RRR புகழ்ச்சிப்பதிவுகள்
ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப்
ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும்
ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் குறிப்பாக
அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான்
நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்..
2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத
2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற
தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்,
3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?
காலாவ ஏன் ஓட
விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச்
சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால்
திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில்
படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.
ஸ்டாலின் திரைப்படத்தில்
சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று
பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய
அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட ”அவங்க உனக்கு நன்றி
சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.
அதேபோலத்தான்
ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு
நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க
வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும்
எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.
”புதுப்பேட்டையெல்லாம்
எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப்
பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின்
முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஆயிரத்தில் ஒருவன்
எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி..
ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை
இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து
கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது
நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும். திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.
ஒரு திரைப்படம்
வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும்.
பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில்
எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி
ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த
மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.
ஒருவர் மாததிற்கு
ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள்
என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம்
சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?
மழை காலத்திலும்,
குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க
தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.
நல்ல திரைப்படங்களை
எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து,
வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.
ஆடியன்ஸ திட்டாதீங்க
ப்ரோ!!
1 comment:
இப்ப இந்த லிஸ்டில் குதிரை வால் என்ற கொடும் படம் சேர்ந்து உள்ளது.
எம் ஜி ஆர் என்ற பிம்பத்தை உடைத்த குதிரை வால் படம் என்று விகடனில் கொண்டாடி மைல் நீளத்துக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு கலை பொக்கிஷமாம் குதிரை வால்..
Post a Comment