Monday, August 21, 2017

சார்.. நீங்க ரஜினிக்கு ஓட்டு போடுவீங்களா?


Share/Bookmark
இரண்டு நாட்களுக்கு முன்னால் அலுவலக கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த தொலைக்காட்சியில் நமது OPS & EPS காமெடிகளைப் பற்றி எதோ ஓடிக்கொண்டிருக்க, எங்களது பேச்சும் லேசாக அரசியல் பக்கம் திரும்பியது. விவாத மேடைகளையில் பேசப்படும் அளவிற்கு ரொம்பவும் உள்ளே செல்லாமல் “அடுத்த முதல்வர் யார்” என பாமர மக்கள் பேசும் அதே மேலோட்டமான அரசியல் பற்றித்தான். 

பேசிக்கொண்டிருக்கும் போதே எனது வாய் சும்மா இருக்காமல் “ஹலோ வெய்ட் பண்ணுங்க.. எங்காளு ஒருத்தர் இருக்காரு.. அவரு உள்ள வந்தாருன்னா அடுத்து அவருதான்” என்றேன். இதைக் கேட்டதும் நண்பர் பலமாகச் சிரித்துவிட்டார். “மொதல்ல வரச் சொல்லுங்க உங்காள…” என்றவர் தொடர்ந்து “ஆனானப்பட்ட விஜய காந்தையே ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டாங்க… ரஜினியெல்லாம் எம்மாத்திரம்” என்றார். “ஆனானப்பட்ட என்று சொல்கிர அளவுக்கு விஜயகாந்த் என்ன சூராதி சூரரா என எனக்கு புரிந்துகொள்ள முடியவில்லை. நாக்கைத் துருந்துவதும், பொதுவெளியில் வேட்பாளர்களை அடிப்பதும் தைரியத்தின் கீழ் வருகிறது போல என நினைத்துக் கொண்டேன்.

”உங்காளு வந்தாருன்னா மொதல்ல விஜயகாந்த் வாங்குன ஓட்டு பர்சண்டேஜ் அளவு அவர வாங்க சொல்லுங்க… அதே உங்களால முடியாது” என்றதும் “ஹலொ வந்தா சி.எம்மே நாங்கதான்னு சொல்றேன்.. விஜயகாந்து கூடல்லாம் கம்பேர் பன்னிக்கிட்டு” என நான் கூற பத்தாயிரம் ரூபாய் பந்தயம் வைத்துக்கொண்டோம். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்து அவர் விஜயகாந்தை விட அதிக சதவீத ஓட்டுக்களைப் பெற்றார் அவர் எனக்கு பத்தாயிரம் தருவதாகவும் இல்லையெனில் நான் அவருக்குத் தருவதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்குள்ளான உரையாடல் போய்க் கொண்டிருக்கையில் எங்கள் பேச்சை அரைகுறையாகக் கேட்ட அருகிலிருந்தவர் “என்னாச்சு ஜி?” என்றவுடன் “ரஜினி அரசியலுக்கு வரப்போறாறாம்” என்றார் நண்பர். அதற்கு அவர் சற்றும் தாமதிக்காமல் ”ஏன் இதுவரைக்கும் சம்பாதிச்சது பத்தலையாமா?” என்றார்.

அவரது பதில்தான் எனக்கு சற்று வருத்தத்தை அளித்தது. அரசியல் என்றாலே ஒருவன் சம்பாதிப்பதற்குத் தான் வருகிறான் என்கிற மனநிலை அனைவரிடமும் ஊரிப்போய்க் கிடக்கிறது. நேர்மையாக ஒருவன் இருக்கவே முடியாது என்கிற ஒரு மனநிலைக்குத்தான் அனைவரும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதைத்தான் அவர் சிஸ்டம் சரியில்லை என்றாரோ என்னவோ?

இத்தனைக்கும் இந்த பதிலைக் கூறியவர் பொறியியல் படித்து , பதினைந்து வருட வேலையில் அனுபவமுள்ள ஒருவர். அவரே சற்றும் யோசிக்காமல் இப்படி ஒரு பதிலைக் கூறுகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை.

நண்பர் இத்தோடு நிற்கவில்லை. நாங்கள் அமர்ந்து சாப்பிட்ட வரிசையில் எங்களைத் தவிற சுமார் ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக “”ஏங்க ரஜினி அரசியலுக்கு வந்தா ஓட்டுப் போடுவீங்களா?” எனக் கேட்க, எதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்ட்து போல “ச்சீ.. ச்சீ.. அவருக்கெல்லாம் மனுசன் ஓட்டுப்போடுவானா?” என்பது போல ஒவ்வொருவரும் ஒரு பதிலை அளித்தார்கள்.

