Wednesday, August 8, 2012

துவாரமலை இரவுகள்-2


Share/Bookmark
குறிப்பு:  இந்த பதிவில் வரும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே இதன் முந்தைய பகுதியை  படிக்க இங்கே கிளிக்கவும்.*******                                                        இரவு முழுவதும் சிந்தனையிலேயே எப்போது தூங்கினோம் என்பது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு காலை 6.30 க்கு மனைவி வரக்காப்பியுடன் எழுப்பும் போதுதான் விழிப்பு வந்தது. "என்னங்க... நேரமாகிப் போச்சு... எழுந்திரிங்க" என்று கையில் வைத்திருந்த டம்ளரை பக்கத்தில் வைத்தாள்.  உடம்பை சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்த ஆறுமுகத்திடம் "என்னங்க.. எப்பவும் நீங்க என்னை எழுப்பி விடுவீங்க.. இன்னிக்கு இப்புடி தூங்குறீங்க" என்று கேட்க "ராத்திரி சரியா நித்திரை இல்லடி"என்று பதில் சொல்லிக்கொண்டே எழுந்து சென்று கதவை திறந்தான். அதிகாலை குளிர் உடலில் சுளீர் என்று அடித்தாலும் லேசான வெளிச்சமும் சேர்ந்து ஒரு புத்துணர்வை தந்தது.

பத்து நிமிடத்தில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு, கொடியில் தொங்கிய ஒரு பழைய சாலைவையை எடுத்து போர்த்திக்கொண்டு வெளியில் கிளம்பினான். "எங்கங்க இவ்வளவு வெல்லனமா கெளம்பிட்டீங்க?" என்ற பஞ்சவர்னத்திடம், "அடுத்த பறிப்புக்கு நா போய் ஆள் சொல்லிட்டு வந்துடுறேன்" என கூறிவிட்டு மலையம்மன் கோவிலை நோக்கி நடந்தான்.  ஏதோ சரியில்லை என்று மட்டும் ஆழ்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. 5 நிமிட நடையில் பாதையை சுற்றி மலையம்மன் கோவிலை அடைந்தான்.

சூளாயுதத்தில் முற்றிலும் காய்ந்து சருக்கிப்போன பழைய மாலைகள் ஒரு ஐந்தாறு தொங்கிக்கொண்டு இருந்தது. மலையம்மன் பாதத்திலும் சரி, கழுத்திலும் சரி சமீபத்தில் சூடப்பட்ட மலர்களோ மாலைகளோ ஏதும் இல்லை. ஆறுமுகத்திற்கு மறுபடியும் மூளை குதற ஆரம்பித்தது. உடனே பலி பீடம் அருகில் சென்று  பார்க்க, சமீபத்தில் எந்த விதமான பலியும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சமீபத்திய  ரத்தக்கரைகள் ஏதுமின்றி காணப்பட்டது. சுற்றி முற்றி மண் தரையை ஒரு முறை நோட்டமிட்டான். மலையம்மனை மலைமக்கள் கண்டுகொண்டே பல நாட்கள் ஆகிப் போயிருந்தது தெரிந்தது. வந்ததற்கு மலையம்மனை கையெடுத்து கும்பிட்டு விட்டு பாதத்திலிருந்த விபூதியை சிறிது நெற்றியில் இட்டுக் கொண்டு புறப்பட்டான்.

கோவிலிலிருந்து ஒரு 50 அடி நடந்திருப்பான். "என்ன ஆறுமுகம்... காலைலயே அம்மனை பாத்துட்டு போக வந்துருக்க... எதாவது விஷேசமா?" குரல் கேட்டு ஆறுமுகம் திரும்ப 58 வயதான் வைத்தியர் குழந்தை சாமி பின்புறம் வந்துகொண்டிருந்தார். உடனே நடையை நிறுத்தி சிறு புன்முறுவல் பூத்துவிட்டு  "அதெல்லாம் ஒண்ணுமில்லையா.. சும்மா இந்த பக்கம் வந்தேன்... அதான் அம்மனை தரிசிச்சிட்டு கெளம்புறேன்" என்றான்.

