Wednesday, May 31, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!! -2


Share/Bookmark
இந்தப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். காலங்கள் உருண்டோடியது. சுத்தி உள்ள எல்லாம் மாறிக்கிட்டே இருந்துச்சி. ஆனா நா இண்டர்வியூக்கு போயி மொக்கை வாங்கிட்டு வர்றது மட்டும் மாறவே இல்லை. ஒரு கட்டத்துல reject ஆகுறது கஷ்டமாக இருந்த காலம் போய் என்ன சார்.. நேத்து  இண்டர்வியூ பன்ன வர்றேன்னீங்க.. வரவே இல்லை ன்னு ஒவ்வொன்னையும் எஞ்சாய் பன்ன ஆரம்பிச்சிட்டேன். அதுவும் ஒவ்வொரு தடவ நா இண்டர்வியூக்கு போகும்போதும் எங்க பயலுக குஷியாயிருவானுங்க.. எப்புடியும் ஊத்திக்கும்னு தெரிஞ்சே நா ஃபைல துக்கிட்டு வர்றத பாத்துட்டு ஃபைனல் இயர் ஹாஸ்டல் வாசல்ல உக்காந்துக்கிட்டு என்ன தல.. இந்தத் தடவ அடி கொஞ்சம் ஓவரோ கால்லயே போட்டானுங்க போலருக்குன்னு கேட்டாத்தான் அவனுங்களுக்கு நிம்மதி.

ஒரு வேளை நாம கொண்டு போற ஃபைல்தான் ராசியில்லையோ அப்டின்னு, ஏற்கனவே வேலை கிடைச்சவன் வச்சிருந்த ஃபைல எடுத்துட்டு போவேன். அன்னிக்கும் பொடனில தட்டி அனுப்பி விட்டுருவாய்ங்க.. திரும்ப வந்து “இந்தா உன் ஃபைலு.. உன் மொகர மாதிரியே இருக்கு”ன்னு வாங்குனவன்கிட்ட விசிரி அடிச்சிருவேன்.

ப்ளேஸ்மெண்டுக்குன்னு ஒரு 2000 ரூவா வாங்குவானுங்க.. அந்த ரெண்டாயிரத்தையும் முழுசா, ஏன் அதுக்கும் அதிகமாவே யூஸ் பன்ன ஆளுகள்ல நானும் ஒருத்தன். காரைக்குடி, மதுரைன்னு லோக்கல்ல இண்டர்வியூ அண்டண்ட் பன்னிட்டு இருந்துட்டு, அடுத்த கொஞ்ச நாள்ல திண்டுக்கல், கோவைன்னு இண்டர்நேஷனல் டூர் போக ஆரம்பிச்சிட்டோம்.
Polaris ன்னு ஒரு கம்பெனி.. திண்டுக்கல் PSNA ல off-campus. எங்க காலேஜ்லருந்து பஸ் arrange பன்னிருந்தானுங்க.. காரைக்குடிலருந்து திண்டுக்கல் போற வரைக்கும் ஒரே கூத்துதான். நான் எங்க டிப்பார்ட்மெண்ட் டூர் போனப்ப கூட அப்டி எஞ்சாய் பன்னதில்லை. 

அங்க போய் பாத்தா நம்மாள மாதிரி வேலை கெடைக்காம பல ஆயிரம் பேர் இருந்துருப்பானுங்க போல. சுத்துப்பட்டி 18 சிட்டிலருந்தும் Place ஆகாத அத்தனை பயலுகலும் அங்க கூடியிருந்தாய்ங்க. 50 பேர் இருந்தாலே வேலை கெடைக்காது… 5000 பேரு இருக்கானுவ… இன்னிக்கு டண்டனக்காதான்னு நினைச்சிட்டு பசங்களோட உட்கார்ந்திருந்தேன். 

அந்த காலேஜ்ல படிக்கிற ஒருத்தன் எங்கள நோக்கி வந்தான்.

“பாஸ் நீங்கல்லாம் காரைக்குடி AC tech ah?” ன்னான்.

