ஆறு வயதில் ஒரு
மகன், பதினொரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளுடைய கணவன் மனைவி இருவரும் விவாகரத்து
செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவைக் குழந்தைகளிடம் சொல்வதற்கு முன் அவர்களை
சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்து, தாங்களும் விவாகரத்திற்கான முடிவுகளை எடுக்கலாம்
என இருவரும் குழந்தைகள் சகிதம் ஒரு பீச் ரெசார்ட்டிற்குச் செல்கிறார்கள்.
அந்த இடம், அங்கு
அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, பணியாட்கள் நடந்துகொள்ளும் விதம் என அத்தனையும்
வெகுவாகக் கவர்கிறது. மறுநாள் காலை வேளை உணவருந்திக் கொண்டிருக்கும் போது அந்த ரெசார்ட்டின்
மேலாளர் இவர்களிடம் லேசாகப் பேச்சுக்கொடுத்து,
“எனக்கு உங்கள்
குடும்பத்தை மிகவும் பிடித்திருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான ப்ரைவேட் பீச் ஒன்று
இருக்கிறது. அது பாறைகள் சூழ மிக அருமையாகவும், அதிக கூட்டமில்லாமல் பொழுதை இனிமையாகக்
கழிப்பதற்கும் சிறந்த இடம். அந்தக் கடற்கரைக்கு நாங்கள் அனைவரையும் அனுப்புவதில்லை.
எங்களுக்குப் பிடித்த வெகு சிலரை மட்டுமே அனுப்புவோம். உங்களுக்கு ஓக்கே என்றால் நீங்கள்
அங்கு சென்று பொழுதைக் கழிப்பதற்கு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்” என்கிறார்.
அவர்களும் சரி
என்கிறார்கள்.
“நீங்கள் அந்த
ப்ரைவேட் பீச்சிற்கு செல்வதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்” எனவும் வேண்டுகோள் விடுத்து
அந்தக் குடும்பம் அங்கு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறார்.
வாகனத்தில் அவர்கள்
குடும்பம் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு குடும்பங்களும் இருக்கின்றன. அனைவரும் கடற்கரையை அடைகின்றனர்.
சுற்றிலும் பாறைகளால்
சூழ்ந்து, அவ்வளவு சுத்தமாக, பார்ப்பதற்கு இனிமையாக இருக்கிறது அந்தக் கடற்கரை. அனைவருக்கும்
மகிழ்ச்சி. குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கின்றனர். பெரியவர்கள் கரையில் படுத்து ஒய்வெடுக்க,
ஒரு மணிநேரம் கழிகிறது.
அப்பொழுது தான்,
நம்ப முடியாத, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடற்கரையில்
எதோ மர்மம் இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.
அந்த மர்மத்தைக்
கண்டறிந்து, அவர்களால் அந்தக் கடற்கரையிலிருந்து மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதுதான்
இந்த OLD.
மிஸ்ட்ரி, த்ரில்லர்
நாயகன் மனோஜ் நைட் ஷாமலனின் அடுத்த படைப்பு. ஏற்கனவே நாவலாக வந்த இக்கதையை திரைவடியில்
எழுதி இயக்கியிருக்கிறார் ஷாமலன். இவர் ஒரு ஹாலிவுட் கே.எஸ் ரவிக்குமார். அவருடைய அனைத்துப்
படங்களிலும் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸைக் கொடுத்துவிடுவார். இதிலும் ஒரு சிறிய வேடத்தில்
நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட
முழுப்படமுமே கடற்கரையில் தான் நடக்கிறது. ஆனால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக எடுத்துச்
சென்றிருக்கிறார்.
நிச்சயம் பார்க்கலாம்.
1 comment:
சார் இந்த படம் ஏதும் ott யில் உள்ளதா!
Post a Comment