Thursday, January 10, 2013

அன்புத் தாய்மார்களே!!! அருமைப் பெரியோர்களே!! இனிய குழந்தைகளே!!


Share/Bookmark
ஒரு பத்து வருஷத்துக்கு  முன்னாலயெல்லாம் ஸ்கூல் படிச்சிட்டு இருக்குற காலத்துல எதாவது பண்டிகை வந்துச்சின்னா டிவில என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்க, என்ன என்ன படம் போடுவாங்க அப்புடிங்கறதெ ஒரு பெரிய எதிர்பார்ப்பா இருக்கும்.  முக்கியமா அப்பல்லாம் தியேட்டர்ல பாக்குற படங்களே வருசத்துக்கு ஒண்ணோ  ரெண்டோதான். ஆனா இப்ப... கழுதை என்ன படம் போட்டா என்ன? எப்புடியும் நாம பாத்த படத்த தான் போடப்போறாய்ங்க....

அதுவும் இப்பல்லாம் இந்த லோக்கல் சேனல்  இருக்காய்ங்களே...  கொலை வெறில அலையிறானுக... படம் ரிலீஸ் ஆன அடுத்த  வாரத்துலயே அந்த படத்த சேனல்ல போட்டா தான் அவிங்களுக்கு தூக்கம் வரும். அதும் இப்ப எங்க ஊர் பட்டுக்கோட்டை சைடுல ஒரு புது ட்ரெண்டு கண்டுபுடிச்சிருக்காய்ங்க... ரெண்டு வாரத்துக்கு முன்னால ஊருக்கு போனப்ப, ஒரு மூணு ச்சேனல்ல மூணு நாள்  தொடர்து காலையில் மதியம் நைட்டுன்னு மூணு வேளையும் "துப்பாக்கி" படம் ஓடிட்டுருக்கு.வெளையாட்டுக்கு சொல்லல...இது உண்மை. ஏண்டா இப்புடியெல்லாம் ஒரு படத்த போட்டு அருத்தா அடுத்து துப்பாக்கி படத்த சன் டிவியோ , ஜெயா டிவியோ போடும்போது எல்லாரும் வெறிபுடிச்சி ஓடிற மாட்டாய்ங்க...

அத விடுங்க... இந்த சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் வருவோம்... இந்த கேபிள் டிவி ஆரம்பிச்ச காலத்துலருந்து இப்ப வரைக்கும் எதோ பண்டிகைன்னா ஒரே மாதிரி சிறப்பு நிகழ்ச்சிகள்தான். ஏண்டா... வித்யாசமா போட்டாதான் அது சிறப்பு நிகழ்ச்சி... ஒரே டெம்ப்ளேட்ல ஆளுங்கள மாத்தி  மாத்தி போட்டு அருக்குற அருவை இருக்கே... இப்ப பாருங்க உதாரணமா நம்ம சன் டிவி எடுத்துகிட்டோம்னா...

விடிய காலமே இம்சைய ஆரம்பிச்சிருவாய்ங்க....

"காலை ஆறு மணிக்கு சூல மங்களம் சகோதரிகள் வழங்கும் பக்திப் பாட்டு" ன்னு போடுவாய்ங்க. ஏன்னு கேக்குறீங்களா? காலையிலயே மங்கள கரமா ஆரம்பிக்கிறாய்ங்களாமா. சரி நமக்கு  புரியிற மாதிரி "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" ன்னு பாடும்ங்கன்னு பாத்தா எதோ  பிரியாத மாதிரியே பாடிகிட்டு இருக்குங்க... அப்புறம் நாலுபேர கேட்டாதான்  தெரியிது. அதுங்க சமஸ்கிருதத்துல பாடுறாங்களாம். நமக்கு தமிழே டண்டனக்கா... இதுல இந்த கொடுமை வேறயா

இது கூட பரவால்ல கொஞ்சம் சேனல தெரியாம திருப்பிட்டோம் அம்புட்டு தான்.. இந்த விஜய் டிவில மூஞ்சி முழுக்க நாமத்த போட்டுக்கிட்டு ஒருத்தரு வந்து "அதாவது கடவுள் என்ன சொல்லுகிறார் என்றால்..... "ம்பாரு.  யோவ் கடவுள் சொல்றது இருக்கட்டும்யா... இந்த மூஞ்ச பாத்துட்டு காலைல ஆரம்பிச்சா அந்த பண்டிகை வெளங்குறாதுக்கா? இத ஒரு ஒருமணி நேரம் போட்டு அருத்துட்டு அத அப்புடியே லைட்ட உல்டா பண்ணி அடுத்து
பாடல்லருந்து ஆடலுக்கு வந்துருவாய்ங்க... அடுத்த ஒரு மணி நேரம் பரத நாட்டியம். இதுவும் நமக்கு சுத்தமா பிரியாது.