“ஆமா”

“என்ன டிப்பார்ட்மெண்ட்?” ன்னான்

“EEE” ன்னோம்.

“உங்க டிப்பார்ட்மெண்ட்ல கார்த்திகான்னு ஒரு பொண்ணு இருக்குல்ல?” 
(பெயர் லைட்டாக மாற்றப்பட்டுள்ளது)

“ஆமா இருக்கு... ஏன் கேக்குறீங்க”

“இல்ல சும்மா கேட்டேன்”

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா அது?” ன்னேன்

“எனக்கு அவங்களத் தெரியும். அவங்கள எனக்குத் தெரியும்”

“டேய்…. ரெண்டும் ஒண்ணுதான்… அப்ப அந்த புள்ளைக்கு உன்னத் தெரியாது.?.”

“ஆமா..”

“இப்ப அதுக்கு நா என்னடா பன்னனும்”

“நா அவங்கள கேட்டதா சொல்லிருங்க”

அடப்பாவிகளா… பயலுகன்னா பக்கத்துல உள்ளவன் கூட கண்டுக்க மாட்றான்.. ஒரு அழகான புள்ளைன்னா அசலூர்காரன்கூட இவ்வளவு பரிவா விசாரிக்கிறீங்களேடான்னு நினைச்சிட்டு “சரி சரி சொல்லுறேன்”ன்னு சொன்னதும் வாயெல்லாம் பல்லக் காட்டிக்கிட்டு கிளம்பிப் போனான்.

Aptitude முடிஞ்சி எல்லா காலேஜ்லருந்து வந்த மொத்த கும்பலும் ரிசல்ட்டுக்காக அங்கருந்த ஒரு ஆடிடோரியத்துல உக்கார்ந்திருந்தோம். பேர் கூப்ட கூப்ட செலெக்ட் ஆனவங்க ஒவ்வொருத்தரா எழுந்து முன்னால போனாங்க. ஒவ்வொரு பேரா படிச்சிட்டு வந்தாங்க…. “சிவா…”ன்னு மைக்குல பேரு வந்ததுதான் தெரியும். குடுகுடுன்னு எழுந்து நாலடி முன்னாடி போன அப்புறம்தான் தெரிஞ்சிது அது வேற எதோ ஒரு காலேஜ்லருந்து வந்த இன்னொரு சிவான்னு. அய்யய்யோ அசிங்கமாப்போச்சேன்னு பொத்துனாப்புல வந்து உக்காந்தேன். கடைசி வரைக்கும் என் பேரே கூப்டவே இல்ல.   கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல போயிருந்த எங்க காலேஜ்லருந்து அஷோக்குன்னு ஒரே ஒரு பையன் மட்டும்தான் Apps la செலெக்ட் ஆனான்.


பஸ்ஸுல போன மொத்த பேரும் அவன் ஒருத்தனுக்காக பஸ்ஸோட காத்திருக்க முடியாதுன்னு ”இண்டர்வியூ அட்டெண்ட் பன்னிட்டு மெல்ல வந்துருப்பா” ன்னு அவனுக்கு பஸ்ஸூக்கு காச குடுத்துட்டு, நாங்க எல்லாரும் ராவோட ராவா காரைக்குடிக்கு வந்து சேந்துட்டோம். அவன் மறுநாள்தான் வந்தான். கையில வேலையோட வந்தான். இப்ப வரைக்கும் அதே கம்பெனிலதான் இருக்கான்.

என்னடா இது சங்கத்துல ஆள் வர வர கம்மியாயிட்டே வருது? போற போக்கப் பாத்தா சங்கத்துல நம்ம ஆயுட் கால உறுப்பினராயிருவோமோன்னு அப்பப்ப உள் மனசுல ஒரு பீதி இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி.  

