Saturday, March 26, 2022

PAN INDIA MOVIES!!


Share/Bookmark

 


RRR இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஒரு முன்னணி நாயகரின் நேரடித் தமிழ்ப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ அதை ஒத்த அளவிலான திரையரங்குகளை தமிழகத்தில் RRR ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் பீஸ்டிற்குப் போட்டியாக களமிறங்குகிறது கன்னடத்து சூராவளி KGF. தமிழ்நாட்டில் பீஸ்டிற்கு KGF ஆல் பெரிதாக எந்த ஆபத்தும் இருக்கப் போவதில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பீஸ்ட் KGF இன் அருகில் கூட நிற்க முடியாது.

KGF ஐயும் சேர்த்தால் கடந்த நான்கு மாதங்களில் தென்னிந்தியாவிலிருந்து புஷ்பா, ராதே ஷியாம், RRR என தமிழ்நாட்டில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு.

எங்கோ இருந்த கன்னட திரைத்துரையிலிருந்து ஒரு திரைப்படம், இன்று தமிழ்நாட்டின் முன்னணி நடிகரின் படத்திற்குப் போட்டியாகக் களமிறக்கப்படுகிறது. தெலுங்கின் இரண்டாம் நிலை ஹீரோவான அல்லு அர்ஜூனின் படம் தமிழகத்தில் பட்டையைக் கிளப்புகிறது.

தென்னிந்தியாவிலேயே ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் தமிழ்த் திரைத்துரையிலிருந்து எத்தனை PAN இந்தியப் படங்கள் வெளியாகியிருக்கின்றன? ரஜினியின் ஒரு சில படங்கள் அப்படிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் அவற்றையும் சரியன தரத்தில் கொடுக்காததால் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே மற்ற மொழிகளில் வெளியானது கூடத் தெரியாமல் காணாமல் போனது.

PAN இந்தியத் திரைப்படங்கள் என்பவை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒத்துபோகும்படி எடுக்கப்படும் படங்கள் அல்ல. அத்தனை மக்களையும் கவர்ந்திழுக்கும் தரத்தில் எடுக்கப்படும் படங்கள். அதற்கு ஒரு சிறந்த இயக்குனரும், அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரபலமான நடிகரும் கட்டாயம் தேவை.

தமிழில் இருக்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது ”சின்ன கல்லூ பெத்த லாபம்” என்கிற ஃபார்முலாவிற்கு அடிமையாகிவிட்டனர் அதாவது அவர்களின் சம்பளம் மட்டும் அதிகம். ஆனால் படம் ஒரு அம்பது அறுபது நாள் கால்ஷீட்டில் விரைவாக எடுத்து முடிக்கப்பட வேண்டும். படத்தில் ப்ரொடக்‌ஷன் வேல்யூ இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. ஹீரோவின் முகத்துக்குத்தான் இங்கு மதிப்பு. அப்படியே விற்றுவிட்டு ஒன்றுக்கு இரண்டாக கல்லா கட்டிவிட்டு அடுத்த சின்ன கல்லூ பெத்த லாபத்திற்கு அடி போடச் சென்று விடுகிறார்கள்.

அடுத்து தமிழ் இயக்குனர்கள். திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டவும், அடுத்த கட்டத்தில் யோசிக்கவும் இருந்த ஷங்கர் போன்ற ஒருசில இயக்குனர்கள் காலாவதி ஆகிவிட, புதிதாக வந்தவர்களும் புரட்சி போராட்டம் என குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க நல்ல வணிகத் திரைப்படத்திற்கான இயக்குனர்களுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் பஞ்சம் என்றே சொல்லலாம்.

இருநூறு கோடி பட்ஜெட்டில் உருவாவதக் கூறப்படும் தமிழ் திரைப்படத்தின் Production Value  வெறும் ஐம்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குத் திரைப்படத்தின் Production Value  விற்கு அருகில் கூட வருவதில்லை.

ஒரு காலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் ஆந்திராவில் பட்டையைக் கிளப்பிய காலங்கள் போய் கடைசியாக அண்டை மாநிலங்களில் நன்றாக ஓடிய தமிழ்ப் படம் என்ன என்பதே இப்பொழுது மறந்து விட்டது.

காரணம் சினிமாவின் அடுத்த கட்டம் என நம் இயக்குனர்கள் கொரியன் படங்களை நகலெடுத்துக் கொண்டிருந்த அதே காலத்தில் அவர்கள், அவர்கள் மொழிப்படங்களின் technical aspects இல் கவனம் செலுத்தி அதை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவில் அதைத் தவறவிட்டுவிட்டனர்.

ஒருசிலர் மட்டுமே இதைக் கூறிவந்த நிலையில், OTT க்களின் அசுர வளர்ச்சியால் இன்று இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.  பெரும்பாலானோர் இப்பொழுது  ”நம்ம படத்த விட இவங்க படம் நல்லாருக்கேப்பா” என்கிற கருத்தைக் கூற ஆரம்பித்துவிட்டனர்.  

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் படு நேர்த்தியான கலைப்படங்களைக் கொடுக்க நிறைய திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வணிக ரீதியிலான தரமான படங்களைக் கொடுப்பதற்கு நிச்சயம் நம்மிடம் தரமான இயக்குனர்களை இல்லை அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை.

சில வருடங்களுக்கு முன், தமிழ்ப்படங்கள் வெளியாவதால் கன்னடப் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என கர்நாடகாவில்  ஒரு போராட்டம் நடந்தது. இதே நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கூட இதே போல ஒரு போராட்டம் நடக்கலாம். அது நடைபெறாமல் இருக்க முன்னணி நடிகர்களிடமும், இயக்குனர்களிடமும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றமும் ஒரு பரந்த மனப்பான்மையும் தேவை.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ஜீவி said...

அருமையான பதிவு. படத்தின் பட்ஜெட் 150 கோடி என்பார்கள். அதில் ரஜினி சம்பளம் விளம்பர செலவு போக தயாரிப்புக்கு 10 கோடி போகும். படம் மண்ணு மாதிரி இருக்கும். அப்படி இல்லாமல் தெலுங்கு படங்களில் ரிச்னஸ் நன்றாகவே தெரியும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...