Tuesday, May 9, 2017

பாகுபலி காட்டிய வழி!!!


Share/Bookmark
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திரையரங்கை நோக்கி இழுத்திருக்கிறது. ஒரு பக்கம் படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளே திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் கும்பல். இன்னொரு பக்கம் தியேட்டரில் டிக்கெட் விலை ஏற்றப்பட்டுவிட்டது என்ற சாக்கைச் சொல்லி, தியேட்டர் பக்கமே செல்லாமல் தரவிரக்கிப் பார்க்கும் பழக்கமுடைய இன்னொரு கும்பல். இன்னொரு புறம்  ஆயிரம் லாஜிக் நொட்டைகள் கூறிய உலக சினிமா விமர்சகர்கள் இவர்கள் அனைவரின் முகத்திலும் கரியைப் பூசி, ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி 2 பெற்றிருக்கிறது.

பொதுவாக எந்த ஒரு வியாபாரத்திலும் சந்தை மதிப்பு (Market Value) என்ற ஒரு கணக்கீடு உண்டு. நாம் ஒரு பொருளை தயாரித்து விற்கிறோம் என்றால், அதை அதிகபட்சம் எத்தனை பேருக்கு விற்க முடியும் என்பதைக் கணக்கிடுவதே சந்தை மதிப்பு. 

உதாரணமாக ஒரு டிடர்ஜண்ட் சோப்பை நீங்கள் தயாரிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த உலகத்தில் எந்தெந்த ஊர்களிலெல்லாம் டிடர்ஜண்ட் சோப்பை மக்கள் உபயோகிக்கிறார்களோ அத்தனையும் சேர்த்தால் கிடைப்பதுதான் உங்கள் சந்தை மதிப்பு. உங்களால் அதிகபட்சமாக அத்தனை பேருக்கு உங்கள் டிடர்ஜண்ட் சோப்பை விற்க முடியும். உதாரணமாக உலகத்தில் 50 கோடி பேர் டிடர்ஜண்ட் சோப்பை உயபோகிக்கிறார்கள் என்றால் சந்தை மதிப்பு 50 கோடி.  50 கோடி சந்தை உள்ள இடத்தில் உங்கள் டிடர்ஜண்ட் சோப் வெறும் 5 கோடிதான் விற்பனை ஆகின்றது என்றால் மீதமுள்ள 45 கோடி பேர் வேறு எதோ ஒரு டிடர்ஜண்ட் சோப்பை உபயோகிக்கின்றனர் என்று அர்த்தம். நீங்கள் இன்னும் விளம்பரப்படுத்தியோ, தரத்தை உயர்த்தியோ அந்த வாடிக்கையாளர்களை அணுகினால் அந்த 45 கோடி பேரயையும் உங்களது வாடிக்கையாளர்களாக்க முடியும். 

இதுதான் சந்தை மதிப்பைப் பற்றிய சிறிய விளக்கம். ஆனால் எந்த ஒரு நிறுவனமும் அவர்களின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் கூட விற்பனை செய்வதில்லை என்பது வேறு விஷயம்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நமது தமிழ் சினிமாவின் சந்தை மதிப்பு என்ன? அதிகபட்சம் எவ்வளவு ஈட்ட முடியும்? ஒரு தோராயக் கணக்கீடு. உதாரணமாக இன்றைய தமிழ்நாட்டின் மக்கள்த்தொகை ஏறத்தாழ 8 கோடி.  இதில் 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களும், 80 வயதிற்கு மேல் உள்ளவர்களும் ஒரு 1 கோடி என வைத்துக்கொண்டால் மீதம் 7 கோடி பேர். முதல்நாள், பத்தாவது நாள், இருபதாவது நாள் என டிக்கெட் விலை வேறுபட்டுக் கொண்டிருப்பதால் சராசரியாக ஒரு டிக்கெட்டின் விலை 50 ரூபாய் எனக் கொண்டால், தமிழகத்தில் மட்டும் தமிழ் சினிமாவின் சந்தை மதிப்பு   350 கோடி.

