சில
ஆங்கிலப்படங்களைப் பாத்து “என்னடா இவிங்க இப்புடி இருக்காய்ங்க” ன்னு ரெண்டு மூணு நாள்
அந்த நெனைப்பாவே திரிஞ்சிருக்கேன். பெரும்பாலும் எனக்கு அப்படிப்பட்ட ஃபீல் குடுத்த
படங்களைப் பத்தி அப்பப்போ எழுதியும் இருக்கேன். அந்த வரிசையில ஒரு படம் EXAM. ஒரே ரூமுக்குள்ள
பத்தே பத்து பேர மட்டும் வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்துட்டு போயிருப்பாய்ங்க.
இந்த படத்தையாவது ஒரு கணக்குல சேத்துக்கலாம். அந்த படத்துல வர்ற EXAM க்கு சில ரூல்ஸ்
இருக்கும். பதிலைத் தேடுறேங்குற பேர்ல roof ah உடைப்பாய்ங்க. பேப்பர கொளுத்துவாய்ங்க.
எதாவது நம்மள அட்ராக்ட் பண்றதுக்குன்னு ஒரு விஷயம் இருக்கும்.
ஆனா
The Man From Earth ன்னு இன்னொரு படம் இருக்கு. இது வேற லெவல். ஒண்ணுமே பன்ன மாட்டாய்ங்க.
ஒரு வீட்டுல உக்காந்து ஒருத்தன் பேசுவான். சுத்தி ஒரு நாலு பேரு அதக் கேப்பாய்ங்க.
அவ்வளவு தான். படம் முழுக்க பேசிக்கிட்டே தான் இருப்பாய்ங்க. ஆனா, செம இண்ட்ரஸ்டிங்கா
இருக்கும். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்லாம் பாத்துட்டு, அவிங்க கால்ல விழுந்துடலாம்
போல இருந்துச்சி. ஒரே அறையில ஒரு படத்த போர் அடிக்காம எடுக்குறதுங்குறது சாதாரண விஷயம்
இல்லை. ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்ட் இருந்தா மட்டுமே முடியும்.
அந்த
வகையில கொஞ்சம் கூட போர் அடிக்காம, ரொம்ப கம்மியான கேரக்டர்கள மட்டும் வச்சிக்கிட்டு
டிமாண்ட்டி காலனின்னு ஒரு சூப்பர் படத்த குடுத்துருக்காங்க.
பேய் படங்களுக்கும், காமெடி
படங்களுக்கும் எப்பவுமே மார்க்கெட் போறதில்லை. இந்த டைப் படங்களுக்கு கதைகளுக்காகவும்
ரொம்ப தேடி அலையவும் வேண்டியதில்லை.
இயக்குனராக
ஆசைப்படுற ஒருத்தன், ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தன், எலெக்ட்ரீஷியன் வேலை பாக்குற
ஒருத்தன், ஒரு ஆண்டி கிட்ட அல்லக்கை வேலை பாக்குற ஒருத்தன்னு, நாலு ரொம்ப சாதாரணமான
கேரக்டருங்க. ஒரு நாள் வித்யாசமா எதாவது ஒரு இடத்துக்கு போறதுன்னு முடிவு பண்ணி, சென்னையில
ரொம்ப வருஷமா பூட்டிக் கிடக்குற டிமாண்ட்டி காலனிங்குற ஒரு இடத்துக்கு போறாங்க. அந்த
இடத்துக்குப் போறதுனால அவங்களுக்கு என்னென்ன விளைவுகள் வருதுங்குறத படம் பாக்குறவங்கள
மிரட்டி சொல்லிருக்க படம் தான் டிமாண்ட்டி காலனி.
மெளன
குருவுக்கு அப்புறம் அருள் நிதிக்கு சொல்லிக்கிற மாதிரி ஒரு படம். இந்தப் படத்துல அவர
ஹீரோன்னுலாம் சொல்ல முடியாது. நாலுபேர்ல ஒருத்தராத்தான் வர்றாரு. முந்தைய தோல்விகள்
அண்ணன ரொம்ப அடி வாங்க வச்சிருக்கும் போலருக்கு. முதல் ரெண்டு மூணு காட்சிகள்ல யார்
யாரையோ தாக்குற மாதிரி வசனங்கள். குறிப்பா ஒரு ப்ரோடியூசர்கிட்ட ஒருத்தன் கதை சொல்ல
வரும்போது அவரு ”தம்பி.. இந்த கதையெல்லாம் வேண்டாம். காமெடி ஸ்க்ரிப்ட் எதாவது இருக்கா?”
