Tuesday, July 8, 2014

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!


Share/Bookmark
காலேஜ் படிக்கும் போது ஒரு மனுஷனுக்கு புடிக்காத ஒரு விஷயம் இருக்கும்னா அது இந்த செமஸ்டர் ரிசல்ட்டு தான்.  ரிசல்ட்டு வர்றது கூட பரவால்லை. ஆனா அது வர்றதுக்கு முன்னால திடீர் திடீர்னு "ரிசல்ட் வந்துருச்சி" "ரிசல்ட்  வந்துருச்சி"ன்னு அப்பப்போ எவனாவது டைம் பாசாகலன்னா கெளப்பி விட்டுட்டு போயிடுவாய்ங்க. அவன் அவனுக்கு ரிசல்ட்டுங்குறத வார்த்தையக் கேட்டாலே பேதி ஆவும். எனக்கெல்லாம் ரிசல்ட் வந்துருச்சின்னு எவனாவது சொன்னா  உடனே ஜூரம் வந்துரும். ஆல் க்ளியர் பண்ணிட்டோம்னு  தெரிஞ்சாதான் உசுறே வரும். அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு 'ஆங்.. ஆங்.. சூனாப்பானா ரெகுலரா போய்ட்டே இரு... உன்ன யாரும் அசைக்க முடியாது"ன்னு நாக்க  துருத்திட்டே அலையிவோம்.

அதுவும் இந்த செமஸ்டருக்கு படிக்கிறது இருக்கே. அது ஒரு தனி கலை. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி  படிப்பாய்ங்க. சில பேரு கையில புத்தகத்த வச்சிகிட்டு வராண்டாவோட இந்த கடைசிலருந்து அந்தக் கடைசிவரைக்கும்  மாத்தி மாத்தி நடப்பாய்ங்க. என்னடா சுகர் வந்தவியிங்க பீச்சுல நடக்குற மாதிரி இவ்வளவு வேகமா நடந்துகிட்டு  இருக்காய்ங்க. இங்க நடந்தத நேரா நடந்தா இந்நேரம் ஊருக்கே பொய்ட்டு வந்துருக்கலாமேன்னு கேட்டா, அவனுக்கு  நடந்தாதான் படிப்பு வருதாம்.
 

இன்னும் சில பேரு ரூம்ல பாட்டு ஓடிகிட்டு இருக்கும். நாளைக்கு பரிட்சைய வச்சிக்கிட்டு  இவியிங்க படிக்காம என்ன பண்ணிட்டு  இருக்காய்ங்கன்னு பாத்தா ஸ்பீக்கருக்கு பக்கத்துலயே சாய்ஞ்சிகிட்டு புத்தகத்த  திருப்பிக்கிட்டு இருப்பான். அதாவது  relaxed ah படிக்கிறாராம். திடீர்னு ஒருத்தன் ரூமுக்குள்ள நுழைஞ்சா எதோ தியான மண்டபத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி அவ்வளவு அமைதியா இருக்கும். நாலு பேரும் ஆளுக்கு ஒரு  மூலையில அமைதியா உக்காந்துருப்பாய்ங்க. நம்ம உள்ள நுழைஞ்சதும் நம்மகிட்ட வாயத்தொறந்து கூட பேசாம தூர்தர்ஷன் நியூஸ் மாதிரி சைகையிலயே பேசி அனுப்பி விட்டுருவாய்ங்க.


எங்க ரூம்ப ரெண்டு பேரு இருந்தாய்ங்க. ஒண்ணு ACP KPB என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் பரத்  குமார். பெரும்பாலும் செமஸ்டர் அன்னிக்கு மொதநாள் தூங்க மாட்டோம். அப்படியே தூங்குனாலும் ஒரு மணி  நேரத்துக்கு மேல தூங்குறதில்லை. ஏன்னா கேக்குறீங்க? அட பீதில தூக்கம் வராதுங்க. ஆனா இவன் என்ன பண்ணுவான் நைட்டு ஒன்பது மணிக்கெல்லாம் நல்லா கட்டில்ல மெத்தையெல்லாம் போட்டு போர்வைய விரிச்சி சின்னக் கவுண்டர்ல செந்தில்  ஆராய்ச்சி பண்ண படுத்துருக்க மாதிரி குப்புற கண்ணத்துல கைய வச்சா மாதிரி படுத்துருவான்.  "டேய் ஏண்டா  இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போற.. அதுக்குள்ள படிச்சி முடிச்சிட்டியா?" ன்னு கேட்டா "யாருடா  தூங்கப்போறா... நா  இனிமே தான் படிக்கப்போறேன்" ம்பான். 

