Saturday, February 14, 2015

அனேகன் – ஆப்பொனென்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டான்!!!


Share/Bookmark
மற்றான் அவ்வளவு சிறப்பாக போகாத நிலையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து எடுத்திருக்கும் அடுத்த படம் இந்த அனேகன். கே.வி.ஆனந்த் படம் என்றாலே விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் முழுக்க விறுவிறு என்று இருந்தது. பிறகுதான் கவனித்தேன். தெரியாத்தனமாக தியேட்டர் ஃப்ளோர் லைட்டில் கால்வைத்ததால் கரண்ட் ஷாக் அடித்து விறுவிறு என்று இருந்ததை. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அருமையாக நடித்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் படம் என்றாலே ஹாரிஸ் ஜெயராஜ் தான் மீசிக் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நன்றாக மீசிக் போட்டிருக்கிறார். ஹீரோயினும் அழகாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். வில்லனும் நன்றாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். எல்லாமே நன்றாகவே இருக்கிறது. கதையும் அருமையாக இருக்கிறது. கேவி ஆனந்தின் இந்தப் படம் தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

திரைக்கதையில் ஒருசில குழப்பங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் அனேகன் நல்லாருக்குன்னும் சொல்லமுடியாது நல்லா இல்லைன்னும் சொல்ல முடியாது. நீங்க பாக்கலாம்னும் சொல்ல முடியாது நீங்க பாக்கக் கூடாதுன்னும் சொல்ல முடியாது. நீங்க படத்துக்கு போனாலும் போங்க. போகலன்னாலும் இருங்க. ரேட்டிங்க் அஞ்சுக்கு மூணே கால். நன்றி வணக்கம்.

நேத்து வரைக்கும் நல்லாத்தானய்யா இருந்தான். திடீர்னு மெண்டல் ஆயிட்டானேய்யான்னு தானே வெறிக்கிறீங்க. அட ஒண்ணுமில்லையப்பா. சும்மா ஒரு நடுநிலை விமர்சனம்னு சொல்லுவாங்கல்ல. அதத்தான் எழுதிப்பாத்தேன். அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். சரி வாங்க டங்காமாறியப் பத்தி பாப்போம்.

சமீபத்திய பெரிய பெரிய ஏமாற்றங்களால கடுப்பாயிருக்க நம்மூர் ரசிகர்களை ஓரளவுக்கு ஆறுதல் படுத்துற மாதிரி வந்துருக்க படம் தான் நம்ம அனேகன். ரொம்பவே வித்யாசமான கதைக்களம். ரெண்டு மூணு வித்யாசமான காலகட்டத்துல நடக்குற கதைகள். ரொம்ப நாளா படப்பிடிப்புல இருந்தாலும் அதற்கேத்த பலன் கண்டிப்பா கிடைச்சிருக்குன்னு சொல்லலாம்.

வழக்கமா இந்த த்ரில்லர் படங்களைப் பத்தி சொல்லும்போது “இந்த சீட்டு நுனியில உக்கார வச்ச படம்” அப்டின்னு குறிப்பிட்டு சொல்லுவாங்க. அந்த சீட்டு நுனி மொமெண்ட்ட இதுவரைக்கும் நா ஒரே ஒரு படத்துலதான் முழுமையா உணர்ந்திருக்கேன். அது ரத்தச் சரித்திரம்-2 வோட க்ளைமாக்ஸ். எத்தனை பேரு அந்தப் படத்த தியேட்டர்ல பாத்தப்போ ஃபீல் பண்ணீங்கன்னு தெரியல. ஆனா என்ன நடக்கப்போவுது, எவனோ எவனையோ கொல்லப்போறான். ஆனா அது யார்னு தெரியாது. ஒவ்வொருத்தனை நோக்கியும் கேமரா ஸ்லோமோஷன்ல போகவும், அதுக்கேத்த மியூசிக்கும் சேந்து யப்பா.. அந்த ஃபீல் கிட்டத்தட்ட அதுக்கப்புறம் எந்த படத்துலயுமே எனக்கு கிடைச்சதில்லை.

ஆனா அனேகனோட முதல் சீன்ல அந்த எஃபெக்ட ஒரு பாதியையாவது ஃபீல் பண்ணேன். முதல் இருபது நிமிஷமே எதோ க்ளைமாக்ஸ் பாக்குற மாதிரி எல்லாரையும் படத்துக்குள்ள இழுத்து கட்டிப்போட்டுருது.  என்னதான் ஹாரிஸ் ஜெயராஜ திட்டுனாலும் சில இடங்கள்ல பாராட்டத்தான் வேண்டியிருக்கு. அந்த முதல் சீன்ல கேமரா, மீயூசிக்கு, ஸ்பெஷல் எஃபெக்ட்டுன்னு எல்லாமே பூந்து விளையாடுருக்காய்ங்க.