ம்பாரு. “காமெடியா?” ன்னு இவன் கேட்ட உடனே “அதாம்பா.. கதையே இருக்கக் கூடாது. கடைசி
வரைக்கும் ஹீரோவும் காமெடியனும் பேசிக்கிட்டே இருக்கனும். எவன் ஹீரோ எவன் காமெடியன்னே
தெரியக்கூடாது” ங்குறாரு. ஏம்பா உதயநிதிய ஓட்டனும்னா நேரா இத வீட்டுலயே போய் சொல்லிட்டு
வந்துருக்கலாம்ல. ஏன் தேவையில்லாம ஒரு சீன் வேற வேஸ்டு.
இண்ட்ரோ
சாங்கும் அப்டித்தான். எதோ ஜெயிப்போம் ஜெயிப்போம்னு ஒரே தன்னம்பிக்கை தளும்பி ஓடுது.
அருள் நிதி டான்ஸ் ஆட முயற்சி பண்ணிருக்காரு.
அதுவும் அவர் முகத்துக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லைட்டிங்க். பாடி மூவ்மெண்ட்ஸ்லாம் நல்லாத்தான்
இருக்கு. ஆனா மூஞ்சி மட்டும் சிரிச்சா மாதிரி எந்த ரியாக்சனும் இல்லாம அப்டியே இருக்கு.
கொஞ்ச நாள் முன்னால “புலி உறுமுது புலி உறுமுது” பாட்டுல விஜய் முகத்துக்கு பதிலா மோடி
முகத்த ஒட்ட வச்சி ஒரு மிக்ஸ் பண்ணிருந்தாங்க. மோடி மூஞ்சி அப்டியே இருக்கும் விஜய்
பாடி மட்டும் மூவ்மெண்ட் காட்டும். இந்த இண்ட்ரோவ பாக்கும் போது எனக்கு அந்த மோடி வீடியோ
ஞாபகம் தான்.
ரொம்ப
நேரம் அறுக்காம ஆங்கிலப் படங்கள் மாதிரி நேரடியா கதைக்குள்ள போயிடுறாங்க. இண்ட்ரொவ
தவிற வேற பாட்டுங்க எதுவும் இல்லை. டிமாண்ட்டி காலனிக்குள்ள நுழையிறதுலருந்து, படத்தோட
க்ளைமாக்ஸ் வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம, எடுத்துட்டு போயிருக்காங்க. கிட்டத்தட்ட
யாவரும் நலம் தியேட்டர்ல பாத்தப்போ இருந்த அதே ஃபீல்.
ரெண்டு
மணி நேர படத்துல கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரம் ஒரே வீட்டுல தான் நடக்குது. நாலே
கேரக்டர் தான். ரெண்டாவது பாதில அப்பப்போ ஆங்கிலப்படமான 1408 ன் தாக்கம் அதிகமா தெரியிறத
தவிர்க்க முடியல. பயமுறுத்துறாங்கன்னு சொல்றத விட, சின்ன சின்ன ட்விஸ்டுங்கள நிறையா
வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பண்ணி வச்சிருக்காங்கன்னு தான் சொல்லனும்.
ஒரு ஓலைச்சுவடி ஜோதிடரா எம்.எஸ்.பாஸ்கர். ஒரு சீன்
வந்தாலும் கலக்கிருப்பாரு. ஓலைச்சவடி பாக்குறவங்கள என்ன பண்ணுவாங்களோ அப்டியே பண்றாரு.
(ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்). ஆனா அந்த சீன ரொம்ப காமெடியாவும், அவர கொஞ்சம்
டுபாகூர் போலவும் காமிச்சிட்டு அவர் சொல்றது
எல்லாம் உண்மைன்னு சொல்றது தான் கொஞ்சம் உறுத்துற மாதிரி இருக்கு.
படத்துல இன்னொரு பெரிய ப்ளஸ் கேபா ஜெரிமியாவோட மியூசிக். முதல் படத்துலயே பட்டைய கெளப்பிருக்காரு. BGM செமையா இருக்கு. புதுசாவும் இருக்கு. கேமராவும் செம. டிமாண்டியோட கதை வரும்போது செம ரிச்சா இருக்கு. படம் முழுக்க மழை பெய்ஞ்சிக்கிட்டே இருக்கு. அதுவும் அந்த மழை பெய்யும் போது அருள் நிதி தங்கியிருக்க ஏரியா வியூ செம. அதுவே ஒரு பீதியக் கிளப்புது.
புது இயக்குனரான அஜய் ஞானமுத்துவோட இயக்கத்துல டிமாண்ட்டி
காலனி கண்டிப்பா பாக்கலாம். அதுவும் திகில் படங்கள விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்க
வேண்டிய படம்.
1 comment:
weekly one post only ??? expecting more from you
Post a Comment