Friday, November 11, 2016

வாங்க ஏழைகளா!!!


Share/Bookmark
திடீரென்று சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரே ஏழைப்பங்காளர்களாக இருக்கிறார்கள். அய்யயோ ஏழை சாப்பாட்டுக்கு எங்க போவான்? அய்யய்யோ அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப்போதே.. அவனோட சேமிப்பெல்லாம் போகப்போகுதேன்னு இவனுங்க.. கண்ணீர்… கண்ணீர்… போடு… என்கய்யா வச்சிருந்தீங்க இவ்வளவு ஸ்டாக்க… இப்ப இவங்க கவலையெல்லாம் ஏழைகள் வச்சிருக்க மொத்த பணத்தையும் அரசாங்கம் புடுங்கிக்கிட்டு அவங்கள நடுத்தெருவுல விட்டுருச்சின்னு தான். சரி யாரு கதறுறான்னு பாத்தா வெளிநாட்டுல செட்டில் ஆகி ரெண்டு வருசத்துக்கு ஒருதடவயோ மூணு வருஷத்துக்கு ஒருதடவையோ இங்க வந்து எட்டிப்பாத்துட்டு திரும்ப அங்க ஓடிப்போயிடுறவனுங்களா இருக்குது. 

இவரகளோட கணிப்புப் படி ஏழைகள் என்பவர்கள் வருடம் சுமார் ரெண்டு லட்சம் சம்பாதிப்பவர்கள். அந்த சம்பத்தியத்தையே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ஒரு ஐந்து, பத்து வருடத்தில் சில லட்சங்களை சேமிப்பாக வைத்திருப்பவர்கள் அதுவும் அந்த சேமிப்பை வீட்டில் இருக்கும் ட்ரங்க் பொட்டியிலோ இல்லை பாட்டியோட சுருக்கு பையிலோ வெறும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வைத்திருப்பவர்கள். அரசாங்கம் ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு அறிவிச்ச உடனேயே அந்த சில லட்சங்களைக் கொண்டு பேங்கிற்கு போகும்போது அரசாங்கம் வரி என்ற பெயரில் அந்தக் காசுல முக்கால்வாசியப் புடுங்கிக்கிட்டு அனுப்ப போகுது. 

இவர்களோட புலம்பல்லருந்து ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியிது. இவர்கள் ஏழைகளாக மட்டும் இல்லை நடுத்தர குடும்பமாகக் கூட இருந்து பார்த்ததில்லை. வழக்கமா குடிகாரர்களைப் பாத்து எல்லாரும் சொல்ற ஒரு விஷயம் “இத்தனை வருஷமா நீ குடிக்கிறத சேமிச்சி வச்சிருந்தியன்னா இந்நேரம் ஒரு வீடே வாங்கிருக்கலாம்” . சரி சார்தான் குடிக்கலையே சேத்து வச்சிருக்க காசெல்லாம் எங்கன்னு கேட்டா கேள்வி கேட்டவன் தெறிச்சி ஓடிருவான். ஏன்னா வெறும் வாயில வடை சுடுற கதைதான் அது. உதாரணத்துக்கு சொல்ல நல்லா இருக்கும். ஆனா நடைமுறையில் நிச்சயமாக அது நடக்காது. 

