Thursday, June 29, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன் – THE LAST STAND!!!


Share/Bookmark
இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே படிக்கவும். மூன்றாவது பகுதியை படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும். நாட்கள் போயிகிட்டே இருந்துச்சி. ஆறாவது செமஸ்டர் முடிவுல ஆரம்பிச்ச ப்ளேஸ்மெண்ட் ஓட்டம் ஏழாவது செமஸ்டர் முழுசும் தொடர்ந்துச்சி. நாட்கள் போகப் போக நா சுத்திப் பாத்த ஊர்களோட எண்ணிக்கையும், காலேஜுங்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சே தவற வேற எந்த Improvement உம் இல்லை.


இவய்ங்க இப்புடியே சுத்திக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆக மாட்டாய்ங்கன்னு ப்ளேஸ்மெண்ட் co-ordinator ah இருந்த எங்க க்ளாஸ் பசங்களும் பொண்ணுங்களும் mock இண்டர்வியூல்லாம் வச்சி வசூல்ராஜா கமலுக்கு டாக்டருங்க ட்ரெயிங்க் குடுக்குற மாதிரில்லாம் குடுத்தாங்க. ”the symptoms are poly uriya, unusual thirst, frequent urination and unusual weight loss” ன்னு பசங்க ட்ரெயிங் குடுக்க குடுக்க கமல் மேறியே ப்ராக்டிஸ்லாம் பன்னுவேன். அய்யோ அது  மூணாவது கேள்விக்கு சொல்ல வேண்டிய பதிலுடாம்பானுங்க.. “நா ஒரு ஆர்டர்ல  மனப்பாடம் பன்னிட்டேன் நீ மாத்தி கேட்டியன்ன இன்னா பன்றது”ன்னு இங்க நல்லா வாயடிச்சிட்டு போவேன். உண்மையான இண்டர்வியூல ப்ரகாஷ்ராஜ் மாதிரி ஒருத்தன் வந்து மொக்கை குடுத்துருவான்.
இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் என்ன மாதிரியே இண்டர்வியூல மொக்கை வாங்குற ஒரு நாலஞ்சி பசங்கல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா ஃபார்ம் ஆனோம். இப்பவா இருந்தா பட்டுன்னு எல்லார்கிட்டயும் நம்பர வாங்கி “வேலையில்லா வாலிபர் சங்கம்”ன்னு ஒரு வாட்ஸாப் குரூப்ப ஆரம்பிச்சி விட்டுருக்கலாம். அப்ப அதுவும் இல்லை. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்ட்னர் பார்ட்னர்னு கூப்டுக்க ஆரம்பிச்சோம். வேலை இல்லைன்னாலும் நம்மள மாதிரியே நாலு பேரு கூட இருந்த்து மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சி.

அதுக்கப்புறம் எல்லாரும் இண்டர்வியூக்கு போகும்போதெல்லாம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”ல சாமிநாதன் ஆர்யாவப் பாத்து சொல்ற மாதிரி “பாஸ்.. இண்டர்வியூ க்ளியர் பன்னி எதுவும் தொலைச்சிராதீங்க.. அப்புறம் எனக்கு கம்பெனியே இருக்காது” ன்னு நினைச்சிக்கிறது. எப்புடி மொத்தமா போறோமோ அதே மாதிரி மொத்தமா மொக்கை வாங்கிட்டு வருவோம். ”நல்லவேளை நீங்க எதுவும் செலெக்ட் ஆயிருவீங்களோன்னு நா பயந்தே பொய்ட்டேன்.. சங்கத்துல ஆள் கம்மி ஆயிருமா இல்லையா?”

என்னடா தொடர்ந்து ஓட ஓட அடிக்கிறானுங்களே… பையன் ஒவ்வொரு இண்டர்வியூவுக்கும் பன்னிட்டு இருந்துருப்பான்னு மட்டும் நினைக்காதீங்க.. அந்த டைம்லதான் நாங்க ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு தீவிரமா வேலை பாத்துக்கிட்டு இருந்தோம். அந்த காலகட்டத்துலதான் எடுத்து ரிலீஸ் பன்னதுதான் கீழ இருக்க ட்ரெயிலர்.. இப்பவரைக்கு ட்ரெயிலர் மட்டும்தான் ரிலீஸ் பன்னிருக்கோம்.அப்ப திடீர்னு இண்டர்வியூ வந்தா என்ன பன்னுவன்னு தானே கேக்குறீங்க? கஜினில சத்யன் அசின்கிட்ட சொல்லுவானே.. மேடம் கோட்டு ரெடியா இருக்கு.. இப்ப சொன்னா கூட சஞ்சய் ராமசாமியா மாறி வந்துருவேன்னு.. அதே தான். ஃபைல் ஆல்வேஸ் ரெடி… மறுநாள் இண்டர்வியூன்னு சொன்னீங்கன்னா மொதநாள் நைட்டு அதுக்குன்னே வச்சிருக்க பெசல் சட்டையையும் பேண்டையும் தொவைச்சி போட்டு காலைல அயன் பன்னா இண்டர்வியூக்கு நான் ரெடி.…  

