ஒரு படத்துக்கு
கதை திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்தப் படத்தோட டைட்டிலும் முக்கியம். ஏண்ணா
அந்தப் படத்தப் பத்தின மொத இம்ப்ரஷன குடுக்குறதே டைட்டில் தான். என்ன தான் அது படத்துக்கு
ரொம்ப பொருத்தமான தலைப்புன்னாலும் கொஞ்சம் யோசிச்சி வைக்கிறது நல்லது. கொஞ்சநாளுக்கு
முன்னால கருங்காலின்னு ஒரு படத்துக்கு பேரு வச்சிருந்தாய்ங்க. டேய் என்னடா இது. கருங்காலி பிக்காலின்னு. எவனையாவது
கேவலமா திட்டுறதுக்கு தான் நம்ம கருங்காலிங்குற பேர யூஸ் பண்ணுவோம். இப்புடி ஒரு டைட்டில
கேட்டா மொதல்ல படத்துக்கு போகத் தோணுமா இல்லை எவனாவது கேட்டா என்ன படத்துக்கு போறோம்னு ஒழுங்கா
சொல்லத்தான் முடியுமா? ”எங்கடா போற… கருங்காலிக்கு போறேன்”.. அவ்ளோதான் நம்மள ஒரு மாதிரி
பாக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.
இப்ப அதே மாதிரி
ஒரு பீலிங்க குடுக்குற டைட்டிலோட வந்துருக்கதுதான் நம்ம புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.
ஒரு பெரிய இயக்குனர் கதைக்கு தகுந்த மாதிரியான ஒரு டைட்டிலத் தான் வச்சிருக்காருன்னாலும்,
இந்த டைட்டிலே ரொம்ப கேளிக்கு உள்ளாகுது. தேவி காம்ப்ளக்ஸ்ல பைக் பார்க்கிங் வழக்கமா
பட வாரியா பிரிச்சி பிரிச்சி இந்தப் படம்லாம் அங்க விடு அந்தப் படம்லாம் அந்தாண்ட விடுன்னு
சொல்லி பார்க் பண்ண வைப்பாய்ங்க. நேத்து செம காமெடி என்னன்னா பைக் டோக்கன் போடுறவரு
“36 வயதினிலேயெல்லாம் அந்தப்பக்கம் விடு. பொறம்போக்கெல்லாம் இந்தப்பக்கம் விடு” ன்னு
சொல்லிக்கிட்டு இருக்காரு. யோவ் பொறம்போக்கெல்லாம் இந்தப்பக்கம் விடுன்னா வெறியாயி
எவனாவது வெளுத்துறப் போறாய்ங்களோன்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்ல வேளை கொஞ்ச நேரத்துல்
அப்புடியே மாத்தி தேவியெல்லாம் இங்க விடு. தேவி பாலாவெல்லாம் அங்க விடுன்னு துதிய மாத்தி
பாட ஆரம்பிச்சிட்டாரு
இது இப்டின்னா
தியேட்டர் உள்ள விட்டப்புறம் “புறம்போக்கெல்லாம் வரிசையில நில்லுங்கப்பா” ன்னு இன்னொரு
செக்யூரிட்டி சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. படம்
ஆரம்பிச்ச உடனே ஆர்யாவை காட்டும்போது “ஏய் பொறம்போக்குடா” ன்னு பின்னாலருந்து ரெண்டு பேரு கத்துறாய்ங்க. இதெல்லாம்
தேவைதானா. இந்த போஸ்டோட டைட்டிலயே பாருங்க. ரெண்டு தடவ புறம்போக்குன்னு படிக்க எவ்வளவு கடியா இருக்கு. சரி ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு. உள்ள போவோம்.
மிகப்பெரிய கமர்ஷியல்
ஹிட்டுகளைக் குடுக்கலன்னாலும், தரமான சில படங்களைக் குடுத்து தனக்குன்னு ஒரு ஸ்டைலையும்
பேரயும் உருவாக்கிக்கிட்டரு எஸ்.பி. ஜனநாதன். விஜய் சேதுபதி, ஆர்யா ஷாம்ன்னு மூணு
ஹீரோக்கள வச்சி, ஒவ்வொருத்தருக்கும் ஈக்குவலான வெய்ட்டேஜ் உள்ளது மாதிரி திரைக்கதை
எழுதி இயக்கிருக்காரு. இப்போ இந்த புறம்போக்கு படத்தைப் பற்றி பார்க்கவேண்டுமேயானல்
குறைந்த பட்சம் நாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையாவது பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
அய்யயோ ரொம்ப பின்னோக்கி போறோமோ. சரி வேண்டாம் ஒரு எட்டு வருடம் பின்னோக்கி செல்வோம்.