ஒரு தமிழ்த்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக இன்றைய சூழலில் 350 கோடி வரை வசூலிக்க முடியும். இரண்டு மூன்று முறை படம் பார்ப்பவர்களையும் கணக்கில் கொண்டால் இது இன்னும் அதிகமாகும் 

ஆரம்ப காலத்தில் சினிமா அந்தந்த மொழிக்கான குறுகிய சந்தைக்குள் இயங்கிக் கொண்டிருக்க, பின்னர் ஒரு மொழியில் எடுத்த படங்களை வேற்று மொழிக்காக மொழிமாற்றம் செய்வது (dubbing), பன்மொழிப் படங்களை ஒரே நேரத்தில் இயக்குவது என சந்தையை விரிவுபடுத்திக் கொண்டன. 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திரைப்படங்கள் வெளிவந்து தமிழ்சினிமாவின் சந்தை மதிப்பு என்ன,  எவ்வளவு சாத்தியம் என்பதைக் காட்டியிருக்கின்றன. பெரும்பாலும் இந்த மதிப்பை காட்டுவது ரஜினிகாந்தின் படங்கள் தான். தமிழ் அல்லது இந்தியப் படங்களுக்கு சந்தையே இல்லாத ஜப்பானில் கூட புது சந்தையை உருவாக்கியது அவரின் படங்கள்.

முதலில் ஒரு திரைப்படம் 25-30 கோடி வசூலிப்பதே மிகப்பெரிய விஷயமாக இருந்த சமயத்தில் முதலில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது சந்திரமுகி. அதேபோல் முதல் நூறு கோடி, முதல் 200 கோடி என தமிழ்ப் படங்களின் சந்தை மதிப்பை ஒவ்வொரு ரஜினியின் படங்களும் காட்டிக்கொடுத்தன.
ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. சாத்தியம் என நிரூபித்துக்காட்டினார் சச்சின். அதன் பிறகு என்ன ஆனது? இப்பொது மூன்று பேர் இரட்டை சதம் அடித்த பட்டியலில் இருக்கின்றனர். 

அதே போல் தான் தமிழ் சினிமாவிலும் . நூறு கோடி சாத்தியம் என ஒருவர் காட்டினார். இப்பொது ஆறு ஏழு படங்கள் நூறு கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எந்த ஒரு விஷயத்தையும் சாத்தியம் என எடுத்துரைக்க முதலில் ஒருவர் தேவைப்படுகிறார். 

அப்படி ஒரு முன்னோடிதான் பாகுபலி. ஒரு பிராந்திய மொழிப் படம் இவ்வளவுதான் வசூல் செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை தகர்த்தெரிந்து ஆயிரம் கோடி என்ற புது சாத்தியக்கூறை காண்பித்திருக்கிறது.

நிச்சயம் வெகு சீக்கிரம் தகர்க்கக் கூடிய சாதனை அல்ல. ஆனால் இது தகர்க்க முடியாத சாதனையும் அல்ல. இந்நேரம் “கான்”களுக்கு மூளை எப்படியெப்படியோ யோசித்துக் கொண்டிருக்கும்.

வெறும் வியாபார யுத்திகளைத் தாண்டி, வயதுவரம்பின்றி அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு கதைக் களத்தில் திரைப்படத்தை உருவாக்கியது, முதல் பாகத்தின் மூலம் அந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அனைவருக்கும் தூண்டியது, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கான தரத்துடன் இரண்டாம் படத்தைக் கொடுத்தது என எல்லாம் ஒரு சேர அமைந்ததாலேயே பாகுபலியின் இந்த மிகப் பிரம்மாண்டமான வெற்றி சாத்தியமாயிற்று.

இந்த அத்தனை அம்சங்களும் ஒருசேர  அமையப்பெறும் இன்னொரு திரைப்படத்தால் நிச்சயம் பாகுபலியின் சாதனையை முறியடிக்க முடியும். அதற்கான சந்தை மதிப்பு நிச்சயம் நம்மிடம் இருக்கிறது என்பதே பாகுபலி இந்திய சினிமாவிற்கு காட்டிய வழி. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ஜீவி said...

ஆனால் பாகுபலி ஒரு ஆச்சரியம்.... கொல்கத்தாவிலும், குவஹாத்தியிலும் வெற்றிகரமாக ஓடுவதை கண்டேன். கொல்கத்தாவில் டிக்கெட் கிடைக்க சிரமம் என்று டாக்சி டிரைவர் கூறியது பெரும் ஆச்சரியமாக இருந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...