Monday, September 25, 2017

ஜூனியர் என் டி ஆரின் ஜெய் லவகுசா!!!


Share/Bookmark
ஜனதா காரேஜ் திரைப்பத்தோட பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, தனது சொந்த அண்ணன் நந்தமுரி கல்யான்ராம் தயாரிப்புல (மொட்டை சிவா கெட்ட சிவா ஒரிஜினர் வெர்ஷனில் நடித்தவர்) ஜூனியர் என் டி ஆர் மூன்று வேடங்கள்ல நடிச்சி வெளியாகியிருக்க படம் ஜெய் லவ குசா. ஏற்கனவே இந்தப் படத்தோட டீசர், ட்ரெயிலர், பாடல்கள்னு எல்லாமே ஹிட் ஆயிருக்க சமயத்துல படம் எப்படி இருக்குன்னு பாப்போம்.

அச்சு அசலா ஒரே மாதிரி இருக்க மூணு அண்ணன் தம்பிங்க.  சின்ன வயசுல அப்பா இறந்துட்டதால மாமாவின் துணையோட ராமாயணம் நாடகம் போட்டு பிழைப்ப ஓட்டிக்கிட்டு இருக்காங்க. மூத்தவனுக்கு நடிக்க ரொம்ப ஆசை. ஆனா அவனுக்கு திக்குவாய் இருக்கதால, அவனுக்கு நாடகத்துல முக்கியமான பாத்திரம் எதுவும் குடுக்காம ஓரம்கட்டுறாங்க. அதேசமயம் அவனோட தம்பிங்க ரெண்டு பேரும் ராம, லக்‌ஷ்மண வேஷம் போட்டு ஊரு ஃபுல்லா நல்லா ஃபேமஸ் ஆகுறாங்க. தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டெல்லாம் தன்னை ஓரம்கட்டி விட்ட தம்பிகளுக்கு கிடைக்கிதேன்னு உள்ளுக்குள்ள கோபம் பொங்குது மூத்தவனுக்கு.

அந்த சமயம் சூர்ப்பனகை மூக்கை ராமன் அறுத்ததாலதான் ராமனுக்கும் ராவணனுக்கும் சண்டை வந்துச்சிங்குற விஷயம் அவனுக்கு தெரியவர, ராவணன் செஞ்சது சரிதான்ங்குற எண்ணம் மனசுல தோணுது. அப்பலருந்து ராவணனோட பக்தனாகுறான். பக்தனாகுறது மட்டும் இல்லாம, தம்பிங்க நாடகம் நடிச்சிட்டு இருக்குறப்போ சிலிண்டர கொளுத்தி விட்டு மொத்த ஸ்டேஜயும் தீக்கிரையாக்குறான். மூணு பேரும் பிரியிறாங்க. அப்டியே பெடல சுத்துனா எல்லாரும் பெரியாளாயிடுறாங்க. ஒவ்வொருத்தன் உயிரோட இருக்கது இன்னொருத்தனுக்கு தெரியல.  அப்புறம் ஒவ்வொருத்தரும் எப்படி, என்ன சந்தர்ப்பத்துல மீட் பன்னிக்குறாங்க, அதனால என்ன நடக்குதுங்குறது தான் கதை.

இரட்டையர்கள் கதைன்னா ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது ஒருத்தன் பயங்கர பயந்தாங்கோளியா இருப்பான். எல்லாரும் ஏமாத்துவாங்க. இன்னொருத்தன் அப்படியே நேர்மாறா இருப்பான். எல்லாரையும் அடிச்சி தொம்சம் பன்னுவான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் இடம் மாறி, முன்னால ஏமாத்துனவங்களையெல்லாம் அடிச்சி பறக்க விடுவாங்க. இதான் தொண்றுதொட்டு இருக்க வழக்கம். அத இந்தப் படத்துலயும் விடாம புடிச்சிருக்காங்க.

ரெண்டு பேருன்னா ஓக்கே.. அப்ப மூணு பேருன்னா என்ன பன்னுவாங்க? ஒரு பாதி பழைய ஃபார்முலா.. பயந்தாங்கோளிக்கு பதிலா பலசாலி மாறுறது. ரெண்டவது பாதில இதே கான்செப்ட்ட அப்படியே ரிவர்ஸூல யூஸ் பன்னிருக்காங்க. . 

ரெண்டாவது பாதில பெரும்பாலான காட்சிகள்ல மூணு என் டி ஆரும் ஒரே ஃப்ரேம்ல இருக்க மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கு. ஆனா எந்த வித்யாசமும் தெரியாம ரொம்பவே சூப்பரா படம் புடிச்சிருக்காங்க. மூணு பேரும் ஒரே சீன்ல இருக்க மாதிரி அதிக காட்சிகள் இடம்பெற்றது இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல முன்னால அண்ணனுக்காக தம்பிங்க போடுற நாடகத்துல நம்மள கண்ணு கலங்க விட்டுடுறாங்க.