அப்புறம் எட்டு மணியா ஆயிருச்சின்னா எப்பவும் போடுற வணக்கம் தமிழகத்தயே ஒரு சினிமா ஆக்டர கூப்டு மொக்கை போட்டு "சிறப்பு வணக்கம் தமிழகமா" ஆக்கிருவாய்ங்க. லைட்டா அந்த கடலில் போட்டாலும் கட்டுமரமா மெதக்குற டிவிக்கு மாத்துனோம்னா அங்க ஒண்ணு நடக்கும் பாருங்க... போன பண்டிகைக்கு இப்புடிதான் சேனல நா மாத்துனோன்ன்ன எங்கப்பா திண்ணையிலருந்து "என்னப்பா.... கரகரங்குது... டிவி ஸ்பீக்கர்ல எதாவது
ப்ரச்சனையா?" ன்னாரு..."ச்ச... ச்ச... ஸ்பீக்கர்லாம் நல்லா தான் இருக்கு. டிவில அய்யா தமிழ் முழக்கமிட்டுகிட்டு இருக்காரு. அதான் ஸ்பீக்கர்ல அந்த கரகரப்பு" ன்னேன்...
புரிஞ்சிருக்குமே என்ன நிகழ்ச்சின்னு.

இந்த கட்டுமர டிவில ஒரு செம்ம காமெடி என்னன்னா... மத்தவிங்க எல்லாம் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் னு போடுவாக... ஆன இவுக தமிழர் திருநாள்னு போடுவாய்ங்க.. தமிழ் புத்தாண்டுன்னு போடுவய்ங்க... அதோட காமெடி என்னன்னா விநாயகர் சதுர்தின்னு சொல்லமாட்டாய்ங்க விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்ம்பாய்ங்க... அதாவது எப்ப்டின்னா... நாங்க நல்லா கீழ விழுந்து பெரளுவோம்... ஆனா மீசையில மட்டும் எதுவுமே ஓட்டலைங்கங்குற கதை தான்.

 இந்த நேரம் புதுசா ரிலீஸ் ஆவுற படங்களுக்கான நேரம். "புத்தாண்டுக்கு திரைக்கு வரும் படங்கலிருந்து பாடல்கள் பார்வை" ன்னு ஒரு சிறப்பு நிகழ்ச்சி போடுவாய்ங்க. அது ஒண்ணூம் இல்லை... நாலு நாளைக்கு அப்புறம் முழுசா போட்டு அருக்கப்போற பாட்டுங்கள பாதி பாதி போட்டு கட் பண்ணிருவாய்ங்க...  அதாவது மீதி பாட்டு சஸ்பென்ஸாமா... படத்துக்கு பில்ட் அப்பாமா... போங்கடா டேய்...

பத்து மணி ஆயிருச்சின்னா....

"அன்புத் தாய்மார்களே..... அருமை பெரியோர்களே.... இனிய குழந்தைகளே... பழைய பாட்டிகளே" ன்னு பேசிட்டு வந்துருவாரு நம்மாளூ..... ஆதாம் ஏவாள் காலத்துலருது மாறாம இருக்க ஒரு ப்ரோக்ராம்ன சன் டிவில பண்டிகை அன்னிக்கு பத்து மணிக்கு போடுறா பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் தான். ட்ரெயிலர்ல ரெண்டு சூப்பரான காமெடி பிட்டு போடுவாய்ங்க... ஒண்ணு பாப்பையா பேசுனதா இருக்கும். இன்னொன்னு ராஜா பேசுனது... சரி பட்டிமன்றம் பட்டைய கெளப்பும்னு பாத்தா, கடைசில ட்ரெயிலர்ல போட்ட ரெண்டு  காமெடிய தவற வேற எதுவும் நல்லாருக்காது, பட்டிமன்றத்துக்கு தலைப்பும் பாத்தீங்கன்னா "குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா பெண்களா?", "காதல் திருமணமா கலப்பு திருமணமா",  "மகனா, மகளா?" "பெரியோர்களா சிறியோர்களா?" இததவர வேற எதுவும் இருக்காது. இங்க இப்புடின்னா அந்த பக்கம் நம்மாளூ லியோனி "பழைய பாடலா புதிய பாடலா" "கண்ணதாசனா பட்டுக்கோட்டையா" "காதல் பாடல்களா கருத்துள்ள பாடல்களா?" ன்னு சினிமாவுல அடிச்சி நவுத்திகிட்டு இருப்பாரு.

