Thursday, December 19, 2019

அதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்!!!


Share/Bookmark



அமேசான் கிண்டிலில் என்னுடைய இரண்டாவது குறு நாவல் இந்த விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ். முதலில்  இத்தனை வருடங்களாக தொடர்ந்து எழுதுவதற்கு காரணமாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். தமிழில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கும் ஒரு சில வலைத்தளங்களில் நம்முடைய வலைத்தளமும் ஒன்று.

"ஆமா... எல்லாரும் கொஞ்ச நாள் Blog எழுதிட்டு அப்புறம் சினிமா, பத்திரிக்கைன்னு முன்னேறி பொய்ட்டானுக.. நீ இன்னும் இங்கயே உருட்டிக்கிட்டு இருக்க" என்ற தங்களின் மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேக்குது

பெரிய அளவில் சென்று சேரவில்லையென்றாலும் சில நூறு நண்பர்கள் தொடர்ந்து நமது வலைத்தளத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

நமது வலைத்தளம் பெரிய அளவில் சென்று சேராததற்கு சில காரணங்களும் உண்டு. நாம் எப்பொழுதும் சீரியஸான விஷயங்களைப் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் மேலோட்டமாக நகைச்சுவையான பானியிலேயே அனுகியிருக்கிறோம்

அதுமட்டுமல்லாமல் மற்றொரு முக்கியக் காரணம் நமது எழுத்து நடை. நமது பெரும்பாலான பதிவுகள், விமர்சனங்கள் பேச்சு வழக்கில் தான் இருந்துருக்கிறது. தூய தமிழில் எழுதினால்தான் ஒருவனை நல்ல பதிவராக, எழுத்தாளராக அங்கீகரிக்கும் நமது சமூகத்தில் முற்றிலும் பேச்சுவழக்கில் எழுதப்படும் நம் வலைப்பதிவிற்கு அந்த அடையாளம் கிடைக்கவேயில்லை.

என்னுடைய விவேகம் திரைப்பட விமர்சனத்தை முழுக்க முழுக்க அரசியல் பேசும் ஒரு பிரபல  வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒருவர் "என்னங்க இது இப்டி ஒரு 3rd rated விமர்சனத்தையெல்லாம் உங்க வெப்சைட்ல போட்டுருக்கீங்க.. இதெல்லாம் உங்களுக்கே நல்லாருக்கா" என கமெண்ட் செய்திருந்தார்

எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்திய கமெண்ட் அது. 3rd rated ah? என்னுடைய பதிவுகளில் அவன் இவன் என்கிற ஒருசில வசனங்கள் இருக்குமே தவிற அருவருப்பான வார்த்தைகளோ ஆபாசமான வார்த்தைகளோ இருப்பதில்லை. நான்கு பேர் பாராட்டிவிட்டால் பொதுவெளியென்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளை பதிவில் திணித்துவிடும் பலர் இங்கே உண்டு. நான் ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் என் அம்மாவோ தங்கச்சியோ அதைப் படித்தால் அவர்கள் முகம் சுழிக்கும்படி இருந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க வெறும் பேச்சு வழக்கில் எழுதுவது இவர்களுக்கு மூன்றாம் தரமாகத் தெரிகிறதே என்பதே எனக்கு கவலை

பிறகு சில சமயங்களில் சில பதிவுகள் முழுவதும் உரை நடையில் எழுதிப் பார்த்தேன். அந்தப் பதிவுகளில் என்னையே நான் தேட வேண்டியிருந்தது. பிறகு நிறைய பேர் எழுதிய விமர்சனங்களைத் தேடிப்படித்தேன். அனைத்தும் பழைய குமுதம், ஆனந்த விகடனில் வெளியாகும் விமர்சன வடிவங்கலாகவே இருந்தது. நாம் எழுதும் பாணியில் ஒன்றுமே தென்படவில்லை

ஒன் இந்தியா தளத்தில் இரண்டு வருடங்கள் freelancer ஆக பதிவுகள் எழுதிவந்தேன். சில சமயம் நான் எழுதிய பதிவுகளுக்கு கீழே பெயர் குறிப்பிட மறந்துவிடுவார்கள். அப்பொழுது நண்பர்கள் சிலரிடமிருந்து அழைப்புகள் வரும். "டேய் அது நீ எழுதுனது தானே.. உன் பேரே போடல" என்பார்கள். என் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது நான் எழுதியததுதான் என கண்டறியும் அளவிற்கு எழுத்தில் நமக்கென ஒரு ஸ்டைல் உருவாகியிருக்கிறது. இதுதான் நமது அடையாளம். யார் என்ன சொன்னாலும், எவ்வளவு குறைவான நபர்களுக்குச் சென்று சேர்ந்தாலும் நாம் நாமாக இருப்போம் என்கிற முடிவுக்கு வந்து தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