தேவி ஸ்ரீ ப்ரசாத் பட்டையக் கிளப்பிருக்காரு. ராவணனா வர்ற மூணாவது NTR க்கு வர்ற பின்னணி இசை தாறுமாறு. அந்த ராவணா.. ராவணா பாடலும் சூப்பர். தெலுங்கு படங்களை பொறுத்த அளவு பாடல்களை நல்லா எடுத்துருக்காங்கன்னு சொல்லவே தேவையில்லை. எத நல்லா எடுத்தாலும் எடுக்காட்டியும் பாட்டுகள மட்டும் நல்லா பளிச்சின்னு எடுத்து வச்சிருவாங்க.

சண்டைக்காட்சிகளும் வழக்கம்போல சூப்பர்.. ஒரு என் டி ஆர் இருந்தாலே வில்லன ஒண்ணுக்கு போற அளவு அடிப்பாரு.. இதுல மூணு என் டி ஆருங்கயில மோஷன் போற அளவுள்ள அடிச்சாகனுமே... வில்லன்கள் படத்துல சும்மா ஊருகா மாதிரிதான். படத்த முடிக்கிறதுக்காக மட்டும் வந்துட்டுப் போறாங்க. 

ராஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸுன்னு ரெண்டு சூப்பர் ஹீரோயின்கள். அதிக வேலை எதுவும் இல்லை. ஒவ்வொரு பாட்டுதான். நிவேதா தாமஸ சைடு ஆங்கிள்ள பாக்கும்போது அதோட ஹைட்டுக்கும் அதுக்கும் மீரா ஜாஸ்மின பாக்குற மாதிரியே இருக்கு. ஒரு ஐட்டம் சாங்குக்கு தமன்னாவ கூட்டிக்கிட்டு வந்து அருவருப்பா டான்ஸ் ஆட விட்டுருக்காங்க.

இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இதுக்கு முன்னால பவர் , சர்தார் கப்பர் சிங்குனு ஒரு சுமார் மற்றும் ஒரு காட்டு மொக்கை படத்தை மட்டும் எடுத்திருந்தாரு. ஆனா இந்தப் படத்துல முழு  வீச்சுல செயல்பட்டு சூப்பரான ஒரு அவுட்புட்ட குடுத்துருக்காரு. 

படத்தோட முதுகெழும்பே என்.டி.ஆர் தான். பட்டைய கெளப்பிருக்காரு. மூணு ரோல்லயும் கெட்டப்புல பெரிய வேரியேஷன் காமிக்கலன்னாலும், உடல்மொழிலயும், வசன உச்சரிப்புலயும் தனித்தனியே தெரியிறாரு. கண்ண மூடிக்கிட்டு கேட்டா கூட இப்ப எந்த கேரக்டர் பேசிக்கிட்டு இருக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். காமெடிக்கு தனி ஆள் தேவைப்படல. என் டி ஆரே காமெடிலயும் கலக்குறாரு.

ரெண்டு வகையான முன்னேற்றம் இருக்கு. ஒண்ணு Continues Improvement இன்னொன்னு continual improvement. முதல்ல சொன்னது தொடர் முன்னேற்றம். சும்மா ஜொய்ங்கின்னு முன்னேறி போயிட்டே இருப்பாங்க. ஆனா விழுந்தா ஆரம்பிச்ச இடத்துல வந்து விழுந்துருவாங்க. ரெண்டவது சொன்ன continual improvement ங்குறது சீரான மற்றும் நிலையன, படிப்படியான முன்னேற்றம். இவங்க ஒரு நிலைய அடைஞ்சப்புறம் அந்த இடத்துல தங்கள நல்லா நிலை நிறுத்திக்கிட்டு அடுத்த லெவலுக்கு போவாங்க. அதனால இவங்க சறுக்குனா கூடா அதுக்கு மொதல்ல இருந்த படிநிலைக்குப் போவாங்களே தவற ஆரம்பிச்ச இடத்துக்கு போகமாட்டாங்க.

தென்னிந்திய சினிமாவப் பொறுத்த அளவுல இந்த தொடர்ந்து, சீரான, படிப்படியான முன்னேற்றம் அடையிற நடிகர் என் டி ஆரத் தவற வேற யாரும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் நடிப்புலயும், உடல் மொழியிலயும், கதைத் தெரிவுலயும் அவ்வளவு முன்னேற்றத்த காட்டிக்கிட்டு வர்றாரு.  இந்த ஜெய் லவ குசாவும் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கண்டிப்பா பாக்கலாம். வசூல் ரீதியாவும் பெரிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...