மூணா ரூனாவாக வரும் தனுஷ் கொஞ்ச நேரத்தில் அஷ்விங்குற சாஃப்ட்வேர் பையனாக மாறுறாரு. கே.வி.ஆனந்தும் “அஷ்வின்”ங்குற பேர் செண்டிமெண்ட புதுசா புடிச்சிருக்காப்ள போல. முதல் பாதி முழுக்க படம் இண்ட்ரஸ்டிங்கா போயிகிட்டு இருந்தாலும் நம்ம மனசு வேற எதையோ எதிர்பாத்துக்கிட்டே இருக்கு. என்னன்னு பாத்தா வேறொன்னும் இல்லை. டங்காமாறியத்தான்.

எப்படா போடுவாய்ங்க. எப்படா அந்த தனுஷ் வருவான்னு எதிர்பார்க்க வைச்சே படத்த நகர்த்திருக்காங்க. ஏழாம் அறிவு படத்துல முருகதாஸ் பன்ன தப்ப இங்க கேவி ஆனந்த் பன்னல. ஏழாம் அறிவுல போதிதர்மன் செக்மெண்ட்ட இண்டர்வல் ப்ளாக்குல மட்டும் வச்சிருந்தா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற. போர் அடிக்கிறதே தெரிஞ்சிருக்காது.

டங்காமாறிய பதுக்கி வச்சி, பின்னால காளிங்குற தனுஷ் கேரக்டர் எண்ட்ரிய பாக்கும்போது என்னையும் அறியாம புல்லரிச்சிருச்சி. படத்துக்கு வந்த பாதிபேர் அந்தப் பாட்டுக்காகத் தான் வந்துருப்பாய்ங்க போல. செம சவுண்டு. தனுஷ் எல்லா கேரக்டருக்குமே செமையா செட்டாயிருக்காரு. குறிப்பா காளிங்குற கேரக்டர்.

பொதுவா நம்ம படங்கள்ல கதை மொத்தமும் ஹீரோவ மையமா வச்சே நகரும். ஆனா இங்க கொஞ்சம் வித்யாசம். மொத்தக் கதையும் ஹீரோயின மையமா வச்சி நகருது. செம்ம அழகு. அதுவும் அந்தப் புள்ள உம்மா குடுக்குற அழகே தனி.  அப்டிப்பட்ட அழகு தேவதைக்கு அவங்க அப்பா இடுப்புல அயன் பாக்ஸான சூடு வைக்கும்போது, எதோ நமக்கே சூடு வச்சா மாதிரி ஒரு ஃபீல்.

மாஞ்சா வேலுவுக்கு அப்புறம் மறுபடியும் நவரச நாயகன். நவரசத்துல ரெண்டு மூணு ரசத்த தான் கேவி ஆனந்த் யூஸ் பண்ணிருக்காரு. முதல் பாதி முழுக்க டம்மியா வந்துட்டு போனாலும் கடைசில ஒரே சீன்ல கார்த்திக் மொத்தமா தனுஷ தூக்கி சாப்டுறாரு. கார்த்திக் இங்க்லீஷ் பின்னி பெடல் எடுக்குறாப்ள.

படத்தோட வில்லன் கேரக்டரும் நல்லாருக்கு. வழக்கமா ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டா, வில்லன் ஹீரோவ அடிக்கும்போது நமக்கு வில்லன் மேல செம வெறி வரும். ஹீரோதான் ஜெயிக்கனும்னு நம்ம மனசுக்கு தோணும். ஆனா இந்தப் படத்து க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் சண்டை போடுறாங்க. ஆனா வில்லன் ஹீரோவ அடிக்கும்போது வில்லன் மேல நமக்கு கோவம் வராது.  வில்லன் ஜெயிச்சா நல்லாருக்கும்னு உள்ளுக்குள்ள கொஞ்சமாவது தோணும். எனக்கு அப்டிதான் தோணுச்சி. வேற யாருக்காவது தோணுச்சின்னா சொல்லுங்க J

