விஜய் படம் ஒண்ணு
ரிலீஸ் ஆகும்போது அத அஜித் ரசிகர்கள் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறதும், அஜித் படம் ரிலீஸ்
ஆகும்போது அத விஜய் ரசிகர்கள் கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விடுறதும் தொன்றுதொட்டு
நடந்து வர்ற விஷயம் தான். ஆனா முன்னடியெல்லாம் படம் நல்லா இல்லைன்னா மட்டும் கிண்டல்
பண்ணவய்ங்க. ஆனா இப்போ ஒரு 30 செகண்டுக்கு டீசர் வந்துச்சின்னாலே அத ஃப்ரேம் பை ஃப்ரேம்
என்னென்ன வடிவேலு, கவுண்டமணி வசங்களை வச்சி ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டுறாய்ங்க. இது
ரொம்ப சின்னப்புள்ளை தனமாத்தான் தெரியிது. அப்படி சும்மா கிண்டல் பண்ணனும்னு பண்றவங்களுக்கு
சில நல்ல படங்களை ரசிக்கிற மனநிலையே போயிடும். அதுமட்டும் இல்லாம ஒரு நல்ல படத்துக்கு
உண்டான அங்கீராம், சில படங்களுக்கு முழுமையா கிடைக்காமலேயே போயிடும். இது அவ்வளவு சிறப்பான
ஒரு சைன் இல்ல. சரி அது எப்படியோ போவட்டும்.
ஆன்னா ஊன்னா அஜித்
விஜய்ன்னு அடிச்சிக்கிறானுக. ஆனா சூர்யா படம்
ரிலீஸ் ஆகும்போது அவிங்க ரெண்டு பேரும் ஒண்ணுகூடி அவன மரண ஓட்டு ஓட்ட ஆரம்பிச்சிடுறாய்ங்க.
உலக வரலாற்றுலயே அதிக அளவு கலாய்க்கப்பட்ட
படம்னா அது அது நம்ம அஞ்சான் தான். சூர்யாவும்,
லிங்குவும் கிட்டத்தட்ட வாழ்க்கையோட ரொம்ப மோசமான நாட்களை போனவருஷம் பாத்துருப்பாங்க.
அதுலருந்து மீண்டு, சூர்யா ஒரு சூப்பர் படத்தோட திரும்பி வந்துருக்காருன்னு தான் சொல்லனும்.
வாங்க மாசு என்கிற மாசிலாமணிய லைட்டா ஓட்டுவோம். அட அந்த ”ஓட்டுவோம்” இல்லீங்க. படம்
எப்டின்னு கொஞ்சம் ஓட்டிப்பாப்போம். தொடர்ந்து படிச்சா, படம் பாக்குறவங்களுக்கு கொஞ்சம்
சுவாரஸ்யம் குறைய வாய்ப்பு இருக்கதால, படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க அப்டியே ஸ்கிப்
பண்ணி கடைசி பாராவுக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மனோஜ் நைட் ஷாமலனோட
Sixth Sense ங்குற படம் பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க. அந்தப் படத்துல ஒரு சின்னப் பையன் இருப்பான். ரொம்ப
பயந்த சுபாவம். எதப்பாத்தாலும் பயந்து ஓடுவான். யார் கூடவும் அதிகமா பேச மாட்டான்.
அவன்கூட ஸ்கூல்ல படிக்கிற பசங்க அவன பைத்தியம்னு தான் சொல்லுவாங்க. அந்தப் பையன் அவனுக்கு
என்ன ப்ரச்சனைங்குறத அவங்க அம்மாகிட்ட கூட சொல்லிருக்க மாட்டான். அப்போ அவனுக்கு ட்ரீட்மெண்ட்
குடுக்குற டாக்டரா ப்ரூஸ் வில்ஸ் வருவாரு.
அந்தப் பையன் கூட
கொஞ்சம் கொஞ்சமா பழகி அவனோட கொஞ்சம் க்ளோஸாகி அவனுக்கு என்னப் ப்ரச்சனைன்னு கேப்பாரு.
அப்பதான் அவன் சொல்லுவான் “எனக்கு செத்துப் போனவங்கல்லாம் தெரியிறாங்க” ன்னு. ஸாக்
ஆயிப் போற ப்ரூஸ்வில்ஸ் “சரி அதுங்க உன் கண்ணுக்கு தெரியிதுன்னா அதுங்க உன்கிட்ட எதோ
எதிர் பாக்குதுன்னு அர்த்தம். அடுத்த தடவ பயப்படாம பேசு” ம்பாரு. அதுக்கப்புறம் பேயப்பாத்தா
தைரியமா பேசிட்டு இருப்பான். ஒவ்வொரு பேயும் ஒரு ஒரு உதவி கேட்டுத்தான் அந்தப் பையன்கிட்ட
வரும். எல்லாத்தையும் செஞ்ச உடனே எல்லா பேய்களும் அப்புறம் இவனுக்கு ஃப்ரண்ட்ஸ் ஆயிடும்.