இண்டர்வியூக்கு போறதுல எனக்கு இருந்த ஒரு மிகப்பெரிய ப்ரச்சனை மீசை வைக்கிறதா வைக்கிறதில்லையாங்குறது தான். எனக்கு மீசை வைச்சா கேவலமா இருக்கும். மீசைய எடுத்தா கண்றாவியா இருக்கும். அதனால இந்த கேவலத்துக்கும் கண்றாவிக்கும் இடையில இருக்கா மாதிரி எப்பவும் ட்ரிம் பன்னிக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருப்பேன். இண்டர்வியூன்னா ஷேவ் பன்னனும். தாடிய ஷேவ் பன்னிட்டு மீசைய ட்ரிம் பன்னுனா பாக்க சேவிங் பன்னமாதிரியும் இருக்காது பன்னாத மாதிரியும் இருக்காது... ஒரே குஸ்டமப்பா...

அன்று ஒரு நாள்……….. பெருசா எதுவும் சம்பவம் நடக்கப்போவுதுன்னு நினைப்பீங்க.. ஆனா அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்பவும்போல மறுநாள் ஒரு கோர் கம்பெனி இண்டர்வியூக்கு வர்றாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ரெடி பன்னி வச்சிக்கிட்டு ஷேவ் பன்னப் போகயிலதான் யோசிச்சேன். இந்த ஒருதடவ மீசைய ட்ரின்  பன்னாம மொத்தமா எடுத்துருவோம்னு எடுத்துட்டேன். காலையில மொழுக்கட்டையா இண்டர்வியூக்கு போகும்போது நம்ம பயலுகல்லாம் “இன்னா மூஞ்சி.. உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டு மொத்தமா சேத்து வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் மொத மொத இந்த மூஞ்ச பாத்துட்டு போனாப் போதும்… துப்பூ ….வெளங்கும் ”ன்னு  கைகொட்டி சிரிக்கிறாய்ங்க.

ஆத்தாடி… போறப்பவே இப்டின்னா வர்றப்ப இன்னும் ஃபோர்சா இருக்குமேன்னு நினைச்சிக்கிட்டே போனேன். அது எனக்கு பதினெட்டாவது கம்பெனி. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கும் என்கூட இருந்த பார்ட்னர்கள் ரெண்டு பேருக்கும் அந்தக் கம்பெனில வேலை  கெடைச்சிது. மிக்க மகிழ்ச்சி.. ஹாஸ்டலுக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் பன்னி சொல்லிட்டு புள்ளையார்பட்டிக்கும் குன்றக்குடிக்கும் போய் ஒரு தரிசனத்தப் போட்டுட்டு வர 9 மணி ஆகிருச்சி. அப்புறம் வந்து காரைக்குடிலருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறி வீட்டுக்கு போய் கதவத் தட்டும்போது மணி பன்னெண்டுக்கும் மேல. கதவத் தொறந்து மீசையில்லாம சேவிங் பன்ன கொரங்கு மாதிரி இருந்த என் மூஞ்சப் பாத்ததும் எங்கம்மா கேட்ட மொத கேள்வி “இந்த மொகரைக்கு எவண்டா வேலை குடுத்தது?”ன்னு. (உண்மையாவே இந்தக் கேள்விதான் கேட்டுச்சு)

அதுக்கப்புறம் கடைசி செமஸ்டர் ஆரம்பிச்சி காலேஜ் போகும்போது சில பசங்க என்ன மச்சி கோர் கம்பெனில ப்ளேஸ் ஆயிட்ட.. கோர் கம்பெனிக்காகவ் வெய்ட் பன்னியாடா?ன்னு கேப்பானுக.. பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்துல DSP வந்து விவேக்கிட்ட என்ன காரியம் பன்னிருக்கீங்கன்னதும் விவேக் பதறிருவாரு.. உடனே ஊரே நடுங்குற மார்கெட் சேகர அரெஸ்ட் பன்னது சாதாரண விஷயமான்னதும் விவேக் சுதாரிச்சிக்கிட்டு “இந்த ஆப்ரேஷன நாங்க ரொம்ப நாளாவே ப்ளான் பன்னிட்டுதான் சார் இருந்தோம். கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு நேக்கா தூக்கிட்டோம்”ன்னு பீலா விடுவாரு. அந்த மாதிரி கோர் கம்பெனிக்காக வெய்ட் பன்னியா மச்சி?ன்னு கேக்குற பயலுககிட்ட “ எனக்கு சின்ன வயசுலருந்தே கோர் கம்பெனில ப்ளேஸ் ஆகனும்னுதான் மச்சி ஆசை.. சாஃப்ட்வேர்லாம் வேஸ்டு”ன்னு அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தேன்.