ஆனா படத்தோட க்ளைமாக்ஸ், மஹதீரா படத்து க்ளைமாக்ஸ ஏழாம் அறிவு க்ளைமாக்ஸ் எடுத்த லொக்கேஷன்ல எடுத்தா மாதிரி இருக்கு. படத்துல நெகடிவ்னா ஒரு சில விஷயங்களை சொல்லலாம். தனுஷ் அஷ்வின் கேரக்டரா வரும்போது, ஒருசில காட்சிகள் லேசா போரடிக்கிது. ”தொடுவானம் தொலைகிற நேரம்”ன்னு ஷங்கர் மஹா தேவன் பாடுன ஒரு பாட்டை விஷுவல்ல கெடுத்து வச்சிருக்காய்ங்க. தனுஷ் கெட்டப் அந்த பாட்டுல செம்ம காமெடி. அஷ்வின் கேரக்டர்ல வர்ற தனுஷுக்கு காஸ்ட்யூம் சற்று டொம்மை போல இருக்கு. அதப்பாக்க தனுஷ் மாதிரியே இல்லை. கோ  படத்து ஜீவா மாதிரி, எதோ துணிக்கடை பொம்மை மாதிரி இருக்காரு. அப்புறம் நிறைய விஷயங்களுக்கு படத்துல explanation eh குடுக்காம படத்த படக்குன்னு முடிச்சிடுறாங்க.


இந்தப்படம் கண்டிப்பா கேவி ஆனந்தோட கம்பேக் படம் தான். கதையிலயும், சரி திரைக்கதையிலயும் ரொம்ப கவனமாவே இருந்துருக்காரு. இடையில திடீர்ன்னு இன்ஸ்பெக்டர் கோபிநாத்ன்னு ராஜேஷ்குமார் நாவல்ல வர்ற மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்லாம் வருது. எவனும் கேஸ் போடாம இருந்தா சரி. மொத்தத்தில் அனேகன்,  கண்டிப்பா பாக்கலாம். 

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- அதாரு உதாரு!!!


Share/Bookmark
மொத நாள் மொத ஷோ படம் பாக்குற ரசிகர்கள்கிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டா, அவிங்க சொல்ற பதில வச்சே அந்தப் படம் எவ்வளவு மொக்கைன்னு கண்டுபுடிச்சிடலாம். உதாரணமா படம் எப்டிப்பா இருக்குன்னு கேட்டா, நல்லாருக்கு நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தையில சொல்லாம ”கேமரா நல்லாருக்கு, BGM சூப்பரா இருக்கு, ஸ்டண்ட் பட்டைய கிளப்புது, பயங்கர ஸ்டைலிஷா இருக்கு” ன்னு பிரிச்சி பிரிச்சி சொன்னான்னா தியேட்டருக்குள்ள அவன் விட்டு பிரி பிரின்னு பிரிச்சிருக்காய்ங்கன்னு அர்த்தம்.

அப்டித்தான் இன்னிக்கு காலையில என்னை அறிந்தால் முதல் ஷோ போன தம்பி ஒருத்தன்கிட்ட “படம் எப்டிடா இருக்கு”ன்னு கேட்டேன். அவன் வழக்கம்போல “BGM சூப்பர்…” ன்னு ஆரம்பிச்சான். ஆஹா செத்தாண்டா சேகரு. இந்த தடவையும் வெடி வச்சிட்டாய்ங்களோன்னு நினைச்சேன். ஆனா அந்த மாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாம மயிரிழையில இந்தப் படம் உயிர் பிழைச்சிருச்சின்னு சொல்லலாம்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடுன்னு ரெண்டு தோசைங்கள சுட்ட அதே மாவுல சுடப்பட்ட அடுத்த தோசைதான் இந்த என்னை அறிந்தால். எழுபது சதவீத காட்சிகள் ஏற்கனவே மேல சொன்ன ரெண்டு படங்கள்லயும் பார்த்தது. காட்சிகள் மட்டும் இல்லை. கதாப்பாத்திரங்கள் உட்பட அனைத்தும்.

முதல் பாதிய கடந்து வர்றதே படம் பாக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப பெரிய சவால். அறு அறுன்னு அருக்குறாய்ங்க. அதுலயும் கவுதம் மேனன் டயலாக்கு… பிரமாதம். நல்லா இருக்கவேண்டிய சில சீன்கள வசனங்கள வச்சி தரை மொக்கையாக்குறதுக்கு சிறந்த உதாரணம் இந்தப் படம் தான். சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசுறாய்ங்க.