கடைசில அம்மாகிட்ட
சொல்லலாம்னு முடிவு பண்ணி, அம்மாவும் அந்தப் பையனும் கார்ல போயிட்டு இருப்பாங்க. அரை
கிலோ மீட்டர் நீள ட்ராஃபிக் ஜாம்ல கடைசில நிக்கும் இவங்க கார். என்னன்னு பாத்தா, முன்னால
ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கும். பையன் அப்பதான் அம்மகிட்ட சொல்லுவான். அம்மா நம்ம
முடியாம அழுகும். அப்போ அந்தப் பையன், “அம்மா முன்னால கார் ஆக்ஸிடெண்ட் ஆச்சுல்ல..
அதுல இருந்த பொண்ணு செத்துருச்சி” ம்பான். உடனே அம்மா “அது எப்டி உனக்கு தெரியும்”ன்னு
கேக்க, “அந்தப் பொண்ணு இப்ப நம்ம காருக்கு வெளிலதான் நின்னுகிட்டு இருக்கு” ன்ன உடனே
அம்மாவும் மெர்சலாயிருவாங்க. அப்புறம் இன்னொரு ட்விஸ்டயும் வச்சி படத்த முடிப்பாங்க.
ஷாமலனுக்கு பெரிய பேர் வாங்கிக் குடுத்தது அந்தப்படம்.
அய்யய்யோ..
இது
மாசு விமர்சனம்ல. மறந்துட்டு சிக்ஸ்த் சென்ஸ ரொம்ப நேரம் ஓட்டிட்டேனே… சரி விடுங்க..
ஒண்ணும் இல்லை. மேல சொன்ன Sixth Sense கதைய, நம்மூர் மண் வாசனை கொழம்பு வாசனைக்கு ஏத்தா மாதிரி மசாலாவ அங்க இங்க
சேத்து, ரெண்டு மூணு வில்லன்கள அள்ளி உள்ளபோட்டு ரெடி பண்ணா அது தான் மாசு என்கிற மாசிலாமணி.
என்னது சூர்யா என்ன ரோல் பண்ணிருக்காரா? அட Sixth Sense ல உள்ள அந்தக் கொழந்தையே சூர்யா
தான்பா.
முதல் கால்மணி
நேரம் பாக்கும் போது பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு… ஃபைட்டுன்னா ஃபைட்டேவா பாட்டு
பாட்டுன்னு அஞ்சானோட அடுத்த பார்ட்டு போலன்னு தான் தோணுச்சி. ஆனா கொஞ்ச நேரத்துலயே
படம் வேற ட்ராக்ல மாறி, செம ஜாலியா போக ஆரம்பிக்கிது. கடைசி வரைக்குமே அத அப்டியே மெய்ண்டெய்ண்
பன்னி முடிச்சிருக்காங்க.
இந்தப் படத்துல
சூர்யாவுக்கு ஜோடியா ப்ரேம்ஜி நடிச்சிருக்காரு. என்ன ஹோமோ பத்தின கதையோன்னு வெறியாயிடாதீங்க.
. படம் முழுக்க சூர்யா இருக்க எல்லா சீன்லயும் இவனும் இருக்கான். அதான் அப்டிச் சொன்னேன்.
வழக்கமா கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்ற ப்ரேம்ஜி இந்தப் படத்துல அப்படி எதுவும் பண்ணாம
இருக்கதே படத்துக்கு பெரிய ப்ளஸ். அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் ப்ரேம்ஜ பண்ணதுலயே
இது தான் பெஸ்ட் ரோல்.
சூர்யா ஆளு செமையா
இருக்காரு. அஞ்சான்ல இருந்த முள்ளம்பண்றித் தலையெல்லாம் நல்லா படியவச்சி, பாக்குறதுக்கு
இதுலதான் மனுசன் மாதிரி இருக்காரு. அதுமட்டும் இல்லாம ரெண்டாது கெட்டப்புல ஆளு செம்ம
ஸ்மார்ட்டா இருக்காரு. நடிப்ப பத்தியெல்லாம் சொல்லவே தேவையில்லை. நயன்தாரா… இருக்காங்க. அவ்வளவு தான். ஹீரோயின் கணக்குக்காக.
ப்ரனிதா செம்ம அழகு.
