Tuesday, March 3, 2020

தமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்!!!


Share/Bookmark

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் பிடித்த அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தில் கலந்து கொடுப்படும் படங்கள் மசலா படங்கள் எனப்பட்டன.  காலப்போக்கில் உலக சினிமா ரசிகர்களின் ஊடுருவலில் அதே படங்கள் மருகி C செண்டர் ஆடியன்ஸுகளுக்கான படங்கள் எனவும் , ”நாலு ஃபைட்டு அஞ்சு பாட்டு” படங்கள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நாலு பாட்டு அஞ்சு ஃபைட்டு படங்களின் ரசிகனின் புலம்பல்தான் இந்தப் பதிவு


இப்போதும் தொலைக்காட்சியில் சின்னக்கவுண்டர், நாட்டாமை , சூரியவம்சம் வரிசையிலான  சில படங்களைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இத்தனை முறை பார்த்த பின்னரும் மறுபடி மறுபடி சலிக்காமல் பார்க்க வைக்கின்றன. இப்பொழுது வெளியாகும் திரைப்படங்களை ஒரு முறை பார்த்து விட்டு இரண்டாவது முறை கூட பார்க்க முடியவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. முக்கியமாக மேற்கூறிய வரிசையிலான படங்களைப் பார்த்தால் ஆரம்பத்திலுருந்து கடைசி வரை நாமும் அந்தக் கதையுடனேயே பயணித்திருப்போம். படம் முடியும் போது கிட்டத்தட்ட படத்தில் ஹீரோ எத்தனை காலம் பயணித்திருந்தாரோ அதே காலகட்டம் நாமும் பயணித்திருப்பதாக உணர்வோம். உதாரணமாக அண்ணாமலை இறுதிக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, பழைய பால்கார அண்ணாமலையை நினைத்துப் பார்த்தால் அவர் எதோ ரொம்ப நாளுக்கு முன்னால அப்டி ஒருத்தர் இருந்தார் என்பதைப் போல தோன்றும். அதே போலத்தால் பல திரைப்படங்களுக்கும்.

ஆனால் இன்று அதுபோன்ற ஒரு உணர்வை தமிழ்திரைப்படங்கள் தருவதில்லை. இன்றும் ஒருசில படங்களைத் தவிற மற்ற அனைத்து படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு குறையாமல் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த இரண்டரை மணி நேரத்தில் நமக்கு கிடைத்த அனுபவம் இன்றைக்கு எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் நிச்சயம் இல்லை. என்ன காரணம்? 

இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு தெலுங்குப் படங்களான ”Sarileru Neekkevvaru” வயும், “Ala Vaikundapuramlo”வயும் பார்க்கும்போது அதற்கான விடை கிடைத்தது.  இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு படங்களில் அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ சூப்பர் டூப்பர் ஹிட். ”சரிலேரு நீக்கெவ்வரு” சுமாரான ஹிட். இந்த இரண்டு படங்களையும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 
மெயின் மேட்டருக்கு செல்வதற்கு முன்னர் இந்த இரண்டு படங்களையும் பற்றி சிறியதாக ஒரு முன்னோட்டம். முதலில் அலா வைகுண்டபுரம்லோ... சில வருடங்களுக்கு முன்னர் அத்தாரிண்டிக்கி தாரெதி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதை அடுத்து அதன் இயக்குனர் திரிவிக்ரம் , அவரின் அடுத்தடுத்த படங்களையும் அதே கதைக்கு லேசாக மரு மாத்திரம் வைத்து எடுத்துவந்தார். அதுவும் ஒரு படத்தில் மூக்கில் மரு வைத்தால் அடுத்த படத்தில் கன்னத்தில் வைப்பார். இவ்வளவுதான் வித்யாசம். இப்படி “அ.. ஆ” என்ற படத்தையும்  மறுபடி பவனை வைத்து “அக்ஞாதவாசி” என்ற படத்தையும் எடுக்க இரண்டு அந்த அளவு சிறப்பாக செல்லவில்லை. சற்றும் தளராத திரிவிக்ரம் மறுபடி அதே கதைக்கு மருவை நெற்றியில் வைத்து எடுத்திருப்பதுதான் இந்த அலா வைகுண்டபுரம்லோ. பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

