Thursday, March 17, 2022

கடைசி விவசாயி!!


Share/Bookmark

 



எதார்த்தத்தை, நடைமுறையை எந்த ஒரு வெளிப்பூச்சும் இல்லாமல் இவ்வளவு சுவாரஸ்யப்படுத்த முடியும் என்றால் உண்மையில் அது இயக்குனர் மணிகண்டனுக்கு  மட்டுமே சாத்தியம். எந்த ஒரு வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக போராளியாகவும் மாறாமல் இயல்பான, அதே சமயம் டாக்குமெண்டரி மாதிரியான சலிப்பையும் ஏற்படுத்தாமல், ஒரு திரைப்படத்திற்கான மரியாதையும், பார்வையாளர்களுக்குண்டான மரியாதையும் கொடுக்கும் மணிகண்டன் ஒவ்வொரு படத்திலும் வியக்கவைக்கிறார்.

காக்கா முட்டை கொடுத்த உணர்வு அதற்கு முன் எந்தத் தமிழ்த்திரைப்படமும் கொடுக்காத ஒரு உணர்வு. அதன்பிறகு வந்த குற்றமே தண்டனையில் Tunnel Vision பிரச்சனையால் விதார்த் பாதிக்கப்பட்டிருப்பார். அதாவது ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அவருக்கு பார்வை தெரியும். சுற்றி இருட்டாக இருக்கும். ஒரு காட்சியில் விதார்த்  மருத்தவரிம் சென்றிருப்பார்.

“சின்ன வயசுலருந்து இந்தப் பிரச்சனை இருக்குன்னு சொல்றீங்க… ஏன் இவ்வளவு நாளா இத கவனிக்காம இருந்தீங்க” என்று கேட்பதற்கு விதார்த்

“எல்லாருக்குமே இப்படித்தான் தெரியும்னு நினைச்சிகிட்டு இருந்தேன் டாக்டர் “ என்பார். ஆச்சர்யமாக இருந்தது எப்படி இப்படி எழுதமுடிகிறதென்று.

நாம் பார்க்கும் உலகம் நமக்கு எப்படித் தெரிகிறதோ அப்படித்தானே மற்றவர்களுக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிறப்பிலிருந்து ஒரு பிரச்சனை இருக்கும்போது அவனால் அதை உணர முடியாது என்பதை அதற்குப் பிறகுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இப்பொழுது கடைசி விவசாயி. கார்ப்பரேட் கம்பெனிகளைத் திட்டி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வில்லன்களாக அவர்களைச் சித்தரிக்காமல் எடுத்த முதல் விவசாயப் படம் என்பதற்காகவே இந்தப் படத்தைப் பாராட்டலாம்.

எந்தக் கருத்தையும் வலிய திணிக்கவில்லை. ”இந்த மண்ணிலேயே அத்தனையும் இருக்கிறது. அதை நீரூற்றி பாதுகாத்தால் மட்டுமே போதும். நமக்குத் தேவையானவை அனைத்தையும் அது தரும்” என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் திரைப்படம்.

விஜய் சேதுபதி, யோகிபாவுவைத் தவிற அனைவருமே புதுமுகங்கள். அப்படியே அந்த கிராமத்தில் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு வந்ததைப் போன்றதொரு உணர்வைத் தருகிறார் மணிகண்டன். எதிர்மறையான பாத்திரங்கள் என யாருமே இல்லை. போலீஸ்காரர்கள்  கொஞ்சம் அப்படிக் காட்டப்பட்டாலும், வயலில் தண்ணி பாய்ச்சி விட்டு “இந்த ரெண்டு மணிநேரம் தான்யா கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்” என அந்த அதிகாரி சொல்லும்போது அவர்கள் மீது இருந்த மொத்தக் கோபமும் மறைந்து பரிதாபத்தை வரவழைக்கிறது.

மாயாண்டியாக வாழ்ந்திருக்கும் தாத்தாவின் யதார்த்தமான வசன உச்சரிப்புகளும், அவரின் வெகுளித்தனமான நடிப்பும் அட்டகாசம்.

கோர்ட்டில் வழக்கில் நடந்துகொண்டிருக்கும் போதே ”இருங்க நா தோட்டம் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்” எனக் கிளம்புவது விவசாயத்தின் மீதான அவர்களின் பிடிப்பை ஆழமாகச் சொல்லும் ஒரு காட்சி. உண்மையில் ஆடு மாடு வைத்திருப்பவர்கள், விவசாயம் செய்பவர்களால் அவற்றை விட்டுவிட்டு ஒரு நாள் கூட இருக்கமுடியாது. எந்த ஊருக்குச் சென்றாலும் ”ஆடு  மாடு தனியா இருக்கும்.. வயலுக்கு தண்ணி கட்டனும்” என எப்படியாவது வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.  அந்த பஞ்சாப் விவசாயிகள் எல்லாம் எப்படி மாசக்கணக்குல விட்டு விட்டு  இருந்தார்கள் என்று தெரியவ்ல்லை

கடைசியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மாயாண்டி வயலுக்குள் இறங்கும் காட்சி, மாஸ் ஹீரோக்களின் அறிமுகக் காட்சியைத் தாண்டிய மாஸ்.

இளையராஜா ஏன் விலகினார் என்று தெரியவில்லை. ஒருவேளை இளையாராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில் இரண்டு மூன்று இடங்களில் நம்மை அழவிட்டுருப்பார்.

படம் முடிந்த பிறகு எண்டு கார்டில் நடிகர்கள் பெயரைப் பார்க்கும்போது படத்தில் நடித்த நிறைய பேர் ஏற்கனவே இறைவனடி சேர்ந்துவிட்டனர். நல்லாண்டி தாத்தாவே இறந்துவிட்டார் என்பது வருத்தமாக இருந்தது.

படத்தில் ஆங்காங்கு பெரியாரையும், அம்பேத்காரையும் காட்டியிருந்தால் படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் பாவம் முருகனும், மயிலும் வந்து செல்வதால் நிறைய பேர் கண்களில் படம் இன்னும் படவில்லை.

இதுவரை பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்!!

சோனி லைவில் இருக்கிறது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...