ஒரு ஏழை அல்லது நடுத்தரக் குடும்பத்தோட சேமிப்புங்குறது பெரும்பாலும் வாரச்சீட்டு, மாதச்சீட்டுகளாகவும், சிறு சிறு வட்டிக்கடன்களாக மட்டுமே இருக்குமே தவிற ஒவ்வொரு மாதமும் ரூபாய் நோட்டுகளை வீட்டில் இருக்கும் பீரோவில் அடுக்கி வைத்து சேமிக்க மாட்டார்கள். அதிலும் பெரும்பாலானவை  முன்னரே வார வட்டி, மாதவட்டிக்காரர்களிடம் பணத்தை முன்னரே வாங்கி, அதை சிறுக சிறுக கட்டுவதிலேயே அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படியே அவங்க சேமிப்ப வட்டிக்கு நாலுபேர்கிட்ட குடுத்து வச்சிருந்தா கூட அத்தனை பேரும், அரசாங்க அறிவிப்ப கேட்ட உடனே கொண்டு வந்து”இந்தாப்பா உன் பணம்னு இவங்கிட்ட குடுத்துட போறாய்ங்களா? அவன் அவன் கஷ்டத்துக்கு தான் பணம் வாங்கிருப்பானுங்க.இல்லை சிறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சிலப்பல லட்சங்களை தொழில்ல போடுறதுக்காக வச்சிருப்பாங்க. அதெல்லாம் வீணா போயிரும். சரி சிலப்பல லட்சங்கள கையில வச்சி ரொட்டேட் பன்ற சிறுதொழில் வியாபாரி வரி கட்டனும்ல. அவன் வருமானமா காட்டியிருக்குற அமவுண்டுக்கு அதிகமா போனாதானே வரி கட்ட சொல்றானுங்க. அப்ப ஒழுங்கா கணக்கு காமிக்காதவனுக்கு தானே பயம் வரனும்?

இப்ப அரசாங்கம் என்ன சொல்லிருக்கு? கையில் இருக்குற பணத்தை பேங்குல டெபாசிட் பன்னிட்டு எடுத்துக்குங்க.  இப்ப இதுல ப்ரச்சனை ரெண்டு நாளுக்கு செலவுக்கு காசு இருக்காது. இருக்குற ஒண்ணு ரெண்டு ஐநூறு ஆயிரங்களை வச்சி ஒண்ணும் பன்ன முடியாது. இந்த ரெண்டு நாள் கஷ்டத்த மட்டும் தாங்கிக்கனும். வரிசையில் நிக்கனும். ஏழைகளுக்கோ,  நடுத்தர மக்களுக்கோ வரிசையில் காத்திருப்பதுங்கறது அவர்களோட அன்றாட வாழ்க்கையோட ஒரு பகுதியாவே ஆயிருச்சி. இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் வாங்க காலையிலருந்து காத்திருந்து வந்தவன் போறவன் ஆத்து ஆத்துன்னு ஆத்துறதயெல்லாம் கேட்டுட்டு, இதய தெய்வம் அம்மா, அய்யான்னு கோஷம்போட்டுட்டு வாங்கிட்டு வர சாயங்கலாம் ஆகும்.

சில வருடங்கள் முன்னால பாஸ்போர்ட் எடுக்குறது எவ்வளவு கஷ்டம்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். காசிருக்கவன் எதாவது ஒரு ட்ராவல் ஏஜென்சில 1500 ரூவாய குடுத்துட்டு ரெண்டு கையெழுத்தையும் ஃபோட்டோவயும் போட்டுட்டு வீட்டுலயே உக்கார்ந்திருந்தா ஒரு மாசத்துல பாஸ்போட்ர்ட் வந்துரும். ஆனா அந்த 1500ah மிச்சப்படுத்த விடிய காலத்துலருந்து பாஸ்போர்ட் ஆஃபீஸ் முன்னால உக்காந்து சாயங்காலம் வரைக்கும் வரிசையில நின்னு பாஸ்போர்ட் எடுத்த காலங்களும் உண்டு. வரிசையில் நின்றவர்கள் நிற்பவர்கள் அதற்கு வருத்தப்படல. லாப்டாப்லருந்தே எல்லாத்தையும் பன்னிட்டு இருக்கவனுங்கதான் இப்ப என்ன பன்றதுன்ன் தெரியாம கத்திட்டு இருக்கானுங்க.