"ஆமா ராத்திரி என்ன ரொம்ப நேரம் அறிக்கன் விளக்க வச்சிகிட்டு உங்க வீட்டுக்கு வெளிய நின்னுகிட்டு இருந்த போலருக்கு" என்றார் குழந்தை சாமி...

"ஆ..ஆமாய்யா... . உங்களுக்கு எப்புடிய்யா தெரியும்"...

"அட அது ஒண்ணுமில்லைப்பா.. நேத்து ராத்திரி நடுச்சாமத்துக்கு மேல நம்ம ராமசாமி மயனுக்கு பயங்கர காதுவலி... அய்யோ அம்மான்னு கத்த ஆரம்பிச்சிட்டான்.. அதான் ரெண்டு பச்சலை புடுங்கிட்டு போலாம்னு இந்த பக்கம் வந்தேன்.. அம்மன் காட்டுக்கு பக்கத்துலதான் நெறைய செடி மண்டி கெடக்குதே...  வரும்போது பாத்தேன்.. யாரோ விளக்கோட நின்னாங்க... சரி நீயாதான் இருக்கும்னு நெனைச்சேன்... திரும்ப பச்சைல பற்றிச்சிட்டு பாத்தப்புறமும் வெளிச்சம் தெரிஞ்சிச்சி... அதான் ரொம்ப நேரம் நின்னியேனு கேட்டேன்... ஆமா என்ன விஷயம்"

"அது ஒண்ணும் இல்லையா... சின்னவன் நடுச்சாமத்துல  வெளிக்கு போகனும்னு சொன்னான்...  அதான் அவனை விட்டுட்டு பக்கதுல  நின்னுகிட்டு இருந்தேன்...."

"சரி சிரி... நடுச்சாமத்துல இப்புடி வெளியல்லாம் வந்து நிக்காதீங்கையா... ஒத்தை வீட வேற இருக்குது.. காத்து கருப்பு நடமாட்டம் எதுவும் இருக்கும்.."

ஆறுமுகம் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு  " என்னையா நீங்களே இப்புடி காத்து கருப்புன்னு பேசிகிட்டு" என்றான்.

"ஆறுமுகம்... சொல்றனேன்னு தப்பா நெனைச்சிக்காதையா.... நீங்க இப்ப குடியிருக்க எடம்தேன் நாப்பது அம்பது வருஷத்துக்கு  முன்னால சுடுகாடா இருந்துச்சாம்... எங்க அய்யன் என்கிட்ட அடிக்கடி  சொல்லிருக்கு. ஏற்கனேவே இத வச்சிருந்த தட்சிணாமூர்த்தி கூட இந்த எடத்துல நிறைய ப்ரச்சனை இருக்கதால தான் வித்துட்டு எங்கயோ பொய்ட்டாருன்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க... உன் நல்லாதுக்காக சொல்றேன்... தப்பா நெனைச்சிக்காதையா..."

"ச்ச...ச்ச...அதுனால என்னையா... உங்கள போய் தப்ப நெனைப்பனா.. அடுத்தவுக நல்லருக்கனும்னு  நெனைக்கிறவுகல்ல நீங்களும் ஒருத்தரு.... இனிமே இதுமாரி நடக்காம பாத்துக்குறேன்யா" என்று சொல்லி வைத்தியரை கழட்டி விட்டுவிட்டு வீட்டுக்கு நடையை கட்டினான். கோழித்தலை கிடந்தது மனதிற்கு உறுத்தலாக இருந்தாலும் வைத்தியர் சொன்ன சுடுகாடு கதைகளை எண்ணி மனதுக்குள்  நகைத்துக்கொண்டே வீட்டை நோக்கி வந்தவனுக்கு சிறிய அதிர்ச்சி...