அப்புறம் ஒரு பதினொரு மணி ஆயிருச்சின்னா தான் நமக்கு கொலைவெறிய கெளப்புறமாதிரி ஒரு ப்ரோக்ராம் போடுவாய்ங்க... வேற ஒண்ணும் இல்லை ஒரு எதாவது ஒரு ஹீரோயின பேட்டி எடுப்பாய்ங்க... கருமம் அந்த ஹீரோயினுக்கு வயது 18க்கு கீழ தான் இருக்கும்.  அந்த நிகழ்ச்சிக்கு பேரு வச்சிருப்பாய்ங்க பாருங்க... அந்த ஹீரோயின் நடிச்ச பாட்டோட மொத வரி தான் ப்ரோக்ராமோட பேரு. அதாவது எமி ஜாக்சன  பேட்டி எடுக்கப் போறாய்ங்ன்னா ப்ரொக்ராம் பேரு "வாம்மா துரையம்மா."  அனுஷ்காவ பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா அதுக்கு பேரு " தெய்வத் திருமகள்" காஜல பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா பேரு 'கால் முளைத்த பூவே"... அதப்பாத்தா கால் முளைத்த காட்டெருமை மாதிரி இருக்கும். இருந்தாலும் அந்த பாட்டு வரிய அப்புடியே வச்சாதான் இவிங்களுக்கு ஒரு திருப்தி...

அதவிட கொடுமை அந்த ப்ரோக்ராமோட கடைசிலதான். அந்த 14 வயது ஹீரோயிண்ட "நீங்க உங்க ரசிகர்களுக்கு இந்த பண்டிகையும் என்ன சொல்ல விரும்புறீங்க?"ம்பாய்ங்க... அதுக்கு அந்த புள்ளை " எல்லாரும் எந்த சண்டையும் இல்லாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்பா மகிழ்ச்சியா இந்த பண்டிகய கொண்டாடனும்"ன்னு ஒரு அட்வைஸ் குடுக்கும் பாருங்க... "வக்காளி மொதல்ல நீ போய் எட்டாவது பரிட்சை எழுதி பாஸ் பண்ணு சனியனே... கருத்து சொல்ல வந்துருச்சி" ன்னு நமக்கு கொலைவறியாயிரும். என்னது? ச்ச...ச்ச நா லட்சுமி மேனன  பத்திலாம் சொல்லல.. நீங்க யாரும் கோவப்பட வேணாம்..நா பொதுவாச் ச்சொன்னேன்.

அப்புறம் ஒரு 12 மணிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் 175 வது முறையாக பாட்ஷாவோ முத்துவோ அல்லது படையப்பாவோ போடுவாங்க...

இந்த போஸ்ட் லஞ்ச் செஷன் இருக்கு பாருங்க... இதுதான் இருக்கதுலயே மிக டேஞ்சரஸ்... அது சின்னத்திரை நடிகர்களுக்கான நேரம்... "நாதஸ்வரம் குடும்பத்தினர் கிராம மக்களுடன் கொண்டாடிய பொங்கல்" " மெட்டி ஒலி குடும்பத்தினர் கொண்டாடிய தீபாவளி" ன்னு சீரியல்ல அழுதுகிட்டு இருந்த புள்ளைகல்லாம் கெளம்பி எதாவது ஒரு  ஊருக்குள்ள போய் வெடி வெடிச்சிகிட்டு திரியிவாய்ங்க.. ஏண்டா வார நாளல தான் உங்க தொல்லை தாங்க முடியலன்னா லீவு நாள்லயாது நீங்க கொஞ்சம் லீவு எடுக்கக் கூடாதாய்யா...

சாயங்காலம் ஆறுமணிக்கு "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" "மெகா ஹிட் திரைப்படம்" ன்னு ஆரம்பிச்சா தான் அது பண்டிகை படங்கறதுக்கே ஒரு கெத்து. இப்பல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு ஆரம்பிச்சா நம்ம பயலுக "போங்கடா டேய் நா இத முப்பது தடவ பாத்துட்டேன்" ன்னு ஆஃப் பண்ணிட்டு போயிடுறானுக... எங்க
இவிங்க என்ன்னா படம் வந்து கொறைஞ்சது ஒருவருசம் கழிச்சி தான் போடுறாய்ங்க... நம்ம கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான் ரெண்டாவது வாரத்துலருந்தே போட ஆரம்பிச்சிடுறாளே!!!