ஏழாவது செமஸ்டர்ல கேம்பஸ் இண்டர்வியூ ஆரம்பிச்ச காலத்துலருந்து எவ்வளவுதான் சந்தோஷமா இருந்தாலும் திடீர்னு உள்ளுக்குள்ள வேலை கிடைக்கலங்குற குறை இருந்துக்கிட்டேதான் இருக்கும். ப்ளேஸ் ஆனதுக்கப்புறம் அந்த குறை தீர்ந்துச்சி.

மேல சொன்ன மாதிரி எனக்கு வேலை கிடைச்சது பதினெட்டாவது கம்பெனில தான். எனக்கு தெரிஞ்ச வரை அவ்வளவு கம்பெனி அட்டெண்ட் பன்னது எங்க பேட்ச்ல நாந்தான்னு நினைக்கிறேன். சும்மா அடிச்சில்லாம் விடல. உண்மையத்தான் சொல்றேன். எனக்கு Arrear எதுவும் இல்லை. படிச்சது எலெக்ட்ரிகல். அதனால ஒண்ணு ரெண்டு ப்யூர் மெக்கானிக்கல் based கம்பெனிகளத் தவற மத்த எல்லா கம்பெனிலயும் இண்டர்வியூ அட்டெண்ட் பன்னுற eligibility இருந்துச்சி.

வேலை கிடைக்காத வரைக்கும் நமக்கு ஏன் இன்னும் வேலை கிடைக்கலன்னு யோசிச்சதே இல்லை. வேலை கிடைச்சதுக்கப்புறம்தான் ஏன் நமக்கு வேலை கிடைக்க இவ்வளவுநாள் ஆச்சுங்குறத யோசிச்சிப் பார்த்திருக்கேன். இந்தக் கம்பெனில ப்ளேஸ் ஆனதுக்கு எனக்கு அசிங்கமா இருக்குனு சொன்ன நண்பருக்கெல்லாம் வேலை கிடைச்சிது. ஆனா நமக்கு ஏன் கிடைக்கல?

நான் யோசிச்ச வரைக்கும் எனக்கு கிடைச்ச பதில் நம்மோட மனநிலை. ஒருத்தனுக்கு அந்த வேலை கிடைச்சாலும் ஒக்கேதான் கிடைக்கலன்னாலும் ஓக்கேதான் அப்டின்னு நினைக்கிறவன் ரொம்ப பதட்டப் பட மாட்டான். ஆனா நமக்கு இந்த வேலை கண்டிப்பா வேணும்னு நினைக்கிறவன் எப்படியாவது வேலை வாங்கியே ஆகனும்ங்குற ஒரு நிலையில நிச்சயம் பதட்டப்படுவான். அந்தப் பதட்டம்தான் இண்டர்வியூக்கள்ல முதல் எதிரி. ”இண்டர்வியூ எடுக்குறவன் யாரோ ஒருத்தன்.. அவன் நமக்கு வேலை குடுத்தா ஓக்கே… இல்லன்னா நமக்கு ஆயிரம் வேலை கிடைக்கும்” அப்டிங்குற மனநிலை ஒருத்தனுக்கு எப்போ வருதோ அதாவது “போனால் போகட்டும் போடா” அப்டிங்குற மனநிலைக்கு ஒருத்தன் எப்ப போறானோ அப்ப நிச்சயம் பதட்டம் வராது. அந்தப் பதட்டம் எனக்கு இல்லாம இருந்துருந்தா “What is current ?”ன்னு அவன் கேட்டப்பவே பதில் சொல்லிருப்பேன்.

ஆனா அந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலையை உருவாக்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அது தனி ஒரு மாணவனை மட்டும் சார்ந்த விஷயமும் இல்லை. அவன் குடும்ப சூழ்நிலைகள்தான் இந்த மனநிலைய தீர்மானிக்குது.

