அக்டோபர் 29... மாலை 5.20...சென்னை கிண்டி.... பண்டிகை விடுமுறைக்காக அவரவர் தம் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தமையால், பறவைகள் குன்றிய வேடந்தாங்கலாக காட்சி தந்தது பிரதான சாலை. எந்த நேரத்திலும், வானம் தனது மழை மலரை தூவ தயாராக இருப்பதை கண்டு அவரவர் கடைகளை மூடிவிட்டு, மழைக்கு முன் வீடு செல்லவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். வாகன புகை அதிகம் கலக்காத தூய்மையான காற்றை சுவாசிக்க முடியுமானால் அது இன்று தான் என்று நினைக்கும்படியான தூய்மையான சில்லென்ற காற்று அனைவரையும நனைத்துக் கொண்டிருந்தது.
அங்கு கேட்ட அந்த இருவருக்கிடையேயான வாக்குவாதம், இயற்கை காட்டிய மழை பயத்தை சற்றும் சட்டை செய்வதாக தெரியவில்லை. சாலையின் வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்த அவர்களில் சற்று பருமனான தேகத்துடன், சராசரி உயரத்தை விட சற்று அதிகமாக வளர்ந்திருந்தவன் கார்த்திக். நாத்திகம் பேசுபவன். அருகில் செல்பவன் விஜய். இவனுக்கு இருபத்து மூன்று வயசா? என்று பார்ப்பவர்கள் கேட்கும்படியான, பள்ளி மாணவன் போலான உடலமைப்பு. கருப்பு என்று சொல்ல முடியாத கலர். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். ஆனால் தற்போது இவர்களுக்குள்ளான வாக்குவாதம் அதனால் அல்ல. பின்பு எதனால்?...
" டேய் மச்சி... நா முன்னாடியே சொல்லிருக்கேன் அது என் ஆளு... அவள பத்தி
தப்பா பேசுறத இதோட நிறுத்திக்க..." என்றான் விஜய்.
"டேய் நா என்னடா தப்பா சொன்னேன்... உண்மைய தான சொன்னேன்.. உன்
ஆளுங்குறதால என்னால மாத்திலாம் சொல்ல முடியாது.." என்றான் கார்த்த்
"டேய் இதான் மரியாத உனக்கு.. இதோட நிறுத்திக்க"
"என்னடா ரொம்பதான் பண்ற,... உன் ஆள மேக்கப் கம்மியா போட்டு வர சொல்லு ன்னு சொன்னது ஒரு தப்பாடா? நேத்து ரவி கம்பெனிக்கு வரலன்னுதான் உனக்குதெரியும் ஆனா அவன் ஏன் கம்பெனிக்கு வரலன்னு உனக்கு தெரியுமா?"
"ஏன்?"
"ஏன்னா முந்தாநாளு உன் ஆளு மூஞ்ச க்ளோஸ் அப்ல பாத்துருக்கான். அப்ப
பயந்தவந்தான். இன்னும் ஜொரம் விடலயாம்.. டாக்டர் "நீங்க எதையோ பாத்து
பயந்துருக்கீங்க" ன்னு கேட்டதுக்கு கூட "நேந்து நைட் பேய் படம் பாத்து
பயந்துட்டேன்"ன்னு சொல்லி சமாளிச்சிருக்கான்...."
"போங்கடா போங்கடா... கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை? என்னிக்காவது ஒரு நாள் என் ஆளோட அருமை உங்களுக்கெல்லாம் தெரியும்டா"என்று கார்த்திக்குக்கு பதிலளித்த விஜயின் பார்வை சாலையின் மறுபுறத்தை நோட்டம் விட்டு, அந்த முப்பத்தைந்து வயது மதிக்கதக்க மனிதரிடம் பார்வை நிலை கொண்டது. அவர் யாரிடமோ கைபேசியில் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் பேசிக்கொண்டிருந்த தொணியை பார்த்தால் அவரின் மனைவியிடம் தான் பேசிக்கொண்டிருப்பார் என ஊகித்தான் விஜய்.
விஜயின் செவியும், வாயும் கார்திக்கின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாலும் கண்மட்டும் சாலையின் மறுபுறம் இருந்த அந்த மனிதரையே பார்த்துகொண்டிருந்தது. காரணமாக இல்லை. நாம் வழக்கமாக ஒரு எறும்பை பார்தால், அது கடைசிவரை,எங்கு செல்கிறது, என்ன செய்கிறது என்பதை பார்ப்பது போலவே, விஜயும் அவரைபார்த்துக் கொண்டிருந்தான். பலமாக வீசிய காற்றில், புழுதிகளும், சருகுகளும் பறக்க ஒரு வார பத்திரிக்கைகளின் பக்க அளவுள்ள ஒரு பேப்பர் துண்டு அந்த மனிதரின் முகத்தில் சென்று முகத்தை மூடியது. அதனை எடுத்து மீண்டும் காற்றிலேயே பறக்க விட்டு விட்டு, பேச்சை தொடந்தார். அந்த பேப்பர் துண்டு அருகில் இருந்த அரசால் நடப்பட்ட சாலையோர செடியின் கூண்டு பகுதியில் மாட்டிக்கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாத சிறை கைதியானது.