பிரபு சாலமனோட
இயக்கத்துல சிபிராஜ் நடிச்ச ”லீ” ன்னு ஒரு படம் 2007 ல ரிலீஸ் ஆச்சு. அதுல சிபிராஜ்
ஒருத்தன கொலைவெறியோட தொரத்த, அவன் மரண பயம் எடுத்து ஒட்டிக்கிட்டு இருப்பான். ஏன் தொறத்துறாருன்னு
நமக்கு தெரியாது. ஓடுற அவனுக்கும் தெரியாது. ஆனா அவன தொரத்தி ஒரு மொட்டை மாடிக்கு கொண்டு
போய் அடிச்சி பிச்சி நாற உரிச்சி, மொட்டை மாடிலருந்து சிபி தொங்க விட்டுடுவாரு. தொங்கிக்கிட்டே
அவன் மரண பயத்துல சிபிகிட்ட “உனக்கு என்ன வேணும்?” ன்னு கேக்க, சிபி அதுக்கு “எனக்கு
ஒரு துப்பாக்கி வேணும்” ம்பான். அடப்பாவிகளா… காத தொடுறதுக்காடா இவ்வளவு தூரம் தொறத்திட்டு
வந்தங்குற மாதிரி ஒரு துப்பாக்கிகாடா அந்தப் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிச்சன்னு
நமக்கு தோணும். அந்தப் படத்துல ஒரு துப்பாக்கி வாங்குறதுக்காகவே சிபி ரொம்ப கஷ்டப்பட்டு
அவனப் போய் பாத்து இவனப் போய் பாத்து என்னென்னவோ பண்ணுவாறு.
என்னடா அட்லீஸ்ட்
ஒரு துப்பாக்கி வாங்க இவ்வளவு கஷ்டப்படுறான்னு
நமக்கு தோணும். ஏன்னா நாம பாத்த சினிமா துப்பாக்கிங்குற விஷயத்த நமக்கு ரொம்ப சாதாரணமாக்கிருச்சி.
மசாலாப் படங்கள்ல வர்ற ஒரு கடைநிலை அள்ளக்கை அடியாள் கூட துப்பாக்கி வச்சிருப்பான்.
அதனால சிபி துப்பாக்கி வாங்க ரொம்ப கஷ்டப்படுறாருன்னு காமிக்கும்போது அத அவ்வளவு சுலபமா
ஏத்துக்க முடியல. ஆனா அவங்க காட்டியிருக்கதுதான் உண்மைரங்குறது வேற விஷயம்.
இப்ப புறம்போக்குக்கு
வருவோம். கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட புரட்சியாளரான ஆரியாவுக்கு, தேசத்துரோக குற்றத்துக்காக
3 தூக்கு தண்டனை விதிக்கிறாங்க. அவர ஒழுங்கான முறையில, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள்ள
தூக்கு போடனும்னும், தூக்கு போடுறதுல எக்ஸ்பெர்ட்டான ஒருத்தர வச்சித்தான் தூக்கிலிடனும்ன்னும்
தீர்ப்புல சொல்றாங்க. ஆர்யா இயக்கத்த சேர்ந்தவங்க அவர தப்பிக்க வைக்க முயற்சி பண்ணுவாங்கங்குறதுக்காக
அத மெக்காலேங்குற போலீஸ் ஆஃபீசரான ஷாம்கிட்ட ஒப்படைக்கிறாங்க. யாரவச்சி தூக்குல போடப் போறாங்கங்கன்னு
மீடியா எல்லாம் ஆவலா எதிர்பார்க்க, தூக்குல போடுறதையே பரம்பரை தொழிலாக செய்யும் எமலிங்கம்
(எ) விஜய் சேதுபதிய செலெக்ட் பண்றாங்க.