நம்மாளுங்க கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்னன்னா ஒரு விஷயத்த செய்யலன்னா ஏன் செய்யலம்பானுங்க. செஞ்சிட்டா அத செய்யாம இத ஏன் செஞ்சம்பானுங்க. சினிமாவுல பாக்கும்போது நல்லாருந்துச்சி. இது நிஜத்துல நடந்தா நல்லாருக்குமேன்னும் தோணுச்சி. ஆனா நிஜத்துல நடந்தா, அத ஒத்துக்கமாட்டோம். அவிய்ங்கள சொல்லி குத்தமில்லை. நம்ம ஊரு அரசியல்வாதிகள் பன்ற அரசியல் எல்லாரையும் இப்டி மாத்திருச்சி. உதாரணத்துக்கு இந்த proposal ah அமல்படுத்துரதுக்கு முன்னால எல்லோர கருத்துக்காகவும் முன்வைக்கிறானுங்கன்னு வைங்க… செய்ய விட்டுருப்பானுங்க? நாலு பேர் கேஸ் போடுவான்.. நாலாயிரம் பேர் மறியல் பன்னுவான். கடைசி வரைக்கும் நடக்கவே விடமாட்டானுங்க. அப்டியே நடக்க விட்டாலும் அதுக்குள்ள எல்லாத்தையும் உசாரா வெள்ளையாக்கிருப்பானுங்க.

இல்லை இல்லை. முதல்ல Swizz bank ல இருக்க கருப்பு பணத்த எடுத்துட்டு வந்து இங்க எல்லாருக்கும் குடுங்க. அப்டித்தானே சொன்னீங்க. சரி ஸ்விஸ் பேங்குல கருப்பு பணத்த பதுக்கி வச்சிருக்கான். அது மட்டும்தான் கருப்பு பணமா? நம்ம எல்லாரும் சரியா இருக்கோமா? அதே சட்டம்தானே நமக்கும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்து மேல இருந்தா 10% வரி கட்டுனும். இல்ல அதுக்கு ஏத்தமாதிரி சேமிப்ப காட்டனும். அது எல்லாருக்கும் பொது தானே. நம்ம சம்பாதிக்கிற 5 லட்சத்துக்கு வரியா ஒரு இருபதாயிரம் ரூவா அரசாங்கத்துக்கு குடுக்க நமக்கு இவ்வளவு வலிக்கும்போது நூறு கோடி சம்பாதிக்கிறவன் 34 கோடிய அரசாங்கத்துக்கிட்ட குடுக்குறதுக்கு எவ்வளவு வலிக்கும்? அவன் லெவலுக்கு அவன் பதுக்குறான். நம்ம லெவலுக்கு நம்ம பதுக்குறோம். அவ்வளவுதான்.

எத்தனை பேர் படிக்கிறப்போகல்விக்கடன் வாங்கிட்டு அதுல திரும்ப ஒத்த பைசா கூட கட்டாம இருக்கான் தெரியுமா? இதனால அடுத்தடுத்து உண்மையிலயே கஷ்டப்படுற சிலர் போய் லோன் கேட்டா கூட பேங்க் காரன் கடிச்சி துப்பி அனுப்பிடுறான். ஏண்டா கட்டலன்னு கேட்டா, அடுத்த ஆட்சி வந்தா இந்தக் கடன தள்ளுபடி பன்னிருவாங்கன்னு காத்திருக்கோம்ங்குறாங்க. இல்லைன்னா வேலை இல்லைம்பானுங்க.  