வலைப்பதிவில் ஆரம்பத்தில் சில குறுங்கதைகள் எழுதினேன். பிறகு நம் தளத்தில் வெளியிடப்பட்ட   “மாயவலை” மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு இரண்டாம் பாகமும் எழுதும் ஆவலைத் தூண்டியது. மாயவலையின் முழுக்கதையும் ஒரு ஆன்லைன் பத்திரிக்கையில் தொடராக வெளியிடப்பட்டது. விரைவில் மாயவலையும் கிண்டிலில் வெளியிடப்படவிடுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ”காலப்பயணம்” என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு போட்டிக்காக எழுதப்பட்டு இரண்டாம் பரிசு பெற்ற கதை தான் ப்ரம்மா. அது என்னுடைய முதல் கிண்டில் புத்தகம். இப்பொழுது இரண்டாவதாக இந்த “விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ்”

இதுவும் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவல். இதுவரை கதையைப் படித்த நண்பர்கள் கூறும் முதல் வாக்கியம் “என்னங்க… நீங்க எழுதுன புக்குன்னதும் காமெடி இருக்கும்னு நினைச்சோம்.. முழு சஸ்பென்ஸ் நாவலா இருக்கே என்பதுதான்”. நமக்கு காமெடியும், சஸ்பென்ஸும் இரண்டு கண்கள். பதிவுகளில் எப்படி காமெடியோ அதே போல் கதை என்று வந்தால் சஸ்பென்ஸ் த்ரில்லர் தான்.

ஏங்க நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா என்பதுதான் அவர்களின் அடுத்த கேள்வி. உண்மையில் கதை எழுதுவதும், யோசிப்பதும்தான் என்னுடைய முதல் வேலையே. சினிமாதான் என்னுடைய முதல் ஆர்வமும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், எனக்கு பிடித்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். சரி விண்டர் குயினுற்குள் செல்வோம்.

முழுக்க முழுக்க பனிக்கட்டி உறைந்த பாதை வழியாக பயணிக்கும் படி உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ். ஜம்மு விலிருந்து குல்மர்க் என்ற இடத்திற்கு தன்னுடைய பயணத்தை தொடங்கிய சில மணி நேரங்களில் எவருக்குமே பிடிபடாத ஒரு அமானுஷ்ய விபத்தில்  சிக்குகிறது விண்டர் குயின். அந்த அமானுஷ்யத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

எந்த இடத்திலும் போரடிக்காத, கடைசிவரை வாசகர்களை கதையோட்டத்தில் அழைத்துச்செல்லும் ஒரு குறுநாவலாக இந்த விண்டர்குயின் எக்ஸ்ப்ரஸ் நிச்சயம் இருக்கும்.  முதல் இரண்டு எபிசோட்டுகள் படித்துவிட்டால் அதுவே உங்களை இறுதிவரை அழைத்துச் சென்றுவிடும் என்பதற்கு நான் கேரண்டி.

விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸை அமேசான் கிண்டிலில் பெறுவதற்கான லிங்க் கீழே




குறிப்பு : இந்தக் கதையை வாசிக்க கிண்டில் சாதனங்கள் அவசியமில்லை.  ப்ளே ஸ்டோரில் இருந்து Amazon Kindle App டவுன்லோட் செய்து  login செய்தாலே போதும். நீங்கள் வாங்கிய விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ் அதில் வந்துவிடும். பிறகு எப்போது வேண்டுமானாலும் வாசித்துக்கொள்ளலாம்.

இதுவரை படித்த நண்பர்கள் கொடுத்த feedback க்குள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு நாவலாக இருக்கும். நண்பர்கள் கதையை வாசித்துவிட்டு கதைக்கான தங்கள் ரேட்டிங்கையும், கருத்துக்களையும் அமேசானில் மேலே கொடுத்திருக்கும் லிங்கில் பதிவு செய்தால் மகிழ்வேன்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

கிரி said...

உங்க பாணியிலேயே ஒரு கருத்து..

நாம் நாம் ன்னு சொல்றியே எத்தனை பேர்டா நீங்க.. வெளியே இருக்கிறது ஒரு ரூபம்.. உள்ள பல ரூபங்கள் :-) :-)

படித்துட்டு எப்படி இருக்குனு சொல்றேன் :-) . வாழ்த்துகள்

SivaKumar Viswanathan said...

Bro, I read your blog just for your casual, comic and unique style. This is your identity. Keep going the same way

Paranitharan.k said...

வாழ்த்துக்கள்.

இவன் ..

.உங்கள் திரை விமர்சனத்தை காணவில்லையே என இங்கு பலமுறை வருகை தந்து ஏமாந்தவன்..!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Rasigan said...

Ungal style ai maatra vendaam. Neram varum bodhu miga prablam aaveergal.

ஜீவி said...

சுவாரஸ்யமான நடை. அதற்கு பாராட்டுகள். ஆனால் கற்பனை ஒரிஜினல் இல்லையே சாமி. இந்த கதை வேறு நாட்டில் நடந்த சம்பவம் என்று ஏற்கெனவே யூ டியூபில் உள்ளதே !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...