அடுத்தது மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு.. இதே ஒன் லைனிலும் ஏற்கனவே எண்ணிலடங்காத படங்கள். ஆனாலும் சலிப்பு தட்டாதபடி எடுத்திருக்கிறார்கள். முகத்தில் மூவ்மெண்ட் எதுவும் இல்லையென்றாலும் மகேஷ்பாபு மகேஷ்பாபுதான். டயலாக் டெலிவரியாகட்டும், ஸ்டண் சீவன்ஸாக  இருக்கட்டும்... ஒது ஒக்க ரகம்...  மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா, விஜய் சாந்தி, ப்ரகாஷ்ராஜ், உயிர் சங்கீதா மற்றும் தெலுங்கின் முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்தப் படமும் ஒரு அருமையான கமர்ஷியல் எண்டர்டெய்ணர். 

சரி தற்போது மேட்டருக்கு வருவோம். தமிழ் சினிமாவில் அழிந்து போய்கொண்டிருக்கும் அந்த கதையுடன் பயணிக்கும் உணர்வு தெலுங்கு சினிமாக்களில் அப்படியே இருக்கிறது. சொல்லப்போனால் டெக்னாலஜி வளர வளர அதை இன்னும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஒரு திரைப்படத்தில் வெறும் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வசனத்திற்கும், கதாப்பாத்திர அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் எடுக்கப்பட்ட கடைசி தமிழ் கமர்ஷியல் படம் எது என்று யோசித்தால் நிச்சயம் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த பத்து வருடத்திலேயே அத்தனை படங்களைக் கூறலாம். குறிப்பாக இந்த திரிவிக்ரம், சுகுமார், கொரட்டலா சிவா படங்களிலெல்லாம் வசனங்கள் சிறப்பாக இருக்கும்.

தமிழில் வசனத்திற்காக மெனக்கெடுவதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஹரி ஒரு காலத்தில் மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருந்தார். சூர்யா கேட்டுக்குள் வந்த பிறகு அது வெறும் லவுடு ஸ்பீக்கர் சப்தமாக மட்டும் மாறிப்போனது வருத்தத்திற்குறியது. 

அதே போல கதாப்பாத்திர அமைப்பு. தமிழில் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். நமக்கு ஹீரோ  மட்டும்தான் முக்கியம். மற்ற அனைவரும் வெறுமனே வந்து எதோ ஒரு வசனத்தை உச்சரித்துவிட்டு செல்வது. அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் தர்பார். படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை தலைவரைத் தவிற பெரும்பாலானோருக்கு characterisation ற்கு மெனக்கெடவே இல்லை. வள்ளிக்கு மட்டும் பர்ஃபார்ம் செய்ய ஒரு காட்சி இருந்தது. மற்றவர்களுக்கு பெரிதாக எதுவும் இல்லை. தலைவரின் கூடவே நான்கு போலீஸ் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. என்னடா ரஜினி ஃபேனா இருந்துட்டு ரஜினி படத்தையே குறை சொல்கிறேனே என சிலர் யோசிக்கலாம். சில தலைவர் ரசிகர்களுக்கு கோபமும் வரலாம். 