இதற்கிடையில ஆர்யா
இயக்கத்தை சேர்ந்த கார்த்திகா தலைமியிலான ஒரு சிறு கும்பல் ஆர்யாவை தப்பிக்க வைக்க
விஜய் சேதுபதிய யூஸ் பண்ணிக்கிறாங்க. ஆர்யாவை எந்தப் பிரச்சனையும் இல்லாம தூக்குல போடனுங்குற
ஒரே இலக்கோட இருக்காரு ஷாம். கார்த்திகா கும்பல் விஜய் சேதுபதிய யூஸ் பண்ணி ஆர்யாவை
தப்பிக்க வச்சாங்களா இல்லையாங்குரது தான் மீதிக் கதை.
இப்ப படம் பாக்குற
நமக்கு உள்ள ப்ரச்சனை ஒண்ணே ஒண்ணு தான். இதுவரைக்கும் பல தூக்கு தண்டனை அரங்கேற்றங்களை
நாம சினிமாவுல பாத்துருக்கோம். வெள்ளைக்கலர் டவுசர் போட்டுக்கிட்டு, பெரிய மீசையோட
ஒருத்தர் அந்த தூக்கு போடுற லீவர கையில புடிச்ச மாதிரி நிப்பாரு. கைதிக்கு கருப்பு
துணிய மாட்டி விட்டப்புறம் போலீஸ்காரர் வாட்ச பாத்து தலைய அசைக்க, டவுசர் போட்ட மீசக்காரர்
படக்குன்னு லீவர இழுப்பாரு. இல்லை அவரு லீவர இழுக்க போற சமயத்துல யாராவது வந்து நிறுத்துங்கன்னு
சொல்லி தண்டனைய கேன்சல் பண்ணிருவாங்க. அவ்வளவு தான் அந்த லீவர புடிச்சி இழுக்குறவருக்கு
நாம குடுக்குற இம்பார்ட்டன்ஸ் இது வரைக்கும்.
ஆனா இங்க அது தான்
மெயினே. படத்தோட ஆரம்பத்துல ஆர்யாவை யார் தூக்கு போட்டு சாகடிக்கப் போறதுங்குறதையே
ஒரு பெரிய ப்ரச்சனையா பேசுறாங்க. நமக்கு “என்னய்யா இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா” அப்டிங்குற
மாதிரி தோணுது. ஆனா அவங்க காமிக்கிறது தான் உண்மை. இந்த உண்மைய நாம புரிஞ்சிக்கிட்டு
படத்தோட நம்மள இன்வால்வ் பண்ணிக்கிறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகுது. தூக்குல ஒருத்தன போடுறதுங்குறது
சாதாரண விஷயம் இல்லைங்குறது விஜய் சேதுபதி கேரக்டரோட கொஞ்சம் பழகுனப்புறம் தான் நமக்கு
நல்லா புரிய ஆரம்பிக்குது. அதுக்கப்புறம் படத்தோட
கடைசி வரைக்கும் நாம அந்த ட்ராக்க விட்டு விலக மாட்டோம்.
படத்தோட மிகப்பெரிய
ப்ளஸ் பாயிண்ட்டே விஜய் சேதுபதி தான். அசால்டு பண்ணிருக்காரு. ரொம்ப சாதாரணமான வசனம்
கூட அவர் ஸ்லாங்குல சொல்லும்போது செமையா இருக்கு. காளி முன்னால நின்னு வசனம் பேசுற
ஒரு சீன்லயும், க்ளைமாக்ஸ்லயும் செமைய நடிச்சிருக்காரு.
ஆர்யாவை மொதல்ல
காமிக்கும்போதே இவர் ஆஃப்கானில் ஆயுத பயிற்சி பெற்றவர்னு பல கெட்டப்புல ஃபோட்டோஷாப்
பண்ணி காமிக்கிறாங்க. ஒசாமா பில் லேடன் மாதிரியான கெட்டப்பும் அதுல இருக்கு. அந்த ஸ்லைடு
காமிச்சவுடனே பாதிபேரு சிரிச்சிட்டாய்ங்க. அவர சுத்தி ஒரு மிகப்பெரிய இயக்கம் இருக்கது
மாதிரியும் , ”இண்டர் நேஷனல லெவல்ல லிங்கு இருக்குடா என் நொங்கு” ங்குற மாதிரியும்
சித்தரிக்கிறாங்க. ஆனா அவருக்கு சொல்லப்படுற ஃப்ளாஷ்பேக்குல அந்த இம்பேக்ட குடுக்குற
அளவுக்கு எதுவும் இல்லை. அதுவும் ஆரம்பத்துல தண்டனை கிடைச்ச ஆர்யா ஷாம் கிட்ட அவரோட வழக்கமான ஸ்லாங்கான “என்னே பாஸ்… சொல்லுங்கே
பாஸ்…” ங்குற மாதிரி பேசிட்டு வர்றாரு. ஆர்யாவை அந்தக் கேரக்டருக்கு பொருத்திப் பாக்கவே
நமக்கு நேரம் ஆகுது. ஆனா போகப்போக அதுவே பழகிருது.