 ஒரு செகண்ட்ல நம்ம நண்பன பத்தி தப்பா  நெனைச்சிட்டோமே.. என்  இனமடா நீ" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு பத்து  நிமிசத்துல ரூமுக்குள்ள  லைட்டா ட்ராக்டர் ஓடுற  சத்தம் கேக்கும். எங்கருந்துடா வருதுன்னு பாத்தா, நம்மாளு வாயப் பொளந்துருவான். டேய்  குடையப்பா அது  எப்புடிடா கொடை புடிச்ச மாதிரியே செத்துருக்கங்குற மாதிரி "அது எப்புடிடா படிக்கிற  போஸுலயே தூங்கிட்ட" ன்னு  எழுப்புனோம் அவ்வளவுதான்.

இவன எழுப்புறதும் அஞ்சலிப் பாப்பாவ எழுப்புறதும் ஒண்ணு. சனியனுங்க எழுந்தே தொலையாது. கொஞ்ச  நேரத்துக்கப்புறம் முழிச்சி பாப்பான். "டேய்.. எழுந்து படிடா' ன்னா "நா எங்கருக்கேன்" ன்னு கேக்குற எஃபெக்ட்ல  சுத்தி சுத்தி ரெண்டு தடவ பாப்பான். இவனுக்குன்னே தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் அலாரம் இருக்கு. இவன் அதுல  அலாரம் செட் பண்ணுவான். ஆனா அது அடிச்சி இவன் வாழ்க்கையிலயே எழுந்ததில்லை. உடனே அத எடுத்து  நைட்டு பன்னண்டு மணிக்கு அலாரம் செட் பண்ணுவான்.

 "டேய் ஏண்டா நைட்டு பன்னண்டு மணிக்கு செட் பண்ற..  அதுக்கு இப்பவே படிச்சிட்டு நைட்டு தூங்கலாம்லன்னா "இல்லைடா இப்போ லைட்டா கண்ண கட்டுது... பன்னன்னு  மணிக்கு எழுந்து படிக்கிறேன் பாரு... "ன்னு அவன் சொல்லும் போது கோயம்பத்தூர் மாப்ளே படத்துல கவுண்டர்  சொல்ற டயலாக் தான் ஞாபகம் வரும். "காலையில ஒன்பது மணிக்கு படுத்து தூங்குற நாயி சாய்ங்காலம் 5 மணிக்கு  எழுந்து போய் என்ன நாட்ட காப்பாத்த போறியா...". எப்புடியோ தொலைன்னு விட்டுருவோம்.

அப்டியே கட் பண்ணி ஓப்பன் பண்ணா காலையில 6 மணிக்கு "அலமேலு காப்பி கொண்டுவா"ன்னு சொல்லிட்டே சாவுகாசமா எழுந்திரிப்பான்.  எழுந்து அவன் அலாரம் செட் பண்ண அந்த டைம் பீஸுல மணியப்பாத்து ஷாக் ஆயி எங்கள்ப்பாத்து "டேய் எழுப்பி  விட்டுருக்கலாம்ல" ன்னு பத்தட்டத்தோட கேப்பான். உடனே நாங்க கழட்டி கெடக்குற செருப்ப பாப்போம். பதில்  சொல்லாம பக்கெட்ட எடுத்துகிட்டு குளிக்க போயிருவான்.

இதே மாதிரி பக்கத்து ரூம் இன்னொருத்தன் இருக்கான். "தோம் தாத்தா"என எல்லோராலும் அன்போடு அழைக்கப்  படும் நரேந்திரன். இவன் படிக்கிறது இன்னொரு டைப். நல்லா சம்மனக்கால் போட்டு புத்தகத்த  விரிச்சி முன்னால வச்சி புத்தர் போஸுல உக்கார்ந்துருவான். கொஞ்சம் கொஞ்சமா தியான நிலைய அடைஞ்சி மிஞ்சி மிஞ்சி  போனா கால் மணி நேரத்துல தூக்க நிலைய அடைஞ்சிருவான். "டேய்.. டேய் எழுந்திரிடா"ன்னு நாலு தடவ எழுப்புனதுக்கப்புறம் தான் முழிப்பான். தூங்குனது தெரியக் கூடாதுங்குறதுக்காக ஒரு சமாளிப்பு சமாளிப்பான் பாருங்க..