எதிர்பார்த்ததுதான். அருகிலிருந்த மற்றவரிடம் “ஏங்க ரஜினிக்கு ஓட்டுப் போடமாட்டீங்க?” என்றேன். ”அட அவரு தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காரு… காவிரிப் பிரச்சனை, ஜல்லிக்கட்டுப் பிரச்சனை அது இது” என வாட்ஸாப்பில் அவர் படித்த வரிகளை ஒப்பித்தார். சரி போகட்டும். அடுத்து அவரிடமே ”நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?” என்றேன்.  

இப்போதுதான் லேசாக ஜெர்க் அடித்தது அவருக்கு. “எங்கஜி… யாருமே உருப்படி இல்லை.. எல்லாமே ஃப்ராடுதான்” என படித்தவர்கள் எனும் பிரிவில் வரும் அத்தனை பேரும் சொல்லும் பொத்தாம் பொதுவான ஒரு பதிலைக் கூறினார். “இல்லஜி.. கண்டிப்பா யாருக்காவது ஓட்டுப்போடுவீங்கல்ல.. அதத்தான் யாருக்குன்னு கேட்டேன்” என்றேன் மறுபடியும். இந்த முறையும் அதே வழவழா கொழகொழா பதில். ”சரிங்க.. எல்லாருமே ஃப்ராடா இருக்க பட்சத்துல, இதுவரைக்கும் ஊழல் எதுவும் செய்யாத ரஜினிக்கு ஓட்டுப்போடுறதுல என்ன தப்பு?” என்றேன். சரியான பதில் இல்லை. மாறாக அவர் தட்டிலிருந்த கொஞ்சூண்டு தோசையையும் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு கைகழுவ எழுந்து சென்றார்.

தற்போது களத்திலிருக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே ஊழல்வாதிகள் என்ற ஆணித்தனமான கருத்து அனைவரிடமும் இருக்கிறது. அதே அளவு நம்பிக்கை ஊழலை ஒழிக்க முடியாது என்பதிலும் இருக்கிறது. அதற்காக படித்தவர்களும், நடுநிலைவாதிகளும் ஓட்டுப்போடுவதற்கு கையாளும் லாஜிக் தான் “யார் குறைவான ஊழல் செய்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறேன்” என்பது.

திமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுக குறைவான ஊழல் செய்வதைப் போலத் தோன்றுகிறது. அடுத்தமுறை அதிமுகவை ஆட்சியில் அமர்த்துகிறோம். பிறகு அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது திமுக குறைவான ஊழல் செய்வதைப் போல தோன்றுகிறது. மறுபடியும் ஆட்சியை திமுகவிடம் ஒப்படைக்கிறோம். இவ்வளவுதான் நம்முடைய படிப்பறிவை வைத்து ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை.

ரஜினி அரசியலுக்கு வரலாம் வராமலும் போகலாம். ஒருவேளை வருகிற பட்சத்தில் அவரை எதிர்ப்பதற்கு நியாமான காரணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்பதை ஒரு முறை யோசியுங்கள். ரஜினி வெளி மாநிலத்தவர், சம்பாதித்தது பத்தாமல் அரசியலுக்கு வருகிறார், தமிழ்நாட்டுக்கு இதுவரை என்ன செய்தார் என்பது போலானவற்றை முன்வைத்து அவரை ஒதுக்கி விடாதீர்கள்.

அவரால் ஊழலை ஒழிக்க முடியுமா என்பதோ, அவரால் ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பார் என்பதோ நமக்குத் தெரியாது. ஒருவேளை கொடுக்கலாம். ஆனால் இதுவரை நாம் ஆதரித்து வந்த அனைவருமே ஊழல்வாதிகளாக இருக்கும் பட்சத்தில், அவர் வருவதற்கு முன்னரே “உன்னால் அதெல்லாம் சரி செய்ய முடியாது… உன்னால் ஊழலையெல்லாம் ஒழிக்க முடியாது” என்றெல்லாம் கூறுவது ஊழலை ஒழிக்க நாமே விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.  அப்படி ஒரு எண்ணத்தைத்தான் இத்தனை வருட அரசியல் வாதிகள் நம்முள் விதைத்திருக்கிறார்கள்.

இறுதியாக ஒண்றே ஒண்று.. ரஜினியை ஆதரிக்கும் முன் கேள்வி கேளுங்கள் தவறே இல்லை. அதற்கு முன்னதாக அதே கேள்விகளுக்கான பதில்கள் நீங்கள் தற்போது ஆதரிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள்.




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

arul said...

sir sorry to say this..ivanunga (neenga ketta) ellam mothalla oottu poduvaangalnu sollunga sir ..ithuvaraikkum ootu pottu irukkangalanu kelunga sir

உயிர்நேயம் said...