ஒரு சீன்ல த்ரிஷாவோட டான்ஸ பாத்துட்டு அஜித், திரிஷாகிட்ட போய் “உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லலாமா?” ங்குறாரு. அதாவது ”உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” ன்னு நேரடியா வசனம் வச்சா டைரக்டர் டச்சு போயிருமாம்.  வீட்டுல பொண்டாட்டிகிட்ட “இன்னிக்கு நம்ம வீட்டு சாம்பார் நல்லாருக்குன்னு நா உன்கிட்ட சொல்லலாமா?” ன்னு தான் கவுதம் கேப்பாரு போல. முதல் பாதில அஜித்தும் அனுஷ்காவும் பேசுற ஒவ்வொரு வசனமும் ரொம்ப ரொம்ப அருவையாவும், ஆர்டிஃபீஷியலாவும் இருக்கு.

சினிமோட்டோ கிராஃபிக்கு அயல்நாட்டுலருந்து ஒருத்தனை புடிச்சிட்டு வந்துருக்காய்ங்க. முதல் முக்கால் மணி நேரம் ஒன்லி க்ளோஸ் அப் ஷாட் தான். அதுவும் அஜித்துக்கும், அனுஷ்காவுக்கு ஸ்பெஷலா ஜும் போயிருக்காங்க ஜூம். அனுஷ்காவ கூட அசிங்கமா காமிக்க முடியும்னு இந்தப் படத்த பாத்தா தெரியும். சீக்கிரமா நீயும் ஒரு தொழிலதிபர பாரு ஆத்தா. நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது. 

முதல் பாதில சில காட்சிகள் ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு. உதாரணத்துக்கு முதல் தடவ அஜித்த அனுஷ்கா ஃப்ளைட்டுல பாக்குறாங்க. அஜித் சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டா மாதிரி.. ஓ சாரி சாரி.. இந்த சால்ட் & பெப்பர் ஸ்டைல் மண்டையோட உக்கார்ந்துருக்காரு. அந்த கெட்டப்புல அஜித்த முதல் முதலா பாக்குற பொண்ணுங்க பெரிப்பான்னு கூப்டாம இருந்தாலே பெரிய விஷயம். ஆன அனுஷ்கா “நீ அழகண்டா.. என்ன கொல்லுறடா.. சுசுமார்ட்டு டா” ன்னு வழியிது. சரி அதுகூட பரவால்ல. ஆனா இன்னொரு ரியாக்சன் விடும் பாருங்க “உனக்கு கல்யாணம் ஆயிருச்சின்னு மட்டும் சொல்லிடாதடா”ன்னு மனசுக்குள்ள பேசிக்கும். ஏன் பாட்டிக்கா.. அந்த மண்டைய புதுசா யாராவது பாத்தா, உன் பையன் எந்த காலேஜ்ல படிக்கிறான்னு தான் கேள்வி கேப்பாங்க.. ஆனா இது கல்யாணம் ஆயிருக்க கூடாதுன்னு வேண்டிக்குது. அடுத்த படத்துலயாவது இந்த சால்ட் அன் பெப்பர கொஞ்சம் தார ஊத்தி கருப்பாக்குங்கப்பா.. 


தத்தி தள்ளாடுற படம், அஜித் போலீஸா மாறுற சீன்லருந்து ஓரளவு கம்பிகிம்பிய புடிச்சிக்கிட்டு தவழ ஆரம்பிக்கிது. பெரும்பாலான போலீஸ் கெட்டப்புல அஜித் அப்படியே ராகவனை ஞாபகப்படுத்துறாரு. யோவ் யாருப்பா அது கல்ல பொறுக்குறது? ஞாபகப்படுத்துறாருன்னு மட்டும் தானே சொன்னேன்.

இந்த ஆதவன் படத்துல ரமேஷ் கன்னா ,” இளையராஜாகிட்டருந்து இலைய பரிச்சி, A.R.ரஹ்மான்கிட்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து என் பேர இளையமான்ன்னு வச்சிக்கிட்டேன்னு சொல்லுவாரு. அதே மாதிரி தான் வேட்டையாடு விளையாடு கமலினி கேரக்டர கூப்டு வந்து, அதே வேட்டையாடு விளையாடு ஜோதிகாகிட்டருந்து குழந்தைய புடுங்கி அந்த புள்ளைகிட்ட குடுத்தா, அது தான் என்னை அறிந்தால் திரிசா கேரக்டர்.

கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் படம் எத நோக்கி பயணம் பண்ணுதுன்னே தெரியாம போயிட்டு இருக்க, கடைசி முக்கால் மணி நேரம் தான்  மொத்த படத்தையும் காப்பாத்துது. முதல் பாதில பாத்த மொக்கையெல்லாம் மறைச்சி, நம்மள கொஞ்சம் ஆறுதல் படுத்தி வீட்டுக்கு அனுப்பி விடுறது படத்தோட ரெண்டாவது பாதி தான்.