வெங்கிக்கு ஒவ்வொரு
படத்துலயும் எதாவது பழைய ஹீரோக்கள கொண்டு வந்து இறக்கிவிட்டு டம்மியாக்குறதே வேலையாப்போச்சி.
ஜெயராம், அர்ஜுன் வரிசையில இப்ப பார்த்திபன். ரொம்பப் பெரிய ரோலெல்லம் இல்லை. ஆனா அங்கங்க
அவர் ஸ்டைல் வசனங்கள் சிலதுல அசத்துறாரு. ஒரு சீன்ல ஒரு ரவுடிய கட்டி வச்சி அடிக்கும்போது
சொல்வாரு “ஏண்டா செந்திலே (இன்னொரு ரவுடி) என்னை நம்பி வந்து பணம் குடுத்துட்டான்.
நீ என்னா அவனவிட பெரிய ஆளா? கவுண்டமணியா நீ?” ன்னு அசால்ட்டா சொல்லுவாரு. ரொம்ப நேரம்
நினைச்சி நினைச்சி சிரிச்சேன். அதவிட கடைசில சண்டை நடக்கும்போது கருணாஸ் இவரப்பாத்து
“அய்யோ பாவம். அவரு ஹீரோங்குறத அவரே மறந்துட்டாரு”ன்னு நக்கலடிக்கிறது வெங்கி பஞ்ச்.
ஜெய் ஒரு சீன் வந்தாலும் சூப்பர். கருணாஸும் இருக்காரு. அவ்வளவு தான். ஸ்ரீமன் வழக்கம்போல
கலக்கல்.
வெங்கட் ப்ரபு
சென்னை 28 ல எதோ லக்குல க்ளிக் ஆயிரிச்சின்னு நினைச்சோம். அடுத்து சரோஜால அசத்துனாரு.
கோவால லைட்டா மட்டையானாலும், அஜித்தோட பெஸ்டான மங்காத்தாவ குடுத்தாரு. கார்த்திக்கு
ஒரு பிரியாணிய கிண்டிட்டு இப்போ சூர்யாவுக்கு கை குடுத்துருக்காரு. நிறைய இடத்துல சின்ன
சின்ன நக்கல கமெண்ட்ஸ்ல வெங்கி தனியா தெறியிறாரு. ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில சூர்யா
மாட்டிட்டு கஷ்டப்படும்போது ப்ரேம்ஜி exhaust fan க்கு உள்ளயும் வெளியயும் பூந்து பூந்து
விளையாடி “மாஸூ மாஸூ நீயும் வாயேன்” ங்குறதெல்லாம் அசல் வெங்கி பார்முலா காமெடி. யுவன் பாட்டெல்லாம் செமயா போட்டுருக்காரு. அதுவும் பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி பாட்டுதான் இந்த ஆல்பத்துலயே என் ஃபேவரிட். BGM பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை.
வில்லன்கள் குரூப்ப
மட்டும் வழக்கமான தமிழ்சினிமா மூணு வில்லன் கான்செப்ட்லருந்து கொஞ்சம் வேற மாதிரி வச்சிருக்கலாம்.
அதுவும் ஒரு போலீஸ் ஒரு அரசியல்வாதி, ஒரு வக்கீல்னு ஓவ்வொரு ஃபீல்டுல வில்லன வக்கிற
காம்பினேஷன எப்ப மாத்தப்போறாய்ங்கன்னு தெரியல. சமுத்திரக்கனி இந்த மாதிரி ரஃப் வில்லன்
ரோலுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல. சுப்ரமணியபுரம் மாதிரி சைலண்ட் வில்லன்ரோல் தான் நம்மாளுக்கு
செட் ஆகும். வரிசையா ஜெயப்ப்ரகாஷ எல்லா படங்கள்லயும்
டம்மி ஆக்கிக்க்ட்டே வர்றாய்ங்க..
படம் பாத்த பெரும்பாலான
நண்பர்கள் படம் ரொம்ப ஆவரேஜ்ன்னும், ரொம்ப மொக்கைன்னும் தான் சொல்றாங்க. ஆனா என்னப்
பொறுத்த அளவு படம் நல்லாவே இருக்கு. கொஞ்சம் கூட போரடிக்கல, ஜாலியாவும் போகுது. நிச்சயம்
ஒரு நல்ல மசாலா படம் பாத்த ஃபீல் குடுக்கும்.
1 comment:
I didn't like this movie as u liked, anyway hope u enjoyed well.
Ghost town + hello ghost + The frighteners + Konjam tamil movie formula = Massu... (Intha movie title lam vera review la pathathu :) )....
Post a Comment