எஸ்டேட் ஓனர் திருச்சாமி அய்யாவின் குதிரை வண்டி வீட்டு முன் நின்று கொண்டிருந்தது. "என்ன போனவாரம் தானே எஸ்டேட்டை பாத்த்துட்டு போனார்... வழக்கமா மாசம் ஒருதடவ தான் வருவார். இப்போது உடனே இன்னிக்கு வந்துருக்கார்... என்ன  விஷயமா இருக்கும்?" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு லேசான ஓட்டத்துடன் வீட்டை அடைந்தான். பஞ்சவர்ணம் திருச்சாமி அய்யாவை உட்கார வைத்து வரக்காப்பியை கையில் கொடுத்திருந்தாள். ஆறுமுகத்தின் மகன்கள் இருவரும் திருச்சாமியின் அருகில் நின்று அவர் வாங்கி வந்த ரஸ்க் மற்றும் முருக்கு பாக்கெட்டுகளை கையில் வைத்திருந்தனர்.

குதிரைவண்டிக்கு அருகிலேயே திருச்சாமியிடம் வேலைசெய்யும் கோவிந்தன் நின்றிருந்தான். இவன்  ஏற்கனவே இந்த எஸ்டேட்டை வைத்திருந்த தட்சினாமூர்த்தியிடம் வேலை செய்தவன். திருச்சாமி  இவன் மூலமாகதான் குறைந்த விலைக்கு இந்த எஸ்டேட்டை வாங்கியதாக பரவலான பேச்சு.  எப்போதும் திருச்சாமியின் நிழல் போல கூடவே இருப்பவன்.

"வா ஆறுமுகம்...என்ன காலைலயே வெளிக்கெளம்பிட்ட போலருக்கு..." என்றார் திருச்சாமி..

"இல்லையா... இங்கதான் பக்கத்துல ஒரு சின்ன வேலையா பொய்ட்டு வந்தேன்.. நீங்க என்னையா இப்புடி திடீர்னு" என்றான்.

"ஏன் வரக்கூடாதா..."

"அய்யயோ... அதெல்லாம் இல்லையா... உங்க எடம் நீங்க எப்பவேணா வரலாம்..." என்றான் சிறிது பயத்துடன்

"ஹ்ம்ம்ம்.. ஒண்ணும் இல்ல ஆறுமுகம்... இங்க பக்கத்துல ஒரு சின்ன வேலை... அதான் அப்டியே  இந்த பக்கம் உன் குழந்தைங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." என்று சொல்லிக்கொண்டே எழுந்து வீட்டின் பின் பக்கம் நடந்து சென்று சுற்றி முற்றி பார்த்தார்.

"ஹ்ம்ம்ம்.... பரவால்லையே.. வீட்ட நல்லா சுத்தமாதான் வச்சிருக்கீங்க... இது என்ன மரவள்ளிக் கெழங்கா.... கெழங்கு புடுங்கும் போது எனக்கும் கொஞ்சம் குடுப்பா.... " என்றார் லேசாக  சிரித்துக் கொண்டே..

"என்னய்யா இது... உங்களுக்கு இல்லாததா... அது எதோ என் வீட்டுக்காரி ஊணி வச்சி பாத்துட்டு  இருக்கா..."

"ஹ்ம்ம்ம்... சரி சரி... நேரம் ஆயிருச்சி... நா கெளம்புறேன்... தேயிலை பறிக்கலாம் போல தெரியுதே.. ரெண்டு மூணு நாள்ல பறிச்சி அனுப்பி விடு..." என்று கூறிவிட்டு "கோவிந்தா... கெளம்பலாமா..." என கூறிக்கொண்டே வண்டிக்கு சென்றார். வண்டி புறப்பட்டு செல்லும் வரை வாசலில் நின்று கொண்டே இருந்த ஆறுமுகம் வண்டி மறைந்த பின்பு லேசான சோர்வுடன் ஸ்டூலில் உட்கார்ந்தன்...

