Friday, April 21, 2017

The Autopsy Of Jane Doe!!!


Share/Bookmark
மனதில் நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கும் இடங்களில் முக்கியமான ஒரு இடம் பிணவறை.. பெரும்பாலானோருக்கு நிச்சயம் பரிட்சையமான இடமாக இருக்காது. குறிப்பாக பெண்களுக்கு. நமக்கு நெருங்கியவர்களின் துர்மரணங்கள் நிகழும்போது மட்டுமே, அந்த இடத்திற்கு நாம் செல்வதற்கான சூழல் உருவாகும். சாதாரண மனிதர்களுக்கு சோகத்தையும் பயத்தையும்  மட்டுமே வரவழைக்கும் இடம் அது. அதுவும் அங்கு உபயோகிக்கும் கெமிக்கல்களின் வாடையும், இறந்து போன உடல்களிலிருந்து வர ஆரம்பிக்கும் வாடையும் ஒன்றாக சேர்ந்து… அப்பப்பா.. நினைத்தாலே ஒரு மாதிரி இருக்கிறது.

பிணவறையில் வேலை செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு அது பழகியிருக்கும் என்றாலும், அங்கு வேலை பார்க்க ஒரு அசாத்திய தைரியம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. ஒரு பேய் படம் பார்த்தாலே இரவில் நமக்கு தூக்கம் வர மறுக்கிறது. இருட்டில் தனியாகச் செல்ல அள்ளு கிளப்புகிறது. அப்படியிருக்க, ப்ரேதங்களையும், ப்ரேதப் பரிசோதனைகளையும் தினமும் பார்க்கும் இவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.

சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு நான்கைந்து பேர் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு வீட்டின் basement இல், பாதி புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது.  அந்தப் பெண்ணிற்கும் அந்த வீட்டில் இறந்து கிடப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதைக்கப்பட்டிருக்கும் பெண் யார் என்றும் தெரியவில்லை. உடலில் எந்த வித காயங்களோ கீரல்களோ எதுவும் இல்லை.

மறுநாள் காலை பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில், இந்தப் பெண்ணின் மரணத்தைப் பற்றி கண்டறிய போலீஸ் இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களை அணுகி விடிவதற்குள் ப்ரேதப் பரிசோதனை அறிக்கை தேவை என கேட்கின்றனர்.
தந்தையும், மகனுமான இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை ப்ரேதப் ப்ரிசோதனைக்கு உட்படுத்த, ஒவ்வொரு சோதனையும் அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

யார் அந்தப் பெண்? எப்படி மரணமடைந்தாள் என்பதை கொஞ்சம் அமானுஷ்யங்களையும் கலந்து, த்ரில்லிங்காகக் காட்டியிருக்கும் படம் தான் The Autopsy of Jane Doe.

ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் basement இல் இந்த தந்தை , மகன் இருவரும் தங்களது ப்ரேதப் பரிசோதனை கூடத்தை வைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். கைவசம் எப்பொழுதும் மூன்று நான்கு ப்ரேதங்கள் பரிசோதனைக்காக  ஃப்ரீசரில் இருக்கிறது.

ஒரு முறை மகனின் காதலி, பிணங்களைப் பார்க்க ஆசைப்பட்டு ஃப்ரீசரைத் திறக்க, மூகமே இல்லாத ஒரு பிணம்.. அதன் காலில் ஒரு மணி கட்டியிருக்கிறது. எதற்காக இறந்தவர் காலில் மணி கட்டியிருக்கிறீர்கள் என அந்தப் பெண் கேட்க, “பழங்காலத்தில் ஒருவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா அல்லது இறந்ததுபோல் கோமா நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க அவற்றின் காலில் மணியைக் கட்டுவது வழக்கம். ஒரு வேளை உயிர் இருந்து கால் ஆடும் பட்சத்தில் அந்த சத்தத்தை வைத்து அவருக்கு உயிர் இருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம். நான் இன்னும் அந்த பழங்கால முறையைப் பின்பற்றி வருகிறேன்” என்கிறார்.

எப்படி இறந்தாள் என்றே தெரியாத பெண்… முகமே இல்லாத பிணம்.. அதன் காலில் மணி… பின்னால் என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறதல்லவா? மிகக் குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல த்ரில்லர். என்சாய்…!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...