நான் சொல்ல வருவது புரியவில்லையென்றால் உதாரணத்திற்கு படையப்பா திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். படையப்பா, நீலாம்பரி இந்த இரண்டு கேரக்டர்களின் தன்மை அனைவருக்கும் தெரியும்.  மற்ற கேரக்டர்களுக்கு வருவோம். சிவாஜி - ஊருக்கு நியாயம் சொல்பவர். மகனை வெளியே கண்டித்தாலும் உள்ளே ரசிக்கும் பாசமுள்ள அப்பா. லக்‌ஷ்மி - கணவனுக்கு மரியாதை கொடுக்கும், தன் பிள்ளையின் மனதை நன்கு புரிந்து வைத்திருக்கும் அம்மா.   நாசர்.. அரசியல்வாதி.. அடிக்கடி கட்சி மாறுபவர். ரமேஷ்கன்னா.. படையப்பாவின் நண்பர்.. படையப்பா எழுதிய லெட்டரை வசுந்தராவிடம் பல முறை கொடுக்க முயல்பவர். அனு மோகன்... படையப்பா பாம்பு புற்றில் கைவைக்கும் போது ஏன் பாம்பு கடிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். படையப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அதைக் கேட்பவர்.  மணிவண்ணன்.. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். மணிவண்ணனின் மகன்கள் - செய்யக்கூடாத தவறுகளை செய்பவர்கள். அண்ணனுக்கு பணிந்தவர்கள். இன்னும் அப்பாஸ், சித்தாரா, ப்ரீதா என படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் தனித்தன்மையான ஒரு கதாப்பாத்திர அமைப்பை சொல்லலாம். 

இதே அளவு டீட்டெய்லான கதாப்பாத்திர அமைப்பு தர்பாரில் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே யூகித்துகொள்ளுங்கள். இப்பொழுது மகேஷ்பாவுவின் சரிலேரு நீக்கெவ்வருவிற்கு வருவோம். படையப்பாவில் சொன்னது போல படத்தில் இருக்கும் அத்தனை கேரக்டர்களுக்கும் , தனித்தன்மையுடைய கதாப்பாத்திர அமைப்பு, ஓவ்வொருவருக்கான மேனரிசம் மற்றும் வசங்களை எழுதியிருக்கிறார்கள். ஹீரோயின், ஹீரோயினுடைய அம்மா, ஹீரோயினுடைய அக்கா இருவர், ஹிரோயினின் அக்கா குழந்தைகள், ஹீரோயினின் அப்பா, ஹீரோயினை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொல்லப்படும் ஒரு காமெடியன், ஹீரோயின் பயணிக்கும் ரயிலின் டிடிஆர், வில்லன், வில்லனுடைய அப்பா,  வில்லனுக்கு துணைபோகும் ஒரு போலீஸ், வில்லனுடைய அள்ளக்கை, இரண்டே இரண்டு சின்ன காட்சிகளில் வரும் ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர், ஒரே ஒரு ஃபைட்டில் வரும் ஒரு அடியாள் இப்படி அத்தனை பேருக்கும் படத்தில் அவரவர்களுக்கென தனியாக ஒரு மேனரிசம், மற்றும் வசனங்கள் இருக்கின்றன. 

ஆனால் தமிழில் இது போல ஒரு டீட்டெயிலான கதாப்பாத்திர அமைப்பு பார்த்தே பல வருடங்களாயிற்று. உயிரற்ற கதாப்பாத்திரங்களை வைத்து வெறுமனே காட்சிகளை மட்டும் நகர்த்துவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.   படத்தின் கதாப்பாத்திரங்களே பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துபவர்கள். 

நமது ஹீரோ இத்தனை கோடி சம்பாதிக்கிறார், இவர் அவரை முந்திவிட்டார், அவர் இவரை முந்திவிட்டார் என்றெல்லாம் அடித்துக்கொள்கிறோமே தவிற யார் தரமான படங்களை கொடுப்பது என்பதில் நமக்குள் சண்டையே வருவதில்லை. நம்முடைய ஹீரோக்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் படங்கள், நம்முடைய திரைப்படங்களை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் எப்படி இவ்வளவு குவாலிட்டியான விஷுவலுடன் உருவாக்கப்படுகின்றன? அதை நாம் யோசிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தர்பாரில் ரயில்வே ஸ்டேஷனில் வரும் சண்டையை சிலாகிக்காத ஆளே இல்லை. தலைவர் முதல் முறையாக அப்படி ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததைப் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதே போன்ற சண்டைக்காட்சிகள் பதினொரு வருடம் முன்னால் பாலய்யாவின் சிம்ஹா படத்திலேயே  தெலுங்கில் வந்திருக்கிறது என நினைக்கும்போது பத்து வருடம் பின்னால் இருக்கிறோமோ என்கிற கவலையும் இருக்கிறது. 