இன்னும் ஊருக்குள்ள நிறைய குரூப்பு பிஸினஸ் மேனுக்கு மட்டும் கோடி கோடியா லோன் குடுக்குறீங்க.  அவனுங்ககிட்ட போய் திரும்ப கேக்காம ஏழைகள்கிட்ட திரும்ப கேக்குறீங்கன்னு வியாக்யானம். சரி மேல வேலையில்லாததால கடன் கட்டலன்னு சொன்னீங்களே. அரசாங்கம் எப்டி வேலை வாய்ப்ப உருவாக்கும்? இந்தமாதிரி ஆளுங்களுக்கு பல ஆயிரம் கோடிகள கடனாக் குடுத்து, அவன தொழில் செய்ய சொல்லும். அதன் மூலமா சில ஆயிரம் வேலை வாய்ப்புகள உருவாக்குவான். கடனையும் கொஞ்சம் கொஞ்சமா கட்டுனா அரசாங்கத்துக்கும்  லாபம் வரும்னுதான். அவன ஃபோர்ஸ் பன்னி, அவன் கம்பெனிய மூடிட்டு போனான்னா, பாதிப்பு அவனுக்கு இல்லை. அவனால பலனடைஞ்ச பல ஆயிரம் குடும்பங்கள்தான்.

இதத்தான் கலகலப்பு படத்துல சுந்தர்.சி ஒரு எளிமையான காமெடில சொல்லிருப்பாரு. வீட்டுல இருக்க மூட்டைய மண்டை கசாயம், பேயி, திமிங்கலம் மூணு பேர்டயும் சொல்லி மூணு இடத்துக்கு மாத்தி திரும்ப வீட்டுக்கே கொண்டு வர சொல்லுவாரு. மூட்டை இருந்த இடத்துலயே இருக்கலாம்தான். ஆனா இவனுங்களுக்கு யாரு வேலை குடுக்குறது? அதே தான். அரசாங்கம் பணத்த சும்மாவே வச்சிருக்கலாம். பத்தரமா இருக்கும். ஆனா அத ஒருத்தன்கிட்ட கடனா குடுத்து தொழில் பன்ன சொன்னா கொஞ்ச பேருக்கு வேலை கெடைக்கும்.

ஸ்விஸ் கருப்பு பணத்த எடுக்க ஏன் நடவடிக்க எடுக்கலைன்னு கேள்வி கேக்குறதுல நியாயம் இருக்கு. ஆனா அத பன்னாம ஏன் இதப் பன்னீங்கன்னு கேக்குறதுல எந்த நியாயமும் இல்லை.

இன்னொரு மிகப்பெரிய காமெடி அந்த 2000 ரூவாயில நானோ சிப். நாலு நாளுக்கு முன்னால அந்த ரெண்டாயிரம் ரூவாய முதல் முதல்ல காமிக்கும்போதே அந்த ரூமர் கெளம்புனுச்சி. உள்ள chip இருக்கு. அதன் மூலமா ட்ராக் பன்னலாம்னு. அப்ப ஒரு பய வாயத் தொறக்கல. அப்புறம் ரிசர்வ் பேங்க்கே அதுல அப்டி எதுவும் இல்லன்னு சொன்னப்புறம் , நம்ம அறிவாளிகள் முழிச்சிக்கிட்டாங்க. சிப் வைக்கனும்னா அதுக்கு ரிப்பீட்டர் வைக்கனும்ங்க. பேட்டரி வைக்கனும்ங்க. அதெல்லாம் இல்லாம எப்படி முடியும்னு அறிவாளிக்கேள்வி. ஏண்டா இத ரெண்டு நாளுக்கு முன்னாலயே கேக்க வேண்டியதானடா?

இப்ப இவங்க சுத்துற கம்புல பெரிய பயிண்டு என்னன்னா ஏழைகளோட சேமிப்பு போச்சாம். சாப்பாட்ட தவற அவன் சம்பாதிக்கிற எல்லாமே சேமிப்புன்னு நினைச்சிட்டு இருப்பாய்ங்க போல. நம்ம சமுதாய பழக்க வழக்கத்துல, சொந்த பந்தங்களோட குடும்பமா வாழுற ஒருத்தன், நீங்க சொல்ற 2.5 லட்சம் வருஷத்துக்கு சம்பாதிச்சான்னா சாப்பாட்ட தவற ஆஸ்பத்திரி செல்வு, கல்யாணம், காதுகுத்து நல்லது கெட்டதுன்னு அவனுக்கு ஆகுற செலவு அத விட அதிகமாத்தான் இருக்கும். அப்படி சேமிச்சாலும் சில ஆயிரங்கள். நூற்றில் ஒரிருவரைத் தவிற மற்ற எந்த ஏழையும் அந்த சேமிப்பையெல்லாம் பொட்டிக்குள்ள வச்சிக்கிட்டு தேவுடு காத்துக்கிட்டு இல்லை.