"நா தூங்கலாடா இவனே... ரிவிஷன் பண்ணிகிட்டு இருந்தேன்"... "சரிங்க ப்ரொப்பசர்.. நீங்க அடுத்த தடவ ரிவிசன்  பண்ணும்போது நாங்க எழுப்புறோமா இல்லையான்னு மட்டும் பாருங்க.. பக்கி மட்டை ஆயிருச்சேன்னு எழுப்பி விட்டா  பேச்சப் பாரு"

செமஸ்டர் வந்தா நாங்க ஹார்ட் ஒர்க் பண்றோமோ இல்லியோ எங்க மெஸ்ல இருக்க அண்ணனுங்க ரொம்ப கஷ்டப்  படுவாங்க. நைட்டு ஒன்பது மணி சாப்பாடு மட்டும் இல்லாம நைட்டு பன்னண்டு மணிக்கு ஒரு ஸ்பெஷல் டீ வேற..  அட பசங்க கண்ணு முழிச்சி படிக்கிறோமல்லோ... அது மட்டும் இல்லாம நானும் என் ரூம்மேட் மொட்டையும்  "செகண்ட் ரவுண்ட்"ன்னு ஒண்ணு பாஃலோ பண்ணுவோம். நைட்டுல இந்த பரோட்டா, சப்பாத்தி, தயிர் சாதமெல்லாம்  போடும் போது சாப்புட்டு "ண்ணே.. ரூம் மேட் வெளில போயிருக்காண்ணே.. வர டைம் ஆகும்னு சாப்பாடு வாங்கி  வைக்க சொன்னான்" ன்னு சொல்லிட்டு இன்னொரு ரவுண்டு வங்கி வச்சிருவோம். அத திரும்ப நைட்டு 1 மணிக்கு  பசிக்கும் போது மேஞ்சிருவோம்.

மறுநாள் காலையில எக்ஸாம். அன்னிக்கு மெஸ்ல புளி சாதம் தயிர் சாதம் காம்பினேஷன்..  நைட்டு 12.30க்கு  செகண்ட் ரவுண்டு ஓடிக்கிட்டு இருந்துச்சி. திடீர்னு வராண்டாவுல "உவ்வே...... உவ்வே" ன்னு ஒரு சத்தம்.  congratulations... யாரோ அப்பாவாயிட்டானுக.. வா போய் பாக்கலாம்னு போய் பாத்தா... திலீப் (பெயர்  மாற்றபடவில்லை) வராண்டா wall ah சாஞ்சிருந்தான்... இவன் ஏண்டா இந்நேரத்துக்கு சுவத்துக்கு முட்டு குடுத்துட்டு  நிக்கிறான்னு  பக்கத்துல போய் பாத்தா அடி வாங்குன கவுண்டமனி மாதிரி "ஆஹ்... ஆஹ்... ஆஹ்.." ன்னு ஒரே புலம்பல்.  என்னடா ஆச்சின்னு கேட்டா  "டேய் I think something is wrong in the puli saatham daa" ன்னான். 


டேய் அவன் அவன் ரெண்டாவது ரவுண்ட போட்டு தூர் வாரிகிட்டு இருக்காய்ங்க... இப்ப போய் சம்திங் ஈஸ் ராங் இன் த  புளி சாதமான்னு நெனைச்சிகிட்டு "ஆமா மச்சி.. நாம ஒழுங்கா படிக்கக்கூடாதுன்னு புளி சாதத்துல எதோ கலந்துட்டாய்ங்க போலருக்கு. நாங்க கூட நைட்டு சாப்டவே இல்லை" ன்னு சொல்லி அவன கைத்தாங்கலா கொண்டு  போய் ரூமுல படுக்க வச்சோம்.