சிறிது நேரத்தில், கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு,
சாலையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இன்னும் ஏனோ அவரையே கவனித்துக் கொண்டிருந்தான் விஜய். சாலையின் விளிம்பில் நின்றுகொண்டு சாலையை கடக்க வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்த அவர், மறுபடியும் தனது கைபேசியை எடுத்து காதில் பதித்து ஏதோ நினைப்பில் சாலையை கடக்க ஆரம்பிக்க, அவர் முழுவதும் கடப்பதற்குள் ஒரு டேங்கர் லாரி அவரை கடந்து சென்றது. ஒரு சில வினாடிகள் தான்... அவரின் இதயத்தை துடிக்க கட்டளையிடும் மூளை அவருக்கு சற்று இரண்டடி தொலைவில் சிதறி கிடந்தமையால் அவரின் இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.
இரண்டு நிமிடத்தில் அவரை சுற்றி, பெரிய கூட்டம். வெகுஅருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் விஜயும், கார்த்திக்கும். விஜய் ஒரு வித குழப்பத்தில் தனியாக கிடந்த அந்த மூளையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் இருந்த போக்குவரத்து காவலர் அனைவரையும் கலைந்து போக சொல்ல, கார்த்திக் விஜயின் கையை பிடித்துஇழுத்துக் கொண்டு, கூட்டத்திலிருந்து விடுபட்டு வெளிவந்த தருணம், அவன் பற்றியிருந்த கையை வேகமாக விடுவித்துக்கொண்டு ஓடி, அருகில் இருந்த செடியின் அடிப்பகுதியில் சற்றுமுன் தின்ற உணவுகளை கக்கினான் விஜய். அங்கு அவன் பார்த்த காட்சியின் விளைவே அது. இன்னும் வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிமிர்ந்த அவன் கண்ணில் அந்த கூண்டில் சிக்கியிருந்த பேப்பர் பட்டது.
அது அவர் முகத்தில் வந்து மூடிய காட்சியும்,அவர் அதை எடுத்து மீண்டும் பறக்க விட்ட காட்சியும் நினைவில் வந்து சென்றன. உடனே அந்த காகித துண்டை அதிலிருந்து விடுவிக்க, அது ஒரு நாளிதழின், கிழிந்த ஒரு பகுதி என்பது தெரிந்தது. அதனை திருப்பி அதிலிருந்த செய்தியை படித்த அவன் முகம், ஒரு விதமான அமானுஷ்யத்தை உணர்ந்தது.
" வேலூரில் டேங்கர் லாரி மோதி வாலிபர் தலை சிதறி சாவு "
என்ற தலைப்பில் ஒரு வாலிபரின் உடல் சாலையில் இறந்து கிடப்பது போலான ஒரு புகைபடத்துடன் கூடிய அரைபக்க செய்தி அதில் இடப்பட்டு இருந்தது. இங்கு நடந்ததும் அதே போல ஒரு சம்பவம் தான். இந்த பேப்பர் எப்படி சரியாக அவர் முகத்தில் வந்து..இது தற்செயலா அல்லது நடக்க போவதை உண்ர்த்த வந்ததா? யோசித்த விஜய்,வேகமாக திரும்பி கார்த்திக்கிடம் அதை காண்பித்து, நடந்ததை கூறினான்.
" டேய் இதுல எதோ ஒண்ணு இருக்குடா? இல்லன்னா எப்புடி கரெக்டா அது அவர் மேல வந்து விழுந்துச்சி... .." என்று ஏதேதோ பேச தொடங்க
கார்த்திக் அந்த பேப்பரை கையில் வாங்கி, காற்றில் விசிறி அடித்துவிட்டு விஜயின்கையை பற்றி இழுத்துச்செல்ல, காற்றில் பறந்த அந்த காகித துண்டை பார்த்தவாறே நடந்தான் விஜய்.
அடுத்த பதிப்பில் தொடரும்...
2 comments:
Ada..ada..ada... padu piramatham...
Dei, super twisttuu... Waiting for the second half...k
Post a Comment