அடுத்தடுத்து  L&T E-Engineerning, Flextronics ன்னு ரெண்டு மூணு கம்பெனில மண்ணக் கவ்வ அதுக்கடுத்து வந்தானுங்க ”MANDO BRAKES” ன்னு ஒரு கம்பெனி. எல்லா கம்பெனியும் வந்த உடனே அவனுங்க கம்பெனி profile பத்தி ஒரு அரைமணி நேரம் intro குடுப்பானுங்க. நம்மதான் யாரு பேச ஆரம்பிச்சாலும் தூங்கிருவோமே… அவன் என்ன சொன்னான்னே ஞாபகம் இல்லை.

வழக்கம்போல இதுலயும் Apps க்ளியர் பன்னி உள்ள போயாச்சு. இண்டர்வியூ பேனலுக்குள்ள என் பேர கூப்ட உடனே உள்ள கையில ஃபைலோட போனேன். நா அப்ப கொஞ்சம் சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருப்பேன். ஒரு டைட்டான சட்டைய வேற போட்டுட்டு போயிருந்தேன். நா உள்ள போனதுமே பேனல்ல உக்கார்ந்துருந்த ஒருத்தன் “Body a ஃபிட்டா வச்சிருக்கீங்க.. எக்ஸர்சைஸ்லாம் பன்னுவீங்களா?”ன்னான்.

“ஆத்தாடி மதுரைக்காரன் எவனோல்ல இண்டர்வியூ பன்ன வந்துருக்கான்.. ஆரம்பத்துலயே வாரி விடுறானேன்னு நினைச்சிகிட்டு “ஹிஹி.. எப்பவாச்சும் பன்னுவேங்கன்னுட்டு உக்காந்தேன்,  

ஆமா பாஸ்…அவனுங்க ரெண்டு பேரு இருந்தானுங்க. (Friends Charlie slang)
Tell about yourself ல மனப்பாடம் பன்னி வச்சிருந்த ரெண்டு பாராவ ஒப்பிச்சப்புறம் ரெண்டு மூணு கேள்வி கேட்டனுங்க… ஏற்கனவே பலபேர்ட்ட வாங்கியிருந்த அடியில அதுக்கெல்லாம் தத்தி தத்தி பதில் சொல்லிட்டேன்.

அடுத்து ஓரு கேள்வி கேட்டான்.

”காக்கா கரண்டு கம்பில உக்காந்துருக்கு.. ஆனா சாக மாட்டேங்குது.. ஏன்?”

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு ப்ரில்லியண்ட்டா ஒரு ஆன்சர் சொன்னேன்.

“காக்கா கரண்டு கம்பில நேரடியா கால வைக்காது சார்..அதோட நகத்துலதான் உக்காரும்… அதனால ஷாக் அடிக்காது”ன்னேன்.. ஷாக் ஆயிட்டானுங்க.

“இல்ல தம்பி… இப்ப நீ ஒரு ட்ரேயின் மேல நிக்கிற… அந்த ட்ரெயின் மேல போற கரண்டு கம்பிய நீ புடிச்சா என்ன ஆகும்?”

”ஷாக் அடிச்சி செத்துவேன்…”

“அப்ப காக்கா ஏன் சாக மாட்டேங்குது?”ன்னான்.

”ட்ரெயின் வந்து இரும்பு சார்.. அதுனால ஷாக் அடிக்கிது… காக்காவோட நகம் வந்து Non-Conductor சார்.. அதுனால ஷாக் அடிக்காது”ன்னேன்.

இவன் கூடப் பேசி நம்ம படிச்சதெல்லாம் மறந்துடும்போலயேன்னு அவனுங்களே “தம்பி அதுக்கு பேரு ஷார்ட் சர்க்யூட்டுப்பா”ன்னு ஆன்சர சொல்லிட்டானுங்க..

அப்புறம் கேள்வியெல்லாம் கேட்டு முடிச்சப்புறம்

”ஸ்ரீபெரும்புத்தூர் தெரியுமா?”

“தெரியும் சார்”

“அந்த இடம் எதுக்கு ஃபேமஸூன்னு தெரியுமா?”