 First year படிக்கும் போது "அய்யய்யோ இந்த சைக்கிள் டெஸ்டுல  பாஸாகலன்னா பெரிய சாமி குத்தம்  போலருக்கே"ன்னு விழுந்து விழுந்து படிச்சிருக்கோம். ஆனா அப்டியே கொஞ்ச நாள் ஆக ஆக மேட்ச விடு straight ah ஃபைனல்ல பாத்துக்கலாம்னு சைக்கிள் டெஸ்ட்ட மதிக்கிறதே இல்லை. "நீங்க சைக்கிள் டெஸ்ட்ல என்ன  மார்க் எடுக்குறீங்களோ அதத் தான் உங்களுக்கு இண்டர்னல் மார்க்கா போடுவோம்... ஒழுங்கா எழுதுங்க" ன்னு அடிக்கடி சில கொலை மிரட்டல்களும் வரும். ஆனா "நீங்க வேணா ஊருக்கே மாஸா இருக்கலாம். ஆனா சாவுக்கு  பயப்படாத எங்க முன்னால இதெல்லாம் வெறும் தூசுடா"ன்னு அத கண்டுக்குறதே இல்லை.

சோம்பேறித் தனத்தோட உச்ச கட்டத்தை நாங்க இந்த காலேஜ்ல தான் அனுபவிச்சிருக்கோம். எங்களுக்கு  தங்கமனசுக்கார professor சில பேரு இருந்தாங்க. நாளைக்கு சைக்கிள் டெஸ்ட்ல வரப்போற ரெண்டு 16 மார்க் கேள்விகள மொத நாளே குடுத்துருவாங்க. அத நாங்க லைட்டா படிச்சும் தொலைச்சிடுவோம். ஆனா அதுல பாருங்க  அத எழுதத்தான் கடுப்பா இருக்கும். அட யாருப்பா இதெல்லாம் உக்காந்து கழுதைய எழுதுறதுன்னு ஒரே ஒரு  கேள்விய மட்டும் எழுதிட்டு அடுத்த கேள்விய எழுதாம எவண்டா மொதல்ல பேப்பர குடுப்பான்னு பாத்துட்டே இருந்து எவனாவது ஒருத்தன் குடுத்துட்டா போதும் அடுத்த அஞ்சி நிமிஷத்துல அம்புட்டு பயலுகளும் முருகப்பா ஹாலவிட்டு  வெளிய போயிருவாய்ங்க.

மூணாவது செமஸ்டர்ன்னு நெனைக்கிறேன். Fluid mechanics ன்னு ஒரு பேப்பரு. அதுக்கு ஒரு professor வருவாரு  பாருங்க. பாத்தாலே கலாய்ங்கனும்னு தோணுற அளவு கார்டூன் பொம்மை மாதிரியே இருப்பாரு. அவர் பேரு சரவணன்னு நா சொல்ல மாட்டேன். காலேஜ்ல எனக்கு உண்மையிலயே ஒரு லட்சியம் இருந்துச்சி. இந்த சைக்கிள்  டெஸ்ட்ல எதுலயாது ஒண்ணுல ஜீரோ மார்க் எடுக்கனும்னு. இப்புடி ஒரு லட்சியமா? இந்த லட்சியத்துக்கு நீ எதுவும் பண்ணாம இருந்தாலே நிறைவேறிடுமேன்னு தானே  கேக்குறீங்க. நடக்கல. இந்த கார்ட்டூன் பொம்மை நடக்க விடல.  ஸ்கூல்ல கம்மி மார்க் எடுத்தா வீட்ட சுத்தி சுத்தி  ஓடவிட்டு அடிப்பாய்ங்க. மார்க்க மறைச்சிடலாம்னு பாத்தா ரேங்க்  கார்டுலயெல்லாம் கையெழுத்து வேற வாங்கிட்டு  வரச் சொல்லுவாய்ங்க.

ஆனா இங்க சைக்கிள் டெஸ்ட்ல என்ன  மார்க் எடுத்தாலும் எந்தப் ப்ரச்சனையும் இல்லை. எப்டியாது ஒரு தடவ zero மார்க் எடுத்துடம்னு ஒரு தடவ ட்ரை  பண்ணேன். வெறும் பேப்பர குடுக்கக் கூடாதேன்னு  ஒரே ஒரு கேள்விய மட்டும் மொதப்பக்கம் எழுதி அந்தக்  கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ரெண்டு வரியையும் எழுதி  மொத பக்கத்த புல்லப் பண்ணி குடுத்துட்டு பொய்ட்டேன்.  இந்த தடவ zero கன்ஃபார்முடுங்கன்னு நெனைச்சிட்டு இருக்கும் போதுதான் நம்ம கார்ட்டூன் அவரு வேலையைக்
காட்டுனாரு.

