Saturday, February 20, 2021

Drishyam 2 - ஒரு சிறந்த படைப்பா?!!!!


Share/Bookmark


ஜீத்து ஜோசப் எடுத்த த்ரிஷ்யம் முதல் பாகம் ”கபிம்குபாம்” என வைத்துக்கொண்டால் அடுத்து அவர் எடுத்த தம்பி ”குபாம்கபிம்”. இப்போது வந்திருக்கும் த்ரிஷ்யம்-2  ”கம்பிகும்பா” அவ்வளவு தான். 


முதலில் லாஜிக் பார்க்க வேண்டிய படங்கள், லாஜிக் பார்க்கத் தேவையில்லாத படங்கள் என இரு வகையில் த்ரிஷ்யம் லாஜிக் பார்க்க வேண்டிய படங்களில் தான் சேருகிறது. இதனை படத்தின் கதைக் களமே முடிவு செய்கிறது.


த்ரிஷ்யம் முதலாவது பாகம் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஒருவன் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு நாளின் சம்பவங்களை



வேறொருநாளில் நடந்ததாக மாற்றி உருவாக்குகிறான் எனும் புதியதொரு கான்செப்டுடன் வந்து அனைவரையும் ஈர்த்த திரைப்படம்.  


இப்பொழுது முதல் பாகத்தில் காவல் நிலையத்தில் புதைக்கப்பட்ட உடலும் போலீஸின் கைக்கு சிக்கினால் அதிலிருந்து ஜார்ஜ்குட்டி எவ்வாறு தப்பிக்கலாம் என ஒரு சிறிய சிந்தனையை ஓடவிட்டு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து இரண்டரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார் ஜீத்து ஜோசஃப்.


லாஜிக் என்னென்ன இடிக்கிறது என பிறகு பார்ப்போம். அதற்கும் முன்னதாக நேரத்தை  நிரப்புவதற்காக நிறைய வழ வழவென்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.


அதிலும் முதல் ஒரு மணி நேரம் பாக்கியலட்சுமி சீரியல் ரேஞ்சிற்கு செல்கிறது. சொன்ன விஷயத்தையே திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். முதல் பாகத்தை ரீகால் செய்வது தவறில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ரீகால் செய்யும் அளவிற்கு அது அவ்வளவு complicated ஆன கதையும் இல்லை, பார்வையாளர்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் கதையும் இல்லை.

ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் அன்னிக்கு ராத்திரி என்ன நடந்தது என ஒவ்வொருவரையாக விசாரிப்பது அபத்தமாக இருக்கிறது. விசாரிப்பவர்களிலிம் ஒரு சிலர் ஆமா சார் ஆறு வருசத்துக்கு முன்னால அன்னிக்கு ராத்திரி ஜார்ஜ் குட்டி வண்டி இப்டிக்கா போச்சு சார் என்கிறார்கள்.


ஒரு வேளை உண்மையிலேயே இதுமாதிரி இவெஸ்டிகேஷன்கள் நடந்தால் என்ன நடக்கும்..? வடிவேலு ஒரு படத்தில் கிளியாக நடிப்பாரே அதை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.

Police: 2013 ஆகஸ்டு 3 ம் தேதி ஞாபகம் இருக்கா?


Neighbors  : கீ.. கீ.. கீ..


Police :அன்னிக்கு நைட்டு இந்த பக்கமா நடந்து வந்தீங்களா?


Neighbors :  கீ.. கீ.. கீ..


Police :அப்போ ஜார்ஜ் குட்டிய வழில பாத்தீங்களா?


Neighbors   : "ஏண்டா கொன்னப்பயலே.. கொன்னப்பயலே... முந்தாநாளு நடந்ததே ஞாபகத்துக்கு வரமாட்டுது.. ஆறு வருசத்து முன்னாடி ஜார்ஜ் குட்டிய பாத்தியா கன்னுக்குட்டிய பாத்தியான்னுட்டு..


அடுத்து ஒரு திரைப்படத்தின் அத்தனை காட்சிகளும், கதாப்பத்திரங்களும் எதோ ஒரு வகையில் முக்கியக் கதைக்கு சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும். சில கதாப்பாத்திரங்கள், சில காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் துண்டாக நிற்கின்றன. குறிப்பாக த்ரில்லர் கதை சொல்லும் ஒரு பையனும் அவன் சார்ந்த ஒருசில காட்சிகளும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.  ஜார்ஜ் குட்டி வீட்டில் நடக்கும் get together காட்சிகள் எல்லாம் எந்தப் பயனும் இல்லாமல் வெறும் நேரத்தைக் கடத்த மட்டுமே உதவுகிறது. 