“பால்கோவாவுக்கு சார்”

யோவ் அது ஸ்ரீவில்லிப்புத்தூர்யா…” ன்னு ஒரு நிமிஷம் அந்தாளு பதறிட்டாரு, இதுக்கு மேல இவன்கூட மாறடிக்க முடியாதுன்னு சரிப்பா நீ வெளிய வெய்ட் பன்னு நாங்க சொல்லி அனுப்புறோம்னு அனுப்புனாய்ங்க.

நா  வெளிலவந்து மூடிக்கிட்டு இல்லாம கதவு ஓரமா நின்ன placement coordinator ஒருத்தன்கிட்ட “டேய் மச்சி… ஸ்ரீபெரும்புத்தூர் எதுக்குடா ஃபேமஸூ? உள்ள கேட்டானுங்க… எனக்கு தெர்யலடா?”ன்னேன்.

“அய்யய்யோ.. அங்கதாண்டா Mando Brakes கம்பெனி இருக்கு” ன்னான்.

ஆத்தாடி… company profile சொல்லும்போது தூங்குனது வெனையாப் போச்சே… இதக்கூட சொல்ல்லைன்னா வேலையே தரமாட்டாய்ங்களேன்னு “இருடா நா போய் சொல்லிட்டு வந்துடுறேன்”னு திரும்ப உள்ள போய்

“சார்… “ன்னேன். என்னடா திரும்ப வந்துருக்கான்னு ஒரு மாதிரி பாத்தானுங்க..

”நீங்க ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸுன்னு கேட்டீங்கல்ல… நம்ம Mando Brakes கம்பெனி அங்கதான்சார் இருக்கு.. அதுக்கு தான் சார் ஸ்ரீபெரம்புத்தூர் ஃபேமஸூ”ன்னேன். ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் பாத்து சிரிச்சிக்கிட்டு

"சரிப்பா போ" ன்னு அனுப்பி விட்டானுங்க…  ஆனா அந்தக் கம்பெனிலயும் எனக்கு வேலை குடுக்கல..

என்னடா இது.. இண்டர்வியூ முடிஞ்சி கூட திரும்ப போய் ஆன்சர் சொல்லிட்டு வந்தோம். ஆனாலும் நம்மள மதிக்கலையேன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தேன். அப்பதான் “ஆமா வெளில வந்துட்டு திரும்ப உள்ள போனியே எதுக்குடா?ன்னு ஒருத்தான் கேட்டான்

“இல்லடா.. ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸூன்னு கேட்டானுங்க.. மொதல்ல நா பதில் சொல்லல. வெளில வந்தப்புறம்தான் தெரிஞ்சிது அங்க மேண்டோ ப்ரேக்ஸ் இருக்குன்னு.. அதான் போய் சொல்லிட்டு வந்தேன்ன்னேன்.

“இப்பதான் தெரியிது உனக்கு ஏன் அவனுங்க வேலை குடுக்கலன்னு” ன்னான்.

“ஏண்டா?”

“அடேய் ஸ்ரீபெரம்புத்தூர்லதான் ராஜீவ் காந்திய குண்டு வச்சி வெடிச்சாய்ங்க.. அதுக்குதான் அந்த ஊரு பேமஸூ… அத சொல்லுவன்னுதான் அவனுங்க எதிர்பார்த்துருக்கானுங்க... நீ கண்டத சொன்னா எப்டி வேலை குடுப்பானுங்க”

அப்பதான் புரிஞ்சிது நா ரெண்டாவது தடவ உள்ள போய் சொன்னப்போ அவனுங்க ஏன் கெக்க புக்கன்னு சிரிச்சானுங்கன்னு. ராஜீவ் காந்தி அங்க போய் செத்தா... அதுக்கு நா என்ன பன்றது... என்கிட்ட சொல்லிட்டா செத்தாரு...

-தொடரலாம்.... பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

//(பெயர் லைட்டாக மாற்றப்பட்டுள்ளது)//
Ithukku nee maathaamayae irunthu irukkalaam.

Natarajan S said...

செம்மை... :)

Julian Christo said...

Super boss, excellent writing

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...