"ஏங்க... இன்னொரு டம்ளர் காப்பி கொண்டு வரவா" என்ற பஞ்சவர்ணத்திடம் ஹ்ம்ம்ம்ம்.... " கொண்டு வா" என்று சொல்லிக்கொண்டே இரவு நின்ற இடத்தை லேசாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்...

பொழுது சாய்ந்தது... அன்றைய நாளும் ஏனைய நாட்களை போலவே மந்தமாகவே நகர்ந்திருந்தது.. டவுனுக்கு செல்லவேண்டும் என்ற யோசனை கடும் பனியால் தள்ளிபோடப்பட்டது. இரவு  ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கசென்றாலும் மகன்களுக்கு கதைகள் சொல்லி தூங்க வைப்பதற்குள் மணீ பத்தை தாண்டியிருந்தது...

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது திடீரென யாரோ எழுப்புவது போன்றதொரு உணர்வு... பஞ்சவர்ணம்  மிக லேசான குரலில் "என்னங்க... என்னங்க" என்றாள்...

"என்....னடி......"

"என்னங்க... நம்ம வீட்டு பின்னால எதோ சத்தம் கேக்குதுங்க... "

அரைத்தூக்கத்தில் இருந்தவனுக்கு முகத்தில் ஐஸை கொட்டியது போல தூக்கம் பறந்தோடியது.....

"என்னது... சத்தமா... அதெல்லாம் ஒண்ணும் இருக்காது... பேசாம படு"

"இல்லைங்க... ரொம்ப நேரமா கேக்குது... யாரோ நடக்குற மாதிரி சத்தம் கேக்குது" என்றவுடன் பேச்சை நிறுத்திவிட்டு காதை கூர்மையாக்கினான் ஆறுமுகம்..

............................நிசப்தம்....அவன் இதயம் துடிக்கும் சத்தமே அவனுக்கு அளவுக்கு...

இருபது நொடி...முப்பது நொடி..... எந்த சத்தமும் கேட்கவில்லை... பஞ்சவர்னத்தை எதாவது சொல்லி திட்டி விடலாம் என்று நினைக்கும் போது அந்த சத்தம் கேட்டது...

யாரோ பேப்பரில் காலை வைப்பது போல... இரண்டடி எடுத்து வைத்தது போல சத்தம் கேட்டுவிட்டு பிறகு நின்றது.. அதற்கேற்றார் போல வெளியில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த கோழிகள் "ப்க்...ப்க்... ப்க்..ப்க்" என்று ஒண்றாக சத்தத்தை எழுப்பி நிறுத்தின.. வழக்கமாக இரவு நேரத்தில் கோழிகள் பாம்புகளையோ பூனைகளையோ பார்க்கும் போது மட்டுமே ஒலி எழுப்பும்.

"கேட்டீங்களா... நா சொன்னேன்ல..." என்றாள் பஞ்சவர்ணம் மிக மெல்லிய குரலில்.

உடனே ஆறுமுகம் ஒலி எழுப்பாமல் மெல்ல எழுந்து கைகளால் தடவி தீப்பெட்டியை தேடி எடுத்து அறிக்கன் விளக்கை ஏற்றினான். எழுந்து வெளியில் செல்ல முயலும் போது "இருங்க நானும் வரேன்" என்றாள் பஞ்சவர்ணம்...

"நீ பேசாம இங்கயே இரு... நா பாத்துட்டு வர்றேன்... "என்று ஆறுமுகம் தடுக்க "தனியா போகவேணாம் இருங்க நானும் வர்றேன் என்று சொல்லிவிட்டு கூடவே எழுந்தாள்.

கதவை சத்தம் வராமல் மெல்ல திறக்க, குளிர் உறைய வைத்தது. மெதுவாக ஆறுமுகம் முன்னே  செல்ல பின் தொடர்ந்து சென்றாள் பஞ்சவர்ணம்...