படம் முடிஞ்சி ஒரு பத்து மணி ஆயிருச்சின்னா நாம உசாராயிடனும். கங்கை அமரன், புஷ்பவனம் குப்புசாமி, கருணாஸ் இவுகல்லாம், அவுக அவுக குடும்பத்துல ஒரு நாலுபேத்த கூப்டுட்டு  பட்டு வேட்டி சட்டையெல்லாம் கட்டிக்கிட்டு கெளம்பி வந்துருவாய்ங்க..  இத பாத்தோனயே நாம படக்குன்னு டிவிய ஆஃப் பண்ணிட்டு படுத்துடனும். இல்லைன்னா "பட்டிக்காடா பட்டணமா" ன்னு போட்டு நாட்டுப்புற பாட்டையும் சினிமா பாட்டையும் கலந்து விட்டு காத கிழிச்சிருவாய்ங்க.


இவிங்க இப்புடின்னா இந்த விஜய் டிவி இருக்காய்ங்களே.... அவிய்ங்க இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கெல்லாம் ஒண்ணும் பெருசா அலட்டிக்க மாட்டாய்ங்க... எப்பவும் போடுற  நிகழ்ச்சிகள்லயே ஒரு "சிறப்பு"ங்கற வார்த்தைய மட்டும் சேத்துப்பாய்ங்க... "சிறப்பு நீயா நானா" "சிறப்பு சூப்பர் சிங்கர்" "சிறப்பு அது இது எது" அவ்ளோதான். சாதா நீயா நானாவுக்கும் சிறப்பு நீயா நானவுக்கும் என்ன வித்யாசம்னு கேக்குறீங்களா... பெருசா ஒண்ணூம் இல்ல...கோபிநாத் எப்பவும் போடுற அந்த கோட்ட கொஞ்சம்  தொவைச்சி போட்டு வருவாரு... அவ்வளவுதான். படம் போடுறதுக்கும் ஒண்ணும் பெருசா ரிஸ்க் எடுக்க மாட்டானுக... அந்த பண்டிகைக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால எதாவ்து
ஒரு படம் வந்து ஃப்ளாப் ஆயிருக்கும்... அத அப்புடியே போட்டுருவானுக.

இவிங்க எல்லாரும் பரவால்ல... இந்த கட்டுமர டிவில போடுவாயங்க பாருங்க நைட்டு... சிறப்பு "மானாட மயிலாட" ன்னு... ஆத்தாடி... சாதா நிகழ்ச்சில சாதா பேயா வர்ற கலா மாஸ்டரு இன்னும் ரெண்டு இஞ்ச் அதிகமா மேக்கப் போட்டு ஸ்பெஷல் பேயா வரும். அதான் இந்த சிறப்பு மானாட மயிலாட.... இந்த ச்சானல் பக்கம் தெரியாம  திருப்பிட்டா கூட டப்பிங் பட ஸ்டைல்ல " ஓடுங்க அது நம்மள பாத்துருச்சி..." ன்னு தெறிச்சி ஓடிற வேண்டியதுதான்.

இதுல எல்லாத்துலயும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்த சன் மியூசிக் இசையருவில யெல்லாம் host பன்ற புள்ளைங்க எப்பவும் போல ghost  மாதிரி தலைய விரிச்சி போட்டுகிட்டு கிழிஞ்ச பேண்ட்லாம் போடாம சேலை கட்டிகிட்டு பொண்ணுங்க மாதிரி வரும்ங்க...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

பாலா said...

நண்பா இந்த லிஸ்டில் இன்னும் கொஞ்சத்தை சேர்த்துக்கொங்க

அலெக்ஸ் பாண்டியன் பட குழுவினரின் காமெடி பொங்கல் என்ற பெயரில் பட புரமோஷன் செய்து, படத்தின் கதாநாயகியுடன் எல்லோரும் கடலை போடும் நிகழ்ச்சி,

ஏதாவது ஒரு லைவ் கண்சர்ட் அல்லது அவார்ட் பங்க்சனின் மறுஒளிபரப்பு,

வடிவேலுவுடன் ஒரு காமெடி பொங்கல்,

இது குறித்து நானும் எழுதலாம் என்று நினைத்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். அருமை நண்பரே.

Anonymous said...

Same Blood Boss....

Anonymous said...

சூப்பரா சொன்னீங்க பாஸ்.

Karthikeyan said...

//host பன்ற புள்ளைங்க எப்பவும் போல ghost மாதிரி // எப்டீங்க இதெல்லாம்? சூப்பர்.

பட்டுக்கோட்டைல மட்டுமில்ல எல்லா லோக்கல் டிவிலயும் இதே கதைதான். எங்க கரூர்ல பீட்சா படம் 100 தடவைக்கும் மேல போட்டு பிரிண்ட்ட தேச்சிட்டாங்க..

Unknown said...

ஹா ஹா ஹா அருமையா அற்புதம்யா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...