திறந்த ஜன்னலைப் பார்த்தால் மூத்த பெண்ணிற்கு அங்கு யாரோ நிற்பது போலவே தெரிகிறது.. வலிப்பு மாதிரி எதோ வருகிறது.. 


”அதான் தெரியிதுல்ல.. கழுதை அந்த ஜன்னல மூடித்தான் வைங்களேண்டா… எனி டைம் தொறந்தே தான் இருக்கு.  பேய் வருதுன்னு தெரிஞ்சும் பச்சப் புள்ளைய பக்கத்து ரூம்ல தனியா தூங்க வைக்கிற ஹாலிவுட் பட parents  மாதிரி”


ஒரு திரைப்படத்தில் சில விஷயங்களை கண்டிப்பாக காட்சிப்படுத்த வேண்டும். சில விஷயங்களை வாயால் சொன்னால் மட்டும் போதும். அப்படி சொன்னால் மட்டும் போதுமான சில விஷயங்களை நேரத்தை இழுக்க காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஜார்ஜ் குட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்குள் பார்க்கும் ஒரு குற்றவாளி ரிலீஸ் ஆன பின்பு அவருடைய குடும்பம், அவருடைய மனைவியை சமாதானப்படுத்துவது என ஒரு நான்கு காட்சிகள் அவருக்காக எடுத்திருக்கிறார்கள். 


அல்டிமேட்டாக அவருக்கு பணம் தேவைப்படுவதால், போலீஸில் துப்புக்கொடுக்கப் போகிறார். பணத்திற்காக துப்புக் கொடுக்கப் போகிறார் என்பதை நியாபபடுத்த பெரிய பிண்ணனி எதுவும் தேவையில்லையே… மனிதர்களின் சுபாவமே அது தானே. 


இன்னொரு மரணக் காமெடி ஜார்ஜ் குட்டி வீட்டுக்கருகில் வசிக்கும் ஷாடோ போலீஸ் குடும்பம். அவர்களை போலீஸ் என ரிவீல் செய்வது தான் படத்தின் முதல் ட்விஸ்ட். அது படம் ஆரம்பித்து சுமார் ஒருமணி நேரம் கழித்துத்தான் வருகிறது. அந்த ஒரு ட்விஸ்டுக்காக படம் சுமார் அரை மணி நேரம் இழுக்கப்பட்டிருக்கிறது. 


ஒரு கொலை கேஸுக்காக, இரண்டு போலீஸ் இரண்டு வருடங்கள் வேலை செய்கிறார்கள் என்கிற அபத்தம் ஒருபக்கம் இருந்தாலும், கடைசியில் இரண்டு வருடங்களாக அவர்கள் கண்டுபிடித்தது எதுவுமே உபயோகமானது இல்லை என்பது நமக்குத் தெரியும் போது இன்னும் பரிதாபம். கதை ஓட்டத்தில் இதை பலர் இதை கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். 


ஜெயிலிலிருந்து வெளிவந்தவர் ஜார்ஜ் குட்டியை அன்று இரவு தான் பார்த்தாகச் சொல்லும் காட்சி அதற்கு முன்னதாக இவர்கள் கடத்திய ஒண்ணரை மணி நேரத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறது.


முதல் காட்சியில் அந்த குற்றவாளி ஜெயிலுக்கு போகும் காட்சிக்கு பிறகு, நேரடியாக அவர் ஜெயிலிலிருந்து வெளிவந்து போலீஸிற்கு துப்புகொடுக்கும் காட்சிக்கு தாவி அதிலிருந்து நாம் படம் பார்த்தாலும் படம் நிறைவாகவே இருக்கும். 


அடுத்து படம் எடுப்பதாக கூறி, ஒரு எழுத்தாளரைப் பிடித்து கதை எழுதி காமெடி செய்வது அடுத்தது. அந்தப் புத்தகத்தாலும் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் எந்த பிரயோஜனமும் இல்லை. கடைசியில் அவர் விடுதலையாவது கூட கிடைத்த எலும்புக்கூடு வருணுடையது அல்ல என்பதால் மட்டுமே.