ஷாம் மெக்காலேங்குற
போலீஸ்காரரா நல்லாவே நடிச்சிருக்காரு. சொந்தக் குரல் போல. கொஞ்சம் சகிக்கல. படத்துல
கடுப்பேத்துற மாதிரியான விஷயம்னா கார்த்திகாவும் அவர் கூட இருக்க நாலு அல்லக்கைகளும்
தான். அவய்ங்க எதோ பண்ணிட்டு இருக்காய்ங்க. இங்க்லீஸ்காரன் வடிவேலு கூட கல்யாணத்த நிறுத்துற
குரூப் மாதிரி இவய்ங்க விஜய் சேதுபதிய கொல்லப்போறேன்னு சொல்லிட்டு போகும் போது தெரியிறாங்க.
எஸ்.பி.ஜனநாதன்
ஆரம்பத்துல கொஞ்சம் போரடிக்க வச்சாலும், ஒரு அரைமணி நேரத்துல படத்துக்குள்ள இழுத்துடுறாரு.
ஆனா அவர் படிச்ச கம்யூனிச புத்தகங்கள்ல உள்ள அத்தனை வசனங்களையும் ஒரே படத்துல இறக்கப்
பாத்துருக்காரு. நிறைய இடங்கள்ல வசனங்கள் வலுக்கட்டாயமா திணிக்கப்பட்டது மாதிரி இருக்கு.
பாடல்கள்லாம் வர்ஷன்னு
ஒருத்தர் போட்டுருக்காரு. அவ்வளவு சிறப்பா சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஸ்விஜய் சேதுபதியோட
இண்ட்ரோ சாங் “சந்து மொனையில ஆளுவல்லி கிழங்கு விக்கிற ஆயா” ன்னு ஒரு பாட்டு. அப்புடியே
அந்தப் பாட்டு மலேசியா வாசுதேவன் பாடுன மாதிரியே இருக்கு. டன் ஆயிட்டேன். அதக் எனக்கு
கேட்ட உடனே “சல்லாம் போடு குருவே… நா சால்ட்டு கோட்டா சிலுவை” ஞாபகம் வந்துருச்சி.
என்னைய மாதிரியே மலேசியா வாசுதேவன மிஸ் பண்றவங்க யாராவது இருந்தா அந்தப் பட்ட கேளுங்க.
(http://www.isaikadal.com/purampokku-2015/)
இந்த லிங்க்ல ரெண்டாவது பாட்டு. மிஷன் இம்பாஸிபில், நார்னியா, பாட்ஷான்னு கண்ட இடத்துலருந்து
BGM ah ஆட்டைய போட்டு போட்டுருக்காய்ங்க. கடைசியா BGM யாருன்னு பாத்த நம்ம ஸ்ரீகாந்த்
தேவா.
சினிமோட்ட்டோகிராஃபியும்
சூப்பர். எந்த ஊர்ல எடுத்தாங்கன்னு தெரியல. அந்த ஜெயில் காட்சிகளல்லாம் பாக்கும் போது
எதோ ஒரு வித்யாசமான ஃபீல் இருக்கு. விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் இவங்க மூணு பேரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் செம. மொத்தத்துல
புறம்போக்கு என்கிற ஒரு பொதுவுடைமை நிச்சயம் ஒருதடவ பாக்கலாம்.
4 comments:
thala.. director peru jagannathan illa.. Jananathan..
அய்யயோ... மாத்திட்டேன் :-)
அய்யயோ... மாத்திட்டேன் :-)
Hello, I desire to subscribe for this blog to obtain most up-to-date updates, therefore where can i do it please assist. netflix login member
Post a Comment