இதுபோல சில நல்ல படங்களை பார்க்கும்போதெல்லாம் பலமுறை நான் வயிற்றெரிச்சலில் தமிழ் சினிமாவை குறை சொல்லி புலம்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் நண்பர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.

 “போடா தெலுங்கு வந்தேரி நாயே”


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தர்பார் சண்டை,

சர்காரில் வந்து இருக்கிறது.

தமிழ் ப் படத்தில் வந்து இருக்கிறது

Paranitharan.k said...

நீண்ட நாட்கள் கழித்து சிறந்த திரைப்பதிவு்..

ஜீவி said...

மிகவும் வித்தியாசமான பதிவு... ஆழமான சிந்தனை. குறிப்பாக சரிலேரு நீகெவ்வரு வில் ரயில் காட்சிகளில் அந்த இரு குழந்தைகள் சீரியல் பாணியில் வசனம் பேசுவது, நெவர் எவர் டயலாக்கை தோளை உயர்த்தி கேரக்டர்கள் அவ்வப்போது சொல்வது போன்றவை தெலுகு முழுவதும் புரியாத (சப் டைட்டில் துணையுடன்)படம் பார்த்த என்னையே வாய் விட்டு சிரிக்க வைத்தன. அது போல் எல்லா கேரக்டர்க்கும் வாய்ப்பு தரும் வகையில் தமிழ் ஹீரோ படங்களில் காட்சி ,வசனங்கள் இல்லை என்பது உண்மை தான். படையப்பா நீலாம்பரி, பாட்சா மார்க் ஆண்டனி கதா பாத்திரங்கள் தான் இன்னும் அந்த படங்களை சேனல் மாற்ற விடாமல் நம்மை பார்க்க வைக்கின்றன என்பது தான் உண்மை.
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் படங்களில் மிக கவனமாக ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து காட்சி, வசனம் வைப்பது தெளிவாக தெரிகிறது. தர்பார் படு மோசம்.. சந்திரமுகி க்கு பிறகு(இதில் ரஜினி தவிர ஜோதிகா, நயன்தாரா, நாசர்,வடிவேலு என்று பலருக்கும் நல்ல ஸ்க்ரீன் ஸ்பேஸ் இருக்கும்) இரண்டாவது முறை அல்லது டிவியில் மறு ஒளிபரப்பு ஆகும் ரஜினி படங்கள் எதுவும் இல்லை. அப்படி காலா, கபாலி, பேட்டை போட்டாலும் மக்களிடம் அசையாமல் பார்க்கும் ஆர்வம் இல்லை என்பதும் வெளிப்படை.

Arul JK said...

I am living in hyderabad and i saw both the movies. Total crap movies and you are praising those movies. Here friends hyderabad always telling that different movies are coming in Tamil like kaithi and so on..i can list out all movies in last 5 years..Again and again you proving that you are Rajini fan who is having lesser than average people taste...

Anonymous said...

//அண்ணாமலை இறுதிக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, பழைய பால்கார அண்ணாமலையை நினைத்துப் பார்த்தால் அவர் எதோ ரொம்ப நாளுக்கு முன்னால அப்டி ஒருத்தர் இருந்தார் என்பதைப் போல தோன்றும். அதே போலத்தால் பல திரைப்படங்களுக்கும்.//

yes its true.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...