Friday, July 8, 2016

தில்லுக்கு துட்டு – லொள்ளு சபா!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு ஏழரை நடக்கும்போது எத்தொட்டாலும் வெளங்காதுங்குறத  கடந்த ஒரு வருஷமா கண்கூடாவே பாத்துகிட்டு இருக்கேன். அட ஏழரை நடக்குறது வேற யாருக்கும் இல்ல. எனக்குத்தான். இறைவி படத்துக்கு ஐட்ரீம்ல டிக்கெட் புக் பன்னப்போ online ல தியேட்டரே ஃபுல்லா காமிச்சிது. ஆனா தியேட்டர் போனா மொத்தமே ஒரு அம்பது பேர்தான் இருந்தாய்ங்கன்னு போன பதிவுல சொல்லிருந்தேன். ஐட்ரீம பொறுத்தமட்டுல 90 ரூபா டிக்கெட் எடுத்தாலே நிறைந்த தரத்தோட படம் பாக்கலாம் இப்ப நேத்து திரும்ப அதே மாதிரி ”தில்லுக்கு துட்டு” புக் பன்றதுக்கு ஓப்பன் பன்னா இறைவிக்கு இருந்த மாதிரியே 120 ரூபா டிக்கெட்ல மட்டும் நாலே சீட்டுதான் இருந்துச்சு. ”இவய்ங்க இதயே ஒரு ட்ரிக்ஸா வச்சிருக்காய்ங்களே.. விடக்கூடாது.. தியேட்டருக்கு நேராவே போய் போய் கவுண்டர்லயே நாளைக்கு ஷோவுக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருவோம்னு 6 குலோ மீட்டர் வண்டிய எடுத்துக்கிட்டுப் போனா, “பாஸ்.. பத்து டூ ஏழுதான் புக்கிங்கு.. அல்ரெடி நாளைக்கு ஷோ ஃபுல்லு.. நீங்க பொய்ட்டு காலையில வாங்கன்னு தொரத்தி விட்டாய்ங்க.  

இந்த அவமானம் வெளில தெரியாம கிளமிருவோம்னு தியேட்டர்லருந்து வண்டிய எடுத்துக்கிட்டு ஒரு 200 மீட்டர்தான் வந்துருப்பேன்… “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” ன்னு கொடகொடன்னு மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சி. பாதி நனைஞ்சும் பாதி நனையாமையும் ஓரமா ஒரு கடையில நின்னேன்.. மழை விடுற மாதிரி இல்லை. ”நமக்கு எவனோ சூனியம் வச்சிட்டான்… எடுக்குறேன்  சூனியத்த எடுக்குறேன்” ன்னு நினைச்சிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாம தொப்பலா நனைஞ்சிட்டே வீட்டுக்கு போய்ட்டு இருக்கும்போது தான் வீட்டுல சோப்பும் ஷாம்பும் தீந்துபோனது ஞாபகம் வர ஒரு மெடிக்கல்ல நிறுத்தி சோப்பும் ஷாம்பும் வாங்குனேன். 

அத குடுக்குறப்போ அந்த மெடிக்கல் பாப்பா “என்னண்ணே… மழை வேற பெய்யிது… சோப்பு ஷாம்பெல்லாம் வாங்குறீங்க.. குளிச்சிகிட்டே வீட்டுக்கு போகப்போறீங்களா” ன்னுச்சி.  “சோத்துலயும் அடிவாங்கியாச்சி. சேத்துலயும் அடிவாங்கியாச்சி… ஒரு மனுசனுக்கு எத்தனை அசிங்கம்டா… ச்சை.. “ன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து திரும்ப ஆன்லைன்ல ஓப்பன் பன்னா ஒக்கே ஒக்க டிக்கெட் இருந்துச்சி.. கடவுள் கை உடல கொமாருன்னு நினைச்சிட்டு அப்புறம் அதையே பன்னிட்டேன். மூடிக்கிட்டு மொதல்லையே அத பன்னிருந்தா ஒரு மணிநேரம் வேஸ்ட் ஆகி மழையில நனைஞ்சி ஜல்பு புடிக்காமயாவது இருந்துருக்கும். சரி வாங்க படத்த பாப்போம்.