அறிக்கனை நன்கு தலை உயரத்தில் தூக்கி நிறுத்தி மேலோட்டமாக ஒருமுறை சுற்றிப்பார்த்தான்... எவரும் இருப்பதாக தெரியவில்லை.. மெதுவாக அடிஎடுத்து வைத்து சென்று கோழிக்கூண்டை பார்த்தான்.. வெளிச்சத்தை பார்த்த அத்தனை கோழிகளும் கண்களை அகல விரித்து ஒடுங்கியபடி அறிக்கனை  வெறித்தன. மரவள்ளி கிழங்கு செடிகளுக்குள் எதாவது இருக்கின்றதா என ஒருமுறை நன்கு பார்த்து விட்டு திரும்பிய நேரம் பின்னால் இருந்த மரபுதருகுள் எதோ சல சல வென ஆடும் சத்தம் கேட்க, ஆறுமுகத்திற்கும் பஞ்சவர்ணத்திற்கும் உமிழ்நீர் இறங்க மறுத்தது.. அதுவரை தனியா நின்ற பஞ்சவர்ணம் சற்று அருகில் வந்து ஆறுமுகத்தின் கையை பற்றினாள்... "என்னங்க வாங்க போயிடலாம்...எதுவா இருந்தாலும் காலைல வந்து பாத்துக்கலாம்" என்றாள்..

"ஏ சும்மா இருடி.. எவனோ நம்மகிட்ட விளையாட்டு காமிச்சிட்டு இருக்கன்.. இரு பாப்போம்" என்று  அருகிலிருந்த ஒரு நீளமான தடியை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கையில் அரிக்கனையும் பிடித்துக் கொண்டு சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நகர்ந்தான். மரவள்ளி செடிகளை தாண்டி அந்த புதரை நெருங்க நெருங்க இருவருக்கும் நெஞ்சத்தில் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது... அதுவரை லேசாக அசைந்து கொண்டிருந்த அந்த புதர்செடி ஆறுமுகம் நெருங்க நெருங்க மெல்ல மெல்ல அசைவை நிறுத்தியது...

புதருக்கு 5 அடி பக்கத்தில் இருவரும் நின்றபடி மேலும் முன்னேறலாமா வேண்டாமா என்ற யோசனையில் சிறிது நேரம் நின்றிருந்தனர். ஆறுமுகம் கையில் வைத்திருந்த அந்த தடியால் அந்த புதர்செடியை இரண்டு மூன்று தட்டு தட்டினான்.. எந்த அசைவும் இல்லை... தைரியமாக முன்னேறி  அந்த புதர்செடியை கையால் விளக்க... அரிக்கன் விளக்கிள் ஒளியில் அவன் பார்த்தது கண்களில் கலவரத்தை உண்டு பண்ணிது... கிடப்பது என்னவென்று கண்டுபிடிக்கவே சிறிது நேரம் ஆனது...

தலை துண்டிக்கப்பட்ட ஒரு ஆட்டின் உடல்... வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இன்னும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்க அதன் கால்கள் வழியே லேசான அசைவில் மீதமிருந்த உயிர் வெளியேறிக் கொண்டிருந்தது.

ஆறுமுகம் அரிக்கனை இன்னும் சற்று தூக்கி பிடிக்க அந்த ஆட்டின் உடலுக்கு ஒரு முன்றடி தாண்டி வாய் முழுவதும் சணலால் கட்டப்பட்ட  நிலையில் துண்டிக்கப்பட்ட அதன் தலை விழியை திறந்தபடி உயிர் நீத்திருந்தது.

அடுத்த பதிவில் தொடரும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

இளா said...

செமையா இருக்குணா..!! போன பகுதியை விட இந்த பகுதி இன்னும் அருமையாக இருக்கு. அடுத்த பகுதிக்காக ஆவலோடு காதிருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பதிவை விட விறுவிறுப்பாக செல்கிறது...தொடருங்கள்...

வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...