அந்த கதை எழுதியதால் ஜார்ஜ்குட்டி அடைந்த லாபம் என்ன எனப் பார்த்தால், எலும்புக்கூட்டை தோண்டி எடுத்ததும் அடுத்து அதை என்ன செய்வார்கள் எங்கு கொண்டு செல்வார்கள் என்கிற தகவலைப் பெற்று அங்கு வேலை செய்யும் செக்யூரிட்டியை கரெக்ட் செய்கிறார். இந்தத் தகவலைப் பெறவா இத்தனை லட்சம் செலவு செய்து, கதாசிரியரைப் பிடித்து கதை எழுதினார்? ஒரு வேளை கதாசிரியர் மூலம் கதைக்கு புது ஐடியா எதாவது கிடைத்திருந்தாலும் பரவாயில்லை. அந்த மாற்று க்ளைமக்ஸை கூறுவது கூட ஜார்ஜ்குட்டிதான். 


இந்த முறை போலீஸ் ஜார்ஜ் குட்டியிடம் தோற்றால் அதன் பிறகு வெளியில் தலைகாட்டவே முடியாது எனும் சூழலில் மிக கவனமாக கையாளும் போலீஸ் அந்த எவெடென்ஸை ஜார்ஜ் குட்டி வந்து லவுட்டிக்கொண்டு போக வசதியாக அனாமத்தாக ஒரு குடிகார செக்யூரிட்டையை மட்டும் நம்பி விட்டு விட்டுப் போவது அபத்ததிலும் அபத்தம்.


பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டாலே அது மிகப்பெரியதாகத் தோன்றும். இங்கு இரண்டரை மணி நேரம். 

படம் ஒரு கட்டத்தை தாண்டி சுவாரஸ்யமகவே செல்கிறது. நிறைய லாஜிக் குறைகள் படத்தின் ஓட்டத்தில் தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு மாஸ்டர் பீஸ் என்றோ, இதுபோல ஒரு சீக்குவல் வந்ததே இல்லை என்பது போலோ பில்ட்டப்புகளையும், ரைட்டப்புகளையும் பார்க்கும்போது அதன் மறுபக்கத்தையும் பற்றி பேச வேண்டியிருக்கிறது. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ஜீவி said...

கிட்ட தட்ட சரியான பதிவு...
ஆனால் இந்த தொடர்ச்சியில் ஆறு வருஷம் முன்பு ஜார்ஜ் குட்டி யாய் போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த கேரக்டர் புதுசு..
கதையை தொடர்ந்து எடுத்து செல்ல அதுதான் அடிப்படை...
அதனால் அந்த கதா பாத்திரம் ஏன் பணத்துக்கு சிரம படுகிறான் என்பதை விளக்க சில காட்சிகள் தேவைதான். இல்லா விட்டால் ஒட்டாது...
எலும்பு மாற்றம் செய்வது அபத்தம். இவ்வளவு துல்லியமாக திட்டம் போடும் போலீஸ் ஜார்ஜ் குட்டி அங்கே போய் மாற்றும் வரை கம்மேன்று இருக்கிறார்கள். மேலும் அளந்து குறித்து சீல் வைக்க பட்ட பெட்டியை பிரித்து எப்படி அதே போல் வேறு எலும்புகளை ஒருவன் வைக்க முடியும்? இதுதான் லாஜிக் மீறலில் உச்ச கட்டம்.
வேறு விதமாக கதையை கொண்டு போவது என்றால் முதல் பாகத்தில் ஜார்ஜ் குட்டி போலீஸ் ஸ்டேஷனில் பிணத்தை புதைக்க வில்லை என்று மாற்ற வேண்டும்.. அது சரி வராது. அதனால் அந்த பிணத்தை எடுக்காமல் கதையை கொண்டு போகவும் முடியாது. ரொம்ப யோசித்து லாஜிக் கை கடாசி விட்டு இப்படி எடுப்பதுதான் ஒரே வழி என்று எடுத்து விட்டார்கள்.
ஜார்ஜ் குட்டி போலீஸ் ஸ்டேஷனில் அன்று இருந்ததை பார்த்த குற்றவாளி ரொம்பவும் மொக்கை போடாமல் சட்டென்று போய் பணத்துக்கு போட்டு கொடுப்பது நல்ல விறுவிறுப்பு...
எது எப்படியோ
வேகமான திரைக்கதை குறைகளை யோசிப்பதற்குள் படத்தை ஓட்டி முடித்து விடுகிறது.
அந்த வகையில் இது இயக்குனருக்கு மாபெரும் வெற்றி தான்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...