”நடிச்சா ஹீரோசார்.. நா வெய்ட் பன்றேன் சார்” ன்னு சந்தானம் ஒரு முடிவெடுத்து முழுமூச்சா இருக்காரு. இப்டித்தான் தெலுங்குல சுனில்ன்னு ஒரு காமெடியன். குண்டா கருப்பா காமெடி பன்னிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தவரு திடீர்னு சிக்ஸ் பேக் வச்சி நா ஹீரோடான்னு வந்து நின்னுட்டாரு. ரெண்டு படமும் ஓடுச்சி. இப்பவரைக்கும் ஹீரோவாதான் மெய்ண்டெய்ன் பன்றாப்ள.  நம்ம சந்தானம் நடிச்ச “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” கூட அந்த சுனில் நடிச்சி ராஜமெளலி இயக்கிய படம்தான்.

நாகேஷ், கவுண்டர், வடிவேலு, கருணாஸ் ன்னு சில நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிச்சி ஒரு சில வெற்றி தோல்விகளுக்குக்கப்புறம் திரும்பவும் நகைச்சுவையாளராகவே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்காங்க. ஒரு காமெடி நடிகர ஒரு ஹீரோவா அவ்வளவு சீக்கிரம் நம்மளால ஏத்துக்க முடியிறதில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுற கதைகள்ல மட்டுமே அவர்களை கொஞ்சம் பொறுத்திப் பாக்க முடியுமே தவிற ரெகுலர் ஹீரோக்களைப் போல திடீர்னு இவங்களும் சீரியஸாக மாறி டூயட், டான்ஸ், ஃபைட்டு, புத்திமதின்னு சொல்றத நம்மாள ஜீரனிச்சிக்க முடியிறதில்லை.

ஆனா சந்தானத்த பொறுத்த மட்டுல அவர ஹீரோவா ஏத்துக்குறதுல என்னைப் பொறுத்த அளவுல தயக்கம் எதுவும் இல்லை. ஏன்னா ஏற்கனவே அவர் காமெடியனா நடிச்சா கூட, எந்த ஹீரோவோட நடிச்சாலும் ஸ்க்ரீன்ல சந்தானத்தோட டாமினேஷந்தான் இருக்கும். வடிவேலுவப் போல எப்பொழுதும் அடிவாங்கி சிரிக்க வைக்காம, ஹீரோவுக்கு ஈக்குவலான கெத்தான கேரக்டர்லதான் நடிச்சிருக்காரு. அதானால காமெடியன் சந்தானத்த ஹீரோ சந்தானமா பாக்குறதுல பெரிய கஷ்டமா எனக்குப் படல.

அதுமட்டும் இல்லாம கெட்டப்பெல்லாம் மாத்தி ஆளு செமயா இருக்காரு. சந்தானத்தோட வாழ்க்கைய செதுக்குனதுல ஒரு முக்கியமான பங்கு இயக்குனர் ராம்பாலாவுக்கு உண்டு. லொல்லு சபா மூலம் சந்தானத்தோட திறமையெல்லாம் உலகத்துக்கு காட்டுனவர் அவர்தான். அதற்கான ஒரு நன்றிக்கடனா கூட இது இருக்கலாம்.

ட்ரெயிலர்லயே கதையயும், இது என்ன மாதிரி படம்ங்குறதையும் சொல்லிருந்தாங்க. ஆவி குடியிருக்க ஒரு காட்டு பங்களா.. யார் அதுக்குள்ள போனாலும் செத்துருவாங்க. அங்க சந்தானத்த உள்ள கொண்டு வந்து பேயக் கலாய்க்கனும். அதுக்கான ஏற்பாடுகள முதல் பாதில பாக்குறாங்க.