அதுமட்டும் இல்லாம, தனியா பிஸினஸ் பன்றவங்களுக்கோ, அயல்நாட்டுல சம்பதிச்சிட்டு வர்றவங்களுக்கோ எந்த வரியும் இல்லை. அதுக்கு கணக்கும் இல்லை. ஒழுங்கா வரிகட்டுறவங்க யாருன்னா, அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்ல வேலை பாக்குற நடுத்தர வர்க்கத்தினர் தான். 500 பேர் வரி கட்ட வேண்டிய இடத்துல 50 பேர் மட்டும் கட்டும்போது, வரி விகித்தத்தை அதிகப்படுத்தி மேலும் மேலும் அந்த 50 பேருக்கு தான் சுமையைக் கூட்டுறாங்க. இப்ப யாருகிட்டயும் வலுக்கட்டாயமா பணத்த புடுங்கல. சட்டப்படி கணக்க காமிக்கதான் சொல்றாய்ங்க. ஒரு சிலருக்கு உண்மையா இதன் மூலமா கஷ்டங்கள் இருக்கலாம். அவங்க பொறுத்துக்கிட்டுதான் ஆகனும்.


அல்லு இருக்கவய்ங்கதான் அலப்பிக்கிட்டு இருக்கானுங்க. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

vivek kayamozhi said...

மிகவும் சரியான கருத்தை துணிச்சலாக சொல்லியிருக்கிறீர்..
சாமானியன், நேர் வழியாக சம்பாதித்து வரி கட்டுவோர், ஏழைகள் அனைவரும் ஒன்றும் சொல்லாமல் ஒத்துழைக்கும் போது, சம்பந்தமேயில்லாமல் சிலர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதைதான்

Anonymous said...

அருமை நண்பரே !

Anonymous said...

Ungalukkellam Vera velaiye illaiyaa boss( ellaaraiyumthan) yethavathu nadanthuttaa karuyhunkula perla yennathaiyaavathu mokkaiya podurathu.. Avanavan pbm avanavanukku .. Nee solli avan thiruntha porathillai avan solli nee thirunthaporathilla..

Sari acham yenpathu madamayada paakkalaiyaa? Kodiya Vida nalla irukkame?

Kasthuri Rengan said...

will be glad if can repeat this after a month...

Kasthuri Rengan said...

tamil manam +

Anonymous said...

திட்டத்தை யாரும் குறை சொல்லவில்லை. செயல்படுத்திய முறை படு அமெச்சூர்தனமானது. அதை குறை சொன்னால் உங்களுக்கு ஏன் ரோசம் பொத்து கொண்டு வருகிறது. எல்லோரும் சந்தோசமா கியூவில நிக்கிறாங்கன்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இதில் வெளி நாட்டில் உள்ளவர்களை வேறு திட்டி உள்ளீர்கள். அவர்களின் சம்பாத்தியத்திற்க்கு வரி இல்லை என்ற அங்கலாய்ப்பு வேறு. அந்நிய செலவாணியை யார் பெற்று தருகிறார்கள். நீங்க சினிமா விமர்சனம் எழுதுவதோட நிறுத்தி கொள்வது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.

முத்துசிவா said...

//நீங்க சினிமா விமர்சனம் எழுதுவதோட நிறுத்தி கொள்வது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.// இல்லைன்னா?

நான் எதை எழுத வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யமுடியிம்னு நினைக்கிறீங்க?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...