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது தான் அது வந்துச்சி.. வேற ஒண்ணும் இல்லை. பக்கத்துல உள்ள கோயில்லருந்து காவடி பால்குடம் தீச்சட்டி எடுத்துக்கிட்டு தியெட்டருக்கு ஒரு குரூப்பே வந்துச்சி.. அதெல்லாம் பாத்தோன்னா அப்டியே புல்லரிச்சிருச்சி...காரைக்குடி காரவுகல்லாம் அவ்வளவு வெறியர்களாய்யா... உங்க கூட படம் பாக்கவே பெருமையா இருக்குய்யான்னு நெனைச்சிட்டு உள்ள போனோம். ஆனா அவிங்க அத விட வெறியன்கள்னு அதுக்கப்புறம்
தான் தெரிஞ்சிது.

500 சீட்ட தியேட்டர்ல வச்சிகிட்டு 5000 டிக்கெட் குடுத்துட்டாய்ங்க போல.. உள்ள போய் சீட்ட புடிக்கிறதுக்குள்ளயே நாக்கு தள்ளிருச்சி. 40 பேர் உக்கார வேண்டிய வரிசையில நம்ம பசங்கல்லாம் ஒண்ணுமேல ஒண்ணா ஒரு 60 பேர் உக்காந்துருந்தோம். எங்களுக்கு பின்னால ஃபைனல் இயர் பசங்க ஒரு 10 பேர்.. காலேஜ் முடியப்போற சமயத்த எஞ்சாய் பண்ண வந்திருந்தாங்க. படம் ஆரம்பிச்சி ‘super star" டைட்டில் போடும்போது டமால்ல்ல்ல்ல்ல்ல் டமால்ல்ல்ல்ல்ன்னு சத்தம். தூக்கி வாரிப்போட்டு அய்யய்யோ எவனோ பாம்
வச்சிட்டாய்ங்கடான்னு பாத்தா திருவிழாவுக்கு போடுற அனுகுண்டு சரத்த தியேட்டருக்கு உள்ள எவனோ வச்சி பத்தவச்சிட்டாய்ங்க.. ஆனாலும் உங்க வெறி இந்த அளவு இருக்கக் கூடாதுப்பா.. தியேட்டருக்குள்ள வெடி வச்சி நா அங்கதான்யா பாத்தேன்.

எங்களுக்கு சைடுல ஒரு நாலு செம தண்ணி வண்டிங்க.. காலையிலயே ஃபுல் மப்ப ஏத்திட்டு உள்ள வந்துட்டானுங்க போல.. அதுவும் அவனுங்க உள்ள உக்காந்துருந்தது ஃபைனல் இயர் பசங்களுக்கு முன்னாடி.டைட்டில் போடும்போதே பால்கனியிலிருந்தனுங்க மருத்துவர் அய்யாவ காது குடுத்து கேக்கமுடியாத வார்த்தைகளால அபிஷேகம் பண்ண இன்னொரு குரூப்பு கையிருப்புல இருந்த சரக்க பன்னீர் மாதிரி மேலருந்து தெளிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. டேய் நீங்க குடிக்கிறது மட்டும் இல்லாமா ஏண்டா எங்க
மேலயெல்லாம் ஊத்தி விடுறீங்க.

”நாந்தான் இஞ்ஜினியர் குமார் பேசுறேன்சார்... சீக்கிரமா வாங்க சார்” ன்னு தியாகு சொல்ல ஒரு கார் சர்ர்ர்ர்ன்னு வந்து திரும்பி தலைவரோட கால் தெரிஞ்சது தான் போதும்.. நாங்கல்லாம் எழுந்து நின்னு கத்த பக்கத்துல இருந்த தண்ணி வண்டிங்க chair மேல ஏறி நின்னு ஆட ஆரபிச்சிட்டாய்ங்க. இவிங்க மேல ஏறி ஆட ஆரம்பிச்சதால பின்னால இருந்த சீனியருங்களுக்கு மறைக்க ஆரம்பிக்க, அவனுங்க “ஹலோ .. ஹலோ உக்காருங்க”ன்னு சொல்லிருப்பாய்ங்க போல... ஆனா ”பொளேர் பொளேர்”னு சத்தம் கேட்டுதான் நாங்க திரும்புனோம். 

ஒரு சீனியரு கன்னத்துல கைய வச்சிட்டு இருந்தாப்டி. “தலைவர் படத்துக்கு வந்துருக்குறோம்.. சும்மா ஓக்காரு ஒக்காருன்னுட்டு.. மூடிட்டு பாருடா”ன்னு திட்டிட்டு அந்த தண்ணி வண்டி பாட்டுக்கு ஆட்டத்தகண்டிநியூ பண்ண ஆரம்பிக்க, அடிவாங்குன சீனியரும் அவரு குரூப்பும் மொத்தமா அப்பவே தியேட்டர விட்டு கிளம்பிட்டாங்க. எஞ்ஜாய் பண்ண வந்தவங்கள இப்புடி ஓப்பனிங்குலயே எண்டு கார்டு போட்டு அனுப்பிட்டாய்ங்க.

ஆத்தாடி மொரட்டுத் தனமாவுள்ள இருக்காய்ங்க.. அதுக்கப்புறம் எனக்குக் கூட ரெண்டு மூணு தடவ முன்னாடி இருக்கவன் மறைச்சான். “பரவால்லண்ணே.. நா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. நீங்க நல்லா மேல ஏறி நின்னு ஆடுங்க.. நா அப்புறம் கூட வந்து பாத்துக்குறேன்” ன்னு நெனைச்சிட்டு பாத்துட்டு வந்தோம். மொத ரெண்டு நாள்ல சந்திரமுகி மூணு தடவ பாத்தேன். அத எதேச்சையா ஃபோன் பண்ண எங்க அண்ணன்கிட்ட சொல்ல, அவன் அப்புடியே எங்க வீட்டுல சொல்ல, அடுத்த தடவ நா ஊருக்கு போனப்போ “ஏண்டா.. குடுத்த காசுக்கெல்லம படம் தான் பாத்தியா?”ன்னு எஙக் வீட்டுல என்ன வீட்ட சுத்தி சுத்தி ஓடவிட்டு அடிச்சதெல்லாம் வேற கதை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கல்லூரிக் கால நினைவுகள்
என்றுமே இனிமையானவை

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 1

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல அனுபவம், இனிமையான அனுபவம்?!!!! நல்ல காலம் தலைவர் படம் பார்க்கப் போய் அடி வாங்காம வந்தீங்களே .....

Unknown said...

அருமையா எழுது இருக்கீங்க...
தொடர்ந்து படிக்க தூண்டியது..👌

Anonymous said...

வாழ்த்துக்கள் . தலைவர் ரஜினிக்காந்தின் இரண்டாவது மகளின் திருமணத்திற்கு போய் வந்ததற்கு. தலைவருடன் எடுத்த படத்தை காட்டவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...