தற்போது இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்களில் ஓரளவிற்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விக்ரம் பிரபு என்பதில் சந்தேகமே இல்லை. கும்கிக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் இவருக்கு இல்லை என்றாலும், இவர் படங்கள் கழுத்தில் கத்தி வைத்து கரகரவென அறுக்காமல் ஓரளவிற்கு பார்க்கும் வகையிலேயே இருக்கிறது. கபாலியின் ”நெருப்புடா” பாடல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த பொழுது சூட்டோடு சூடாக இந்தப் படத்திற்கு ”நெருப்புடா” என பெயர் சூட்டினர். விக்ரம் பிரபுவின் சொந்தத் தயாரிப்பில் உருவான இந்த நெருப்புடா எப்படி இருக்கிறது என பார்ப்போம்.
தீயணைப்புப் படை வீரனாக வேண்டும் என்கிற வித்யாசமான கனவுடன் சுற்றும் ஐந்து இளைஞர்கள், சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் எங்கு தீப்பிடித்தாலும் முதல் ஆளாகச் சென்று தீயை அணைத்து உயிரைக் காப்பவர்கள். இன்னும் ஒரு தேர்வு மட்டும் எழுதிவிட்டால் தீயணைப்புப் படை வீரனாகவேண்டும் என்கிற அவர்களது கனவு நிறைவேறிவிடும் என்கிற தருணத்தில் சென்னையையே ஆட்டிப்படைக்கும் அந்த மிகப்பெரிய ரவுடியுடன் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிப் படம். கிட்டத்தட்ட விக்ரம் நடித்த “தில்” திரைப்படத்தின் ஒன் லைன் தான் இந்தப் படத்தின் ஒன்லைனும் கூட.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு திரைப்படம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நமக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதில்லை .முதல் ஓரிரு காட்சிகளே உணர்த்திவிடும். இந்தப் படத்திலும் முதல் காட்சியிலேயே ஓரிடத்தில் தீப்பிடிக்கும்போது ஏற்படும் பரபரப்பை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறார். முதல் காட்சிக்குப் பிறகு அவர்கள் ஏன் தீயணைப்பு வீரனாக ஆக ஆசைப்படுகிறார்கள் என்பதை விளக்கும்போது இன்னும் கதையில் ஆர்வம் அதிகமாகிறது.
ஆனால் போகப் போக சென்னையிலேயே பெத்த ரவுடியுடன் சண்டை என ஆரம்பிக்கும்போது நெருப்புடாவும் தமிழ்சினிமாவின் வழக்கமான கமர்சியல் மசாலாப் படங்களின் வரிசையில் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் எந்த இடத்திலுமே போர் அடிக்காமல், ஆங்காங்கு சிறு சிறு நகைச்சுவை, ஓரிரு எதிர்பாராதா திருப்பங்கள் என நம்மை முகம் சுழிக்க வைக்காமல் இடைவேளை வரை கொண்டு செல்கிறார்கள். இரண்டவது பாதியில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராம மாற்றி கடைசியில் சற்று டொம்மையாக முடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவும் , சீன் ரோல்டனின் பிண்ணனி இசையும். வியாசர்பாடி பகுதிகளில் ’ஐ’ திரைப்படத்தின் மெரசலாயிட்டேன் பாடல் படமாக்கப்பட்ட பின் பல படங்களில் அதே லொக்கேஷனைக் காண முடிகிறது. படத்தில் விக்ரம் பிரபு வசிக்கும் ,லேட்டர்புரம் எனும் பகுதியை ரொம்பவே அழகாகக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தீ விபத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல காண்டாமிருகக் குரலில் கத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிப்பு வருகிறது. அவர் வைத்திருக்கும் பைக் பார்த்தவுடன் சிரிப்பு வரவைக்கும் ரகம்.
நிக்கி கல்ராணி வழக்கத்தை விட இந்த படத்தில் சற்று குண்டாகியிருக்கிறார். இரண்டு பாடலுக்கு மட்டும் வரும் டிபிகல் மசாலா பட ஹீரோயின் ரோல். வில்லன்களால் கத்திகுத்து பட்டு சாவதற்கென்றே அளவெடுத்து தைத்த கதாப்பாத்திரமான ஹீரோவின் அப்பாவாக பொன்வண்ணன்.
இப்பொழுதெல்லாம் அனிரூத்திற்கு நன்றி என்று ஸ்லைடு போடப்படாத படங்களே இல்லை எனலாம். எல்லா படத்திலும் எதேனும் ஒண்று செய்துவைக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
போலீஸ் ஆஃபீசராக ஆடுகளம் நரேன். நரேனும் விக்ரம் பிரபுவும் சந்திக்கும் காட்சிகளில் “உன் மூக்குக்கும் ஏன் மூக்குக்கும் சோடி போட்டுக்குருவோமா சோடி” என்பது போல ஒரே மூக்கு மயமாக இருந்தது.
வித்யாசமான வேடம் எனக் கருதி இரண்டாவது பாதியில் பாடகரின் மனைவியான தமிழ் சினிமாவின் ரிட்டயர்டு நடிகை ஒருவரை இறக்கி விட்டிருக்கிறார்கள். படத்தைக் கெடுத்ததே அந்த ஒரு பகுதிதான். வேறு எதாவது செய்திருக்கலாம்.
இடையிடையே இடைச் சொருகலாக வரும் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பாடல்களைக் குறைத்திருந்தால் இன்னும் சூப்பராக வந்திருக்கும்.
மொத்தத்தில் நெருப்புடாவின் முதல் பாதி சிறப்புடா… இரண்டாவது பாதி சுமார்டா.. க்ளைமாக்ஸ் மட்டும் கடுப்புடா… ஆனால் கண்டிப்பாக பார்க்கலாம்டா.
4 comments:
nice
விமர்சனம் சூப்பர்டா... (செல்லமாத்தான். கோச்சுக்காதீங்க)
Well written... Nalla vimarsanam...
thupparivalan review enga bro??...
oru vishal fan neengale ipdi late panalama???
Post a Comment