ஒரு well settled குடும்பத்துலருந்து வரும் ஒரு மாணவர எடுத்துக்குவோம். அவர் படிச்சி முடிச்ச உடனே வேலைக்கு போகனும்ங்குற அவசியம் இல்லை. அவசியம்ன்னு சொல்றத விட அத்யாவசிய தேவைகளுக்காக அவர் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்காது. கலேஜ்ல வேலை கிடைக்கலன்னாலும் காலேஜ் முடிச்சப்புறம் கொஞ்ச நாள் வீட்டுல  இருந்து வேலை தேடமுடியும்ங்குற நம்பிக்கை அவர்கிட்ட இருக்கும். அவருக்கு இந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலை ஈஸியா வந்துரும்.

ஆனா அதே ஒரு மிடில் க்ளாஸ் பையனையோ இல்லை அதற்கும் கீழ் நிதி நிலமையில இருக்க குடும்ப பசங்களையோ எடுத்துக்குங்க. அவங்க எப்படா படிச்சி முடிச்சி வேலைக்கு போவாங்க.. நம்ம குடும்ப கடனெல்லாம் எப்படா தீரும்.. அப்பாவுக்கு எப்படா கொஞ்சம் சுமை இறங்கும்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யனுமேங்குற ஒரு அழுத்தமே அந்தப் பையனுக்கு மேல சொன்ன மனநிலையக் குடுக்காது.

அப்ப அந்த தெளிவான மனநிலைய நமக்கு கொண்டு வருவதற்கு முதல்ல நம்ம மேலயே நமக்கு தன்னம்பிக்கை வரனும். அதுக்கு நாம மத்தவங்கள விட கொஞ்சம் கடினமா உழைக்கனும். நிறைய பயிற்சி எடுத்துக்கனும். நமக்கு இந்த வேலை வேணும்… அதே சமயம் இவன் இல்லைன்னா இன்னொருத்தன் நமக்கு வேலை குடுப்பான்னு தோணனும்.. வேலை குடுத்தாத்தான் அவன் நமக்கு முதலியார்.. இண்டர்வியூ எடுக்குறப்பல்லாம் அவன முதலி யாரோன்னு தான் நினைக்கனும். இதெல்லாம் நா பன்னல.. அதுனாலதான் எனக்கு 18 கம்பெனி. இதயெல்லாம் செஞ்ச, நம்ம கேட்டகிரிலயே உள்ள பல நண்பர்கள் முதல் இண்டர்வியூலயே க்ளியர் பன்னிருக்காங்க.

ஆக ஒரு இண்டர்வியூல நாம என்ன பதில் சொல்றோம்குறத விட எப்படி பதில் சொல்றோம்ங்குறதுதான் முடிவத் தீர்மானிக்குது. எதோ நா வாங்குன அடியிலருந்து நா கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்கள பகிர்ந்துருக்கேன். யார் மனதும் புண்பட்டிருந்தாலும், கொஞ்சம் ஓவராகப் பேசியதைப் போலத் தோண்றினாலும் மன்னிக்கவும்.

வேறு ஒரு கல்லூரிப் பதிவில் தொடரலாம்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

antha video link send pannunga ji.

Unknown said...

தலைவர் ரசிகன் என்ற முறையில் ஆரம்பித்து பல வருடங்களாய் உங்களின் எழுத்துக்களை படித்து வருகிறேன்

உங்கள் வேலையை பார்த்து கொண்டே டிவி சீரியலில் ட்ரை செய்யுங்கள். எங்கேயாவது லிங்க் கிடைத்து டிவி சீரியல் செய்தால் காமெடி செண்டிமெண்ட் எல்லாம் கலந்த தொடர் மக்களுக்கு கிடைக்கும். நீங்கள் வெற்றிகரமாய் இருப்பீர்கள்.

Natarajan S said...

அருமையான தொடர் பதிவு மச்சி.
முதல் ரெண்டு பதிவுகளில் எவ்வளவு நகைச்சுவை இருந்ததோ அதுக்கு சமமா கடைசி பதிவில் "ஆழ்ந்த கருத்தோட" முடிச்சு இருக்கீங்க.
இந்த கடைசி பதிவு படிக்கும் போது எந்திரன் கிளைமாக்ஸ் சீன்ல ரோபோ ரஜினி பேசுற வசனங்கள் எனக்கு வந்து போகுது...
உன்னோட வலைப்பதிவு தொடர வாழ்த்துக்கள்.
நண்பர் கூறியது போல, நீ சினிமா துறைல முயற்சி பண்ணி பார்க்கணும்... எனக்கு தோணுது நீ ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளர் ஆகலாம்.
வாழ்த்துக்கள்.

-நடராஜன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...