வழக்கமான மாஸ் ஹீரோக்களைப் போல ஒரு இண்ட்ரோ சாங்கு… அடுத்ததா காதல்.. காதலுக்காக ஃபைட்டுன்னு இவ்வளவுநாளா சந்தானம் கூட நடிச்ச ஹீரோக்கள் என்ன பன்னாங்களோ அத இப்ப சந்தானம் பன்றாரு. அங்கங்க நிறைய ஒன்லைன் counters சிரிக்க வைக்கிது. ஹீரோயினும் சரி, சந்தானம்-ஹீரோயின் லவ் ட்ராக்கும் சரி செம மொக்கை. இப்பல்லாம் காலேஜ்ல லவ் பன்னிட்டு ரெண்டு வருஷம் ஃபாரின் பொய்ட்டு வந்த புள்ளைங்களே பசங்கள மறந்துரும்ங்க. இதுல தம்மாதூண்டு வயசுல ஸ்கூல்ல படிச்சப்போ சந்தானத்த புடிக்கும்னு, இப்ப தேடிப்போய் காதலை சொல்றதுங்கறதெல்லாம் கப்பி.

முதல் பாதி முழுசுமே கிட்டத்தட்ட லொல்லு சபாவ டிவில பாக்குற ஒரு ஃபீல் தான். சந்தானம் மட்டும் கெத்தா இருக்காரு. மத்தபடி surrounding, மத்த ஆட்கள் எல்லாமே அதே லொல்ளு சபா செட்டு. ஆனா முதல் பாதிய போர் அடிக்குதுன்னுலாம் சொல்ல முடியாது. காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரன் உள்ள வந்து செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சப்புறம் எல்லா சீனும் காமெடிதான். கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப்லாம் சுந்தர்.சி  படம் பாத்து நான்ஸ்டாப்பா சிரிக்கிற ரேஞ்சில இருந்துச்சி. இப்பல்லாம் பேய் இல்லாம கூட பேய் படம் எடுப்பாங்க. ஆனா மொட்டை ராஜேந்திரன் இல்லாம பேய் படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம் போல. மனுஷன் பின்னி எடுக்குறாப்ள. அவரு சாதாரணமா பேசுனாலே throat infection  ஆன மாதிரி தான் இருக்கும். இதுல throat infection ஆயிருந்தப்போ டப்பிங் பேசிருப்பாரு போல. மொத ரெண்டு மூணு காட்சில ஓவர் கரகரப்பு. என்ன பேசுனாருண்ணே புரிய மாட்டுது.

கருணாஸ் வழக்கம்போல அருமை. கூட ஆனந்தராஜூம் சேர்ந்து லூட்டி அடிக்கிறாரு. லொள்ளு சபா மனோகர ஒரே சீனோட கயட்டி விட்டாங்க. இன்னும் ரெண்டு மூணு சீன் யூஸ் பன்னிருக்கலாம். படத்துக்கு இன்னொரு ப்ளஸ் தமன். 3 பாட்டும் நல்லா போட்டுருக்காரு. BGM மும் ஓக்கே. அதே மாதிரி ஸ்டண்டும் நல்லா பன்னிருக்காங்க. சும்மா டமால் டுமீல்னு அடிச்சி பறக்க விடாம, சூப்பரா எடுத்துருக்காங்க.

இயக்குனர் ராம்பாலாவுக்கு கண்டிப்பா நல்லதொரு தொடக்கம். கதை, திரைக்கதையெல்லாம் ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாதுன்னாலும் கண்டிப்பா ரெண்டு மணிநேரம் போரடிக்காம உக்காந்து சிரிக்கிற அளவுக்கு நல்லாதான் பன்னிருக்காரு. எவ்வளவுதான் நம்மூர்பானி படங்கள் எடுத்தாலும் ஆங்கிலப்படங்களோட தாக்கம் இல்லாம எடுக்க முடியாது போல. நல்லா போயிகிட்டு இருந்த படத்தோட க்ளைமாக்ஸ்ல நம்ம “Insidious” படத்தோட சீன் ரெண்ட அப்டியே எடுத்து வச்சிருக்காய்ங்க.


மொத்தத்துல ஹீரோவா சந்தானத்துக்கு முதல் முழுமையான வெற்றி. நிச்சயம் படத்த பாத்து சிரிக்கலாம்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...