விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாகஇருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்குவரவேண்டும் என்றோ, தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லை. காரணம் நம்மூர்அரசியல்வாதிகளின் அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான். அரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதேஇருக்கக்கூடாது. சார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக்கூடாது. எந்தப்பக்கம் புறண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும். எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் எனஎண்ணவேண்டும். பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும். இன்னும் பலவிஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இப்போதும் கூட.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுதுஅரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற ஆசையால் அல்ல. கடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும், அவர்களுக்குமுட்டுக்கொடுக்கும் அள்ளு சில்லுகளுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச நாள்நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காகத்தான்.
ஒருவனுக்கு ஏற்படும் பயத்தை, பய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. சிலர் கோபமாகவும்,சிலர் அழுகையாகவும், சிலர் ஏளமாகவும் வெளிப்படுத்துவர். அப்படி ஒன்றுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. ரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிற ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ”ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது... அப்டியே விட்டுறனும்” என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ?
மற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை.நாற்பதைம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லை. கட்சி பற்றிப் பேசவில்லை.எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லை. அவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒருநிமிடம். அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல்நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.
தலைவா.. நீ ஒரு நிமிடம் பேசிவிட்டு, பலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச்சென்றுவிட்டாய். பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்குஅரைமணி நேர அறிக்கை விடுகிறார்.
தலைவா.. நீ அரசியலுக்கு வா… தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லை. உனக்கு அரசியல்தெரியாமல் தோற்றுப்போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம். இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம்உள்ளவர்களையே பல தேர்தல்களில் முட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. பலஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்கவிடாதவர்கள் நம் மக்கள். ”ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்” என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல.
உன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும். உன் துறையில் என்றுமேநீதான் ராஜா.. உன் துறையில் நீ சாதிக்காத்து இன்னும் என்ன இருக்கிறது? ”தமிழ்” என்ற ஒன்றைவைத்துக்கொண்டு, ஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்பிறப்பால் வேறு மாநிலத்தோனாக இருந்தாலும், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ.ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீ. மலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீ. உன்துறையில் நீ சாதித்ததைப் போல், அரசியலில் இங்கு எவனும் சாதிக்கவில்லை.
உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும், மகா தைரியசாலிகள்தான்உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையை கூடவே அழைத்துச்செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கோளி என்கிறார்கள்.
உனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை.
மரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தை தான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள். நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாதோ என்னவோ?
அரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உன் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை.
நிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில் இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையை காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும்.
எதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அப்படியானால் நீ வருகிறாய் என்றால் அவர்களின் புலம்பல் எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.
தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா…. நீநடிகனாக இருக்கும்போதே “என்ன செய்தாய் என்ன செய்தாய்” என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள்.நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப்போகிறார்கள்..!!!
நீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை!!!
4 comments:
100% உண்மை....:-)
வந்தாதான் பிரச்சினை இல்லியே... இப்ப கிட்னி சட்னியாகி போன காலத்துல என்னதான் ஆகப் போகுது
Super bro
ஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.
https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil&hl=en
Post a Comment