அந்த மொதப்பக்கத்தையும் மதிச்சி அதுக்கு ரெண்டு மார்க் போட்டு குடுத்துவிட்டுருந்தாரு. அத  பாத்தோன மனசுக்குள்ள நெனைச்சிகிட்டேன்.. "ரெண்டு மார்க் போட்டுட்டேன்னு ரொம்ப பீத்திக்காதீங்க.. உங்கள  வாத்தியார் வேலைக்கு தப்பா எடுத்துருக்காய்ங்க. அடுத்த தடவ வெறும் பேப்பர குடுக்குறேன் எப்புடி மார்க்  போடுறீங்கன்னு பாக்குறேன்"

அவர ஓட்டுன பாவமோ என்னன்னு தெரியல. எங்களுக்கு fluid mechanics மட்டும் செமஸ்டர்ல கஷ்டமான பேப்பரா  வந்துருச்சி. என்னடா எதுவுமே பாத்த மாதிரி இல்லை... காட்டுப்பூச்சி காட்டுடா உன் வேலையன்னு "அசோகர் மரங்களை நட்டார்... அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் வரிசையாக  மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டார்"ன்னு ஒரே மேட்டர நீட்டி மொழக்கி  ஒரு நாப்பது பக்கத்துக்கு எழுதி வச்சிட்டு வந்துட்டேன். இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பீதி. செமஸ்டர்ல fluid  mechanics புட்டுக்கிச்சின்னா? ன்னு பயத்தோடயே வெளிய வரும்போது எதிர்ல வந்தாரு கார்ட்டூன்.

என்னையும் என் ஃப்ரண்டையும் பாத்து ஒரு கேவலமான சிரிப்பு சிரிச்சிட்டு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. "ஹைய்யோ  ஹைய்யோ...இவ்வளவு கஷ்டமான பேப்பர நா பாத்தே இல்லை.. நீங்கல்லாம் இந்தப் பேப்பர எப்புடித்தான் பாஸ் பண்ணப்போறீங்களோ?" ன்னு திரும்பவும் சிரிச்சிட்டு பொய்ட்டாரு. என் வாழ்க்கையில பட்ட முக்கியமான அவமானங்கள்ள இதுவும் ஒண்ணு. "ஏன் கார்ட்டூன் சார்...  நீங்கல்லாம் பாஸ் பண்ணி எங்களுக்கு சொல்லிக்குடுக்குற  அளவு வந்துருக்கீங்க.. நாங்க இது பாஸ் பண்ணோ மாட்டோமாசார்" ன்னு கடுப்புல ரூமுக்கு வந்தோம். இருந்தாலும் கார்ட்டூன் சொன்ன மாதிரி ஆயிடுச்சின்னா என்ன  பண்றது... ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங்.. ரிசல்ட்டும் வந்துருச்சி...

என்னோட ரிசல்ட்ட எப்பவுமே நா பாக்க போக  மாட்டேன். நண்பர் பரத்குமார் தான் பாத்து சொல்லுவாரு.   ஆல்கிளியர்னு சொன்னப்புறம் நா கேட்ட மொத கேள்வி fluid mechanics la எவ்வளவுடா?   51 மார்க் மச்சி internal  13 external 38... ஜஸ்ட் பாஸூ... ஆண்டவா பெருத்த அவமானத்துலருந்து காப்பாத்திட்டன்னு அப்பத்தான் நிம்மதியா  இருந்துச்சி. யாரோ பயபுள்ளை பொழைச்சி போகட்டும்னு கரெக்டா 38 மார்க்க போட்டு விட்டு நம்ம உசுர காப்பத்திருக்காங்க. இருந்தாலும் அந்த பேப்பர கார்ட்டூனே  திருத்திருப்பாரோன்னு இன்னொரு சந்தேகமும் இன்னும்  இருந்துகிட்டே இருக்கு. எதுக்கும் சொல்லி வப்போம் "வாழ்க கார்ட்டூன்"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

pandian said...

Super Da machi

திண்டுக்கல் தனபாலன் said...

அசோகர் மட்டும் இல்லையென்றால் நம்ம பாடு கஷ்டம் தான்... ஹா... ஹா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...