எப்பவுமே ஒரு ஹீரோ எவ்வளவு பவர்ஃபுல்லானவர்னு முடிவு பண்றது வில்லன் கேரக்டர் தான். வில்லன் கேரக்டர் எவ்வளவுக்கு எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கோ அதப் பொறுத்து தான் ஹீரோ கேரக்டர் இருக்கும். மார்க் ஆண்டனி இல்லைன்னா பாஷா பாய் ரொம்ப சாதாரணமானவராத் தான் இருந்துருப்பாரு. நீலாம்பரி இல்லாம படையப்பா கேரக்டர் இவ்வளவு கெத்தா இருந்துருக்காது. மதுரை முத்துப்பாண்டி இல்லைன்னா கில்லி வேலு சாதா தங்கவேலாத்தான் இருந்துருப்பாரு. அதே மாதிரிதான் இங்க அஜித்த பவர்ஃபுல்லா மாத்துறவரு வில்லன் அருண் விஜய். ரொம்ப நல்ல சாய்ஸ். செம்மைய பண்ணிருக்காரு. பாடி லாங்வேஜூம் சரி, டயலாக் டெலிவரியும் சரி, சூப்பர். முதல் பாதில இன்னும் கொஞ்சம் இவர யூஸ் பண்ணிருந்தா முதல் பாதி கூட நல்லா இருந்துருக்குமோ என்னவோ.

அஜித் மறுபடியும் தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி “மிக ப்ரம்மாண்டமாய்” மாறிட்டாரு. XXL டீ ஷர்ட் கூட அவருக்கு ரொம்ப டைட்டா இருக்கும் போல. நிறைய காட்சிகள்ல அவரோட உடம்பு கேரக்டருக்கு ஒட்டாம தனியாத் தெரியிது. ஆனா முன்னால இருந்தத விட, இந்த படத்துல அஜித் நிறைய காட்சிகள்ல நல்லாவே நடிச்சிருக்காரு. அதாரு உதாரு பாட்ட ரொம்ப என்ஜாய் பண்ணி ஆடிருக்காரு. அந்த பாட்டுல அவர் face reaction பாத்தாலே நல்லா தெரியும்.

படத்தோட ரெண்டாவது பாதில நிறைய காட்சிகள் நல்லாவே இருந்துச்சி. குறிப்பா அருண் விஜய்யும், அஜித்தும் ஃபோன்ல பேசுற ஒரு சீன் செம சூப்பர். அப்புறம் அஜித்துக்கு மறுபடியும் காக்கி ஷூவ அவர் பொண்ணு எடுத்து குடுக்குறதும் அப்போ அந்த தீம் மியூசிக் வர்றதும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் ஆரிய ஜெயராஜ். டைட்டில் மியூசிக்கே தெறிக்குது. எல்லா பாட்டுமே நல்லா எடுத்துருக்காங்க.  BGM மும் நல்லாருக்கு. அங்கங்க கொஞ்ச கொஞ்சம் கைவுட்டு உருவி இங்க போட்டுருக்காரு. ஆனா நல்லா தான் இருக்கு.

கெளதம் வாசுதேவ உன்னி மேனன் கதை திரைக்கதையோட நிறுத்திக்கலாம். வசனம் எழுதி ஆளுங்கள கொல்ல வேண்டாம். அதுவும் ஆளாளுக்கு ஒரு செண்டிமெண்டு மாதிரி இந்தாளுக்கு கெட்ட வார்த்தை செண்டிமெண்டு போலருக்கு. தேவையில்லாத இடத்துலயெல்லாம் கெட்ட வார்த்தை. இதுல கேவலமான ஒரு விஷயம் என்னன்னா படத்துல அந்த கெட்ட வார்த்தைகள் வரும்போது தான் நம்மாளுங்க கைதட்டி ரசிக்கிறாய்ங்க. கண்றாவி. அப்புறம் இனிமே போலீஸ் கதை எடுக்குறதா இருந்தா கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க. அதே மாவு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு இன்னொரு தோசைய சுட்டுடாதீங்க.  We are பாவம்.

மொத்ததுல என்னை அறிந்தால் படம் முடிஞ்சி வரும் போது, ஒரு சூப்பர் படத்தை பாத்துட்டு வந்தோம்ங்குற ஃபீல கண்டிப்பா குடுக்கல. ஆனா அதே மாதிரி, ஒரு மொக்கை ரகமும் இல்லை. சூப்பர் படம், மொக்கை படத்துக்கும் இடையில உள்ள ஒரு மெல்லிசான கோட்டுல மாட்டிக்கிட்ட ஒரு சுமாரான படம் தான் என்னை அறிந்தால். அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...