நான் ரஜினி ரசிகன் கிடையாதுதான், அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் பழைய தமிழ் படங்களையோ அல்லது உலக திரைப்படங்களைத்தான் பார்ப்பேன்.

ஆனால், இப்போது களத்தில் இருக்கும் திருடர்களை விட, ரஜினி மேல் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. நான் அவருக்குத்தான் ஓட்டுப் போட நினைக்கிறேன். ஆனால், அவர் அரசியலுக்கு வருவாரா?

ஜீவி said...

ரஜினி ஒரு காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை. காரணம் சிம்பிள்..
ரஜினி தூரத்தில் மேடையில் நின்று விழாவில் பேசி விட்டு போய்விடுகிறார். ஆனால் புதிதாக ஒரு கட்சியை தொடங்கி வளர்க்க மிகவும் அலையவும் மெனக்கெடவும் வேண்டும். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் அப்படி விடிய விடிய சுற்றுப்பயணம் பிரசாரம் செய்தவர். என்டிஆர் ஒரு வருடம் வேன் மூலம் ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கி வைத்த கட்டுக்கோப்பான அமைப்பு ஜெ. மடியில் விழுந்ததால் அவர் அலையாமல் பதவி பெற முடிந்தது. விஜயகாந்த் கூட பலமுறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததால்தான் ஒரு அமைப்பு வலுவாக உருவாகி 8 சதவீதம் ஓட்டு வங்கி கிடைத்தது.
இதுதான் புதுக்கட்சி உருவாக்குவதில் உள்ள யதார்த்தம்..
சும்மா பேப்பரில் அறிக்கை விட்டு விட்டு டிவியில் பேசினால் ஓட்டு விழுந்து விடாது.
175000 சகிமீ பரப்பு கொண்ட பெரிய மாநிலம் தமிழ்நாடு.
ரஜினிக்கு வயது 65 ...உடல் நலம் திருப்திகரமாக இல்லை. அவரால் இனி இரவு பகலாக அலைய முடியாது என்பது நிதர்சனம்.
வெறும் கட்சி என்று பதிவு செய்து விட்டு டிவியில் பேட்டி கொடுத்தால் கிராமங்களில் எல்லாம் ஓட்டு கிடைக்காது. டெபாசிட் வாங்குவதே கடினம்.
ரஜினி இன்றைய உடல் நலம், குடும்ப பிரச்சினை நடுவில் சிரமப்படுவது சாத்தியமே இல்லை. ரஜினியின் அமைப்பு யாருக்காவது ஆதரவு கொடுத்தால் அவர்களுக்கு சிறிது வெற்றி வாய்ப்பு கூடலாம்... அவ்வளவுதான்..
இந்த நிலையில் அவர் வந்து ஜெயித்து முதல்வர் ஆவது என்பது சுவையான கனவு . இதையெல்லாம் உணர்ந்துதான் அவர் இருபது வருடங்களாக வருவது போல பேச்சை உருவாக்கி பிரபல்யத்தை தக்க வைத்து வருகிறார்
கல்லூரி நாட்களில் நானும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி ஆசைப்பட்டேன். இப்போது இருபது வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது... இன்னும் அது கானல் நீராக இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும்

நன்னயம் said...

ரஜினி அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்
முதலில் வாடகையை செட்டில் பண்ண சொல்லுங்க

Saravanaa said...

ஒருவேளை அவர் ஜெயிச்சு வந்து 'பக்தா' குரூப்போட கூட்டணி வச்சுட்டாருன்னா....அப்டிலாம் ஆகாதுனு சொல்ல முடியுமா..? நிறைய வாய்ப்பு இருக்கு. அந்த கொடுமையெல்லாம அனுபவிக்க முடியாது.ஏற்கனவே இங்க நொந்து போயிருக்கோம்.

ஜீவி said...

கேட்டா அது மனைவி நடத்துற ஸ்கூல்.. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது கண்ணா.. ஹா ஹா ஹா ன்னு சிரிப்பார்

அமுதன் said...

ரொம்ப கரெக்டா எழுதி இருக்கீங்க... நான் ரஜினிக்கு தான் ஒட்டு போடுவேன். இதில் ஆச்சர்யம் இல்லை, ஏன்னா, நான் ரஜினி ரசிகன். மற்றவர்கள் தலைவர் அரசியலுக்கு வந்தவுடன் அவர் செயலை பார்த்து பேச்சை கேட்டு வழிக்கு வந்து விடுவார்கள். எல்லோரும் பிறக்கும் போதே அறிவாளியாக பிறப்பதில்லை !!

Unknown said...

Nice siva i support rajini sir

Unknown said...

Nice siva i support rajini sir

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...